கட்டுரைகள்
Published:Updated:

“அவன் வெச்ச மரமெல்லாம் வளர்ந்துடுச்சு; ஆனா அவன் இல்லையே!”

அம்மாவுடன் பெர்சி
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மாவுடன் பெர்சி

புளியங்குடி PULIANGUDI

``சாத்தான்குளத்தில் உள்ள வீட்டில் இருந்தாலே ரெண்டு பேரோட நினைவுகள் வந்துகிட்டே இருக்கு. எந்தப் பக்கம் திரும்பினாலும் அவங்க பயன்படுத்தின பொருள்கள் இருக்கு. அதைப் பார்க்கும்போது மனசு வலிக்குது. அதனால் அந்த வீட்டில் இருக்கவே மனமில்லாமல் என் மகளோடவே வந்து தங்கிட்டேன்” மனதில் புதைந்துகிடக்கும் வலியை வேதனையுடன் வெளிப்படுத்துகிறார், சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த பென்னிக்ஸின் தாயும் ஜெயராஜின் மனைவியுமான செலவராணி.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நெருக்கமான குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரு கட்டடத்தின் மாடியில் வசிக்கிறார், செல்வராணியின் மகள் பெர்சி. அவருடன் செல்வராணியும் தங்கியிருக்கிறார். ஒரே சமயத்தில் இரு உயிர்களை இழந்த சோகம் அவரை விட்டு இன்னும் மறையவில்லை. அதனால் மகன் பென்னிக்ஸ், கணவர் ஜெயராஜ் படங்களைப் பார்த்துக்கொண்டே கலங்கிய கண்களுடன் இருக்கிறார்.

மகள் பெர்சிக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் பணிநியமனம் அளித்திருக்கிறது தமிழக அரசு. அவர் வேலைக்குச் சென்ற பிறகு பெர்சியின் மகள்களும் அந்தப் படங்களும்தான் செல்வராணிக்கு ஆறுதல்.

சொந்த ஊரில் சந்திக்கும் உறவுகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவுகளைக் கிளறிக்கொண்டே இருப்பதால் தாய் செல்வராணியை மகள் பெர்சி தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். சாத்தான்குளம் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் செல்வராணியை நேரில் சந்தித்துப் பேசினோம்.

“அவன் வெச்ச மரமெல்லாம் வளர்ந்துடுச்சு; ஆனா அவன் இல்லையே!”

“எனக்கு சொந்த ஊர் திருச்செந்தூர் பக்கம் உள்ள வெள்ளாளன்விளை கிராமம். எங்க வீட்டுக்காரர் ஊர் சாத்தான்குளம். எங்க குடும்பத்தில் யாரும் கல்லூரிப் படிப்பெல்லாம் முடிக்கவில்லை. என் கணவர் குடும்பத்திலும் யாரும் படிக்கவில்லை. அதனால் எங்க பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கணும்னு வீட்டுக்காரர் விரும்பினார். அதனால் மூன்று பெண்பிள்ளைகளையும் பையனையும் நல்லாப் படிக்க வைத்தோம். பென்னிக்ஸ் எம்.எஸ்.டபிள்யூ படிச்சான். அவன் படிப்புக்கு ஏற்ற மாதிரி சில தனியார் தொண்டு நிறுவனங்களில் வேலை செஞ்சான். எதைச் செஞ்சாலும் நேர்மையாகச் செய்யணும்னு நினைப்பான். ஆனால் வேலை செய்த இடங்களில் நடந்த தவறுகள் பிடிக்காமல் வேலையை விட்டுட்டான். அதன் பிறகு செல்போன் சர்வீஸ் குறித்து திருப்பூரில் படித்துவிட்டு வந்தான். அதனால் அவனுக்கு செல்போன் கடை வெச்சுக் குடுத்தோம்.

ஜூன் 19-ம் தேதி ராத்திரி 8 மணிக்கு என் கணவரை போலீஸ்காரங்க வேனில் ஏற்றிக் கூட்டிட்டுப் போனதால் மகன் பென்னிக்ஸ் பைக்கில் ஸ்டேஷனுக்குப் போயிருக்கான். எந்தத் தப்பும் செய்யாத அப்பாவை அடிக்கிறதைத் தட்டிக் கேட்டதால் அவனையும் பிடிச்சு அடிச்சிருக்காங்க. விடிய விடிய ரெண்டு பேரையும் அடிச்சதை இப்போ நினைச்சாக்கூட என் உடம்பெல்லாம் நடுங்குது.

போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள யாரும் போக முடியாதபடி வெளியில் இருக்குற கேட்டைப் பூட்டிக்கிட்டு அடிச்சாங்க. உள்ளே இருந்து ஒரு போலீஸ்காரர் வெளியே வந்தபோது ஸ்டேஷனுக்குள் போன என் தம்பி, இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து ரெண்டு பேரையும் விட்டுடச் சொல்லிக் கதறியிருக்கான். ஆனாலும் ரெண்டு பேரையும் அடிச்சே கொன்னுட்டாங்க.

அடிச்சதோட அவங்க ரெண்டு பேரையும் விட்டிருந்தா நாங்க ஏதாவது ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரைக் காப்பாத்தியிருப்போம். சம்பவம் நடந்தபோது என் தம்பி இங்க இருக்குற ஆளுங்கட்சி எதிர்க்கட்சின்னு எல்லா அரசியல்வாதிகளுக்கும் போன் செஞ்சான், முதலில் போனை எடுத்து விவரத்தைக் கேட்டவங்க, பிறகு போனை எடுக்கவே இல்லை.

