
தகவல் மட்டுமல்லாமல் அரசுத்துறை அலுவலக ஆவணங்களையும், பணிகள் நடப்பதையும் ஆய்வு செய்யலாம்.
ஆர்.டி.ஐ அதிகாரத்துக்கு எதிரான ஆயுதம். ஊழல்களை அம்பலப்படுத்தியது முதல் ‘இந்தி நம் தேசியமொழி இல்லை’ என்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்தது வரை ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்கள் பலவகையில் பங்களித்திருக்கிறார்கள். தமிழகமெங்கும் உள்ள ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் ஒரு நெட் ஒர்க் ஏற்படுத்திச் செயல்படத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மதுரையில் கூடி, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
கோவையைச் சேர்ந்த எஸ்.பி.தியாகராஜன், ‘`இதுவரை 800 மனுக்கள் அனுப்பிப் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறேன். கோவை மாநகராட்சியின் வரவு செலவுக்கணக்கை ஆர்.டி.ஐ மூலம் பெற்றேன். வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்கு 700 கோடி ருபாய் அளவுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது. வேலுமணிமீது சமீபத்தில் போடப்பட்ட ஊழல் வழக்குகளுக்கு முன்பே இந்த விவரங்களை வெளிக்கொண்டுவர ஆர்.டி.ஐ பயன்பட்டது’’ என்கிறார்.

மதுரை ஹக்கீம், “மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்காததை ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற்று வெளிப்படுத்தினேன். அதற்குப் பின்புதான் ஜப்பான் நிதி நிறுவனத்திடம் கடன் கேட்டார்கள்’’ என்கிறார்.
நாமக்கல் மதியழகன், ‘`இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதன் மூலம் பல தகவல்களைப் பெற்றுள்ளேன். தகவல் மட்டுமல்லாமல் அரசுத்துறை அலுவலக ஆவணங்களையும், பணிகள் நடப்பதையும் ஆய்வு செய்யலாம். ஊராட்சி அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை ஆய்வு செய்யலாம். அதற்கான வழிமுறைகள் இணைய தளங்களில் உள்ளன” என்கிறார்.
ஜனநாயகத்தை எளிய மக்கள் வரை கொண்டு செல்லும் சாத்தியத்தை உருவாக்கும் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.