லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வீட்டிலேயே தயாரிக்கலாம் சானிட்டைசர்! - மருத்துவர் பாலமுருகன்

சானிட்டைசர்
பிரீமியம் ஸ்டோரி
News
சானிட்டைசர்

இயற்கையே இனிமை!

கொரோனா வைரஸ் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான முதல் வழியாக அறிவுறுத்தப்படுவது, கைகளை அடிக்கடிக் கழுவிக்கொண்டே இருப்பது.

ஹேண்ட்வாஷ், ஹேண்ட் சானிட்டைசர்கள் எங்கும் கிடைக்காத அளவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே எளிய முறையில் சானிட்டைசர்கள் தயாரிக்க முடியும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

 மருத்துவர் பாலமுருகன்
மருத்துவர் பாலமுருகன்

``ஆயுர்வேதத்தில் அருந்துவதற்கான கஷாயங்கள், குளியலுக்கான கஷாயங்கள், புண்கள், காயங்கள், சருமநோய் உள்ளிட்டவற்றை அலசுவதற்கான கஷாயங்கள் என்று வகைப்படுத்தப்பட்டே பயன் படுத்தப்படுகின்றன. இவற்றில், அலசுவதற்குரிய கஷாயங்கள் ஹேண்ட் சானிட்டைசராகப் பயன்படக்கூடியவை. ஆயுர்வேதத்தின் ‘பிரக்ஷாலனம்’ என்ற வார்த்தைக்கு அலசுதல் அல்லது கழுவுதல் என்று பொருள்’’ என்கிற டாக்டர் பாலமுருகன், ஆயுர்வேத முறைப்படி வீட்டிலேயே சானிட்டைசர் தயாரிப்பதற்கான ஆறு வழிமுறைகளை பகிர்கிறார்.

வேப்பம்பட்டை
வேப்பம்பட்டை

முறை 1

வேப்பம்பட்டையைச் சீவல் சீவலாக எடுத்துக்கொண்டு, ஒன்றுக்கு நான்கு என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்கவைத்த கஷாயத்தை வடிகட்டிக்கொள்ளவும். இதில், பொடித்த பச்சைக்கற்பூரம் ஒரு கிராம் கலந்துகொள்ளவும். சானிட்டைசர் ரெடி. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இதைக்கொண்டு கைகளை அலசினால் கிருமித்தொற்று தாக்காது. புண்கள், காயங்கள் இருந்தால் அதற்கும் இந்த சானிட்டைசரைப் பயன்படுத்தலாம்.

வேப்பிலை
வேப்பிலை

முறை 2

வேப்பிலையையும் மஞ்சளையும் ஒன்றிரண்டாக அரைத்து அல்லது இடித்துக்கொள்ளவும் (மஞ்சள் தூளுக்குப் பதில் விரலி மஞ்சள் பயன்படுத்துவது சிறந்தது). இத்துடன் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும். மூன்று முதல் ஐந்து கிராம் அளவுக்குப் படிகாரத்தைத் தூள் செய்து இதனுடன் சேர்த்து, கொதிக்கவைத்து இறக்கவும். இதைக்கொண்டு கைகளை அலசலாம். படிகாரம் சேர்த்தால் கலவை சிவப்பாக மாறும். அதை விரும்பாதவர்கள் படிகாரத்தைத் தவிர்க்கலாம்; தவறில்லை.

படிகாரம்
படிகாரம்

முறை 3

அழகு நிலையங்களில் முகச்சவரம் செய்த பிறகு படிகாரத்தைப் பயன் படுத்துவார்கள். படிகாரம் ஒரு கிருமி நாசினி. படிகாரத்தைத் தூள் செய்து, வெதுவெதுப்பான நீரில் கலந்தும் சானிட்டைசராகப் பயன்படுத்தலாம்.

அரச மரம், அத்தி மரம், ஆல மரம், பூவரசு மரம் பட்டைகள்
அரச மரம், அத்தி மரம், ஆல மரம், பூவரசு மரம் பட்டைகள்

முறை 4

அரச மரம், அத்தி மரம், ஆல மரம், பூவரசு மரம் ஆகிய மரங்களின் பட்டைகளைத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ளவும். அத்துடன் ஒன்றுக்கு நான்கு என்கிற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து இறக்கவும். இதில் ஒரு கிராம் அளவு பச்சைக்கற்பூரத்தைத் தூளாக்கிக் கலந்துகொண்டு, சானிட்டைசராக உபயோகிக்கவும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்

முறை 5

திரிபலா என்று சொல்லக்கூடிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று வகையான காய்களின் விதைகளை ஒன்றிரண்டாக இடித்து, அத்துடன் ஒன்றுக்கு நான்கு என்கிற விகிதத் தில் தண்ணீர் கலந்து, கொதிக்க வைத்து இறக்கவும். கைகளைக் கழுவ இதைப் பயன்படுத்தலாம்.

பூந்திக்கொட்டை
பூந்திக்கொட்டை

முறை 6

பூந்திக்கொட்டையை இரண்டு நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து, கைகளில் தண்ணீர்விட்டுத் தேய்த்தால் சோப்புபோல நுரை வரும். இதைக் கொண்டும் நம் கைகளைச் சுத்தமாக்கிக் கொள்ள லாம். பூந்திக்கொட்டையும் ஒருவித கிருமிநாசினியே.

படம்: ஜீவா

சானிட்டைசர் செய்முறை வீடியோவை காண

https://bit.ly/sanitiser