அரசியல்
அலசல்
Published:Updated:

கொள்ளைபோன ரூ.50 லட்சம்... எம்.எல்.ஏ-வுக்கான விலையா? - தேனி அ.தி.மு.க-வில் ‘மங்காத்தா’!

நாராயணன் - ஸ்ரீதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயணன் - ஸ்ரீதரன்

எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த எம்.எல்.ஏ ஐயப்பன், திடீரென ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு கொடுத்தார்.

தேனி மாவட்டத்தில், 50 லட்சம் ரூபாய் கொள்ளைபோன விவகாரத்தில், ‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-வை அணி மாற வைப்பதற்கான அன்பளிப்பு ஒளிந்திருப்பதாக’ எழுந்திருக்கும் பேச்சு, யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்!

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் நாராயணன், ஓ.பி.எஸ்-ஸின் இளைய மகன் ஜெயபிரதீப்பின் நண்பர். பெரியகுளத்தில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்திவரும் இவர், அ.தி.மு.க-வில் தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறைச் செயலாளராகவும் இருக்கிறார்.

சமீபத்தில், ‘தன்னிடம் டிரைவராக வேலை பார்த்துவந்த வடகரையைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தன்னுடைய 50 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக’ போலீஸில் புகார் அளித்தார் நாராயணன். இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஸ்ரீதரனையும் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் உறவினர்களையும் கைதுசெய்த போலீஸார், அவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களையும், 35 லட்ச ரூபாயையும் கைப்பற்றினர்.

நாராயணன்
நாராயணன்

இந்த நிலையில்தான், கொள்ளைபோன 50 லட்சம் ரூபாய் பணம், இ.பி.எஸ் அணியிலிருந்து ஓ.பி.எஸ் அணிக்குத் தாவிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பனுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட தொகை என்ற ஒரு `பகீர்’ தகவல் கசிய ஆரம்பித்திருக்கிறது.

அஜித்தின் ‘மங்காத்தா’ பட பாணியில் நடந்த இந்தக் கொள்ளை பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகள், “ஓ.பி.எஸ் தரப்புக்குத் தேர்தலின்போது பணப் பட்டுவாடா செய்வது உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் நாராயணன்தான் செய்துவருகிறார். அவருக்கு உதவியாக அவரின் நண்பரான டிரைவர் ஸ்ரீதரனும் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த எம்.எல்.ஏ ஐயப்பன், திடீரென ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு கொடுத்தார். அன்றைய தினம் நாராயணன், ஸ்ரீதரன் இருவரும் சென்னையில்தான் இருந்தனர். ஐயப்பன் எம்.எல்.ஏ உள்ளிட்ட சிலருக்குக் கொடுக்கச் சொல்லி அவர்களிடம் ஓ.பி.எஸ்-ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் பெரும் தொகையைக் கொடுத்துள்ளார். மறுநாள் அவர்களும் சிலருக்கு பணப் பட்டுவாடா செய்துவிட்டு, தேனி நோக்கி காரில் வந்தனர். வழியில், ஆண்டிபட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க தேனி மாவட்டச் செயலாளர் சையதுகானின் காரில் ஏறிக்கொண்ட நாராயணன், தனது காரில் இருந்த மீதத் தொகையான 50 லட்சம் ரூபாயைத் தன் வீட்டில் ஒப்படைக்குமாறு ஸ்ரீதரனை அனுப்பிவைத்திருக்கிறார். ஆனால், ‘இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டால், போலீஸ் கேஸ் ஆகாது’ என்ற எண்ணத்தில் ஸ்ரீதரன் பணத்தோடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்.

