அலசல்
Published:Updated:

நகைக்கடனில் கொள்ளையோ கொள்ளை!

நகைக்கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
நகைக்கடன்

- தங்க முலாம் பூசிய செம்புத்தகடுகள்... ஒரே நபருக்கு 647 நகைக்கடன்கள்...

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஏழை, எளிய விவசாயிகள் பலனடைவதற்காக அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பைச் சாக்காக பயன்படுத்திக்கொண்டு, உள்ளூர் அரசியல்வாதிகள் தொடங்கி கூட்டுறவு வங்கி அலுவலர்கள் வரை கூட்டணி போட்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ‘நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. தொடர்ந்து தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ‘ஐந்து சவரன் வரையுள்ள நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்துவிட்டது. இந்தநிலையில்தான், அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் நகைக்கடன் விவகாரத்தில் பலரும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

நகைக்கடனில் கொள்ளையோ கொள்ளை!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் மொத்தமுள்ள 548 பைகளில் 261 நகைப்பைகளைக் காணவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், தங்க முலாம் பூசப்பட்ட செம்புத் தகடுகளை அடகுவைத்து, பலரும் நகைக்கடன் கடன் பெற்றிருக்கிறார்கள். அதில் சுமார் 15 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து நம்மிடம் பேசிய நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ராம், ‘‘விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடும் பயிர்களைப் பொறுத்து அதிகபட்சமாக 2.8 லட்சம் ரூபாய் வரை நகைக்கடன் வாங்க முடியும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வர்கீஸ் முத்துநாயகம் என்ற ஒரே நபர் 647 நகைக்கடன்கள் மூலம் ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் விவசாயக் கடன் வாங்கியிருக்கிறார். அதே கூட்டுறவு வங்கியில் மேரி செல்லக்கண் என்பவர் 625 நகைக்கடன்கள் மூலம் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். நகை அடகுத் தொழிலில் ஈடுபடுபவர்களும், கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகுவைத்து குறைந்த வட்டியில் பணம் பெற்று, அதை வெளியில் அதிக வட்டிக்கு விட்டிருக்கிறார்கள். திருவட்டார், தலக்குளம், பள்ளவிளை, முகிலன்விளை, நெல்வேலி, குருமாற்றூர், ஐரேனிபுரம் பகுதிகளிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் சில தனிநபர்கள் போலியான ஆவணங்கள் மூலம் லட்சக்கணக்கில் விவசாய நகைக்கடன் பெற்று மோசடி செய்திருக்கிறார்கள்’’ என்றார்.

ஸ்ரீராம், ராமதாஸ், சுகுமாறான்
ஸ்ரீராம், ராமதாஸ், சுகுமாறான்

சேலம் மாவட்டம், காடையம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், நகை அடகுக்கடை வைத்திருக்கும் வெங்கடேஷ் என்ற நபர் 384 நகைக்கடன்கள் பெற்றுள்ளார். இதே நபர், தருமபுரி மாவட்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் நகைக்கடன்களைப் பெற்றுள்ளார். இந்த இரண்டு வங்கிகளிலும் சேர்த்து இவர் வாங்கிய கடன் தொகை 72 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்.

திருவாரூர் மாவட்டம், மணலி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்துப் பேசும் சமூக ஆர்வலர் ராமதாஸ், ‘‘கோயில், கல்லூரி நிலங்களோட சர்வே நம்பர்ல சிட்டா அடங்கல் கொடுத்து, பலர் விவசாய நகைக்கடன் வாங்கியிருக்காங்க. இந்த முறைகேட்டுல அ.தி.மு.க., தி.மு.க-னு பாகுபாடு இல்லாம எல்லா கட்சி பிரமுகர்களுமே ஈடுபட்டிருக்காங்க. கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே நம்பர் உள்ளிட்ட விவரங்களை வங்கி நோட்டீஸ் போர்டுல ஒட்டணும்கிறது விதிமுறை. ஆனா, இங்கே ஒட்டப்பட்ட பட்டியல்ல, 242 நபர்களுக்கு முகவரி, சர்வே நம்பர் உள்ளிட்ட விவரங்கள் இல்லை. முத்துப்பேட்டை பக்கத்துல இடும்பாவனத்துல நகையை வைக்காமலேயே நகைக்கடன் கொடுக்கப்பட்டிருக்கு’’ என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ‘‘தமிழக அரசின் முதற்கட்ட ஆய்வில் சில மாவட்டங்களிலுள்ள ஒருசில கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் நேர்மையான விசாரணை நடைபெறவே இல்லை. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு அலுவலர்களே ஆய்வுப் பணியில் ஈடுபட்டதால், பல முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அதிகாரிகளோடு, வருவாய்த்துறை, லஞ்ச ஒழிப்பு போலீஸாரையும் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்’’ என்றார்.

நகைக்கடனில் கொள்ளையோ கொள்ளை!

‘‘முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘‘இந்த முறைகேடுகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்ய ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழு தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வுசெய்யும். நவம்பர் 21-ம் தேதிக்குள் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

‘‘அமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது. தவறு செய்தவர்கள், ஆளுங்கட்சியினராக இருந்தாலும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட வேண்டும்’’ என்கிறார்கள் உண்மையான விவசாயிகள்.