அலசல்
Published:Updated:

காலாவதி பால் பவுடர் கலப்பு... பாலில் சோப்பு வாசனை... துருப்பிடித்த பைப்லைன்கள்...

ஆவின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆவின்

ஆவினில் தொடரும் முறைகேடுகள்!

கடந்த 12.9.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘ஆவியான ரூ.1,000 கோடி!’ என்ற தலைப்பில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆவின்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில்தான், நமது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசிய வாசகர்கள் சிலர், கடந்த ஓரிரு வாரங்களாக ஆவின் பால் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தரத்தில் இருப்பதாகப் புகார் தெரிவித்தார்கள். இன்னும் சிலரோ, “தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், ஆவின் பாலைத்தான் குழந்தைகளுக்குக் கொடுத்துவருகிறோம். ஆனால், ஆவின் பாலில் டிடர்ஜென்ட் சோப்பு வாடை அடிக்கிறது” என்று அதிரவைத்தார்கள். இதையடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கி விசாரித்தோம்.

நாசர்
நாசர்

நமது அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த வாசகியை நேரில் சந்தித்தோம். “பல வருடங்களாக நாங்கள் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால்தான் அருந்திவருகிறோம். குழந்தைகளுக்கும் அதைத்தான் கொடுக்கிறோம். கடந்த வாரம், பாலைக் காய்ச்சியபோதே வழக்கத்தைவிட சோப்பு நுரையைப்போலப் பொங்கியது. கூடவே டிடர்ஜென்ட் வாசனையும் அடித்தது. நாங்கள் பக்கத்தில் எங்கிருந்தாவது வாசனை வந்திருக்கும் அல்லது மனபிரமையாக இருக்கலாம் என்று நினைத்து பாலைக் குடித்துவிட்டோம். சிறிது நேரத்தில் எங்கள் அனைவருக்குமே வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. என்னால் தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில்தான் ஆவின் பாலை குழந்தைக்குக் கொடுத்துவருகிறேன். ஆனால், ஆவின் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது” என்று குமுறினார்!

ஆவினில் என்னதான் நடக்கிறது என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “ஆவினில் நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அவற்றில் 13.5 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு மட்டுமே அனுப்பிவைக்கப்படுகிறது. சென்னையில் மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருக்கும் பால் பண்ணைகளுக்குக் கொண்டுவரப்படும் பாலை திடச்சத்து, பாக்டீரியா கவுன்ட் உள்ளிட்ட 19 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறோம். பிறகு பாலில் உள்ள கொழுப்புச்சத்து தனியாகப் பிரித்தெடுக்கப்படும். கொழுப்பு தேவைப்பட்டால் மீண்டும் சேர்ப்பதற்கும் எந்திரம் இருக்கிறது.

காலாவதி பால் பவுடர் கலப்பு... பாலில் சோப்பு வாசனை... துருப்பிடித்த பைப்லைன்கள்...

ஆவினில் ‘டோன்டு மில்க்’ நீல வண்ண பாக்கெட்டிலும், ‘ஸ்டாண்டர்டைஸ்டு மில்க்’ பச்சை வண்ண பாக்கெட்டிலும், ‘ஃபுல் க்ரீம் மில்க்’ ஆரஞ்சு வண்ண பாக்கெட்டிலும், ‘டீமேட் மில்க்’ சிவப்பு வண்ண பாக்கெட்டிலும் விற்பனைக்கு வருகிறது. இவற்றில், நீல நிற பாக்கெட் பாலில் கொழுப்புச்சத்து 3 சதவிகிதமும், புரதச்சத்து 8.5 சதவிகிதமும் இருக்க வேண்டும். இதுவே பச்சை நிற பாக்கெட் பாலில் 4.5/8.5 விகிதமும், ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில் 5/9 விகிதமும், சிவப்பு நிற பாலில் 6.5/9 விகிதமும் முறையே கொழுப்பு, புரதச்சத்துக்கள் இருக்க வேண்டும்.

இங்குதான் கலப்படம் நடக்கிறது. உதாரணத்துக்கு, நீல நிற பாக்கெட் பாலில் புரதச்சத்து 8.2 சதவிகிதம்தான் இருக்கிறது என்றால், அதை 8.5 சதவிகிதமாக அதிகரிக்க 10 சதவிகித அளவுக்கு பால் பவுடரைக் கலந்து கொள்ளலாம். ஆனால், 25 சதவிகிதம் பால் பவுடரைக் கலக்கிறார்கள். பொதுவாக பால் பவுடர் ஓராண்டுக்குள் எக்ஸ்பையரி தேதியை எட்டிவிடும். அப்படிக் காலாவதியான பால் பவுடரைத்தான் பெரும்பாலும் கலக்கிறார்கள். இதனால்தான், டிடர்ஜென்ட் சோப்பு வாசனை வீசுகிறது.

அதுவே கொழுப்புச்சத்து கூடுதலாக இருக்கிறது என்றால், அதில் தண்ணீர் கலந்து கொழுப்பின் அளவைக் குறைக்கிறார்கள். இதனால்தான் நீல நிற மற்றும் பச்சை நிற பாக்கெட் பால் தண்ணீராக இருக்கிறது. பாலை பாக்கெட் போடுவதிலும் சில மோசடிகள் நடக்கின்றன. அரை லிட்டர் பாலை எடைபோட்டால் 527 கிராம் இருக்க வேண்டும். ஆனால், 510 கிராம் அளவுதான் இருக்கும். ஒரு பாக்கெட்டுக்கு 17 கிராம் வீதம் கொள்ளைப் போகிறது” என்று விவரித்தார்கள்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

“ஆவின் தரக்கட்டுப்பாடு பிரிவு எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை” என்ற ஆதங்கத்துடன் நம்மிடம் பேசினார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் பொன்னுசாமி. “பாலை பாக்கெட் போடும் எந்திரத்துக்கு எடுத்துச்செல்லும் பைப்லைனை எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறை குளோரின் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதை முறையாகச் செய்வதில்லை. துருப்பிடித்த பைப்லைன் வழியாகப் பால் செல்வதாலும் பாலின் தரம் கெடுகிறது. இதையெல்லாம் சோதிப்ப தற்காக ஆவினில் ஏற்படுத்தப்பட்ட தரக்கட்டுப்பாடு பிரிவு எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. மத்திய அரசின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிகாரிகளும் பாலின் தரத்தைச் சோதிப்பதில்லை. கொள்முதல் செய்த பாலை பண்ணைக்கு எடுத்துச் செல்லும்போது இடையே ரகசியமாக நிறுத்தி, தண்ணீர் கலக்கிறார்கள். ஆவினின் நான்கு வகையான பாலுக்கும் அதிகபட்சம் ஏழு மணி நேரம்தான் காலாவதி நேரம். அதைத் தாண்டிவிட்டால் கெட்டுப்போய் விடும். உற்பத்தி செய்யப்படும் பாலை இருப்பு வைக்கக்கூட போதுமான வசதிகள் இல்லாததால், பால் கெட்டுப்போவது நடக்கிறது” என்றார்.

மேற்கண்ட புகார்கள் பற்றி பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் கேட்டோம். “ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா தொற்று அதிகமானதால் எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியவில்லை. சில நாள்களுக்கு முன்புதான் சட்டசபைக் கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது. இப்போதுதான் ஆவினில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்து, துறையை முழுமையாகச் சீர்ப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறோம். நீங்கள் சொன்ன புகார்கள் அனைத்தையும் குறித்துவைத்திருக்கிறோம். வெகுவிரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும்” என்றார்.