தற்போதைய சூழ்நிலை மாற்றத்தின் காரணமாகவும், ஆரோக்கியத்தின் மீதான அக்கறையின் காரணமாகவும் மக்களிடையே இயற்கை பொருள்களின் மீது ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு. இதில் பலர் இயற்கை பொருள்களைப் பயன்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் அவை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். சிலர் அதைத் தொழிலாகவும் எடுத்துச் செய்ய ஆர்வம் கொள்கின்றனர். அந்த வகையில் சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணான திவ்யபாரதி, இயற்கை முறையில் மூலிகை நாப்கின் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார், அது குறித்த விழிப்புணர்வும் தருகிறார்.
மேலும் ஆரோக்கியமான உடலுக்கான உணவுகளான சிறுதானியங்களிலும், பாரம்பர்ய அரிசி வகைகளிலும் இனிப்பு, காரம் செய்து விற்பனை செய்து வருகிறார். மேலாண்மை துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள திவ்யபாரதி, இயற்கையை நேசிப்பதற்கும், இயற்கை பொருள்களை தயாரிப்பதற்கும் தனக்கு உந்துதலாக இருந்தது, பெண்களின் மாதவிடாய் பிரச்னை என்கிறார். 28 வயதாகும் இந்த இளம் எனர்ஜியுடன் பேசினோம்.

``எம்.பி.ஏ முடிச்சிட்டு தனியார் நிறுவனத்துல மனிதவள பிரிவில் (HR) வேலைபார்த்தேன். மாதவிடாய் காலத்துல எனக்கு ஏற்பட்ட அசௌகர்யம், மூலிகை நாப்கின்கள் பயன்பாட்டுக்கு என்னை மாற்றியது. ஒரு கட்டத்துல, அதை நானே தயாரிச்சு தொழிலா செய்யும் முடிவையும் எடுக்க வெச்சது.
நான் வேலைக்குப் போய் சேர்த்து வெச்சிருந்த பணத்தை முதலீடா போட்டு, `திவ்யம் இயற்கையகம்' என்ற அங்காடியை நாலு வருஷத்துக்கு முன்னாடி தொடங்கினேன். நாப்கின் விற்பனை மட்டுமே நோக்கமா இல்லாம, மாதவிடாய் சுகாதாரம் குறித்து இதுவரை 50,000 மாணவிகள் மற்றும் கிராமப்புற, நகர்புறப் பெண்களுக்கு விழிப்புணர்வையும் கொண்டு சேர்த்திருக்கேன். கூடவே, அவங்ககிட்ட இயற்கை உணவுப் பொருள்களின் சிறப்பையும் எடுத்துச் சொல்வேன்'' என்கிறார் வயதுக்கு மீறிய பக்குவத்துடன்.
தன் மூலிகை நாப்கின் தயாரிப்பு பற்றிக் கூறும்போது, ``முறையா அதற்கான பயிற்சி எடுத்துக்கிட்டேன். வேப்பிலை, கற்றாழை, பிற மூலிகைகள்னு நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தினேன். ஆரம்பத்தில் வாங்கவும் ஆள் இல்ல, வருமானமும் இல்ல. ஆனாலும், இது சரிப்பட்டு வராதுனு என் முயற்சியை கைவிடாமல், அதை நம்பிக்கையோடு தொடர்ந்துட்டே இருந்தேன். துணியினால் தயாரிக்கப்படும் நாப்கின், குழந்தைகளுக்குத் தேவையான துணி நாப்கினும் செய்ய ஆரம்பிச்சேன்.
இன்னொரு பக்கம், மூலிகைகளால் செய்யப்படும் தேநீர் பொடி, சிறுதானியங்கள் சத்துமாவு, மூலிகை குளியல் கட்டிகள் (சோப்)னு இதையெல்லாம் ரசாயனம் இல்லாம தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்'' எனும் திவ்யபாரதி, வாய்ப்பு கிடைக்கும் பொது இடங்களில் எல்லாம் தன் தயாரிப்புப் பொருள்களை காட்சிப்படுத்தி, விற்பனையும் செய்து வருகிறார்.

``குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் வகையில், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி வகைகளில் பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை சேர்த்து இனிப்பு வகை மற்றும் கார வகை தின்பண்டங்களை வீட்டிலேயே தயாரிச்சு விற்பனை செய்து வர்றேன். சேலம் மட்டுமல்லாம தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுக்க பல மாநிலங்களுக்கும் கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லும் திவ்யபாரதி, நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 20+ பொருள்களை ரசாயனம் இல்லாமல் வீட்டிலிருந்தபடியே தயாரிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும் பயிற்சியும் வழங்கி வருகிறார். மேலும் கடந்த 5 வருடங்களாக பல சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இதற்காக சமூக ஆர்வலர் விருது, பெண்களுக்கான சுயசக்தி விருது, பாரதி கண்ட புதுமைப்பெண் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் முன்னெடுத்துள்ள சமூகப் பணிகளில் பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு, இயற்கை வளத்துக்காக மரக்கன்றுகள் நடுவது, பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் பற்றிய எடுத்துரைப்பது, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருள் பற்றிய அறிமுகம், செயற்கை சானிட்டரி நாப்கின்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எடுத்துக் கூறுவது, தண்ணீர் சிக்கனம் மற்றும் இயற்கை உணவு முறை மூலம் ஆரோக்கியம் பெறுவது பற்றிய விழிப்புணர்வு எனத் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
``டீக்கடை நடத்திட்டு வர்ற அப்பா பழனிசாமி, அம்மா சாந்தி, டிப்ளோமா முடிச்சிருக்குற தம்பி கார்த்தி, என்னை படிக்க வெச்ச கமலம் பாட்டி, சுப்ரமணியம் தாத்தானு இந்த எளிய குடும்பத்துல வளர்ந்த எனக்கு முன்னாடி, இப்போ பாதை பெருசா விரிஞ்சு கிடக்கு. சின்ன வயசுலயிருந்தே இயற்கை மேல ஆர்வம் இருந்தாலும், அதையொட்டியே வாழ்வு அமைவது மகிழ்ச்சியா இருக்கு. இப்போ என் தேவைகளைப் பார்த்துக்கிற அளவுக்கு சுயதொழில் முனைவோரா வளர்ந்திருப்பதுடன், சமூக சேவையும் செய்ய முடிவது பெருமையா இருக்கு'' என்கிறார் திவ்யபாரதி.

ஆரம்பத்தில் திவ்யபாரதிக்கு நோ சொன்ன பெற்றோர், இப்போது தங்கள் மகளை பெருமையுடன் பார்க்கின்றனர். ``ஆரம்பத்தில் யோசிச்சாலும் இப்போ என் குடும்பம், பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, தம்பிகள்னு எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க. தொழிலை இன்னும் விரிவுபடுத்தணும். மக்களை இயற்கையையொட்டிய வாழ்வியலுக்குத் திருப்ப விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊட்டணும்'' என்கிறார் தன் லட்சியமாக.
வாழ்த்துகள் திவ்யபாரதி!