சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஆட்டோவே எமனாகிடுச்சே”

“ஆட்டோவே எமனாகிடுச்சே”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆட்டோவே எமனாகிடுச்சே”

கடந்த வருடமே என் மகனைப் பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அவனை இந்த ஆண்டு பள்ளியில் சேர்த்தேன்.

பள்ளிச் சீருடையில் மிடுக்காக ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மகன் உயிரிழந்து பிணமாகத் திரும்பினால் எந்தப் பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியும்? அத்தகைய கொடூரமான சோகம் ராஜா-சரோஜா தம்பதியினருக்கு ஏற்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே இருக்கும் ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ராஜா-சரோஜா தம்பதியினர். இவர்களது நான்கரை வயது மகன் செல்வநவீன். கட்டட வேலை செய்யும் ராஜா தன் மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் எல்.கே.ஜி-யில் சேர்த்தார்.

முதல் வாரத்தில் ராஜா தன் பைக்கிலேயே மகனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, பள்ளி முடிந்ததும் திருப்பி அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், கிராமத்தின் வழியாக ஆட்டோ ஒன்று மாணவர்களை அழைத்துச் செல்வதைக் கேள்விப்பட்ட அவர், அந்த ஆட்டோ தன் மகனுக்கு எமனாக மாறும் என்பதை அறியாமலே செல்வநவீனையும் அதே ஆட்டோவில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

“ஆட்டோவே எமனாகிடுச்சே”

ஆட்டோ டிரைவர் ராஜி செல்போனில் பேசியபடியே ஆட்டோவை ஓட்டியிருக்கிறார். அனவரதநல்லூர் சாஸ்தா கோயில் அருகே ஆட்டோ சென்றபோது டிரைவர் ராஜியின் செல்போன் கையிலிருந்து நழுவியிருக்கிறது. அதைப் பிடிக்க அவர் குனிந்தபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. எட்டுச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ திடீரென நிலை தடுமாறிக் கவிழ்ந்ததில், செல்வநவீன் ஆட்டோவிலிருந்து தூக்கி விசப்பட்டுள்ளான். சிறுவனின் மீது ஆட்டோ விழுந்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மற்ற ஏழு சிறுவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

சம்பவம் நடந்ததும் ஆட்டோ டிரைவர் ராஜி, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் ஆட்டோவுக்குள் சிக்கிய ஏழு சிறுவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ராஜி
ராஜி
செல்வநவீன்
செல்வநவீன்

பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற மகன் பிணமாகத் திரும்பிய துக்கத்திலிருந்து மீளாத, செல்வநவீன் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துப் பேசினோம். சிறுவன் செல்வநவீன் தந்தை ராஜா, ``கடந்த வருடமே என் மகனைப் பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அவனை இந்த ஆண்டு பள்ளியில் சேர்த்தேன்.

26-ம் தேதி என் மகன் முதல் நாள் ஆட்டோவில் போனான். அன்றைக்கு ஆட்டோ உரிமையாளரும் ஓட்டுநருமான சரவணன் என்பவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ராஜி என்பவர் வந்தார். ஆட்டோ டிரைவர் சரவணன் அவருக்குச் சொந்தமான வேனை எடுத்துச் செல்ல வேண்டியதிருந்ததால் ராஜியை அன்று ஒருநாள் மட்டும் டிரைவராக அனுப்பியிருந்தார்.

கொஞ்ச நேரத்திலேயே ஆட்டோ கவிழ்ந்துவிட்டதாக தகவல் வந்ததால் பதறியடிச்சுப் போய்ப் பார்த்தேன். என மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். பள்ளிக் கூடம் போகணும்னு ஆசையா போட்டிருந்த யூனிபார்ம் முழுவதும் ரத்தத்தில் நனைந்து போயிருந்தது. பாசத்தோடு அனுப்பி வச்ச பச்சப்புள்ளையை உயிரில்லாமப் பார்க்கிறதை விடவும் கொடுமையானது வேறு என்ன இருக்க முடியும்? இதுபோல சோகம் யாருக்கும் வரக்கூடாது” என்று சொல்லும்போதே குரல் உடைந்து அழுகை பீறிட்டது.

ராஜா - சரோஜா
ராஜா - சரோஜா

மகனை இழந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் அழுதுகொண்டே இருக்கிறார், தாய் சரோஜா.

“என் மகன் எப்பவும் சிரித்தபடியே இருப்பான். ஒரு வாரம் அவங்கப்பாவுடன் ஆசையா பைக்கில் போனவனுக்கு ஆட்டோவில் போறதுக்கு விருப்பமே இல்லை. ஆட்டோவில் ஏறாமல் அடம்பிடிச்சவனைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சேன். இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அவனை அனுப்பி வச்சிருக்க மாட்டேன்” என்று கதறினார்.

தங்கள் பிஞ்சுக்குழந்தையைக் கொடூர விபத்தில் பலிகொடுத்த பெற்றோர்களின் காயத்தைக் காலம்தான் ஆற்ற வேண்டும்.