உத்தரப்பிரதேசத்திலுள்ள கெளதம் புத் மாவட்டத்தில், பிப்ரவரி 28-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நொய்டா, கிரேட்டர் நொய்டா பகுதிகளிலும் கௌதம் புத் காவல்துறையினர் சிஆர்பிசி (CRPC)-144-ன்கீழ் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்த மாதம் 28-ம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், `இந்த மாதம் வரவிருக்கும் திருவிழாக்கள், கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளைக் கருத்தில்கொண்டு, பிப்ரவரி 4 முதல் 28 வரை இந்தத் தடையுத்தரவுகள் அமலில் இருக்கும். மீறினால் ஐபிசி (IPC) பிரிவு-188-ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டங்கள் அமைதியைக் குலைக்கும். அதோடு சமுதாயத்துக்கு எதிரான விவகாரங்களை உருவாக்கும். எனவே, இந்த 144 தடையுத்தரவின் கட்டுப்பாடுகளின்படி, நான்கு பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பிப்ரவரி மாதம் இறுதிவரை வழிப்பாட்டு இடங்கள், கிளப்புகளில் ஒலிபெருக்கிகள் மற்றும் டிஜே-க்களுக்கு அனுமதி இல்லை. பொது இடங்களில் மது அருந்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாள்களில் நொய்டா போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும், நகருக்குள் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளுக்கு அருகில் டிரோன் கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுப்பது அல்லது டிரோன் கேமராக்களைப் பறக்கவிடுவது ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் மக்கள் வழிபாடு நடத்த அனுமதி இல்லை. பொது இடங்களில் துப்பாக்கி அல்லது கத்தியுடன் நடமாடவும், அவற்றைக் காட்சிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவை மீறுவது ஐபிசி-யின் 188-வது பிரிவின்கீழ் தண்டனைக்குரிய குற்றம். இந்த உத்தரவு தவறாமல் பின்பற்றப்படுவதை கெளதம் புத் நகரின் கீழுள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் உறுதிசெய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.