சமூகம்
Published:Updated:

நூதன கொள்ளை.. சொகுசு வாழ்க்கை... அரசு கஜானாவில் கைவைத்த கருவூல கணக்கர்!

ராமநாதபுரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமநாதபுரம்

ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை ஆன்லைனில் அனுப்ப வேண்டுமென்றால், சார்நிலை உதவி அலுவலரின் ரகசிய குறியீடு இல்லாமல் கண்டிப்பாக அனுப்ப முடியாது.

அரசு கஜானாவிலேயே, பல லட்ச ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து, தணிக்கை செய்த அதிகாரிகளையே மலைக்கவைத்திருக்கிறார் ராமநாதபுரம் மாவட்ட கருவூல கணக்கர் முனியசாமி!

நூதன கொள்ளை.. சொகுசு வாழ்க்கை... அரசு கஜானாவில் கைவைத்த கருவூல கணக்கர்!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த இவர், முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராகப் பணியாற்றிவருகிறார். கடந்த 15-12-2022 அன்று ராமநாதபுரம் மாவட்ட கருவூலத் தலைமை அலுவலர் கோ.சேஷன் முதுகுளத்தூர் கருவூலத்தில் திடீர் தணிக்கை செய்தபோது, அரசுப் பணம் ஏறத்தாழ ரூபாய் 29 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கருவூல கணக்கர் முனியசாமியை சஸ்பெண்ட் செய்து, அவர்மீது குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அடுக்கடுக்கான சோதனைகளில் மேலும் பல லட்ச ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டது வெளியில் தெரியவந்ததும் முனியசாமி திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.

2016-ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் மாவட்டக் கருவூலத்தில் பணியாற்றிவந்தார் முனியசாமி. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது சொந்த ஊரான முதுகுளத்தூருக்குப் பணி மாறுதலாகி வந்திருக்கிறார். இந்தக் குறுகியகாலத்துக்குள்ளாகவே 29 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்து அவர் மாட்டிக்கொண்ட நிலையில், ஏற்கெனவே ஆறு ஆண்டுகளுக்கு மேல் முனியசாமி பணியாற்றிய ராமநாதபுரம் கருவூல அலுவலகத்திலும் கையாடல் நடந்திருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டக் கருவூல அதிகாரிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம், “கணக்கர் முனியசாமி 2015-ம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வில் தேர்ச்சியடைந்து நேரடியாக கணக்கர் பணியில் சேர்ந்தார். ராமநாதபுரம் அலுவலகத்தில் மேற்கொண்ட ஆய்வில், இதுவரை ரூ.46 லட்சத்துக்கான கணக்கில் விடுபடல் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை முனியசாமி கையாடல் செய்தாரா என்பது விசாரணையில் தெரியவரும். கொரோனா சமயத்தில் குறைவான ஊழியர்கள் பணி செய்ததும், ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை என்று அறிவிக்கப் பட்டிருந்ததையும் சாதகமாக்கிக்கொண்டு, கருவூல அலுவலகத்தில் நிறைய பண மோசடி நடந்திருக்கிறது. தணிக்கையில் கணக்கு விவரங்கள் கூடிக்கொண்டே செல்வதால், முனியசாமி கையாடல் செய்தது பல லட்சங்களா, சில கோடிகளா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், தான் கையாடல் செய்த பணத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி வீடுகள், சொகுசு கார், பைக் என்று வசதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் முனியசாமி’’ என்றனர் அதிர்ச்சி விலகாமல்.

