Published:Updated:

காஷ்மீர் விவகாரம்: `முதலில் எச்சரிக்கை; பின் சமாதானம்!’ - பாகிஸ்தானைத் தவிர்த்த சவுதி இளவரசர்

இம்ரான் கான்
News
இம்ரான் கான்

`சவுதி அரேபியாவில் இளவரசரைச் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்.’

Published:Updated:

காஷ்மீர் விவகாரம்: `முதலில் எச்சரிக்கை; பின் சமாதானம்!’ - பாகிஸ்தானைத் தவிர்த்த சவுதி இளவரசர்

`சவுதி அரேபியாவில் இளவரசரைச் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்.’

இம்ரான் கான்
News
இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மறுத்த சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடும் மோதல் நிலவிவந்த நிலையில், சவுதி அரேபியாவுடன் சமாதானம் பேச ரியாத் சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமார் ஜாவத் பஜ்வாவை , அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் சந்திக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஜ்வா
பஜ்வா
ANI2

என்ன நடந்தது?

ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ), குவைத், துபாய், பாகிஸ்தான், உள்ளிட்ட 57 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அந்த அமைப்பில் அங்கம்வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தி, அதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் திட்டம்.

ஆனால், பாகிஸ்தானின் இந்தத் திட்டம் தொடர்ந்து தோல்வியில் முடிந்தது. காரணம், இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் சில நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா, தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தை `உள்நாட்டு விவகாரம்’ எனக் குறிப்பிட்டு வருவதால், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட சில நாடுகள் தயங்குகின்றன. குறிப்பாக, சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தயங்குவதால் கூட்டத்தை நடத்த முடியாமல் பாகிஸ்தான் திணறியது.

பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி
பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி

இதனிடையே கடந்த 5 -ம் தேதி காஷ்மீரில் அமலில் இருந்த ஆர்ட்டிகிள் 370 -ஐ திரும்பப் பெற்றதன் ஓராண்டு நினைவுநாளில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரோஷி வெளிப்படையாகவே சவுதி அரேபியாவை விமர்சித்தார். `காஷ்மீர் விவகாரத்துக்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டாவிட்டால், காஷ்மீர் விவகாரத்துக்காகக் குரல் கொடுக்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தைக் கூட்டுவோம்’ என்றார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தையும் கடுமையாகச் சாடியது பாகிஸ்தான்.

மேலும், ``பாகிஸ்தான், மக்கா மற்றும் மதீனாவுக்காக எப்போதும் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளது. காஷ்மீர் பிரச்னையில் சவுதி அரேபியா முக்கிய பங்கைக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லையென்றால், நான் பிரதமர் இம்ரான் கானிடம், சவுதி அரேபியா இல்லாமல் செயல்படப் பரிந்துரைப்பேன்’’எனப் பேசியதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது. குரோஷியின் இந்தப் பேச்சு சவுதி அரேபியாவை கோபப்படுத்தியது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

இதைத் தொடர்ந்து `சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு இனி கடன் மற்றும் எண்ணெய் வழங்காது’ என்றும், `ஏற்கெனவே வழங்கிய கடன் தொகையில் ஒரு பில்லியன் டாலரை உடனே கட்ட வேண்டும்’ என்று கறார் காட்டியது. இதனால் கடுமையான, நெருக்கடியைச் சந்தித்த பாகிஸ்தான், சீனாவிடமிருந்து கடன் பெற்று சவுதி அரேபியாவுக்கு பணத்தைச் செலுத்தியது.

இதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியது பாகிஸ்தான். இதனால் ரியாத்துக்கு ஐ.எஸ்.ஐ அமைப்பின் தலைவருடன் புறப்பட்டார் பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவத் பஜ்வா. அவர்கள் சவுதி அரேபியாவில் இளவரசரைச் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து விட்டார்.

காஷ்மீர்
காஷ்மீர்

இதனால், பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஷேக் காலித் பின் சல்மானை சந்தித்துப் பேசினர். இவர் முகமது பின் சல்மானின் சகோதரர். இந்தச் சந்திப்பின்போது, காஷ்மீர் விவகாரத்தில் கூட்டத்தைக் கூட்டாததற்கு சவுதி அரேபியாவைக் கடுமையாக விமர்சித்த விவகாரத்தில் இம்ரான் கான் அரசின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி பஜ்வா கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் பதில் ஏதும் சொல்லாமல் பாகிஸ்தான் ராணுவத் தளபதியைத் திருப்பி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.