சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“ரஹ்மான் சார் சொன்ன பாராட்டு வார்த்தைகள் அவ்வளவு பெரிசு!” - அருண் டைட்டன்

சிலைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிலைகள்

கேமரா கைக்கு வந்தப்புறம் என் உடல்ல அது ஒரு உறுப்பாயிடுச்சு. எல்லா நேரமும் கழுத்துலயே கிடக்கும். வீட்டுல இருந்து ஆபீஸ் 5 கி.மீ. தூரம். வழக்கமா பைக்லதான் போவேன்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

இப்போதுதான் கல்லூரி முடித்துவந்த இளைஞர் மாதியிருக்கிறார் அருண் டைட்டன். அவர் தொட்டிருக்கிற உயரம் சாதாரணமானதல்ல. புகழ்பெற்ற ஸ்ட்ரீட் போட்டோகிராபர்; உலகம் முழுவதும் சுற்றி ஈவென்ட் போட்டோகிராபி எடுத்தவர்; நாடறிந்த பிராண்டிங் எக்ஸ்பர்ட். இப்போது... சிலை டாட் காம் நிறுவனர்.

அவ்வளவு உயிரோட்டமாகவும் தத்ரூபமாகவும் அருண் வடிக்கும் சிலைகளுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு. கையளவு மினியேச்சர் சிலைகள் முதல் ஏழரை அடி பிரமாண்ட சிலைகள் வரை தயாரிக்கிறார். ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் வரை இவரது தயாரிப்புகள் அலங்கரிக்கின்றன. செஸ் ஒலிம்பியாட்டுக்கு வந்த அத்தனை வீரர்களுக்கும் தரப்பட்ட அன்புப் பரிசான தம்பி சிலையும் மாமல்லபுரம் கடற்கோயில் கோபுரமும் அருண் டைட்டன் உருவாக்கியவைதான்.

சென்னை, பள்ளிக்கரணையில் இருக்கும் அருணின் ஸ்டூடியோவே ஓர் அருங்காட்சியம் மாதிரி இருக்கிறது. மிக எளிய குடும்பத்திலிருந்து வந்து இவ்வளவு பெரிய உயரம் தொட அருண் டைட்டன் போட்ட உழைப்பு சாதாரணமானதல்ல.

``அப்பா அம்மா வச்ச பேரு அருண்குமார். சென்னை என்.எஸ்.கே நகர்தான் பூர்வீகம். அப்பா ஒரு நிறுவனத்துல டிங்கரிங் வேலை செஞ்சார். அம்மா வீட்டிலேயே தையல் மிஷின் போட்டுத் தைப்பாங்க. படிப்பு எனக்கு மிகப்பெரிய பிரச்னையா இருந்துச்சு. +2 முடிக்கிறதுக்குள்ள மூணுமுறை பெயிலானேன். ஆனா ஓவியம் வரையுறதுல பெரிய ஆர்வம் இருந்துச்சு.

“ரஹ்மான் சார் சொன்ன பாராட்டு வார்த்தைகள் அவ்வளவு பெரிசு!” - அருண் டைட்டன்

பகுதிநேர வேலைக்குப் போய்க்கிட்டே பள்ளிக்கூடம் போனேன். இடையில அப்பா வேலை பார்த்த நிறுவனத்துல பிரச்னையாகி நின்னுட்டார். அதுவும் நெருக்கடியாச்சு. நாம தலையெடுத்தாதான் குடும்பக் கஷ்டம் தீரும்ங்கிற நிலையிலதான் பள்ளிக்காலம் ஓடுச்சு.

