சமீபத்தில் தமிழக அரசு 2020-ம் ஆண்டுக்கான `மாநில பெண் குழந்தைகள் மேம்பாடு' விருதை அறிவித்திருந்தது. வழக்கமாக இந்த விருதை சமூக செயற்பாட்டாளர்கள் பெறுவார்கள். ஆனா, இந்த முறை பெற்றிருப்பது 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நர்மதா. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவது, பெண் உரிமைகளுக்காகப் போராடுவது என 17-வயதில் பல நூறு பெண் குழந்தைகளின் வாழ்வில் கல்வி ஒளியைப் பாய்ச்சி சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் நர்மதாவை சந்திக்கப் பயணித்தோம்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த வேளகாபுரம் கிராமத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினோம். ஆவடியைக் கடந்து வெங்கல் பகுதியை அடைந்ததும், குக்கிராமத்துக்குச் சென்றுவிட்டதுபோல் இருந்தது. கரம் நீட்டி அழைத்த காப்புக்காட்டுப் பகுதியில் பேருந்து வசதியில்லாமல் நடையாய் நடந்துகொண்டிருந்தனர் பள்ளிச் சிறுவர்கள். காப்புக்காடு என்பதால் வழிநெடுகிலும் குரங்குகள் சாலைகளில் தென்பட்டன. காட்டுக்குள் நரிகளும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றுக்கு மத்தியில் பயத்துடன் நடுங்கியபடியே நகர்ந்துகொண்டிருந்தனர் பள்ளி மாணவர்கள். பள்ளி சென்று பத்திரமாக வீடு திரும்புவதே அங்கு எத்துணை சிரமமான காரியமாக இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு வழியாக வேளகாபுரம் அடைந்து பள்ளி மாணவி நர்மதாவின் வீட்டை அடைந்தோம்.

நாம் சென்றதை அறிந்து, அருகில் வயக்காட்டில் 100 நாள் வேலை செய்துகொண்டிருந்த நர்மதாவின் பெற்றோர் மண் வெட்டிகளுக்கு ஓய்வளித்துவிட்டு, எங்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். நாங்கள் சென்ற சிறிது நேரத்திலேயே 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள், `நர்மதா அக்கா வந்துட்டாங்களா...' என்று கூச்சலிட்டபடி அவர் வீட்டுக்குப் பாடம் கற்றுக்கொள்ள வந்தமர்ந்தனர். அவர்களோடு சேர்ந்து நாமும் நர்மதாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தோம்.
மாலை 6 மணி நெருங்குகையில், அரசுப் பேருந்திலிருந்து சக மாணவர்களுடன் இறங்கினார் நர்மதா. `என்னம்மா இவ்வளவு நேரம்?' என நர்மதாவின் தந்தை தேவன் கேட்க, ``பக்கத்து ஊர்ல குழந்தைத் திருமணம் ஒண்ணு நடக்குறதா தகவல் கெடச்சுது. அதான் டீச்சர்கூட போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்தேன்" என்றார்.
ஒரு குக்கிராமத்துச் சிறுமியான தான், மாநில விருது வாங்கிய பயணம் பற்றி நம்மிடம் பகிர ஆரம்பித்தார் நர்மதா. ``10-ம் வகுப்பு முடிக்குற வரைக்கும் எனக்கு சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் பத்தியெல்லாம் பெருசா ஒண்ணுமே தெரியாது. என் கூட படிச்ச பிள்ளைங்க நெறைய பேரை அவங்க அப்பா, அம்மா குடும்ப வறுமை காரணமா பாதிலேயே பள்ளியில இருந்து நிறுத்திட்டு வயக்காட்டுலயும் சூளையிலயும் வேலைக்கு அனுப்பிட்டாங்க. ஆனா, என்னோட அப்பா, அம்மா என்ன ரொம்ப கஷ்டத்துலயும்கூட பள்ளிக்கூடம் அனுப்பினாங்க.
ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் குறைவாதான் அப்போவெல்லாம் அப்பா சம்பாதிப்பாரு. அந்த நெலமையிலும்கூட என்னை படிக்க வெச்சாங்க. கல்விதான் எங்க குடும்பத்தோட நெலமைய உயர்த்தும்னு அப்பாவும் அம்மாவும் நம்புனதை, நானும் புரிஞ்சுக்கிட்டேன். அதுல இருந்து ரொம்ப கவனமா படிக்க ஆரம்பிச்சேன். ஆசிரியர்கள்கிட்ட எல்லா விஷயங்களையும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். பாடப் புத்தகங்களைத் தாண்டி நெறைய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிச்சேன். சமூகத்தை நோக்கிய என்னோட பார்வை விசாலமாச்சு. ஆரம்பத்துல பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள்கூட சேர்ந்து என்னோட கிராம மக்களுக்கு கையெழுத்து போடச் சொல்லிக்கொடுத்தேன். அதுதான் என்னோட ஆரம்பம்.

குடும்பக் கஷ்டம் காரணமா பெத்தவங்க பிள்ளைங்கள பாதியில ஸ்கூல்லயிருந்து நிறுத்தும்போது, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி நிறுத்தப்பட்ட ஒரு சின்ன பையன் அதை என்கிட்ட சொல்லி அழுதப்போ, எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. அவங்க வீட்ல போய் பேசுனேன். திரும்பவும் ஸ்கூலுக்கு அனுப்புங்கனு எடுத்துச் சொன்னேன். அதுக்கு அவங்க, `நீ சின்ன பொண்ணு, உனக்கு எதுவும் தெரியாது, ஒழுங்கா போய்டு'னு என்ன மிரட்டுனாங்க.
நான் அத எங்க டீச்சர்கிட்ட சொன்னப்போ, `கேக்கறதுக்கு உனக்கு உரிமை இருக்கு, பயப்படாத'னு சொன்னாங்க. நான் மறுபடியும் அவங்க வீட்டுக்குப் போய், `குழந்தைகளுக்கு 0 - 18 வயசு வரைக்கும் கல்வி கட்டாயம். உங்க பையன ஸ்கூலுக்கு அனுப்புங்க. இல்லைனா நான் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுப்பேன்'னு சொன்னேன். அதுக்கப்புறமாதான் அவங்க போலீஸுக்கு பயந்து பையன மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்புனாங்க. இன்னைக்கு அந்தப் பையன் பத்தாவது படிக்குறான்.
அதுல இருந்து இதுவரைக்கும் 4 பிள்ளைகள பள்ளிக்கூட இடைநிற்றலில் இருந்து மீண்டும் ஸ்கூலுக்கு திரும்ப வெச்சுருக்கேன். எங்க ஊரு கிராமம்ங்கிறதால இங்க நெறைய மூடநம்பிக்கைகள் வழக்கத்துல இருக்கு. அதையெல்லாம் எதிர்த்து நான் மக்களுக்கு விழிப்புணர்வு செஞ்சுட்டு இருக்கேன். சுத்து வட்டாரத்துல எங்க குழந்தைத் திருமணம் நடக்குறதா தகவல் கெடச்சாலும், உடனடியா காவல்துறையோட போய் கல்யாணத்த தடுத்து நிறுத்திடுவேன்.
IRCDS (Integrated Rural Community Development Society) தொண்டு நிறுவன மீட்டிங்குல கலந்துக்கிட்டதால, பெண் உரிமைகள் குறித்து நெறைய தெரிஞ்சுக்கிட்டேன். அதன் மூலமா விழிப்புணர்வு செஞ்சேன். சமூகத்துல நமக்கு என்னென்ன உரிமைகள் இருக்குதுனு படிச்சு தெரிஞ்சிகிட்டேன். இப்போ என் கிராமத்துக்குப் பேருந்து வசதி, மின்சார வசதின்னு எல்லாத்தையும் சட்டரீதியா முறையா அணுகிப் பெற்றுக் கொடுத்திருக்கேன்.
நான் இப்ப 12-வது படிச்சிட்டு இருக்கேன். என்னோட அறிவுக்கு என்னால 10-ம் வகுப்புப் படிக்குற பசங்களுக்குத் தாராளமா பாடம் சொல்லிக் கொடுக்க முடியும். அதனால, வீட்ல தினமும் 10-ம் வகுப்புப் படிக்குற 20 பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். என்னோட செயல்களைப் பார்த்துட்டு பள்ளி தலைமை ஆசிரியர் என்னை பத்தி மாவட்ட நிர்வாகத்திடம் சொல்லி, இப்போ முதல்வர் கையால மாநில பெண் குழந்தைகள் மேம்பாடு விருதை வாங்கியிருக்கேன். இது என்னோட பணிக்குக் கிடைச்சிருக்க மிகப்பெரிய அங்கீகாரம். விருதோடு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் அரசு அளிச்சுருக்கு. இந்தத் தொகையை நான் நிச்சயம் ஏழை மாணவர்கள் கல்விக்காகத்தான் செலவிடப்போறேன். இதே மாதிரி பிரதமர்கிட்டயும் விருது வாங்கணும்.
கல்வி மட்டும்தான் நம்ம நெலமைய ஒசத்தும்னு நான் அனுபவரீதியா உணர்ந்துட்டேன். அத இப்போ மத்தவங்களுக்கும் சொல்லிட்டு இருக்கேன்.
பெண்கள் வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்காம வெளியில வந்து தைரியமா அவங்க உரிமைகளுக்காகப் போராட கத்துக்கணும். ஒரு பொண்ணு நெனச்சா சமூகத்துல எதையும் மாத்தலாம். அதுக்கு நான் ஒரு சின்ன எடுத்துக்காட்டு அவ்வளவுதான்" என்று கூறிவிட்டு, காத்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கக் கிளம்பினார் நர்மதா.

தன் மகளின் சமூக அக்கறை மனப்பான்மையைக் கண்டு மனம் நெகிழ்ந்து போயிருந்த நர்மதாவின் தந்தை தேவனிடம் பேசினோம். ``நானும் என் வீட்டுக்காரம்மாவும் கூலி வேலைக்குப் போயிதான் எங்க பிள்ளைகள படிக்க வெச்சுட்டு இருக்கோம். எங்களுக்கு மூணு பசங்க. மூத்தவன் காலேஜ் படிக்குறான். ரெண்டாவது பொண்ணுதான் நர்மதா, அவளுக்கு அடுத்து இளையவ 11-வது படிச்சிட்டு இருக்கா. ஒரு நாள் முழுக்க வயக்காட்டுல கஷ்டப்பட்டு உழைச்சாலும் 200 ரூபாய் கிடைக்குறதே அதிகம். என் பொண்டாட்டியும், 100 நாள் வேலைத்திட்டத்துல கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கு. அது மூலமா ஒரு 150 கிடைக்கும். இந்த சொற்பமான வருமானத்த வெச்சிட்டு தினமும் கஞ்சியோ, கூழோ குடிக்குறதே அதிகம்.
எங்கள எங்க அப்பா, அம்மா அப்போ குடும்பக் கஷ்டத்துக்காகப் படிக்க வெக்காம போயிட்டாங்க. அதனாலதான் நாங்க இப்போ இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்குறோம். இந்த நெலம எங்க பிள்ளைங்களுக்கு வந்துடக் கூடாதுனுதான் போராடிட்டு இருக்கேன். நம்ம குடும்பச் சூழ்நிலைய காரணம் காட்டி
பிள்ளைங்க படிப்பு பாதிக்கப்படக் கூடாதுனுதான் அவங்கள கஷ்டப்பட்டுப் படிக்க வெச்சுட்டு இருக்கோம்.
என் பொண்ணு நர்மதா 8-வது படிக்கும் போதுலயிருந்தே இந்த மாதிரி சமூகப் பணிகள் செஞ்சுட்டு இருக்கு. அதுக்கு நாங்க முழு சுதந்திரம் கொடுத்தோம், இப்ப அது பல பிள்ளைங்களுக்கு சுதந்திரம் கொடுத்துட்டு இருக்கு. அரசோட விருது, என் பொண்ணுக்குக் கெடச்சுருக்கிற முதல் அங்கீகாரம். இன்னும் அவ நெறைய சாதிப்பா சார்" என்றார் தேவன் கண்களைக் கசக்கியபடி.
கிராமத்துப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் செல்வதே இன்னும் பல இடங்களில் சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், வறுமையின் பிடி இறுக்கி நெருக்கும் போதிலும், கல்வி என்ற ஒற்றை ஆயுததத்தை ஏந்தி பெண் உரிமைகளுக்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் குரல் உயர்த்தும் நர்மதா போன்ற பெண்கள், மிகுந்த நம்பிக்கை தருகிறார்கள்.