Published:Updated:

நூறு நாள் வேலைத் திட்டம் : நிதிக்குறைப்பு முதல் நிதிப் பங்கீடு வரை - சொதப்புகிறதா மத்திய அரசு?

100 நாள் வேலைத் திட்டம்

``வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களின் சொத்து மதிப்பு 3 சதவிகிதமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.'' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ்

Published:Updated:

நூறு நாள் வேலைத் திட்டம் : நிதிக்குறைப்பு முதல் நிதிப் பங்கீடு வரை - சொதப்புகிறதா மத்திய அரசு?

``வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களின் சொத்து மதிப்பு 3 சதவிகிதமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.'' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ்

100 நாள் வேலைத் திட்டம்

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு 100 நாள்கள் வேலை கட்டாயமாக அளிக்கப்படும். இதனால் அவர்களின் வறுமைநிலையை குறைந்தபட்சம் ஒழிக்க முடியும். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு, இந்தத் திட்டத்தை வளர்க்க எந்த முனைப்பையும் காட்டவில்லை. அதற்கு பதிலாக, அதை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். அதை உறுதிசெய்யும் வகையில், 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 33 சதவிகிதம் நிதி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

பா.ஜ.க ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் நிலை என்ன?

100 நாள் திட்டம் என்பதே `வேலை உறுதியளிப்புத் திட்டம்’தான். ஒருவேளை தகுதியானவருக்கு வேலை மறுக்கப்பட்டால், அவர்களுக்கு 30 நாள்களுக்கு உரிய கால் பங்கு ஊதியமும், அதுவும் மறுக்கப்பட்டால் 30 நாள்களின் பாதி ஊதியத்தையும் பஞ்சாயத்து தர வேண்டும் என்பதைச் சட்டம் சொல்கிறது.

பாஜக
பாஜக

இந்த நிலையில், தொடர்ந்து வேலை உறுதியளிக்கும் திட்டத்தின் மீது பா.ஜ.க ஆட்சி தாக்குதல் தொடுத்துவருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு 20 நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பணிகளைக்கூட இந்த ஆண்டு ஒதுக்கியிருக்கும் நிதியை வைத்து முடிக்க முடியாது. எனவே, மொத்தமாக 10 நாள்களுக்குக்கூட வேலை நாள்கள் இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் நிதி நெருக்கடி காரணமாக இந்தத் திட்டம் இது போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவருகிறது. அதில் மேலும், ஆதாரை இணைத்தவர்களுக்கு மட்டும் வேலை என்பதும், பயோமெட்ரிக் முறையைக் கடைப்பிடிப்பதும், செல்போன் ஆப் வாயிலாக பதிவேடு முறையைக் கொண்டுவருவதும் இதில் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இன்றும் படிக்க தெரியாதவர்களும், இணைய வசதி இல்லாத ஊர்களிலும்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இவர்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றுவது, மக்களை வேலையிலிருந்து விலகச் செய்யும்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

கடந்த வாரம் ஜந்தர் மந்தரில் செல்போன் ஆப் வாயிலாக பதிவேடு முறைக்கு எதிராகப் பயனாளிகள் போராட்டம் நடத்தியது தொடர்பாக, மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், "திட்டத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டுவருவதில் எந்தச் சமரசத்தையும் ஏற்க முடியாது" என்றார். ஆனால், இதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதைக் கடந்து, ஏழை மக்களைத் திட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க அரசின் திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ," ஒரு திட்டத்தைக் கொல்ல வேண்டும் என்றால், அதில் ஊழல் இருப்பதாகச் சொல்ல வேண்டும். அதற்கான முயற்சியில்தான் பா.ஜ.க ஈடுபட்டுவருகிறது. இந்தத் திட்டத்தை இல்லாமல் ஆக்கும் நிலையை உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். இந்தத் திட்டத்தை யாரும் சரியாகப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்தவில்லை. வேலையை உத்தரவாதப்படுத்துவது என்பதுதான் திட்டத்தின் நோக்கம்.