தட்டுத்தடுமாறி அட்டம்ட் அடிச்சு பிளஸ் டூ பாஸ் பண்ணினேன். அடுத்து படிக்க, படிக்கவே தேவையில்லாத ஒரு படிப்பு இருக்கான்னு தேடினேன். அப்பதான் கவின்கலைக்கல்லூரி கண்ணுல பட்டுச்சு. நுழைவுத்தேர்வு எழுதினேன். விஷூவல் கம்யூனிகேஷன் கிடைச்சுச்சு. சந்ரு சார் மாதிரி நல்ல ஆசிரியர்கள் இருந்தாங்க. கவின்கலைக் கல்லூரி மிகப்பெரிய வெளி. அங்கே துறைகள் கடந்து நீங்க எதை வேணும்னாலும் கத்துக்கலாம். ஆசிரியர்கள் மட்டுமில்லாம சீனியர்களும் அங்கே நமக்கு ஆசிரியர்களா வழிகாட்டிகளா அமைவாங்க. எனக்கு புகைப்படம், ஓவியம், சிற்பம்ன்னு எல்லாத்திலயும் நல்ல அறிமுகம் கிடைச்சுச்சு.

கவின்கலைக் கல்லூரியில அடிக்கடி கல்விச்சுற்றுலா போறதுண்டு. நிறைய பேர் காஸ்ட்லியான கேமராக்கள் எடுத்துட்டு வந்து போட்டோ பிடிப்பாங்க. நான் அதையெல்லாம் அப்போ கற்பனைகூட செய்யமுடியாது. ஒரு கனமான அட்டையில நடுவில அழகா கட்பண்ணி அதுல பிரேம் பார்த்து சுத்திக்கிட்டிருப்பேன்.

மூன்றாவது வருடம் படிக்கும்போதே ஒரு நிறுவனத்துல பகுதிநேர வேலைக்குப் போயிட்டேன். அதுக்கு மேல தாக்குப் பிடிக்காது குடும்பம். குறைந்தபட்சம் என் தேவையையாவது நானே நிறைவு செஞ்சுக்க வேண்டிய கட்டாயம். தங்கச்சிக்குத் திருமணம் முடிச்சோம். அதுக்கு வாங்கின கடனுக்கு மாசம் 12,682 ரூபாய் கட்ட வேண்டியிருந்துச்சு. ஒவ்வொரு மாதமும் திணறித் திணறி நாள்கள் ஓடுச்சு. நான்காவது ஆண்டு பாதியிலயே ஒரு நிறுவனத்துல முழுநேர ஊழியனா வேலைக்குச் சேர்ந்துட்டேன். நேர்காணல்ல, `எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீங்க'ன்னு கேட்டாங்க. '12,682 ரூபாய்'ன்னு சொன்னேன். அப்போ எனக்குத் தேவையா இருந்தது அதுதான். 15,000 சம்பளம் கொடுத்தாங்க. அருண்குமார், அருண் டைட்டனா மாறினது அந்தத் தருணத்துலதான். வேர்டு பிரஸ்ல நான் செஞ்ச வேலைகளையெல்லாம் போட்டு அருண்குமார்னு போர்ட்போலியோ ஓப்பன் பண்ணினப்போ நிறைய பேர் அந்தப் பேரை யூஸ் பண்ணிட்டதா காட்டுச்சு. ஏன்னே தெரியாம `அருண் டைட்டன்'னு பைல் நேம் போட்டேன். அதுக்கப்புறம் அதுவே பெயரா, அடையாளமா மாறிடுச்சு.

“ரஹ்மான் சார் சொன்ன பாராட்டு வார்த்தைகள் அவ்வளவு பெரிசு!” - அருண் டைட்டன்

நான் வேலை செஞ்ச நிறுவனத்துல நிறைய பரிட்சார்த்த முயற்சிகள் செஞ்சு பார்க்க வாய்ப்புகள் கிடைச்சுச்சு. கலரிங், காம்போசிட், ஸ்டோரி போர்டு, ரோட்டோஸ்கேப்பிங்ன்னு நிறைய வரைகலை நுட்பங்களை அங்கே கத்துக்கிட்டேன். இடையில வந்து, கல்லூரியில தேர்வெழுதி பட்டத்தையும் வாங்கிட்டேன். நிறுவனத்துல என்னோட வேலையைப் பாத்துட்டு போனஸா 25,000 ரூபாய் கொடுத்தாங்க. இதை அம்மாகிட்ட கொடுத்தா ஓரளவுக்கு கடனை அடைச்சிடுவாங்க. ஆனா, எனக்கு ஒரு கேமரா வாங்கணும்னு ஆசை. அம்மாகிட்ட போய், `ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கும்மா... இந்தப் பணத்துல ஒரு கேமரா வாங்கிக்கவா'ன்னு கேட்டேன். கொஞ்சம்கூட தயங்காமா, `வாங்கிக்க'ன்னு சொல்லிட்டாங்க. Canan 1000 D கேமரா வாங்கினேன்.

கேமரா கைக்கு வந்தப்புறம் என் உடல்ல அது ஒரு உறுப்பாயிடுச்சு. எல்லா நேரமும் கழுத்துலயே கிடக்கும். வீட்டுல இருந்து ஆபீஸ் 5 கி.மீ. தூரம். வழக்கமா பைக்லதான் போவேன். கேமரா வந்ததுல இருந்து நடந்துபோக ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல குழாய்ல இருந்து வடியுற தண்ணி, வண்ணத்துப்பூச்சின்னு கிளிஷேவாதான் படங்கள் எடுத்தேன். `சென்னை வீக் எண்ட் கிளிக்ஸ்' அமைப்போட தொடர்பு கிடைச்சபிறகு நான் காட்சிகளைப் பார்க்குற விதமே மாறிடுச்சு. வார விடுமுறை நாள்கள்ல எந்த இலக்குமில்லாம எங்காவது போய் படங்கள் எடுப்போம். கூடிப்பேசுவோம். அந்த உரையாடல்கள்ல ஹென்றி கார்டைர் ப்ரெஸான் (Henri Cartier-Bresson) பேர் அடிக்கடி ஒலிக்கும்.

ஹென்றி மிகப்பெரிய மாஸ்டர். ஒரு காட்சி ஹென்றியோட கேமராக்குள்ள போனா அதே உயிரோட திரும்பிவரும். இன்னைக்கிருக்கிற போட்டோகிராபர்கள் எவரும் ஹென்றியோட பாதிப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. அழகியலாவும் உயிர்ப்பாவும் என் புகைப்படங்களை மாற்றியது அவர்தான்...'' அருண் உற்சாகமாகப் பேசுகிறார்.

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

அருணின் காதல் ஒரு சுவாரஸ்ய எபிசோடு. வேளச்சேரி குருநானக் பள்ளியில் படித்த அருண், ஏழாம் வகுப்பில் பெயிலாகி அதே வகுப்பறையில் தங்கிவிட்டார். ஆறாம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்று அந்த வகுப்பறைக்கு வந்தார் சௌம்யா. நட்பு அன்பாகி வளர வளர, காதலானது. கல்லூரி முடித்து வேலைக்குப் போனபிறகு இருவீட்டாரும் இசைய, திருமணம் முடிந்தது. இருவரின் காதலுக்கு சாட்சியாக சாரல், மேகம் என இரு தேவதைகள்.

``சௌம்யா என் வாழ்க்கையில நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தா. ஐ.டி-யில இருந்தவ, இப்போ சிலை டாட் காமோட ஃபினான்ஸ் விவகாரங்களைப் பாத்துக்கறா. பெரிய பெரிய ரிஸ்க், பெரிய பெரிய இழப்புகள், பெரிய பெரிய வெற்றிகள்னு என் வாழ்க்கை கலைஞ்சு கலைஞ்சுதான் எழுந்திருக்கு. உனக்கு என்ன பிடிக்குதோ அதைச் செய்னு உற்சாகம் தந்தது சௌம்யாதான். போட்டோகிராபியில ஒரு நம்பிக்கை வர ஆனந்த விகடன் முக்கிய காரணம். நான் ப்ளிக்கர்ல போட்ட படங்களைப் பார்த்துட்டு விகடன்ல இருந்து கேட்டாங்க. ஆனந்த விகடன்ல வர்ற `சொல்வனம்' மாதிரி பகுதிகள்ல பயன்படுத்தினாங்க. அந்தப் படங்கள் பெரிசா கவனிக்கப்பட்டுச்சு. அது இன்னும் உற்சாகம் தர, கேமராவைத் தூக்கிக்கிட்டு இந்தியா முழுவதும் சுத்த ஆரம்பிச்சுட்டேன். டாகுமெண்ட்ரி போட்டோகிராபி பக்கம் கவனம் திரும்புச்சு. திருநங்கைகள் பற்றி நான் பண்ணின போட்டோ சீரிஸ் எனக்கு ரொம்பவே திருப்தி தந்துச்சு.

2012-ல கம்போடியாவுல ஆங்கோர் போட்டோ ஒர்க்‌ஷாப் நடந்துச்சு. உலகம் முழுவதும் இருக்கிற மாஸ்டர்ஸ் வந்து கத்துக்கொடுக்கிற ஒர்க்‌ஷாப். 2,000 பேர் விண்ணப்பிச்சிருந்தாங்க. 30 பேர்ல ஒருத்தனா நான் தேர்வானேன். இந்தியாவுல இருந்து நாங்க 7 பேர் போனோம். அந்த ஒர்க்‌ஷாப்பை முடிச்சுட்டு வந்தப்போ. இதுவரைக்கும் நாம சொல்லிக்கிற மாதிரி ஒரு போட்டோகூட எடுக்கலேங்கிற எதார்த்தம் புரிஞ்சுச்சு.

கே.ஜி.எஃப் படக்குழுவினருடன்...
கே.ஜி.எஃப் படக்குழுவினருடன்...

பார்த்த வேலையை விட்டேன். பிழைப்புக்கு திருமணம், ஈவென்ட் போட்டோகிராபி பண்ணிக்கிட்டே எனக்குப் பிடித்த விஷயங்களையும் செஞ்சேன். என் எல்லா முடிவுகளுக்குப் பின்னாடியும் வர்ற சுமைகளை என் குடும்பமும் சேர்ந்து தாங்கினதுதான் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். அம்மாவோ, அப்பாவோ, மனைவியோ `ஏம்பா இதெல்லாம்'னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பெரிய குற்ற உணர்வுக்கு உள்ளாகியிருப்பேன். `நீ விரும்புறதைச் செய்'ன்னு எல்லோரும் என்னை நம்பினாங்க.

அந்தத் தருணத்துலதான், ஆனந்தவிகடன்ல வந்த படங்களைப் பார்த்துட்டு ராஜுமுருகன் `குக்கூ' படத்துக்கு புரொமோஷன் போட்டோகிராபி செஞ்சுதரக் கேட்டார். ஸ்ட்ரீட் போட்டோகிராபி மாடல்லயே அந்த புரொமோஷனை செஞ்சேன். அது சினிமா இண்டஸ்ட்ரியில பெரிசா கவனிக்கப்பட்டுச்சு. வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துச்சு. விஜய் அவார்ட்ஸ் மாதிரி பெரிய ஈவென்ட்களுக்கெல்லாம் அழைக்க ஆரம்பிச்சாங்க.

சென்னை வெள்ளம் வந்தப்போ, ஏ.ஆர்.ரஹ்மான் சார் நிதி திரட்டுறதுக்காக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். ஒரு ஈவென்ட் நிறுவனம் அதுக்குப் போட்டோ எடுக்கிற வேலையை எனக்குத் தந்துச்சு. அந்தப் போட்டோக்களைப் பாார்த்துட்டு என்னைக் கூப்பிட்டார் ரஹ்மான் சார். நான் எடுத்ததிலேயே பெஸ்ட் 10 படங்களை எடுத்திட்டுப் போய் பார்த்தேன். படங்களைப் பார்த்த ரஹ்மான் சார், `நீ போட்டோகிராபியில செய்யறதைத்தான் நான் மியூசிக்ல பண்ண நினைக்கிறேன்'னு சொன்னார். அந்த வார்த்தைகள் எவ்வளவு பெரிசுன்னு புரிஞ்சுச்சு. அதுக்கப்புறம் ரஹ்மான் சாரோட எல்லா நிகழ்ச்சிகளையும் நான்தான் போட்டோ எடுத்தேன். அவரோட பயோகிராபியோட ரேப்பர் போட்டோ எடுக்கிற வாய்ப்பும் அமைஞ்சுது.

