நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமாரிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆணையாளர் அசோக்குமார் கட்சி நிர்வாகிகளிடம், நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியதாகவும், தற்போது தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க பணம் இல்லை என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்காத நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து, அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்தில் கையில் தட்டேந்தி யாசகம் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், தகவலறிந்து வந்த ராசிபுரம் காவல் நிலைய போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அனைத்துக் கட்சி நிர்வாகிகளும், தூய்மைப் பணியாளர்களும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தனர்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜேஸ்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கூடிய விரைவில் பொங்கல் போனஸ் வழங்குவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் உத்தரவாதம் கொடுத்தார். அதன்பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது.