அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மாணவிகளுக்கு முத்தம்... வீடியோவில் விஷம்... பள்ளி தாளாளரை மாட்டிவிட்ட மாணவர்கள்!

வினோத்
பிரீமியம் ஸ்டோரி
News
வினோத்

படிப்பில் கவனக்குறைவு, சேட்டை போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மாணவிகளைத் தன் அறைக்கு அழைத்து கவுன்சலிங் என்ற பெயரில் குடும்பக் கதைகளையெல்லாம் கேட்பார்

`கவுன்சலிங்’ என்ற பெயரில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்த பள்ளித் தாளாளர், மாணவர்கள் போட்டுக்கொடுத்ததால் கைதாகியிருக்கிறார்!

மாணவர்கள் போராட்டம்!

சென்னை திருநின்றவூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியை, கடந்த 23-ம் தேதி முற்றுகையிட்ட மாணவர்கள், திடீரென சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கே போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையிலான போலீஸாரிடம், “ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தைக் கைதுசெய்ய வேண்டும்” என்று முறையிட்டனர்.

மாணவிகளுக்கு முத்தம்... வீடியோவில் விஷம்... பள்ளி தாளாளரை மாட்டிவிட்ட மாணவர்கள்!

அதன்படி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரிடம் புகார் வாங்கிய ஆவடி மகளிர் போலீஸார், வினோத்தைத் தேடினர். தலைமறைவான அவர் ஒரு கட்டத்தில், ‘நான் சாகப்போகிறேன்’ என்று சொன்னபடியே விஷம் குடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதைக் கண்டு பதறிய அவரின் மனைவி, வினோத் கோவாவில் இருப்பதையறிந்து அவரைப் பார்க்கச் சென்றார். அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்த போலீஸார், கணவனை அழைத்துக்கொண்டு திரும்பியதும் விமான நிலையத்தில்வைத்தே வினோத்தைக் கைதுசெய்தனர்.

‘கட்டிப்பிடி’ வைத்தியம்!

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரிடம் பேசினோம். “தாளாளர் வினோத், பள்ளியை நிர்வகிப்பதைவிட மாணவிகளிடம்தான் அதிகம் பேசுவார். படிப்பில் கவனக்குறைவு, சேட்டை போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மாணவிகளைத் தன் அறைக்கு அழைத்து கவுன்சலிங் என்ற பெயரில் குடும்பக் கதைகளையெல்லாம் கேட்பார். ஆறுதல் சொல்வதுபோல தொட்டுத் தொட்டுப் பேசுவார். குடும்பச் சோகத்தைச் சொல்லியழும் மாணவிகளைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வதுபோல முத்தம் கொடுப்பார். எனக்கு நடந்த அதே கொடுமை பிற மாணவிகளுக்கும் நடந்திருப்பது தெரிந்ததால்தான் புகார் கொடுத்தேன்” என்றார்.

மாணவிகளுக்கு முத்தம்... வீடியோவில் விஷம்... பள்ளி தாளாளரை மாட்டிவிட்ட மாணவர்கள்!

இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``கைதான வினோத்துக்குத் திருமணமாகி, குழந்தை இருக்கிறது. விஸ்காம் படித்திருக்கும் வினோத், தன் அப்பா நடத்திவந்த பள்ளியிலேயே ஆறு மாதங்களுக்கு முன்பு, பள்ளித் தாளாளராக்கப்பட்டிருக்கிறார். குறிப்பிட்ட சில மாணவிகளிடம் அவர் நெருக்கமாகப் பழகியதும், கவுன்சலிங் என்ற பெயரில் தனியறையில் அவர்களுக்கு முத்தம் கொடுத்ததும் சில ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியவந்திருக்கிறது.

போட்டுக்கொடுத்த மாணவர்கள்!

அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர்மீது ப்ளஸ் டூ படிக்கும் இரண்டு மாணவிகள் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார்கள். ஆசிரியருக்காக வீட்டிலிருந்து அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ‘லஞ்ச்’ எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தத் தகவல் தெரியவந்ததும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கவுன்சலிங் கொடுத்திருக்கிறார் தாளாளர் வினோத். கவுன்சலிங்கின்போது ஒரு மாணவி, தன்னுடைய குடும்பச் சூழலைக் கண்ணீர்மல்கக் கூறியதுடன், ‘காதலிப்பது தப்பா சார்?’ என்று கேட்டிருக்கிறார். ஆறுதல் சொல்லித் தேற்றுவதுபோல தன்னுடைய வழக்கமான சேட்டைகளைச் செய்திருக்கிறார் வினோத். அந்த மாணவியும், அவரால் பாதிக்கப்பட்ட மாணவியும் விசாரணையின்போது இதையெல்லாம் எங்களிடம் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு முத்தம்... வீடியோவில் விஷம்... பள்ளி தாளாளரை மாட்டிவிட்ட மாணவர்கள்!

ஆனால், சில மாணவர்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் பிரச்னை வெளியிலேயே வந்திருக்காது. தொடர்ந்து புகாருக்குள்ளான சில மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்க முடிவெடுத்திருக்கிறது நிர்வாகம். அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், ‘மாணவிகளிடம் ஜொள்ளுவிடும் வினோத் சார் மேல நடவடிக்கை எடுக்கத் துப்பில்லை... எங்ககிட்ட வந்துட்டீங்களா?’ என்று நைசாகப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் எந்தெந்த மாணவியெல்லாம் வினோத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவல்களையும் பள்ளி முழுக்கப் பரப்பியிருக்கிறார்கள். சில மாதங்களாகவே இந்தப் பாலியல் விவகாரம் புகைந்துகொண்டே இருந்திருக்கிறது. மறியல் போராட்டத்தின் மூலம், அது எரிமலையாக வெடித்துச் சிதறிய பிறகுதான் போலீஸ் கவனத்துக்கே வந்தது.

மாணவிகளுக்கு முத்தம்... வீடியோவில் விஷம்... பள்ளி தாளாளரை மாட்டிவிட்ட மாணவர்கள்!

கைதுசெய்யப்பட்ட வினோத், தான் ஒரு ஹீரோ என்றும், சில மாணவிகளை ஹீரோயின்கள் என்றும் கருதி வாழ்ந்து வந்திருக்கிறார். வினோத் ஜொள்விடுகிறார் என்று புகார் கிளம்பிய பிறகும்கூட, ‘என்னுடைய ஜொள்ளில் ஜொலித்த ஜுவல்ஸ் (தங்கம்) இந்த மாணவிகள்’ (தங்கம்) என்று பொதுவெளியில் பெருமையாகவே சொல்லியிருக்கிறார் வினோத். இது போன்ற ஆதாரங்களின் அடிப்படையில்தான் வினோத் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வினோத் வெளியிட்ட வீடியோ, விசாரணையில் அவர் நடந்துகொண்ட விதத்தையெல்லாம் பார்க்கும்போது அவருக்கே கவுன்சலிங் தேவைப்படும் என்றே தோன்றுகிறது” என்றனர்.