“ரஹ்மான் சார் சொன்ன பாராட்டு வார்த்தைகள் அவ்வளவு பெரிசு!” - அருண் டைட்டன்

படிப்படியா பெரிய ஸ்டூடியோ உருவாக்கினேன். ரஹ்மான் சார்தான் திறந்து வச்சார். உலகம் முழுவதும் இருந்து நிறைய ஈவென்ட்ஸ் வர ஆரம்பிச்சுச்சு. மலேசியாவுல ஒரு பிராஞ்ச் தொடங்கினேன். காலையில மாலத்தீவு, மதியம் மலேசியா, ஈவ்னிங் அந்தமான்னு வாழ்க்கை வானத்துல பறக்க ஆரம்பிச்சிருச்சு. வீடு வாங்கினேன். ஏராளமான எக்யூப்மென்ட்ஸ் வாங்கிக்குவிச்சேன். 20 போட்டோகிராபர்கள் வேலை செஞ்சாங்க... எல்லாம் நல்லாப் போய்க்கிட்டிருந்தாலும் நாம வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு'' - இடைநிறுத்தி சிரிக்கிறார் அருண்.

``சந்ரு சார் `அம்பையில ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்றேன்'னு சொன்னார், நிறைய படைப்பாளிகளை அழைச்சு நிகழ்ச்சியை நடத்தினார். நான் வீடியோவா அதை ஆவணப்படுத்தினேன். முடிச்சுட்டுக் கிளம்பும்போது, அவரே செஞ்ச ஒரு சின்ன பெரியார் சிலையை `இது அருணுக்காக'ன்னு எழுதி, கையில் கொடுத்தார். அதைக் கையில வாங்கினவுடனேயே மனசுக்குள்ள பொறி தட்டிடுச்சு. `சார், இது ரொம்ப நல்லாருக்கு. இதை நாம மார்க்கெட் பண்ணினா நல்லாப் போகும்னு தோணுது சார். விற்பனையை நான் பாத்துக்கறேன்... நீங்க செஞ்சு தர்றீங்களா'ன்னு கேட்டேன். `செய்வோம்'னு சொன்னார்.

“ரஹ்மான் சார் சொன்ன பாராட்டு வார்த்தைகள் அவ்வளவு பெரிசு!” - அருண் டைட்டன்

அப்போ நான் போட்டோகிராபியில லட்சங்கள்ல சம்பாதிச்சுக்கிட்டு இருந்தேன். உலகம் முழுவதும் சுத்திக்கிட்டிருந்தேன். ஆனா, சந்ரு மாஸ்டர் கொடுத்த அந்த பெரியார் சிலையைப் பார்த்ததும் `இதுதான் நம்ம களம்'னு தோணுச்சு. அம்பையில இருந்து சென்னை வர்றதுக்குள்ள பிசினஸுக்கான முழு ஸ்கெட்சையும் போட்டு முடிச்சுட்டேன். அடுத்த ஒரு வாரத்துல `சிலை டாட் காம்'னு பேரு வச்சு வெப்சைட் ஆரம்பிச்சு எல்லா வேலைகளையும் தொடங்கிட்டேன். ஆனா கையில ஒரு சிலைகூட இல்லை. சந்ரு சார்கிட்ட கேட்டேன். `செய்வோம்'ன்னார். ஆனா நடக்கவேயில்லை. சந்ரு சாரோட மாணவர்கள் சிலபேர் எனக்கும் நண்பர்கள். அவங்ககிட்ட பேசினேன். `நல்ல ஐடியாடா... செய்வோம்'னாங்க. ஆனா யாரும் நெருங்கி வரலே.

