ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

“கரகாட்டத்தை ஆபாசமாகப் பார்க்கும் மனநிலை மாறணும்!” - கரகக் கலைஞர் துர்கா

துர்கா தேவி
பிரீமியம் ஸ்டோரி
News
துர்கா தேவி

கரகக் கலைஞர்களை மக்கள் மனுஷங்களா கூட பார்க்குறது கிடையாது. ராத்திரி நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது, நிறைய அவமானங்களை சந்திச்சிருக்கேன்.

சேலத்தைச் சேர்ந்த பரதம் மற்றும் கரகக் கலைஞர் துர்கா தேவிக்கு வயது 37. கடந்த 25 ஆண்டுகளாக உலகம் முழுக்கப் பயணம் செய்து கரகக் கலையை மேடையேற்றி வருகிறார். கரகக் கலையை மேம்படுத்த தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு கலை நிகழ்ச்சிக் காக சேலத்திலிருந்து சென்னை வந்திருந்த துர்காவை சந்தித் தோம். அரிதாரம் பூசிக்கொண்டே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“சின்ன வயசுல பரதம் கத்துக்கிட்டு அரங்கேற்றம் பண்ணேன். நடன நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது கரகாட்ட, ஒயிலாட்டக் கலைஞர்களும் வந்துருப்பாங்க. பரதக் கலைஞர்களுக்கு நாற்காலி இருக்கும். மேக்கப் பண்ண தனி ரூம் இருக்கும். ஆனா, கரகக் கலைஞர்களை மேடைக்குக் கீழே ஒரு ஓரமா தரையில உட்கார வெச்சிருப்பாங்க. அவங்க அங்கயே டிரஸ் மாத்தி, அங்கயே மேக்கப் போட்டு, அங்கயே காத்துக்கெடப்பாங்க. இதையெல்லாம் பார்த்த எனக்கு பரதக் கலைக்கும், பரதக் கலைஞர்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கிடைக்கிறதில்லையேன்னு கவலையைக் கொடுத்துச்சு.

“கரகாட்டத்தை ஆபாசமாகப் பார்க்கும் மனநிலை மாறணும்!” - கரகக் கலைஞர் துர்கா

அந்த மனநிலையை உடைக்க நானே கரகம் கத்துக்கணும்னு முடிவு பண்ணேன். வீட்ல சொன்னப்போ திட்டுனாங்க, அடிச்சாங்க. ஆனா, நான் கரகம் கத்துக்கணும்னு உறுதியா இருந்தேன். எதிர்ப்பை மீறி கத்துக்கிட்டேன். “ஒசந்த சாதியில பொறந்துட்டு கரகத்தை எதுக்குமா கத்துக்குற?”னு சக ஆட்டக்காரங்களே கேட்டாங்க. அப்போதான் கலைகளை சாதிக்குள்ள அடக்கி வெச்சுருக்குற விஷயமே எனக்குப் புரிஞ்சுது. மக்களோட இந்த மன நிலையை மாத்தணும்னுதான் இத்தனை வருஷங்களா போராடு றேன்...’’ வருத்தம் பகிர்பவர், கரகக் கலைஞர்களின் வாழ்க்கை அவலத்தையும் பதிவு செய்கிறார்.

‘`கரகக் கலைஞர்களை மக்கள் மனுஷங்களா கூட பார்க்குறது கிடையாது. ராத்திரி நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது, நிறைய அவமானங்களை சந்திச்சிருக்கேன். ‘ஆட்டக்காரி தான ஒருநாள் ராத்திரி அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’னு தப்பான கண்ணோட்டத் தோடு அணுகுவாங்க. மணிக்கணக்கா மேடையில ஆடிட்டு கீழ இறங்கி தண்ணி கேட்டா, பழைய வாட்டர் கேன்ல கொண்டு வந்து கொடுப்பாங்க. சில இடங்கள்ல அதுவும் கிடைக்காது. ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணணும்னு கேட்டா, அவமானப்படுத்தி, அடிச்சு விரட்டிவிட்டுருக்காங்க.

