அலசல்
அரசியல்
Published:Updated:

ஓங்கிய உக்ரைனின் கைகள்! - ரஷ்யாவுக்குப் பின்னடைவா... போர்த் தந்திரமா?

ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்

இந்தப் போரில் உக்ரைனை முன்னிறுத்தி, தனது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஏழு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது ரஷ்யா - உக்ரைன் போர். கடந்த சில தினங்களாக இந்தப் போரில் உக்ரைனின் கைகள் ஓங்கியிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. முக்கியப் பகுதிகளிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது அங்கே?

ரஷ்யாவுக்குப் பின்னடைவு!

செப்டம்பர் 11-ம் தேதி, ரஷ்யா - உக்ரைன் போர் 200 நாள்களை எட்டியிருந்த சமயத்தில், ``இந்த மாத தொடக்கத்திலிருந்து மேற்கொண்ட புதுப்பிக்கப்பட்ட போர் நடவடிக்கைகளால், ரஷ்யா வசமிருந்த 2,000 சதுர கி.மீ பகுதிகளை மீட்டுவிட்டோம்’’ என்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. வடகிழக்கு உக்ரைனிலுள்ள கார்கிவ் மாகாணத்தில் அமைந்திருக்கும் இஸியம், குப்யான்ஸ்க், பாலாக்லியா ஆகிய முக்கிய நகரங்களை ரஷ்யாவிடமிருந்து மீட்டு, மீண்டும் உக்ரைன் கொடியை அங்கே பறக்கவிட்டனர் ராணுவத்தினர். இவற்றில் இஸியம் நகரில்தான், அதிக அளவில் ஆயுதங்களைச் சேமித்துவைத்திருந்தது ரஷ்யா. வீரர்களுக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்யும் இடமாக இருந்த குப்யான்ஸ்க் நகரும் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, ரஷ்யாவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

புதின்
புதின்

ரஷ்ய வீரர்கள் தப்பியோட்டம்?

போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா சந்திக்கும் முதல் பெரும் பின்னடைவு இதுதான். இது குறித்து ரஷ்யா தரப்பிலிருந்து ஆரம்பகட்டத்தில் வெளியான அறிக்கையில், ``வீரர்களை மறு ஒருங்கிணைப்பு செய்து தாக்குதல் நடத்தவே படைகளைத் திரும்பப் பெற்றிருக்கிறோம்’’ என்று சொல்லப்பட்டிருந்தது. அதேநேரம் உக்ரைனிலுள்ள ஆயுதக் கிடங்குகளிலிருக்கும் ஆயுதங்களை அங்கேயே விட்டுச் சென்றிருக்கிறது ரஷ்ய ராணுவம். எனவே, `ஆயுதங்களைப் போட்டுவிட்டு ரஷ்ய வீரர்கள் தப்பியோடிவிட்டனர்’ என்றும் சொல்லப்படுகிறது.

போர்த் தந்திரம்?

ரஷ்யாவின் பின்வாங்கல் குறித்து, ``இது ரஷ்யாவின் போர் தந்திரமாகக்கூட இருக்கலாம். ரஷ்ய எல்லையிலுள்ள கார்கிவ் பகுதியில் தற்போது ஏராளமான உக்ரைன் வீரர்கள் முன்னேறியிருக்கின்றனர். எல்லையில் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால், உக்ரைன் வீரர்கள் கார்கிவ்விலிருந்து திரும்பிச் செல்வது கடினம். எனவே, அடுத்த சில தினங்களில் உக்ரைன் வீரர்களை ரஷ்ய ராணுவம் மடக்கிப் பிடித்துத் தாக்குதல் நடத்தும் என்றே தோன்றுகிறது’’ என்கின்றனர் இந்தப் போரை உற்றுநோக்குபவர்கள்.

ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்
ஜெலன்ஸ்கியுடன் உக்ரைன் வீரர்கள்


ரஷ்யாவின் பதிலடி!