அப்படியிருக்கும் சூழலில், திட்டத்தின் வேலை நாள்கள் மற்றும் நிதியைக் குறைப்பது எப்படிச் சரியாக இருக்கும்... வளர்ச்சியடைந்த நாடுகளில், வேலையிலிருந்து வெளியேறும் தொழிலாளர்கள் மாற்று வேலையைப் பார்க்கும் வரையிலும், அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களின் பொருளாதாரநிலை கருத்தில்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள், இணைய மற்றும் மின்சாரம் வசதி இல்லாத ஊர்களில் ஆதார் இணைப்பவர்களுக்கு மட்டுமே வேலை. பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு எனச் சொல்வதெல்லாம் படிப்படியாகத் திட்டத்தை இல்லாமல் செய்வதைத் தாண்டி வேறல்ல.

கனகராஜ்
கனகராஜ்

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் சொத்து மதிப்பு 3 சதவிகிதமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் மிகக் குறைந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது கடந்த ஆண்டு மட்டும்தான். இதற்கு ஊழலை முக்கியக் காரணமாகச் சொல்கிறார்கள். ஊழல் இல்லாத துறையைக் கைகாட்ட முடியுமா... அதற்காக அதை முற்றிலுமாகக் கைவிட வேண்டுமா... அப்படிப் பார்த்தால் அதானிதான் அதிகம் ஊழல் செய்தவர். அதற்காக செபியைக் கலைத்துவிடலாமா... இல்லை அதிகம் ஊழல் நடக்கும் மருத்துவத்துறையை ஒதுக்கிவிடலாமா... இப்படி இத்தனை ஊழல்களைத் தவிர்க்கும் பா.ஜ.க அரசு, ஏழை வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டத்தைக் கைவிட துடிப்பது ஏன்... ஊழல் நடப்பதைத் தவிர்க்கும் முறைகளைக் கண்டறிய வேண்டுமே தவிர, அதைக் கைகழுவுவது சரியான நடவடிக்கை அல்ல.

அதானி - மோடி
அதானி - மோடி

ஆங்கிலத்தில் `Inclusion Error’, `Exclusion Error’ என இரு வகை உண்டு. Inclusion Error என்பது தகுதியில்லாதவர்களை இணைப்பது. Exclusion Error என்பது தகுதியுடையவர்கள் வெளியேற்றப்படுவது. பா.ஜ.க தகுதியில்லாதவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் தகுதியுடையவர்களை வெளியேற்ற முயல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்படி ஓர் அரசாங்கம் இருக்கக் கூடாது என்பதே எங்களின் கருத்து. அதேபோல், சிறு குழுக்களில் வேலை சரியாக நடக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்குத்தான் கிராமசபைக்கு அதன் அதிகாரம் தரப்பட வேண்டும். யார் வேலைக்கு வந்தார்கள், செய்தார்கள் என்பதை அவர்கள் முடிவுசெய்ய வேண்டும்'' என்றார்.

கிராம சபை
கிராம சபை
எம். விஜயகுமார்

இந்த நிலையில், ஊழலைக் காரணம் காட்டி, திட்டத்துக்கு முழு நிதியை மத்திய அரசு ஒதுக்கும் நிலையில், அதை 60:40 என மத்திய, மாநில அரசுகள் நிதியைப் பகிர்ந்துக்கொள்ளும்படி திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என, மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். இது அறிவிப்போடு முடிந்துவிடுமா இல்லை நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு இது நடைமுறைப்படுத்தப்படாது என பா.ஜ.க தரப்பினர் கூறிவருகின்றனர். ஆனால், கடந்தமுறைகளில் பல திட்டங்களுக்கு நிதியை மாநில அரசின் தலையில் கட்டுவது பா.ஜ.க-வுக்கு வாடிக்கையானது. எனவே, இதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க அரசு நிச்சயம் முயற்சி செய்யும் என்பதே எதிர்க்கட்சிகளின் அச்சமாக இருக்கிறது.