கரகம் ஆடுறதுனால வெளிய மாப்பிள்ளை கிடைக்கல. கரக ஆட்டக்காரர் ஒருத்தரையே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவருக்கு இந்தத் தொழில் பத்தி முழுசா தெரியும்ங்கிறதால வாழ்க்கையில பிரச்னை வராதுனு நினைச்சேன். ஆனா, கல்யாணம் ஆன சில மாசத்துலயே பிரச்னை வர ஆரம் பிச்சுது. அவருக்கு நான் நிகழ்ச்சிகளுக்கு போறதுல உடன்பாடு இல்ல. மனஸ்தாபம் பெரிசாகி, விவாகரத்தாயிருச்சு. ஆண் ஒண் ணும் பெண் ஒண்ணுமா எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. கடந்த ஏழு வருஷமா குழந்தைங்களையும், வயசான என் அப்பாவை யும் தனி மனுஷியா இருந்து நான்தான் பார்த் துக்கிறேன். என் மகளும் கரகம் ஆடுவா...” கண்கள் கலங்கி, அமைதியாகித் தொடர்கிறார்.

“ மூணு வருஷத்துக்கு முன்னாடி, என் னோட பொண்ணு திடீர்னு ஒருநாள் மயங்கி விழுந்தா. ஆஸ்பத்திரில எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு, `இதயத்துல பிரச்னை இருக்கு, சரி பண்ண பல லட்சங்கள் செல்வாகும்’னு சொல்லிட் டாங்க. கரகம் மூலமா கிடைக்கிற வருமானத்துல தான் அவளுக்கு மாத்திரை மருந்து வாங்கிக் கொடுத்து, உசுரைப் புடிச்சு வெச்சுருக் கேன்” என்றபடி மீண்டும் உடைந்து அழுகிறார்.

“இப்போ நீங்க தெருக் கள்ல பாக்குறது உண்மையான கரகக் கலையே இல்ல. ‘ஆபாசமா ஆடுனாதான் மக்கள் பார்ப்பாங்க. குட்டியா டிரஸ் போட்டுருந்தா தான் கூட்டம் கூடும்’னு நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்கள் கேக்குறாங்க. ஆனா, நான் கரகத்தை ஆபாசமா ஆடக்கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். கிளி ஏறுன இந்த கரகமும் சாமிதான். இதுல ஆபாசம் இருக்கக் கூடாது” என்பவர், கரகக் கலைக்கு உரிய மரியாதை கிடைப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துவருகிறார்.

‘`கரகத்தோடு தீப்பந்தம் சுத்துறது, சிலம்பம் சுத்துறது, கண்ணுல பிளேடு எடுக்குறது,தேங்காய் உடைக்கிறது, கண்ணாடி பாட்டில்ல நிக்கிறது, 51 விளக்கு ஏந்துறது, சுழல் கரகம் பண்றது, ஸ்கேட்டிங் பண்றதுனு வித்தியாசமான முயற்சிகள்ல இறங்குனேன். உலக சாதனைகளும் பண்ணிருக்கேன். நம்முடைய பாரம்பர்யத்தை மீட்டெடுக்கற கடமை எல்லோருக்கும் இருக்குனு நினைக் கிறேன். உண்மையைச் சொல்லணும்னா நாங்க மூணு நேரம் சாப்பிட்டு பல வருஷம் ஆகுது. வீட்டு விசேஷத்துல தொடங்கி, கோயில் திருவிழாவரை உங்களால முடிஞ்ச வாய்ப்பைக் கொடுங்க. நாங்களும் பசி யாறிக்கிறோம்”

- துர்காவின் நெகிழ்ச்சியான வேண்டு கோள் நெஞ்சம் கலங்கச் செய்கிறது.