Published:Updated:

``நில வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்படும், போலி பட்டியல் வணிகம் ஒழிக்கப்படும்" - அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்தி

``கடந்த நிதியாண்டில் வணிகவரித்துறை 1,33,540 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. வரி ஏய்ப்பைத் தடுக்க அறிவியல் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது!” - சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி.

Published:Updated:

``நில வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்படும், போலி பட்டியல் வணிகம் ஒழிக்கப்படும்" - அமைச்சர் மூர்த்தி

``கடந்த நிதியாண்டில் வணிகவரித்துறை 1,33,540 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. வரி ஏய்ப்பைத் தடுக்க அறிவியல் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது!” - சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி.

அமைச்சர் மூர்த்தி

வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில்,

``தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது ரூ.95,209 கோடியாக இருந்த வணிக வரித்துறையின் வருவாய் 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.1,04,970 கோடியாக உயர்ந்தது.

வணிகவரி  மற்றும் பதிவுத்துறை மானியக்  கோரிக்கை விவாதத்திற்கு முன் சந்திப்பு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முன் சந்திப்பு

தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக கடந்த நிதியாண்டில் வணிகவரித்துறை 1,33,540 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

வணிக வரித்துறை அலுவலர்கள் மேற்கொண்ட தொடர் தணிக்கை, கூர்ந்தாய்வு, நிலுவை வரி வசூல், நுண்ணறிவு பிரிவின் திடீராய்வு, சுற்றும் படைகளின் சரக்கு வாகன கண்காணிப்பு மற்றும் போலி வணிகப் பட்டியல் தயாரிப்பதை தடுத்தல் ஆகிய தொடர் நடவடிக்கை மூலம் நடப்பு ஆண்டின் வளர்ச்சி கடந்த ஆண்டைவிட 27.22 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

போலி பட்டியல் வணிகமானது வணிக வரித்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. போலி பட்டியல் வணிகத்தால் அரசுக்கு வரும் வருவாயில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் நேர்மையாக வணிகம் செய்து வரி செலுத்தும் வணிகர்களின் மன உறுதியையும் அது குலைக்கிறது. எனவே, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, போலி பட்டியல் வணிகம் ஒழிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

பதிவுத் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. 70 வயதைக் கடந்தவர்கள் பத்திரம் பதிவு செய்ய வருகையில், காத்திருக்க வைக்காமல், உடனடியாக பத்திரப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் பதிவுத்துறையின் வளர்ச்சி 24.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது பத்திரப் பதிவு துறையின் வருவாய் ரூ.10,643 கோடியாக இருந்தது. அது 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.13,913 கோடியாக உயர்ந்தது. 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.17,296 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நிலத்துக்கு வெளிச்சந்தை மதிப்புபடி வழிகாட்டி மதிப்பு இல்லாததால் வங்கிகளில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். எனவே, இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைத்தனர். அதனடிப்படையில்தான் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டு, பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சிறப்பு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு சீரான வழிகாட்டி மதிப்பு உருவாக்கப்படும். அனைத்து மாவட்டங் களுக்கும் இந்தக் குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும். இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். 

பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு

ஆவணங்கள் பதிவில் இணையதள சேவை அதிகரித்துள்ளது. வடசென்னை பதிவு மாவட்டத்தில் கொளத்தூரில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். தற்போது செயல்படுத்தப்படும் ஸ்டார் 2.0 திட்டத்துக்கான சர்வரின் வேகம் குறைவாக உள்ளது.

பொதுமக்கள் மற்றும் பதிவு அலுவலர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் இணையதள சேவைகள் வழங்குவதற்காக 'ஸ்டார் 3.0' எனும் மென்பொருள் ரூ.325 கோடி செலவில் உருவாக்கப்படும்.

பதிவுத்துறையில் தி.மு.க அரசால் மேற்கொள்ளப்பட்டு உள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் மற்ற மாநில அரசுகளை தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளன.

 தற்போது பெரிய பதிவு மாவட்டங்களான தென்சென்னை, கோவை ஆகியவற்றைப் பிரித்து முறையே தாம்பரம், கோவை தெற்கு ஆகிய புதிய பதிவு மாவட்டங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

மேலும் சேலம் கிழக்கு, கோபிசெட்டிபாளையம், காரைக்குடி, தாம்பரம், கோவை தெற்கு ஆகிய பதிவு மாவட்டங்களில் புதிய தணிக்கை அலகுகள் ஏற்படுத்த அரசாணைகள் வெளியிடப்படும்.

சென்னை, மதுரை, கோவையில் அதிக எண்ணிக்கையில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே அங்குள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் முன்னணி அலுவலகங்களாக மேம்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.