சினிமா
Published:Updated:

அச்சத்தில் உறையும் லட்சத்தீவு!

லட்சத்தீவு!
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சத்தீவு!

#save lakshadweep

இந்தியா தன் ஒவ்வொரு மகுடத்தையும் வளர்ச்சி என்னும் பெயரில் மதவாத சக்திகளிடம் இழந்துவருகிறது. 36 சிறு தீவுகளின் கூட்டுதான் கேரள மக்களுடன் இணக்கமாக இருக்கும் லட்சத்தீவு. அதன் மொத்தப் பரப்பளவு என்பது வெறும் 32 சதுர கிலோமீட்டர் தான் (சென்னையின் பரப்பளவில் 10%). அமைதிப் பிரதேசங்களையும் போராட்டக் களமாக மாற்ற நம் ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும். இப்போது லட்சத்தீவு.

தினேஷ்வர் ஷர்மாவின் மறைவுக்குப் பின்னர், லட்சத்தீவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் பிரபுல் கோடா படேல். முன்னாள் அதிகாரிகளே இத்தகைய பொறுப்புகளில் அமர முடியும் என்பதை மாற்றியமைத்த பிரபுல் படேல், மோடியின் குஜராத் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர். 2016-ம் ஆண்டு டாமன், டையூ யூனியன் பிரதேச ஆட்சியாளர் ஆனார். பின் சில மாதங்களில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதிகளுக்கும் அவரையே பொறுப்பாளர் ஆக்கி அழகு பார்த்தார் மோடி. டாமனில் பல்லாண்டுக் காலமாக பூர்வகுடிகளிடம் இருந்த நிலத்தை வளர்ச்சி என்கிற பெயரில் கையகப்படுத்தினார் பிரபுல். தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதிகளில் ஏழு முறை வென்று எம்.பியான மோகன் தெல்கர், பிரபுல் படேலின் அதிகார துஷ்பிரயோகங்களைக் கண்டு பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். மோகனின் மரண வாக்குமூலத்தில் இருக்கும் முதன்மையான பெயர் பிரபுல் படேல். சர்ச்சைகளில் சிக்குபவர்களுக்கு மேன்மேலும் பதவிகள் வழங்கி கௌரவிப்பதுதானே நம்மூர் வழக்கம். அப்படியான பிரபுல் படேலுக்குத்தான் தற்போது லட்சத்தீவுப் பகுதியையும் கொடுத்து ஆரத்தி எடுத்திருக்கிறது மத்திய அரசு.

அச்சத்தில் உறையும் லட்சத்தீவு!

சுமார் 70,000 பேர் வசிக்கும் லட்சத்தீவில் 97% பேர் இஸ்லாமியர்கள். முன்பு கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த யூனியன் பிரதேசம், கேரளத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பூர்வகுடிகள் வசிக்கும் தீவு. இங்கு சுற்றுலாத்துறை, ஆசிரியப் பணி என எங்கெல்லாம் உள்ளூர் மக்கள் வேலையில் இருந்தார்களோ, அவர்கள் தூக்கியெறிப்பட்டனர். மலையாளமும், ஜெசெரி போன்ற மொழிகளையும் மட்டுமே தெரிந்து வைத்த மக்களுக்கு வடக்கிலிருந்து இந்தி பேசும் அதிகாரிகளாகப் பரிசளிக்கப்பட்டார்கள். மாட்டிறைச்சியைத் தடை செய்து, அங்கிருக்கும் பால் பண்ணைகளையும் மூட வைத்தாயிற்று. அதையும் மீறி, மாட்டிறைச்சியைப் பக்கத்துத் தீவுகளிலிருந்து கொண்டுவருபவர்களுக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை நிச்சயம். தற்போது, குஜராத்திலிருந்து பால் இறக்குமதி செய்யப்படுகிறது.

Lakshadweep Development Authority Regulation 2021 மூலம் மக்களின் இடங்களை வளர்ச்சிக்காகக் கையகப்படுத்த முடியும். 15 மீட்டர் அகலத்துக்கு சாலைகள் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். லட்சத்தீவில் இருக்கும் மிகப்பெரிய தீவான அன்றோத்தின் பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டருக்கும் குறைவுதான். 1989-ம் ஆண்டு பழங்குடியினரின் பாதுகாப்பிற்காக மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைக் காற்றில் பறக்க விடுகிறது இந்தப் புது மசோதா. குற்றங்களே அதிகம் நிகழாத இந்தத் தீவில் கடும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாததால், பஞ்சாயத்துகளுக்கு இங்கு அதிக அதிகாரம் உண்டு. அதையும் முடக்க நினைப்பதாக மக்கள் புகார் செய்கிறார்கள்.

ஆனால், ‘லட்சத்தீவு பற்றித் தவறான பிரசாரம் இந்தியா முழுக்கப் பரப்பப்படுகிறது’ என்கிறார்கள் பா.ஜ.க-வினர். ‘‘மாலத் தீவு போல அழகிய சுற்றுலாத் தலமாக மாறும் தகுதி லட்சத்தீவுக்கு இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஒரு தீவு சுற்றுலா வசதிக்காக குத்தகைக்கு விடப்பட்ட வரலாறு உண்டு. சுற்றுலாவை மேம்படுத்த சில பணிகள் செய்கிறோம். தூரத்தில் இருக்கும் லட்சத்தீவுக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும். கடத்தல்காரர்கள் இந்தத் தீவுகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களும் ஐந்து ஏ.கே 47 துப்பாக்கிகளும் சமீபத்தில் இங்கு பறிமுதல் செய்யப்பட்டன. கடுமையான சட்டங்கள் அவசியம்’’ என நியாயப்படுத்துகிறார் லட்சத்தீவு கலெக்டர் அஸ்கர் அலி.

அச்சத்தில் உறையும் லட்சத்தீவு!

‘‘பவழப்பாறைகள் கொண்ட லட்சத்தீவு சுற்றுலாத் தலமானால், அது இயற்கையைச் சிதைக்கும் செயலாக இருக்கும்’’ எனக் கவலை கொள்கிறார்கள் சூழலியலாளர்கள்.

‘கார்ப்பரேட்களுக்காகவும், காவிக்கொள்கையைப் புகுத்தவும் மட்டுமே மத்திய அரசு நினைக்கிறது . பிரபுல் படேலைத் திரும்பப் பெற வேண்டும். லட்சத்தீவைக் காப்பாற்ற வேண்டும்’ எனக் கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. புதிய அரசின் முதல் தீர்மானம் இதுதான்.

ஒரு பூர்வகுடியை அதன் வேர்களை அறுத்தெறியச் சொல்லும் பாவச் செயல் அநீதியானது.