ராமநாதபுரம் மாவட்டக் கருவூல அலுவலர் கோ.சேஷனிடம் பேசினோம். “ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை ஆன்லைனில் அனுப்ப வேண்டுமென்றால், சார்நிலை உதவி அலுவலரின் ரகசிய குறியீடு இல்லாமல் கண்டிப்பாக அனுப்ப முடியாது. முதுகுளத்தூர் அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கும் சிராஜுதின், கை இயக்கக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. அவரிடம் அனுதாபப்படுவதுபோல் நடித்து, ‘நீங்கள் சிரமப்பட வேண்டாம், நான் ஆன்லைன் மூலம் ஓய்வூதியர்கள் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புகிறேன்’ எனக் கூறி ரகசிய குறியீடு எண்ணைத் தெரிந்துகொண்டிருக்கிறார் முனியசாமி. மேலும் சிராஜுதின் அலுவலகத்தில் இல்லாத சமயங்களில் தொடர்ந்து பணப் பரிவர்த்தனையில் கைவரிசை காட்டியிருக்கிறார் முனியசாமி. அதுவும் பணி மாறுதலாகி வந்த வெறும் ஏழாவது நாளிலேயே மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

நூதன கொள்ளை.. சொகுசு வாழ்க்கை... அரசு கஜானாவில் கைவைத்த கருவூல கணக்கர்!

நான் தணிக்கைக்கு வருவதை அறிந்ததும், அவசர அவசரமாக விடுப்பில் சென்றுவிட்டார். தற்போது எனது புகாரின்பேரில், போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி, முதுகுளத்தூர் எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து முனியசாமி பெயரில் ரூ.20 லட்சமும், ஜீவா என்ற பெயரிலிருந்து ரூபாய் ஒன்பது லட்சமும் கருவூல வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை அனுப்பியவர்கள் யார் என்று தெரியவில்லை. தற்போது மதுரை மண்டலத்திலிருந்து வந்திருக்கும் அதிகாரிகள் குழு ராமநாதபுரம் கருவூல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டுவருகிறது. விரைவில் அவர்கள் சென்னை ஆணையாளருக்கு அறிக்கையை அனுப்புவார்கள்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, “முனியசாமி, அவருடைய நண்பர் ஜீவா ஆகியோரின் செல் நம்பர்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றிவரும் முனியசாமியின் மனைவி கண்ணகியிடம் விசாரிக்க முயன்றோம். ஆனால், முனியசாமி தலைமறைவான நாள் முதல் கண்ணகியும் அலுவலகத்துக்கு வேலைக்கு வரவில்லை எனத் தெரியவந்தது. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வேறொரு புதிய எண்ணிலிருந்து அழைத்து, அலுவலக அதிகாரியிடம் கண்ணகி விடுமுறை கேட்டிருக்கிறார். அந்த எண்ணை நாங்கள் ட்ராக் செய்தபோது கண்ணகி மதுரையில் இருப்பது தெரியவந்தது. ஆனால், நாங்கள் அந்த லொகேஷனுக்குச் சென்றபோது அங்கு யாருமில்லை. அந்த எண்ணும் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. விரைவில் முனியசாமி கைதுசெய்யப்படுவார்” என்றனர்.

கஜானாவுக்குள் புகுந்த எலி என்றைக்காவது மாட்டிக்கொள்ளும் என்பது இதுதானா?!

நூதன கொள்ளை.. சொகுசு வாழ்க்கை... அரசு கஜானாவில் கைவைத்த கருவூல கணக்கர்!

பரிதவித்த மாற்றுத்திறனாளி... அரவணைத்த அரசு!

ஒரே நாள் மழையில் வீடு இடிந்து, மனைவி இறந்ததுடன், மூன்றரை வயது மகளும் சுய நினைவிழந்ததால் தவித்த கேசவேல் என்ற மாற்றுத்திறனாளியின் சோகத்தை, 25.12.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இதன் விளைவாக கேசவேல் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்கியிருக்கிறது அரசு. சைதாப்பேட்டை நெருப்புமேடு பகுதியில் கேசவேலுக்கு சைக்கிள் கடை வைத்துத் தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அரசுக்கும், ஜூ.வி-க்கும் நெகிழ்ச்சியோடு நன்றி சொன்னார் கேசவேல்!