பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். 2016- ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, அவர் வென்ற இரண்டாவது பதக்கம் இது. போட்டிகளை முடித்துக் கொண்டு சமீபத்தில் சொந்த ஊரான சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டிக்குத் திரும்பிய மாரியப்பனுக்கு ஊர்மக்கள் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்பைக் கொடுத்தனர்.

இந்நிலையில், பதக்க நாயகன் மாரியப்பனுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக சேலத்தில் இயங்கிவரும் `மேங்கோ கால்டாக்ஸி நிறுவனம்’ கட்டணச் சலுகை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதாவது, `சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற பெயர் கொண்டவர்களுக்கு செப்டம்பர் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையிலான மூன்று நாள்களுக்கு எங்களுடைய டாக்ஸியில் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மூன்று நாள்களும் சேலம் நகரப் பகுதிக்குள் பயணம் மேற்கொள்ள மேங்கோ கால்டாக்ஸியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்’ என அறிவித்தது. பாராலிம்பிக் வீரர் மாரியப்பனை கௌரவப்படுத்தும் விதமாக மேங்கோ கால்டாக்ஸி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்களிடயே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மேங்கோ கால்டாக்ஸி உரிமையாளர் நித்தியானந்தம் அவர்களிடம் பேசினோம்.
``சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இரண்டாவது முறையாக பதக்கத்தை ஜெயிச்சிருக்காரு. அவருடைய இந்தச் சாதனை நிச்சயமாக கொண்டாப்பட வேண்டியது. அந்தவகையில், எங்களால முடிஞ்ச அளவுக்கு அவரை கெளரவிக்கணும்னு நினைச்சோம். அதன் அடிப்படையில்தான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், சேலம் நகரப் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு எங்களுடைய கால்டாக்ஸியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை வெளியிட்டோம்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ச்சியாக ஃபோன் கால்கள் வந்தன. மாரியப்பன் எனும் பெயர் கொண்டவர்கள் எங்களுடைய டாக்ஸியில் இலவசமாக பயணித்தார்கள். பலரும் `ஏன் மாரியப்பன்ங்கிற பேருக்கு டாக்ஸியை இலவசமாக கொடுக்குறீங்க!’ன்னு கேட்டாங்க. பலருக்கு மாரியப்பனை பத்தியும், அவர் செஞ்ச சாதனையைப் பத்தியும் தெரியலை. அப்படிக் கேட்பவர்களிடம் மாரியப்பன் செஞ்ச சாதனையை விளக்கினோம். இன்றைக்கு இளைஞர்கள் பலரும் செல்ஃபோனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
அவர்கள் மாரியப்பன் போன்றோரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்றார்.
மாரியப்பனின் புகழை அனைவருக்கும் கொண்டு சென்றதில் இந்த நிறுவனத்தின் பெயரும் பலருக்கும் தெரியவந்திருக்கிறது!