அலசல்
சமூகம்
Published:Updated:

உடம்பெல்லாம் வலிக்குது... நீ பிடிச்சுவிட்டா சரியாகிடும்! - மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி தாளாளர்

நெல்லை மேலப்பாளையத்திலுள்ள மேல்நிலைப்பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லை மேலப்பாளையத்திலுள்ள மேல்நிலைப்பள்ளி

தாளாளர் குதுபுதீன் நஜீமின் தொடர் அத்துமீறல்களால், அவரின் அறைக்குச் செல்லவே மாணவிகள் அச்சப்பட்டிருக்கிறார்கள்

நெல்லை மேலப்பாளையத்திலுள்ள அரசு உதவிபெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோரே கைதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குதுபுதீன் நஜீமின்
குதுபுதீன் நஜீமின்

இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “தாளாளர் குதுபுதின் நஜீமின் வீடு பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருக்கிறது. தாமதமாக வரும் மாணவிகளை, அவர் தன் அறைக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வைப்பார். சில மாணவிகளை, ‘ரொம்ப அசதியா இருக்கு. நீங்க என் உடம்பைப் பிடிச்சுவிட்டா சரியாகிடும்’ என்று சொல்லி சட்டையைக் கழற்றிவிட்டு கட்டிலில் படுத்துக்கொள்வார். அப்படி உடம்பைப் பிடித்து விடும்போது கண்ட இடத்திலும் கைவைத்து தவறாக நடந்துகொள்வார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ‘இதை வெளியில் சொன்னால் பள்ளிக்கூடத்துக்கே வர முடியாத அளவுக்கு செஞ்சுடுவேன்’ என்று மிரட்டுவார்” என்று கண்ணீர் வடித்தனர்.

உடம்பெல்லாம் வலிக்குது... நீ பிடிச்சுவிட்டா சரியாகிடும்! - மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி தாளாளர்

இந்த விவகாரத்தை விசாரித்த போலீஸாரிடம் பேசியபோது, “தாளாளர் குதுபுதீன் நஜீமின் தொடர் அத்துமீறல்களால், அவரின் அறைக்குச் செல்லவே மாணவிகள் அச்சப்பட்டிருக்கிறார்கள். இது பற்றி தலைமை ஆசிரியை காதரம்மாள் பீவியிடம் சொன்னால், அவர் இதை ஒரு பிரச்னையாகவே அணுகவில்லை. அவரும், குதுபுதீன் நஜீமின் மனைவி முகைதீன் பாத்திமாவும் இந்த வக்கிரத்துக்குத் துணைபோயிருக்கிறார்கள். கடந்த 4-ம் தேதி வழக்கம்போல, ப்ளஸ் டூ மாணவிகள் மூவரைத் தனக்கு மசாஜ் செய்யச் சொன்னதுடன், அவர்களிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டிருக்கிறார் தாளாளர். அந்த மாணவிகள் அழுதுகொண்டே வெளியே ஓடிவந்ததால், தாளாளருக்கு எதிராக மாணவிகள் அணிதிரண்டிருக்கிறார்கள். அப்போதும்கூட ஆசிரியர்கள் சிலர் தாளாளருக்கு ஆதரவாகவே பேசியதுடன், மாணவிகளை வகுப்புக்குச் செல்லும்படி மிரட்டியுள்ளனர். பெற்றோரும், இஸ்லாமிய அமைப்பினரும் தலையிட்ட பிறகே விவகாரம் போலீஸ் கவனத்துக்கு வந்தது’’ என்றார்கள்.

உடம்பெல்லாம் வலிக்குது... நீ பிடிச்சுவிட்டா சரியாகிடும்! - மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி தாளாளர்

பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில், பள்ளி தாளாளர் குதுபுதீன் நஜீம், அவரின் மனைவி முகைதீன் பாத்திமா, தலைமை ஆசிரியை காதரம்மாள் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது பற்றி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, “பள்ளியில் பணியாற்றும் மேலும் சில ஆசிரியர்கள் மீதும் மாணவிகள் புகார் செய்திருக்கிறார்கள். நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, தவறு செய்த அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கல்வித்துறை அதிகாரிகள், பெண்கள் பள்ளிகளைக் கூடுதல் அக்கறையுடன் கண்காணிக்கவேண்டிய அவசியத்தையே இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.