அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பவானி நகராட்சிப் பணிகளில் முறைகேடு? - சரமாரி புகார் மழையில் நகராட்சித் தலைவர்!

பவானி நகராட்சி அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பவானி நகராட்சி அலுவலகம்

அனைத்துக் குற்றச் சாட்டுகளும் தவறாகப் பரப்பப்படும் வதந்திகள்தான். பழைய தினசரி மார்க்கெட் பகுதியிலிருந்த குடோனைச் சீரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தார்கள்

பவானி நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், நகராட்சித் தலைவர் சிந்தூரி தன் உறவினர்களைவைத்து ஒப்பந்தப் பணிகளைச் செய்வதாகவும் சரமாரியான குற்றச்சாட்டுகள் குவிகின்றன. இது குறித்த விசாரணையில் இறங்கினோம்.

பெயர் கூற விரும்பாத சில கவுன்சிலர்கள் நம்மிடம், “பவானி தி.மு.க நகரச் செயலாளரான ப.சீ.நாகராஜின் மருமகள் சிந்தூரிதான் நகராட்சியின் தலைவர். இவரின் பணிகள் அனைத்திலும் நாகராஜின் குறுக்கீடு இருக்கிறது. சமீபத்தில் பவானி, பழைய தினசரி மார்க்கெட் குடோன் ரூ.10 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.

சிந்தூரி
சிந்தூரி

அந்த குடோனைச் சீரமைக்க 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாக வாய்ப்பில்லை. மேலும் 7-வது வார்டு திருவள்ளுவர் நகரில், ஸ்வச் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்ட டெண்டர் விடப்பட்டது. அந்தப் பணியை அவரின் உறவினருக்கு ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சிந்தூரி. தங்களின் இந்த அடாவடிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என துணைத் தலைவரான இ.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மணி என்பவருக்கு பதிலாக, வேறு கவுன்சிலரைத் துணைத் தலைவராக்கும் உள்ளடி வேலையில் இறங்கியிருக் கிறார்கள்” என்று புகார்களை அடுக்கினர்.

பவானி நகராட்சிப் பணிகளில் முறைகேடு? - சரமாரி புகார் மழையில் நகராட்சித் தலைவர்!

புகார்கள் குறித்து பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரியிடம் கேட்டோம். “அனைத்துக் குற்றச் சாட்டுகளும் தவறாகப் பரப்பப்படும் வதந்திகள்தான். பழைய தினசரி மார்க்கெட் பகுதியிலிருந்த குடோனைச் சீரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தார்கள். இப்போது, அந்தக் கட்டடத்தின் சுற்றுச்சுவர், தளம், மேற்கூரை அனைத்தும் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் செலவீனங்களை நீங்களே யாரேனும் பொறியாளரை அழைத்து வந்து கணக்கு போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். 7-வது வார்டில் சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு மூன்று முறை டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசு ரூ.24 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், அந்தப் பணியை முடிக்க ரூ.30 லட்சம் செலவாகும் என்பதால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. அதனால் எங்கள் தூரத்து உறவினரிடமே டெண்டர் எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். மற்றபடி, நகராட்சி நிர்வாகத்தில் என் மாமனாரின் குறுக்கீடு எதுவும் இல்லை. துணைத் தலைவரை மாற்றும் அவசியமும் ஏற்படவில்லை. பவானி நகராட்சிக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

மணி, ப.சீ.நாகராஜ்
மணி, ப.சீ.நாகராஜ்

இது குறித்து நகராட்சித் துணைத் தலைவர் மணியிடம் பேசினோம். “கூட்டணி தர்மத்தை மீறி என்னை ஒதுக்கிவிட்டு வேறு நபரைக் கொண்டுவர மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்றார் சுருக்கமாக.

தி.மு.க நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜிடம் போனில் கேட்டபோது, “எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் இப்போது உங்களுடன் பேச முடியாது” என்று இணைப்பைத் துண்டித்துக்கொண்டார்.

சமாளிக்கத் தெரிந்தவர்கள்!