ஸ்ரீதரன்
ஸ்ரீதரன்

வீடு திரும்பிய நாராயணன், பணத்தோடு ஸ்ரீதரன் மாயமானதை அறிந்துகொண்டதும் ஸ்ரீதரன் தரப்பு ஆட்களை மிரட்டி, விசாரித்து ஸ்ரீதரன் இருக்கும் இடத்தையும் தெரிந்துகொண்டார். இதையறிந்த ஸ்ரீதரன் மனைவி, ‘தன் கணவர் கொலைசெய்யப்பட வாய்ப்பிருக் கிறது’ என்ற அச்சத்தில், ‘கணவரைக் காணவில்லை’ என போலீஸில் புகார் அளித்தார். மேலும் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்யத் தயாராகிவிட்டார்.

இதனால், ‘இந்த விவகாரத்தை போலீஸார் மூலமாகவே டீல் செய்யலாம்’ என்ற முடிவுக்கு வந்த நாராயணன், ஸ்ரீதரன் பணத்தைத் திருடிவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்துவிட்டார். போலீஸும் ஸ்ரீதரனைக் கைதுசெய்திருக்கிறது’’ என்றனர்.

ஐயப்பன்
ஐயப்பன்

நாராயணனிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுப் பேசினோம். “ஓ.பி.எஸ் குடும்பத்துக்கு நன்கு பழக்கமானவன் என்ப தாலும், என்னுடைய வளர்ச்சி பிடிக்காமலும் சொந்தக் கட்சியினரே இவ்வாறான வதந்தியைப் பரப்புகின்றனர். பெரியகுளத்தைச் சேர்ந்த என்னுடைய நண்பர் பாஸ்கரன் வீடு கட்டிவருகிறார். அவர், பணத் தேவைக்காக சென்னையிலுள்ள அவருடைய அண்ணன் ஆனந்த்திடம் 50 லட்ச ரூபாய் கேட்டிருந்தார். நான் சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றிருந்ததால், அந்தப் பணத்தை வாங்கி வந்தேன். அதற்கான ஆதாரங்களை போலீஸாரிடமும் ஒப்படைத்துள்ளேன். சென்னையில் எம்.எல்.ஏ ஐயப்பன் ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்த அன்று நானும் அங்கிருந்தது, பின்னர் தேனிக்கு வந்து ஆண்டிபட்டியில் என்னுடைய காரிலிருந்து மாவட்டச் செயலாளர் சையதுகான் காரில் ஏறியது... எல்லாம் யதார்த்தமாக நடந்தன” என்றார்.

எம்.எல்.ஏ ஐயப்பனிடம் இந்தப் பண விவகாரம் குறித்துக் கேட்டபோது, “நாராயணன் யாரென்றே எனக்குத் தெரியாது. பணத்துக்காகவோ அல்லது சாதிக்காகவோ நான் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தபோது அவரிடம் பணம் பெற்றேன் என்றார்கள். இப்போது ஓ.பி.எஸ்-ஸிடம் பணம் பெற்றேன் என்கிறார்கள். ஓ.பி.எஸ் போனில் தொடர்புகொண்டு என்னை அழைத்தார். அதனால் அவருக்கு ஆதரவு கொடுத்தேன். அவ்வளவுதான்...” என்றார்.

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சியிடம் இந்த வழக்கு குறித்துக் கேட்டோம். “டிரைவர் ஸ்ரீதரனுக்கு கடன் இருந்திருக்கிறது. மேலும், அவருடைய மகனுக்கு இதயப் பிரச்னையும் இருந்திருக்கிறது. எனவே, ‘செலவுக்காக நாராயணனிடம் பணம் கேட்டேன். கிடைக்கவில்லை என்றதும் பணத்தைத் திருடிவிட்டேன்’ என்று குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார் ஸ்ரீதரன். நாராயணன் தரப்பும் பணத்துக்கான ஆவணங்களை எங்களிடம் கொடுத்துள்ளனர். எனவே, முழுப் பணத்தையும் மீட்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்துவிடுவோம்” என்றார்.

என்ன நடந்தது என்பது அந்த ‘நாராயணனு’க்கே வெளிச்சம்!