
படங்கள்: தமிழகத் தொல்லியல் துறை
பெரும் மரத்தூண்களில் ஆணிகளால் சட்டங்களைக் கோத்து ஒன்றன்மேல் ஒன்றாக ஓடுகள் அடுக்கிக்கட்டப்பட்ட வீடுகள்... சுண்ணாம்பால் இழைக்கப்பட்ட தரை... வைகையிலிருந்து வருகிற தூய நீர், மூடப்பட்ட கால்வாய் வழியே தொழிற்பேட்டைக்குள் பாய்கிறது. ஊரைச்சுற்றிலும் வேளாண்மை தழைத்திருக்கிறது. ஓர் ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு அனலாகத் தகித்து ஓடுகிறது. இன்னொரு பக்கம் கலைஞர்கள் பானை வனைந்துகொண்டிருக்கிறார்கள். பாண்டம் வாங்கிச் செல்பவர்கள், தங்கள் பெயரை அதில் எழுதி எடுத்துச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் பழங்களையும் செடிகளையும் கொண்டு வண்ணங்கள் தயாரித்து நெசவாளர்கள் நூலுக்குச் சாயமேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் தங்கத்தையும் மணிகளையும் கோத்து ஆபரணங்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.
தொழிற்பேட்டைக்கு வெளியே இருக்கிற குடியிருப்பில் வயதான ஆண்கள், சுடுமண் புகைப்பான்களில் புகையிலையைத் திணித்து ஆழ்ந்து இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிகள் ஆடுபுலியாட்டம் ஆட, குழந்தைகள் பாண்டியாடுகிறார்கள். அழகன்குளம் துறைமுகத்தில் வந்திறங்கிய ரோமானிய, வடக்குதேச வணிகர்கள் படகின்மூலம் வைகையில் கரையேறி, தங்கள் நாட்டு பளபள மண்பாண்டங்களையும் மணிகளையும் குவித்துவைத்துக் கூவிக்கூவி விற்கிறார்கள். பொன்னும் மணியும் தரித்த பெண்கள் எடைபோட்டு அவற்றை வாங்கிச் செல்கிறார்கள். நாகரிகத்தில் சிறந்த, அறிவுபெற்ற ஒரு சமூகம் அந்த ஊரில் வளமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒரு சங்க இலக்கியப் பாடலின் விளக்கவுரை போல இருக்கும் இந்தச் சித்திரம், கற்பனையல்ல. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் கிராமங்களில் நடக்கும் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் கட்டுமானங்களும் இப்படியொரு வாழ்க்கையைத்தான் காட்சிப்படுத்துகின்றன.

வைகை நதி நாகரிகம் பற்றி ஆய்வுசெய்ய 293 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. கீழடியில் மட்டும் 100 ஏக்கரில் ஆய்வு செய்வது திட்டம். இதுவரை வெறும் 20 ஏக்கரில் மட்டுமே அகழ்வு நடந்திருக்கிறது. அதுவே இந்திய வரலாற்றை மாற்றுமளவுக்குஆதாரங்களைத் தந்துகொண்டிருக்கிறது.
ஐந்து கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துவிட்டன. முதல் மூன்று ஆய்வுகளில் 7,800 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை மத்திய தொல்லியல்துறை வசம் இருக்கின்றன. தமிழகத் தொல்லியல்துறை மேற்கொண்ட நான்காம் கட்ட ஆய்வில் 5,820 பொருள்களும், ஐந்தாம் கட்ட ஆய்வில் 900 பொருள்களும் கிடைத்தன. தற்போது நடந்துவரும் ஆறாம்கட்ட ஆய்வில் 3,500 பொருள்கள் கிடைத்துள்ளன.
இதுவரை கிடைத்துள்ள பொருள்கள் மூலம் கீழடி 2,580 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகரம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
“கீழடியைச் சுற்றி 2 சதுர கி.மீ பரப்புக்குள் கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. சங்க இலக்கிய காலத்தில் இவை நான்கும் ஒரே ஊராக இருந்திருக்க வேண்டும். கீழடி ஒரு தொழிற்பேட்டையாக இயங்கியிருக்கிறது. இரும்பு உருக்காலை, மண்பாண்டத் தயாரிப்பு, ஆபரணத் தொழில், நெசவு, சாயப்பட்டறைகள் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மணலூர், அகரம் இரண்டும் குடியிருப்புகளாக இருந்திருக்கலாம். கொந்தகை இந்த மக்களுக்கான இடுகாடாக இருந்திருக்கிறது” என்கிறார் தொல்லியல் துறை துணை இயக்குநர் ஆர்.சிவானந்தம்.