உலக அரங்கில் இந்தப் பின்னடைவு ரஷ்யாவுக்கும், அதிபர் புதினுக்கும் தலைகுனிவாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ரஷ்யாவின் பதிலடி இனி பயங்கரமாக இருக்கும் எனச் சில ராணுவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர். அதன்படி, பழிவாங்கல் நடவடிக்கையாக உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள மின்நிலையங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறது ரஷ்ய விமானப்படை. இதனால், கிழக்கில் இருக்கும் ஐந்து மாகாணங்களிலுள்ள சுமார் 150 நகரங்கள் இருளில் மூழ்கியிருக்கின்றன. மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பாதிக்கும் வண்ணம் ரஷ்யா நடத்தியிருக்கும் தாக்குதல்களுக்கு உக்ரைன் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

விபத்தில் சிக்கிய ஜெலன்ஸ்கி!

செப்டம்பர் 14 அன்று, ரஷ்யா வசமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு, சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு நேரில் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார் அதிபர் ஜெலன்ஸ்கி. அதன் பிறகு தலைநகர் கீவ்-வுக்குத் திரும்பிக்கொண்டிருந்த அதிபரின் கார் விபத்துக்குள்ளானதாகச் செய்திகள் வெளியாகின. ``கார்கிவ்விலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது அதிபரின் கார்மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிபரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பலத்த காயமில்லை என்று கூறினர். விபத்து குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று செய்தித் தொடர்பாளர் செர்ஜி தெரிவித்திருக்கிறார்.

ஓங்கிய உக்ரைனின் கைகள்! - ரஷ்யாவுக்குப் பின்னடைவா... போர்த் தந்திரமா?

8,000 சதுர கி.மீ மீட்பு!

செப்டம்பர் 13-ம் தேதி அன்று காணொளியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``கிட்டத்தட்ட 8,000 சதுர கி.மீ பரப்பளவை உக்ரைன் ராணுவம் மீட்டெடுத்துவிட்டது. ரஷ்யாவை வீழ்த்த மேற்கத்திய நாடுகள் விரைவாக உதவிகளை வழங்க வேண்டும்’’ என்று பேசியிருந்தார். செப்டம்பர் 15-ம் தேதி வரை கார்கிவ் மாகாணத்திலுள்ள சுமார் 12 நகரங்களை உக்ரைன் மீட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வெற்றியை முன்வைத்து ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ள நினைக்கும் மேற்குலக நாடுகளிடம் அதிக அளவில் ராணுவ உதவிகள் கோருவதைத் திட்டமாக வைத்திருக்கிறது உக்ரைன்.

ஜெர்மனிக்கு பாதிப்பு!

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்தே உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கின. ரஷ்யாமீது பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில், `தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்று நாள்களுக்கு ஜெர்மனிக்குச் செல்லும் எரிவாயு பைப்லைனை மூடுகிறோம்’ என்று முதலில் சொன்னது ரஷ்யா. பிறகு, `பொருளாதாரத் தடை நீக்கப்படும் வரை பைப்லைனைத் திறக்க முடியாது’ என்று குண்டைத் தூக்கிப்போட்டது. இதனால், ஜெர்மனி மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வகையில் எரிவாயு விலை உச்சம் தொட்டிருக்கிறது. தட்டுப்பாடும் அதிகரித்திருக்கிறது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் எரிவாயு விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் நாடகம்?

இந்தப் போரில் உக்ரைனை முன்னிறுத்தி, தனது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ``அமெரிக்க டாலருக்கு நிகராக யூரோவின் மதிப்பு உயர்ந்துகொண்டிருக்கிறது. தங்களுக்கு நிகராக ஐரோப்பிய ஒன்றியம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே உதவிகளைச் செய்து உக்ரைனை அமெரிக்கா இயக்கிவருகிறது. இந்தப் போரால் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகரித்திருக்கின்றன. அதோடு, அமெரிக்காவின் எதிரி நாடான ரஷ்யா பொருளாதார ரீதியாகவும், ராணுவரீதியாகவும் பெரும் இழப்புகளைச் சந்தித்துவருகிறது. அமெரிக்கா, தான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டிருக்கிறது’’ என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.