இதுக்கு மேல காத்திருக்க வேண்டாம்னு நானே களத்துல இறங்கிட்டேன். கவின்கலைக் கல்லூரியில பரிச்சயமான விஷயம்தானே... சோசியல் மீடியாவுல பாத்தும் நான் கத்துக்கிட்டதை வச்சும் ஒரு பெரியார் மினியேச்சர் செஞ்சேன். சிலை டாட் காம் சோஷியல் பேஜ்ல போட்டேன். அடுத்த பத்து நிமிஷத்துல ஒருத்தர் அதை வாங்கிட்டார். அந்த நொடியிலேயே இது நிச்சயம் சக்சஸ்புல் மாடல்னு நம்பிக்கை வந்திடுச்சு.

1.சந்துரு மாஸ்டருடன்...  - 2. ஏ.ஆர்.ரஹ்மானுடன்...
1.சந்துரு மாஸ்டருடன்... - 2. ஏ.ஆர்.ரஹ்மானுடன்...

இருந்தாலும் ஒரு சின்னத் தயக்கம். பணம், தொழில்னு எந்தப் பிரச்னையும் இல்லாம வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. புதுசா ஒன்னை ஆரம்பிக்கும்போது இன்னும் கொஞ்சம் ஆய்வு செஞ்சுக்கலாமேன்னு தோணுச்சு. மகாபலிபுரம் போய் பெண்டன்ட் செய்ற ஒருத்தரை சந்திச்சேன். அவர்கிட்ட, `அ', `அம்மா', `பெரியார்', `அம்பேத்கர்', `ஜெய்பீம்'னு போட்டு 100 பெண்டன்ட் செஞ்சு வாங்கினேன். அப்போ அம்பேத்கர் பிறந்தநாள் வந்துச்சு. அம்பேத்கர் மணி மண்டபத்துக்குப் பக்கத்துல பிளாட்பாரத்துல கடை போட்டேன். வாங்கின விலை 30 ரூபாய். கடையைப் போட்டவுடனே ஒரு ரிக்‌ஷாக்காரர் வந்தார். அம்பேத்கர் மணி மண்டபத்துக்குள்ள போய் வணங்கிட்டு நேரா கடைக்கு வந்தார். அம்பேத்கர் பெண்டன்டை `50 ரூபாய்தான் இருக்கு... தாரியா'ன்னு கேட்டார். முதல் போணி... இரண்டு கையாலயும் வாங்கிக்கிட்டேன். மாலைக்குள்ள எல்லா பெண்டன்டும் வித்திடுச்சு. 100 ரூபாய்க்கு மேலே விலை சொன்னாலும் விரும்பி வாங்கினாங்க. நிறைய ஆர்டரும் வந்துச்சு. அதுக்கு மேல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

விஜய்யுடன்... அனிருத்
விஜய்யுடன்... அனிருத்

போட்டோகிராபி நல்லாப் போய்க்கிட்டிருக்கு. அதைப் பாத்துக்க ஆள்கள் இருக்காங்க. சிலை செய்ற கலைஞர்களை வச்சுத் தொழிலை விரிவுபடுத்த ஏற்பாடுகளைத் தொடங்கினப்போ கொரோனா வந்திடுச்சு. மொத்தமா எல்லாத் தொழிலும் முடங்கிப்போச்சு. போட்டோஸ் எடுக்க அட்வான்ஸ் கொடுத்த பெரிய பெரிய கிளையன்ட்லாம் அட்வான்ஸைத் திருப்பிக் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கணும். கையில இருந்த மொத்த இருப்பும் கரைஞ்சு அக்கவுன்ட்ஸ் மைனசுக்கு வந்திடுச்சு. திரும்பவும் பழைய நிலை.

