
பி.வி.சி தயாரிப்பை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி, அதில் முன்னோடியாக தன் நிறுவனத்தை வளர்த் தெடுத்தவர்.
இந்தியத் தொழில்துறை என்றாலே பெரும் பாலானோருக்கு நினைவுக்கு வருவது அம்பானிகளும் டாடாக்களும் பிர்லாக் களும்தான். ஆனால், பொதுத்தளத்தில் அதிகம் பிரபலம் ஆகாமல் அமைதியாக தென்னிந்தியத் தொழில் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற முன்னோடி தான் சன்மார் குழுமத்தின் தலைவர் என்.சங்கர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இந்தியா சிமெண்ட்ஸ் என்னும் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய எஸ்.என்.என்.சங்கரலிங்கத்தின் பேரன். சங்கர் ஏசி டெக் தொழில்நுட்பக் கல்லூரியில் ரசாயனத் துறை சார்ந்த பட்டம் படித்து பின்னர் சிகாகோ இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். படித்து முடித்து தன் தந்தையின் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்திலேயே ஊழியராக இணைந்தார். அப்போது அவருக்கு வயது 26.
பி.வி.சி தயாரிப்பை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி, அதில் முன்னோடியாக தன் நிறுவனத்தை வளர்த் தெடுத்தவர். கெமிக்கல் இன்ஜினீயர் என்ற பின்புலம் அதற்கு உதவியது. திறமை சாலிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து ஏராளமான நிபுணர்களை உருவாக்கிய தொழிலதிபர் என்ற பெருமைக்குரியவர் சங்கர்.
ரசாயனமும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று எதிர் துருவங்களில் இருப்பவை. ஆனால், சங்கர் சூழல் அக்கறை கொண்ட தொழிலதிபராக இருந்தார். இந்திய ரசாயனத் தொழில்துறையில் ஜீரோ லிக்யுட் டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகம் செய்தவர் அவர்தான்.

1975 முதல் 2004 வரையில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் உறுப்பினராக இருந்தார். சங்கரின் தொழில்நுட்ப அறிவும் பிசினஸ் சாமர்த்தியமும் சன்மார் நிறுவனம் ரசாயனம், கப்பல் சரக்குப் போக்குவரத்து, பொறியியல் மற்றும் உலோகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் தொழில்களை முன்னெடுத்து விரிவடைய முக்கியக் காரணங்களாக இருந்தன. இந்தியா தொழில்துறை வளர்ச்சியின் காலகட்டத்தில் இருந்த சமயம் என்பதால் தென்னிந்தியாவிலிருந்து மிக முக்கியத் தொழில் நிறுவனமாக சன்மார் வளர்ந்தது. இதன்மூலம் தென்னிந்தியத் தொழில்துறையில் முக்கிய முகங்களில் ஒன்றாக என்.சங்கர் இருந்தார். இன்று சன்மார் குழுமத்தின் மதிப்பு ரூ.12,500 கோடியாக வளர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களோடு இணைந்து பல தொழில்களைச் செயல்படுத்திவருகிறது.
கேன்சர் இன்ஸ்டிடியூட், சங்கர நேத்ராலயா, சைல்டு ட்ரஸ்ட் மருத்துவமனை, வி.ஹெச்.எஸ் எனப் பல நிறுவனங்களின் சேவையில் இவரது பெரும்பங்கு இருந்தது. இதுதவிர கல்வி நிறுவனங்களிலும் இவர் இயக்குநராகப் பணியாற்றி தன்னுடைய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
என்.சங்கரின் மரணம் இந்தியத் தொழில்துறைக்குப் பேரிழப்பு.