பெங்களூரிலிருந்து சென்னை திரும்பி பதினைந்து நாள்கள் கழித்து சசிகலாவின் அரசியல் சந்திப்புகள் இன்று ஆரம்பித்திருக்கின்றன. சசிகலாவால் அ.தி.மு.க-வுக்குள் எந்த அதிர்வலையும் இல்லையென்று உற்சாகமாக இருந்த அ.தி.மு.க தலைமை, சசிகலாவின் அறிவிப்பால் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறது என்கிறார்கள்.

பிப்ரவரி 9-ம் தேதி அன்று காலை பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதால், வெளியாட்கள் யாரையும் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை சசிகலா தரப்பு. சசிகலா பேச விரும்பிய சிலருடன் மட்டும் தொலைபேசியில் பேசியிருக்கிறார். விடுதலையாகி வந்த பிறகு அ.தி.மு.க-விலிருந்து பலரும் அவர் பின்னால் அணிவகுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த பதினைந்து நாள்களாக அ.தி.மு.க-விலிருந்து ஒருவர்கூட சசிகலாவைச் சந்திக்கவில்லை. இதனால் அ.தி.மு.க-வில் சசிகலாவின் சகாப்தம் முடிந்தவிட்டதாகப் பலரும் கருதிவந்தனர்.
ஆனால், தினகரன் தரப்பில், `அ.தி.மு.க-வை மீட்பதே எங்கள் நோக்கம்’ என்று தொடர்ந்து சொல்லிவந்தனர். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவே இருக்கிறார் என்பதற்கான சட்டப் போராட்டத்தைத் தொடரவும் சசிகலா தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. பிப்ரவரி 24-ம் தேதி அன்று ஜெயலலிதா பிறந்தநாளுக்குப் பிறகே தனது அரசியல் சந்திப்புகளெல்லாம் இருக்கும் என்று சசிகலா தரப்பில் சொல்லப்பட்டது. குறிப்பாக, சசிகலாவைச் சந்திக்க முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயன்றுவந்தனர். அவர்களிடம் ஜெயலலிதா பிறந்தநாளுக்குப் பிறகே எவரையும் சந்திக்கவிருக்கிறார் என்ற தகவலை சசிகலாவின் உதவியாளராக இருக்கும் காரத்திகேயன் சொல்லியிருக்கிறார்.

இந்தநிலையில், அ.தி.மு.க தரப்பில் சிலருடன் சசிகலா தரப்பினர் பேசியிருந்தனர். ஆனால், அவர்களிடமிருந்து பாசிட்டிவ் பதில் வரவில்லை. இது சசிகலா தரப்புக்கு ஆரம்பத்தில் வருத்ததைக் கொடுத்தது. ஆனால், அ.தி.மு.க-வின் சீனியர்கள் சிலர் எடப்பாடி மீது தனிப்பட்ட வருத்ததில் இருந்தனர். இவர்கள் சசிகலா பக்கம் சாயும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். குறிப்பாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா தரப்பு இல்லாமல் நாம் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது என்பதை அ.தி,மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சூசகமாகச் சொல்லியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் சசிகலாவைச் சந்திக்க நேரம் பார்த்துவந்திருக்கிறார்கள்.
இவர்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் தங்கள் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சசிகலா தரப்பு கொடுத்த பதில்,``என்னால் வளர்த்துவிடப்பட்டவர்களே இப்போது என்னைச் சந்திக்கவும் யோசிக்கிறார்கள். ஆனால், என் மீது விசுவாசம் உள்ளவர்கள், இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களை நான்தான் அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறேன். தேர்தல் தேதி அறிவித்த பிறகு அவர்களை வரிசையாகச் சந்திப்பேன். ஒருபோதும் அ.தி.மு.க-விலிருந்து விலகிச் செல்ல மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், எடப்பாடி அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும், அதன் பிறகு தனது அரசியல் ஆட்டத்தை நடத்தலாம் என்று சசிகலா நினைப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இந்த மையக்கருத்தில்தான் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பேசிய சசிகலா, ``நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது பொது எதிரியான தி.மு.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டும்” என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்.

அ.தி.மு.க தலைமை பற்றியோ, அ.ம.மு.க பற்றியோ ஒரு வார்த்தைகூட தனது பேச்சில் அவர் பயன்படுத்தவில்லை. மாறாக தொடர்ந்து அவர் முன்வைப்பதே `அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே தி.மு.க-வை வீழ்த்த முடியும்’ என்கிற கருத்துதான். அ.தி.மு.க-வின் அடிமட்ட தொண்டர்கள் மனதிலும் உள்ள கருத்தும் இதுதான். இந்தக் கருத்தை, தொடர்ந்து பொதுவெளியில் வைப்பதால் தொண்டர்கள் மத்தியில் சசிகலா அ.தி.மு.க-வுக்குத் தேவை என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறார். அதேபோல் 25-ம் தேதிக்கு மேல் சசிகலாவின் சுற்றுப்பயணமும் ஆரம்பிக்கவிருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்திலும், ``அம்மாவின் அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” என்று மட்டுமே சொல்லவிருக்கிறார். அ.தி.மு.க-வுக்கு எதிராகக் குற்றச்சாட்டைச் சொல்லி தொண்டர்களிடம் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைக்கிறார். சசிகலாவின் இந்த சூசகமான மூவ் எடப்பாடி தரப்புக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
Also Read
மத்திய அரசையும் சரிக்கட்டி, அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ-க்கள் வரை இப்போது வரை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சீட் கிடைக்காத விரக்தியில் பலரும் சசிகலா பின்னால் அணிவகுப்பார்கள். அது தேர்தல் நேரத்தில் தனக்கு சிக்கலை ஏற்படுத்துமோ என்கிற எண்ணம் எடப்பாடியிடம் இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பது சரிதான், ஆனால், `பணமும் இல்லாமல் பதவியும் இல்லாமல் இருக்கும் கட்சி நிர்வாகிகள் அணிமாறுவதை எப்படித் தடுக்க முடியும்?’ என்கிற சிந்தனைக்கு சென்றிருக்கிறா எடப்பாடி.

அதேநேரம், `சசிகலாவிடம் அ.தி.மு.க-வினர் நெருங்க அச்சப்படக் காரணமே சசிகலாவின் உறவுகளை நினைத்துத்தான். ஏற்கெனவே மன்னார்குடியில் பல அதிகார மையங்கள் இருந்துகொண்டு கட்சியினரைப் பந்தாடியதை இன்னும் பலரும் மறக்கவில்லை. இப்போதும் சசிகலாவைச் சுற்றி அவரது உறவுகளே வலம்வருகிறார்கள். இதுவே அவரைச் சந்திக்க நினைக்கும் அ.தி.மு.க-வினரை அச்சப்படுத்துகிறது. ஜெயலலிதா பாணியில் ரத்த உறவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் அரசியல் களத்தில் பயணித்தால் அ.தி.மு.க-வில் இருக்கும் பலரும் அவர் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை அவரிடம் சொல்வதற்குக்கூட வாய்ப்பில்லை’ என்கிறார்கள் சசிகலாவின் அபிமானிகள்.