சாப்பாடே பிரச்னையா இருந்த நேரத்துல சிலையை யாரு வாங்குவா? இருந்தாலும் வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம நானும் என் மனைவியோட தம்பியும் வீட்டு பால்கனியில உக்காந்து சிலைகள் செய்ய ஆரம்பிச்சோம். திருவள்ளுவர், பாரதியார் சிலைகள் செஞ்சு பேஜ்ல போட்டோம். அவ்வளவு இக்கட்டான சூழல்லயும் அந்தச் சிலைகளை ரெண்டு பேர் வாங்கினாங்க. மைனஸ்ல இருந்த பேங்க் அக்கவுன்டுக்கு அதன்மூலமா உயிர் வந்துச்சு. அதுக்குப்பிறகு, காலம் தாழ்த்தாம சிலை செய்ற ஆள்களைக் கண்டுபிடிச்சு உடனடியா வேலையைப் பெரிசா தொடங்கிட்டேன்'' - கரடும் முரடுமான தன் வெற்றிப்பாதையில் நம் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் அருண்.

பெரியாரில் தொடங்கி அம்பேத்கர், திருவள்ளுவர், பாரதியார், காரல் மார்க்ஸ் என அவரின் சிலைகள் வளர்ந்தன. அருண், புதிது புதிதாக அறிமுகம் செய்துகொண்டேயிருந்தார். உலகத்தில் `கலெக்டபில்ஸ் மார்க்கெட்' மிகப்பெரியது. சிறுவர்கள் பொம்மை வாங்குவது போல, பெரியவர்கள் தங்களுக்கு விருப்பமான கேரக்டர்களின் சிலைகளை வாங்கிச் சேகரிப்பார்கள். ஹாலிவுட்டில் சூப்பர்மேன், அயர்ன்மேன், ஸ்பைடர்மேன் சிலைகளெல்லாம் பல லட்சங்களுக்கு விலை போகும். இந்தியாவில் `கலெக்டபில்ஸ்' என்று பார்த்தால் விநாயகர் சிலையும் குதிரையும் தான் இருந்தது. அதைக் குறிவைத்து இறங்கினார் அருண். தமிழ் சினிமாவில் இருந்து கலெக்டபிள்ஸ் சிலைகளை ஆரம்பித்தார். முதலில் மாஸ்டர் படத்தில் விஜய் சிலையைச் செய்து, விஜய் மேனேஜரை அணுக அது படத்தின் பிரமோஷனுக்கே பயன்படுத்தப்பட்டது. அடுத்து கே.ஜி.எப் படத்தின் அத்தனை கேரக்டர்களையும் சிற்பமாக்கி புது மார்க்கெட்டைப் பிடித்தார்.

மனைவி மற்றும் குழந்தைகளுடன்...
மனைவி மற்றும் குழந்தைகளுடன்...

``சினிமா, அரசியல், கிரிக்கெட் இது மூணும்தான் நம் வாழ்க்கையை ஆக்கிரமிச்சிருக்கு. இந்த மூணு துறைகள்லயும் இருக்கிற ஜாம்பவான்களின் சிலைகளை உருவாக்குற முயற்சியில இருக்கோம். தவிர, ஆன்மிக சிலைகளுக்குப் பெரிய வரவேற்பு இருக்கு. இப்போ 30 விதமான சிலைகள் செய்றோம். 60 வெரைட்டிகள் இருக்கு. இன்னும் சில வருடங்களுக்குள்ள 300 விதமான சிலைகள் செய்யணும்ங்கிறது திட்டம். தனி நபர்களோட சிலைகள் செய்யவும் நிறைய ஆர்டர் வருது. அதையும் செஞ்சு தர்றோம். நானும் என் கஸினும் பால்கனியில தொடங்கின தொழில்... இப்போ 75 பேர் வேலை செய்றாங்க. ரெண்டு இடத்துல தொழிற்சாலைகள் தொடங்கியிருக்கோம். அடுத்த அஞ்சாண்டுகளுக்கான திட்டங்கள் கையில இருக்கு...'' என்று உற்சாகம் ததும்பச் சொல்கிறார் அருண்.

இன்னும் பெரிசா வளருங்க பாஸ்!