டெரகோட்டாவில் (சுடுமண்) செய்யப்பட்ட புகைப்பான்கள். மேல்பகுதியில் புகையிலையை வைத்துக் கொளுத்தி, கீழுள்ள ஓட்டையில் ஒரு மூங்கில் தக்கையை வைத்து இழுப்பார்கள்.

ஆறாம்கட்ட ஆய்வில், அகரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்காலத்துக் கல் ஆயுதங்கள். விலங்குகளை அறுக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டவை. முறைப்படி ஆய்வுசெய்து நிரூபித்தால் இந்தக் கற்காலக் கருவிகள் கீழடியின் 5,000 ஆண்டுக்கால வரலாற்றுக்கு ஆதாரமாகும் என்கிறார்கள் தொல்லியலாளர்கள்.

கீழடியில் கிடைத்த மணிகள். கங்கைச் சமவெளிப்பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் கீழடியில் வந்து வணிகம் செய்ததற்கான ஆதாரம் இவை. இந்த மணிகளைக் கொண்டு ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வணிகர்கள் பயன்படுத்திய எடைக்கற்கள். கொற்கையும் அழகன்குளமும் பெரும் துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. அந்தத் துறைமுகங்களின் வழியாக ரோமானிய, சீன, வடக்கிந்திய வணிகர்கள் கீழடிக்கு வந்து வணிகம் செய்தது, கிடைத்துள்ள தொல்பொருள்களின் மூலம் தெரியவருகிறது.

அகரத்தில் கிடைத்த தங்க நாணயம். 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘வீரராயன் பணம்’ என்கிறார்கள். இந்தப்பகுதியில் காலம் கடந்தும் செழிப்பாக மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் இது.

மணலூரில் கிடைத்துள்ள கட்டுமானம். இது மண்பாண்டங்களை வேகவைக்கப் பயன்படுத்தப்பட்ட சூளை என்கிறார்கள். கீழடியில் கிடைத்த சில மண்பாண்டங்களில் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதி மக்கள் மண்பாண்டத் தயாரிப்பில் சிறந்த தொழில்நுட்பங்களைக் கையாண்டதற்கும், கல்வியறிவில் சிறந்து விளங்கியதற்கும் அதுவே ஆதாரம்.

இது மாட்டினத்தைச் சேர்ந்த விலங்கின் விலா மற்றும் முதுகெலும்பு. கீழடியில், 300க்கும் மேற்பட்ட விலங்குகளின் எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 50 எலும்புகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரியில் ஆய்வு செய்யப்பட்டன. திமில் உள்ள காளை மாடு, பசு, ஆடு, பன்றி, மான்களின் எலும்புகள் என அவை உறுதி செய்யப்பட்டுள்ளன. திமில் கொண்ட காளை மாடு சிந்து சமவெளியோடும், ஜல்லிக்கட்டோடும் கீழடியை இணைக்கிறது. பன்றி, மான்களின் எலும்புகளில் வெட்டுப்பட்ட தடயங்கள் இருப்பதால் அவற்றை உணவுக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

கொந்தகையில் 29 அகழ்வுக்குழிகள் தோண்டப்பட்டன. 32 தாழிகள் கிடைத்துள்ளன. தவிர, மண்ணில் புதைக்கப்பட்ட 5 குழந்தைகளின் எலும்புக்கூடுகளும், 1 பெரியவரின் எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு சோதனை மூலம் இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியும் பணி நடந்துவருகிறது.
கட்டடங்கள் மிக நுட்பமாக எழுப்பப்பட்டுள்ளன. மேலே மரங்களை ஒன்றோடு ஒன்று இணைக்க இரும்பு ஆணிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓடுகளில் இரண்டு ஓட்டைகள் இருக்கின்றன. இருபுறமும் மரச்சட்டங்களில் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள். உறுதியாக நின்று காலம் கடந்தும் ஆதாரமாக மிஞ்சியிருக்கிறது இந்தத் தொழில்நுட்பம்.