
பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்து சகாயம் அளித்த அறிக்கையை, அப்போதைய அ.தி.மு.க அரசு வெளியிடவில்லை.
‘‘தமிழகத்தையே அதிரவைத்த பல்லாயிரம் கோடி ரூபாய் கிரானைட் குவாரி முறைகேடுகள் வழக்கைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். மதுரை ஆட்சியராக இருந்த சகாயம், இந்த முறைகேடுகள் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்ததையும் வெளியிடவில்லை. ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க-வும் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை. மாறாக, மீண்டும் குவாரிகளைத் திறக்க அனுமதியளித்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது’’ எனப் பதறுகிறார்கள் மதுரை மாவட்டம், மேலூர் வட்டார மக்கள்.
கிரானைட் குவாரி முறைகேடுகள் என்றதுமே, மதுரை மேலூர் வட்டாரத்தில் வானளாவிய மலைகளெல்லாம் ஏதோ கேக் துண்டுகள்போல வெட்டப்பட்ட புகைப்படங்கள்தான் நம் மனக்கண்ணில் வந்துசெல்லும். 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கிரானைட் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. பி.ஆர்.பி உட்பட முக்கிய குவாரி அதிபர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனால், படிப்படியாக நடவடிக்கையின் தீவிரத்தை குறைத்துக்கொண்டது அ.தி.மு.க அரசு.

இதையடுத்து, சமூகச் செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்து சகாயம் அளித்த அறிக்கையை, அப்போதைய அ.தி.மு.க அரசு வெளியிடவில்லை. இன்னொரு பக்கம் 90-க்கும் மேற்பட்ட கிரானைட் மோசடி வழக்குகளில், இதுவரை 78 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், பி.ஆர்.பி நிறுவனத்தின் மீதான வழக்குகள்தான் அதிகம். மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, சில காலம் பங்குதாரராக இருந்த ஒலம்பஸ் நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை நடத்திவரும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
``இந்த விவாகரத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்’’ என்று வறுத்தெடுக்கிறார் கிரானைட் முறைகேடுகளுக்கு எதிரான செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான பி.ஸ்டாலின். ‘‘ `அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று சொல்லித்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், அ.தி.மு.க அரசு வெளியிட மறுத்த சகாயம் விசாரணை கமிஷன் அறிக்கையை இந்த அரசு வெளியிடத் தயங்குவது ஏன்? கிரானைட் குவாரி விஷயத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். தமிழகத்தில் நடந்த முறைகேடுகளில், மிகப்பெரியது கிரானைட் குவாரி முறைகேடுகள்.

இந்த முறைகேடுகள் சம்பந்தமாக விசாரணை நடத்திய சகாயம், கடந்த 2015, நவம்பரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் 1,11,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போதிருந்த அ.தி.மு.க அரசு அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சகாயம் அறிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்று குவாரி அதிபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்திலேயே கூறி அதை முடக்கப் பார்த்தது. சமீபகாலமாக, கிரானைட் குவாரிகளைத் திறக்க முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து முயல்கிறார்கள். பெரும்பாலான குவாரிகளை நடத்தும் முதலாளிகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு நெருக்கமானவர்கள். குவாரிகளைத் திறக்க வேண்டுமென்று கடந்த ஆண்டு பா.ஜ.க-வினர் மேலூரில் உண்ணாவிரதம் இருந்து ஊர்வலமெல்லாம் போனார்கள்.

குவாரிகளை மூடிய பின்புதான் மேலூர் வட்டாரத்தில் விவசாயிகள் நிம்மதியாக விவசாயம் செய்துவருகிறார்கள். குவாரி திறக்க அரசு அனுமதியளித்தால், இனி மக்களுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடும். ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க அரசு, கிரானைட் குவாரி வழக்குகளைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு. மேலும், சகாயம் அறிக்கையிலுள்ள அனைத்து விஷயங்களும் இரண்டு தரப்புகளுக்குத்தான் முழுமையாகத் தெரியும். ஒன்று நீதிமன்றம்; இன்னொன்று அரசு. தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ள விஷயங்களை தி.மு.க அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலூர் நீதிமன்றத்திலும், மதுரை தனி நீதிமன்றத்திலும் உள்ள வழக்குகளில், நீண்டகாலம் ஆஜராகி சிறப்பாகச் செயல்பட்டுவந்த வழக்கறிஞர் ஷீலா விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய வழக்கறிஞரை தி.மு.க அரசு இன்னும் நியமிக்கவில்லை. ஏற்கெனவே கொரோனாவால் வழக்கு விசாரணை தாமதமாகிக்கொண்டிருக்கும் நிலையில், வழக்கறிஞர் நியமிக்கப்படாததால், வழக்குகள் இன்னும் தாமதமாகின்றன. உடனடியாக வழக்கறிஞரை நியமித்து வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் தி.மு.க அரசுமீது நம்பிக்கை ஏற்படும்’’ என்றார்.

கிரானைட் குவாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.ராஜசேகரனோ, ‘‘குவாரிகளைத் திறக்க நாங்கள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை வைத்துவருகிறோம். கடந்த ஆட்சியில் சில அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அப்படியே வளர்ந்து வேறு மாதிரியாகச் சென்றதுடன், அனைவரின் தொழிலையும் பாதித்துவிட்டது. இந்த வழக்குகளையெல்லாம் விசாரித்து முடிவுக்கு வந்தால்தான் குவாரிகளைத் திறக்க முடியும். எங்கள் பிரச்னைகளை இப்போது வந்த அரசிடமும் தெரிவித்திருக்கிறோம். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
கிரானைட் வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞரை நியமிக்காதது பற்றி மதுரை ஆட்சியர் அனீஷ் சேகரிடம் கேட்டோம். ‘‘வழக்கறிஞரை நியமிக்க வேலை நடந்துகொண்டிருக்கிறது. கிரானைட் வழக்குகள் விரைந்து நடக்கும்’’ என்றார்.
சகாயம் விசாரணை அறிக்கையை தி.மு.க அரசாவது வெளியிடுமா?