எங்க வீட்டில் ரெண்டு பேர் இறந்ததும் எல்லா அரசியல்வாதியும் தேடி வந்தாங்க. வியாபாரிகள் சங்கத்துக்காரங்களும் போராட்டம் நடத்தினாங்க. ஆனால், நாங்க கூப்பிட்டப்போ பத்துப் பேரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தால், அல்லது, போன் போட்டுப் பேசியிருந்தால் ரெண்டு உசுரையும் காப்பாத்தியிருக்கலாம்” என்று சொல்லும்போதே பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் கதறினார்.

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசிய அவர், “என் கணவரும் பையனும் எந்த வம்புக்கும் போகாதவங்க. யாரிடமும் அதிர்ந்துகூடப் பேச மாட்டாங்க. என் மகன் ஞாயிற்றுக்கிழமைகளில் பையன்களோடு போய் குளத்தின் கரைகளில் மரம் நடுவான். அவன் வெச்ச மரமெல்லாம் வளர்ந்து நிக்குது. ஆனால் அவன் மட்டும் இல்லாமப்போயிட்டான்.

அம்மாவுடன் பெர்சி
அம்மாவுடன் பெர்சி

சில நாள்களுக்கு முன்பு ராஜாசிங்னு ஒரு பையன் என்னைப் பார்க்க வந்திருந்தான். அப்போது, ‘என்னையும் சாத்தான்குளம் போலீஸ்காரங்க கடுமையா அடிச்சு, கோயில்பட்டி ஜெயில்ல போட்டிருந்தாங்க. உங்க வீட்டுக்காரரும் பையனும் வந்தப்ப நானும் பின்பக்கத்தில் பலத்த காயத்தோட ஜெயில்ல இருந்தேன். உங்க மகனுக்குப் பின்பக்கத்தில் தோலெல்லாம் உறிஞ்சிருந்ததால் உட்காரவோ படுக்கவோ முடியல. அதனால் ராத்திரி முழுவதும் நின்னுகிட்டே இருந்தான்.

மறுநாள் ரெண்டு பேரையும் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனாங்க. அங்க அவங்க இறந்துட்டதாக் கேள்விப்பட்டேன். அதுக்குப் பிறகுதான் எனக்கு இருந்த காயத்துக்கு சிகிச்சை அளிக்கறதுக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அவங்க உயிரைக் கொடுத்து என்னைக் காப்பாத்தியிருக்காங்க’ன்னு சொல்லிக் கதறினான். அப்போதுதான் என் மகன் ஜெயில்ல என்ன மாதிரி கஷ்டப்பட்டான்னு புரிஞ்சுது. அந்த அளவுக்கு அவனை அடிக்கறதுக்கு என்ன தப்பு செஞ்சான்?

எங்க வீட்டுக்காரர் ஏழு மணிக்குப் பால் வாங்கிக் குடுத்துட்டு, ‘கடையைப் பூட்டிட்டு வந்துடுறேன்’னு சொல்லிட்டுப் போனார். அதுக்குப் பிறகு அவரை வெறும் உடலாத்தான் கொண்டு வந்தாங்க. போலீஸ்காரங்கதான் இரக்கம் இல்லாம அடிச்சாங்கன்னா மத்த அதிகாரிகளும் அவங்களுக்குத் துணை போயிருக்காங்களே...

சாத்தான்குளம் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருந்தால் அவங்க உயிர் போயிருக்காது. ஜெயிலுக்குப் போன இடத்திலாவது அவங்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருந்தா பிழைச்சிருப்பாங்க. எல்லோருமாச் சேர்ந்து என் குடும்பத்தில் இப்படி நிம்மதி இல்லாமச் செஞ்சுட்டாங்க..

நான் படிக்கலை. எனக்கு எதுவுமே தெரியாது. எங்க வீட்டுக்காரரும் பையனும்தான் எனக்கு உலகமே. அவங்க இல்லாத சூழலில் என்னால் தனியாக சாத்தான்குளம் வீட்டில் இருக்க முடியலை. ரெண்டு பேரும் பயன்படுத்துன பொருள்களைப் பார்க்கும் போதெல்லாம் அவங்க நினைப்பு வந்துருது. என் மகனோட உடற்பயிற்சி மெஷின், கிரிக்கெட் பேட்னு எல்லாத்தையும் பார்க்கும்போது அவனை இழந்த தவிப்பு அதிகமாகி கதறிடுறேன். அதனால்தான் என் மகள் இங்கே கூட்டிட்டு வந்துட்டாள்.

கடந்த 27-ம் தேதி என் கணவரின் தம்பி மகளுக்குக் கல்யாணம் நடந்தது. எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டில் நடந்த அந்த விஷேசத்துக்குக்கூட நான் போகலை. எங்க குடும்பத்தில் எல்லா நல்ல நிகழ்ச்சியிலும் என் வீட்டுக்காரர்தான் முன்னே இருந்து நடத்துவார். அங்கே போனால் அவர் நினைப்பு வந்து கதறி அழுதால், நல்லது நடக்கும் இடத்தில் சோகமாயிடுமேன்னு போகாமல் இருந்துகிட்டேன்.

எங்க மகள்களைப் படிக்க வைத்து நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்துவிட்டோம். அதனால் பையனுக்குப் பெண் பார்த்து பெரிய அளவில் கல்யாணத்தை நடத்தணும்னு நானும் என் கணவரும் விருப்பப்பட்டோம். அதனால் அவனுக்குப் பெண் பார்த்துக்கிட்டிருந்தோம். பெரிய கூட்டத்தைக் கூட்டிக் கல்யாணத்தை நடத்தணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனால், அவனோட இறுதிப்பயணத்துக்குத்தான் பெரிய கூட்டம் வரும்னு கனவுல கூட நினைச்சுப் பார்க்கலையே” என்று சொல்லும்போதே கட்டுப்படுத்த முடியாமல் வெடித்துக் கதறினார்.