அரசியல்
அலசல்
Published:Updated:

இலவச வேட்டி, சேலை... தாமதமாகும் ஆர்டர்... ரூ.158 கோடி நிலுவை... பரிதவிக்கும் நெசவாளர்கள்!

நெசவாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நெசவாளர்கள்

தமிழ்நாடு முழுவதும் ஆறு லட்சம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இவற்றை நம்பி 10 லட்சம் நெசவாளர்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழிலை நம்பி நேரடியாக 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இலவச வேட்டி, சேலை எண்ணிக்கை குறைப்பு, உற்பத்தி ஆர்டர் அளிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதம், கூலித்தொகை நிலுவை என அடுத்தடுத்த அடிகளால் நொறுங்கிப்போயிருக்கிறார்கள் நெசவாளர்கள்!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகித்துவருகிறது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில், கடந்த ஆண்டுவரை 1.77 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது எண்ணிக்கை குறைப்பு, நிலுவைத்தொகை இழுத்தடிப்பு எனப் பல்வேறு பிரச்னைகளில் நெசவாளர்கள் சிக்கித் தவிப்பதாகக் குமுறுகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ‘தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு’ செய்தித் தொடர்பாளர் கந்தவேல், “கடந்த ஆண்டுகளில், இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதத்தில் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு நான்கு மாதங்கள் கழித்து, அக்டோபர் 1-ம் தேதிதான் உற்பத்தியைத் தொடங்குவதற்கான அரசாணையையே கைத்தறி மற்றும் துணிநூல் துறை வெளியிட்டது. மேலும் இந்த ஆண்டில், கடந்த ஆண்டைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான ஆர்டரையே அரசு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அதாவது 99,56,683 சேலைகள், 1,26,19,004 வேட்டிகள் மட்டுமே விசைத்தறியில் நெய்வதற்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்தப் பணியைத் தொடங்குவதற்கான நூல் இன்னும் வரவில்லை. பணி உத்தரவும் எந்தச் சங்கத்துக்கும் வழங்கப்படவில்லை. எனவே, இப்போது தொடங்கினாலும் பொங்கலுக்கு முன்பு பணியை முடிக்க முடியுமா எனத் தெரியவில்லை.

காந்தி
காந்தி

கடந்த ஆண்டு நெய்து கொடுத்த வகையில், 222 கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு, 158 கோடி ரூபாய் வரை அரசு வழங்காமல் நிலுவை வைத்திருக்கிறது. இதில் ஈரோடு, திருச்செங்கோட்டில் மட்டும் 110 சங்கங்களுக்கு 140 கோடி ரூபாயை வழங்காமல் அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தத் தொகையை ரிலீஸ் செய்யாமல் எங்களால் அடுத்தகட்ட உற்பத்திக்குப் போக முடியாது. கிட்டத்தட்ட ஒவ்வொரு சங்கத்துக்கும் ஒரு கோடி ரூபாய்க்கும் குறையாமல் நிலுவை வைத்திருக்கிறது அரசு. இதனால், அனைத்துச் சங்கங்களும் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. தற்போது சங்கங்களில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். தி.மு.க-வைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்த பிறகு தொகையை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று கருதுகிறார்கள். சங்கங்களுக்கு அரசு நிலுவை வைத்திருப்பதால், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய நிர்பந்தம் அதன் நிர்வாகிகளுக்கு ஏற்படுகிறது. 158 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை அரசு வழங்காமல் நிலுவைவைத்தால், சங்கத்தை நடத்த முடியாமல் குறைந்தது 100 சங்கங்கள் வெளியேறிவிடும் அபாயம் இருக்கிறது’’ என்றார்.

நெசவாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எல்.கே.எம்.சுரேஷ், ‘‘தமிழ்நாடு முழுவதும் ஆறு லட்சம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இவற்றை நம்பி 10 லட்சம் நெசவாளர்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழிலை நம்பி நேரடியாக 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டியது அரசின் பொறுப்பு. பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக மஞ்சள் பை திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதை நெய்து தரும் பணியை விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல மருத்துவ உபகரண ஆடை ரகங்களான பிளாஸ்திரி துணி, பேண்டேஜ் துணி, பெட்ஷீட், விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடமிருந்துதான் அரசு கொள்முதல் செய்கிறது. இவற்றை உற்பத்தி செய்யும் ஆர்டரை நெசவாளர்களுக்குக் கொடுத்தால் அவர்களது வாழ்வாதாரம் சீராகும்’’ என்றார்.

இலவச வேட்டி, சேலை... தாமதமாகும் ஆர்டர்... ரூ.158 கோடி நிலுவை... பரிதவிக்கும் நெசவாளர்கள்!

நெசவாளர்களின் புகார்களுக்கு விளக்கம் கேட்டு, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தியிடம் பேசினோம். “விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவு மூலமாகவே வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதால், இந்தத் துறை மீது முதல்வர் தனி கவனம் செலுத்திவருகிறார். தமிழ்நாட்டிலுள்ள மொத்த குடும்ப அட்டைகளில் சுமார் 22 லட்சம் போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டன. இதன் தொடர்ச்சியாக இலவச வேட்டி, சேலை எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. அதாவது, மொத்த உற்பத்தியில் இந்த ஆண்டில் 21 சதவிகிதம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது.

பொங்கலுக்குள் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து பயனாளிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுவிடும். அடுத்த ஆண்டிலிருந்து 365 நாள்களும் விசைத்தறியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதற்காக, துறை மூலமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். மேலும் இந்தத் துறையை மேம்படுத்துவதற்காக கைத்தறி, விசைத்தறி ஆகிய இரண்டுக்கும் தனித்தனி ஆணையரையும் அரசு நியமித்திருக்கிறது.

கந்தவேல் - எல்.கே.எம்.சுரேஷ்
கந்தவேல் - எல்.கே.எம்.சுரேஷ்

விசைத்தறி சங்கங்களுக்கு நிலுவை வைத்திருக்கும் 158 கோடி ரூபாயை வழங்குவதில், அரசின் நிதி நெருக்கடியால் சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதையும் படிப்படியாக வழங்கிவிடுவோம். இந்த ஆண்டில் புதிதாக விசைத்தறி நெசவாளர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளன. அந்தச் சங்கங்களுக்கும் ஆர்டர்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமே, நெசவாளர்களின் துயருக்குக் காரணமாகிவிடக் கூடாது!