அரசியல்
சமூகம்
Published:Updated:

ஜெயலலிதா படத்துக்கு எதிரில் படையாட்சி படம்... கருணாநிதி படத்துக்கு இடம் எங்கே?

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி உருவப்படம்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி உருவப்படம்

வன்னியர் சமூகத் தலைவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியின் உருவப்படத்தைச் சட்டசபையில் திறந்துவைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அந்த விழாவிலும் திரைமறைவிலும் நடந்த விஷயங்கள் இங்கே...

  • ‘ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் கட்டப்படும்; பிறந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும்; சட்டசபையில் உருவப்படம் திறக்கப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்தார். இதில் நினைவு மண்டபமும் வெண்கல உருவச் சிலையும் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது, உருவப்படத்தைத் திறந்துவைத்திருக் கிறார்கள். இப்படி வன்னியர்களின் ஆதரவை ஆளும்கட்சி அள்ளுவதைப் பா.ம.க ரசிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து, ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாத நிலையிலும் ஒப்பந்தப்படி அ.தி.மு.க எம்.எல்.ஏ-கள் ஆதரவுடன் அன்புமணி ராஜ்யசபா எம்.பி ஆனார். கூட்டணிக்குள் இருப்பதால், விழாவில் அன்புமணி பங்கேற்க வேண்டிய நிலை.

ஜெயலலிதா படத்துக்கு எதிரில்
படையாட்சி படம்... கருணாநிதி படத்துக்கு இடம் எங்கே?
  • ‘‘என் கால் செருப்புகூட சட்டமன்றத்துக்குள் நுழையாது’’ எனச் செய்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, விழாவில் பங்கேற்கவில்லை ராமதாஸ். ஆனால், இன்னொரு ராமதாஸ் பங்கேற்றார். அவர் படையாட்சியின் மகன் டாக்டர் ராமதாஸ். அவரை மேடையில் அமர வைத்திருந்தார்கள். அன்புமணியை எதிர்க்கட்சி தலைவர்கள் வரிசையில் அமரவைத்திருந்தனர்.

  • பா.ம.க-வுக்கு முன்பே வன்னியர் சமூகத்துக்காகக் குரல் கொடுத்த இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி. வன்னியர்களைத் திரட்டி, உழவர் உழைப்பாளர் கட்சியை ஆரம்பித்து, 1952 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 18 இடங்களில் வென்றார் ராமசாமி. பெரும்பான்மை இல்லாத காங்கிரஸுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்பதற்காகக் கட்சியைக் காங்கிரஸில் இணைத்து அமைச்சரா னார் ராமசாமி. விழாவில் பேசிய பன்னீர்செல்வம், ‘‘1952 தேர்தலில் 18 பேரை வெற்றிபெறச் செய்து, அன்றைக்குத் தமிழகத்தில் நிலையான அரசு அமையக் காரணமாக இருந்தவர் படையாட்சியார்’’ என்றார். ‘‘22 தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் அ.தி.மு.க வென்றதன் மூலம், எடப்பாடி ஆட்சிக்கு ஏற்பட இருந்த ஆபத்து நீங்கியது. அதற்குக் காரணம் பா.ம.க-வின் ஓட்டுகள்தான். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையப் பாடுபட்ட படையாட்சியாரைப் போலவே ஐயாவும் பாடுபட்டார். அதை ஆட்சியாளர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள்’’ எனக் கொதிக்கிறார்கள் பா.ம.க-வினர்.

  • அன்புமணி விழாவில் கலந்துகொள்வதற்குக் காரணம், ராமதாஸின் முத்துவிழா. ராமதாஸின் பிறந்தநாளான ஜூலை 25-ம் தேதி திருவேற் காட்டில் முத்து விழா நடைபெறுகிறது. அதில் அ.தி.மு.க சார்பில் எடப்பாடி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்காகத்தான் பா.ம.க அடக்கி வாசிக்கிறது என்கிறார்கள்.

  • ‘‘உயிரோட்டமுள்ள இந்த ஓவியத்தைத் தீட்டிய ஓவியர் மதியழகனை மனதாரப் பாராட்டுகிறேன்’’ என விழாவில் குறிப்பிட்டார் எடப்பாடி. மதியழகனுக்கு நினைவுப் பரிசும் வழங்கிக் கௌரவித்தார்கள். இதற்குப் பின்னால் இருந்த உண்மையைச் சிலர் நம்மிடம் உடைத்தார்கள். ‘‘ஜெயலலிதாவின் ஓவியத்தைத் தத்ரூபமாக ஒரே மாதத்தில் வரைந்த மதியழகன், படையாட்சியாரின் ஓவியத்தை வரைவதற்குச் சிரமப்பட்டிருக்கிறார். படையாட்சியாரின் ஆளுயர உருவப்படம் வரைவதற்கு வசதியாக அவரின் புகைப்படங்கள், அவரின் குடும்பத்தினரி டம் இல்லை. அவரின் ஓவியத்தை வரைந்து மூன்று அமைச்சர்களிடம் காட்டியிருக்கிறார் மதியழகன். அவர்கள் திருத்தங்கள் சொல்லிய பிறகும், முழு திருப்தி ஏற்படவில்லை. கடைசியில் அந்த அமைச்சர்களே மாடல்போல போஸ் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகும் எடப்பாடிக்கு திருப்தி ஏற்படவில்லை. காரணம் முகம் மட்டுமே படையாட்சியாரின் சாயலில் இருந்தது. உடல் அமைப்பு அமைச்சர்களை ஒத்திருந்தது.

    ‘ராமசாமி படையாட்சியாரைப் போலவே ஓவியம் அச்சு அசலாக இருக்க வேண்டும்’ என்றார் எடப்பாடி. ‘தத்ரூபமாக வரைய ஏற்ற வகையில் போட்டோ எதுவுமில்லை’ என்றார் மதியழகன். ‘தமிழக அமைச்சராக இருந்த ராமசாமி படையாட்சியாரின் போட்டோ, செய்தி மக்கள் தொடர்புத் துறையிடம் இருக்குமே’ எனச் சொல்லி, படத்தைத் தேடச் சொன்னார் எடப்பாடி. அப்படிக் கிடைத்த படங்கள்கூட ஓவியம் வரைய ஏற்ற வகையில் இல்லை. கடைசி யில் ராமசாமி படையாட்சியாரின் மகன் ராமதாஸை மாடலாக வைத்து உடல் அமைப்பு, உயரம், நிறம் ஆகியவை முதலில் வரையப்பட்டு, இறுதியாகத் தலை பாகம் தீட்டப்பட்டபோது ராமசாமி படையாட்சியாரின் முகம் அதில் வரையப்பட்டது” என்றார்கள்.

  • சட்டசபையில் ஜெயலலிதா படத்துக்கு நேர் எதிரே ராமசாமி படத்தை வைத்திருக்கிறார் கள். ஜெயலலிதா படத்தைச் சட்டசபையில் எடப்பாடி அரசு வைத்தபோது, ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை எப்படி சட்டசபையில் வைக்கலாம்?’’ என தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் படத்தை வைப்பதற்கு இடம் இருக்கக் கூடாது என்பதற்காகவோ அல்லது ஜெயலலிதாவின் படத்துக்கு எதிரே கருணாநிதி படம் வைக்கப்படக் கூடாது என்பதற்காகவோ ராமசாமி படையாட்சி யாரின் படத்தை வீம்புக்கு வைத்திருக்கிறார்கள்’’ என தி.மு.க-வினர் புலம்புகிறார்கள்.