`நான் யார் தெரியுமா? அமைச்சர் கருப்பணனின் கார் டிரைவர். உன்னைத் தொலைத்து விடுவேன்' என்று மிரட்டி நான் உட்கார்ந்திருந்த சேரை எட்டி உதைத்தார்'' என அதிர்ச்சிப் புகார் தெரிவித்துள்ளார் மல்லிகுந்தம் ஊராட்சி மன்றத் தலைவர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம்மாள். இவர் தன் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களோடு, `அராஜகமாக நடந்துகொள்ளும் காவலர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றுகூறி செந்தில்குமார் புகைப்படம் போட்ட பதாகைகளை ஏந்தியவாறு சேலம் கலெக்டரை சந்தித்துப் புகார் கொடுத்திருக்கிறார்.
செல்லம்மாளிடம் பேசினோம். ``மல்லிகுந்தம் ஊராட்சித் தலைவராக என் மாமனார், என் கணவர் அதையடுத்து நான் என 40 ஆண்டுகளாக இருக்கிறோம். சாதி, மதப் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் அன்பாகப் பழகி வருவதால் மக்கள் எங்களை ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள்.
எனக்கு 57 வயதாகிறது. என் கணவர் வைத்தியலிங்கத்துக்கு 65 வயதாகிறது. நான் கடந்த வாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் என்னுடைய இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது மல்லிகுந்தம் ஊராட்சியில் கோயில் வீதியில் வசிக்கும் போலீஸ்காரர் செந்தில்குமார் வந்தார். அவர் வசிக்கும் கோயில் வீதியைப் பலரும் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் அதை அப்புறப்படுத்த வேண்டுமென்று மிகவும் கோபமாகக் கூறினார்.
விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தேன். `நீ பஞ்சாயத்து தலைவராக எதற்கு இருக்க, ஒழுங்கா வந்து ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்து' என்று ஒருமையில் திட்டி, `நான் யார் தெரியுமா? அமைச்சர் கருப்பணனின் கார் டிரைவர். உன்னைத் தொலைத்து விடுவேன்' என்று மிரட்டி நான் உட்கார்ந்திருந்த சேரை எட்டி உதைத்தார். அந்த சேர் என் நெஞ்சின் மீது விழுந்து கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஊராட்சித் தலைவர் என்றுகூடப் பார்க்காமல் அராஜகமாக நடந்துகொண்டது வேதனை அளிக்கிறது. அதையடுத்து, மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அந்தப் புகாரைப் போலீஸார் எடுத்துக் கொள்ளவில்லை. அதையடுத்து, கலெக்டரிடம் முறையிட்டுள்ளேன். அமைச்சரின் கார் டிரைவர் என்ற ஆணவப்போக்கில் நடந்துகொள்ளும் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து போலீஸ்காரர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``நாங்கள் வசிக்கும் வீதி 25 அடி அகலமானது. அங்கு கடை வைத்திருப்பவர்கள் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். தற்போது வெறும் 9 அடி அகலம் மட்டுமே இருக்கிறது. வீட்டுக்குக் காரில் போக முடியவில்லை. எங்கப்பா முதல்வர் செல்லுக்கு புகார் அனுப்பியிருந்தார். நடவடிக்கை எடுக்கச் சொல்லி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு புகார் மனு ஃபார்வேடு செய்யப்பட்டது.
பஞ்சாயத்து அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து நான் போனேன். அங்கு பஞ்சாயத்து தலைவரின் கணவர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் சொல்லிட்டு வந்தேன். அவரை நான் தாக்கவில்லை. எதற்காக அபாண்டமாகப் பொய் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் சேலம் ஆயுதப்படைப் பிரிவில் காவலராக இருக்கிறேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் சேலத்துக்கு வந்தபோது சில நேரங்களில் அவருக்கு கார் ஓட்டச் சென்றிருக்கிறேன். அந்தப் போட்டோவை என் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தேன். அதனால் என் மீது புகார் சொல்கிறார்கள்'' என்றார்.