நடப்பு
Published:Updated:

கடன்... காப்பீடு... முதலீடு... ஃபைனான்ஷியல் ஃபிட்னஸைச் சொல்லும் 10 அம்சங்கள்! - செல்ஃப் டெஸ்ட்

காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
காப்பீடு

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் கட்டாயம் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருப்பது அவசியம்.

மக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நிதி ஆரோக்கியமும் (Financial Fitness) முக்கியம். இன்றைக்குப் பலரின் பணப் பிரச்னை, கடன் பிரச்னைக்கு மூலகாரணமாக இருப்பது அவர்களின் மோசமான நிதி நிலைமைதான். ஒருவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க அவரின் நிதிநிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

ஒருவரின் நிதி ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா என்பதை எப்படி அறிந்துகொள்வது? முக்கியமான 10 அம்சங்களில் ஒருவரின் நிலை எப்படி இருக்கிறது என்பதிலிருந்து அவரின் நிதி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். அந்த 10 அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்த்தபின், உங்கள் நிதிநிலை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள செல்ஃப் டெஸ்ட்டை செய்து பாருங்கள். (பார்க்க, பெட்டிச் செய்தி). உங்கள் நிதி ஆரோக்கியம் எப்படி என்பதை எடுத்துச் சொல்லும் 10 அம்சங்கள் இனி...

கடன்... காப்பீடு... முதலீடு... ஃபைனான்ஷியல் ஃபிட்னஸைச் சொல்லும் 10 அம்சங்கள்! - செல்ஃப் டெஸ்ட்

1. சம்பளத்தில் சேமிப்பு

ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்தில் குறைந்தது 30% சேமிக்க வேண்டும். உங்களின் முதல் செலவே சேமிப்பாக இருக்கட்டும் என்பது முதலீட்டுப் பொன்மொழி. ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் எனில், அவரின் சேமிப்பு மற்றும் முதலீடு குறைந்தபட்சம் 30 சதவிகிதத்துக்குமேல் இருக்க வேண்டும். சம்பளம் அதிகரிக்கும்போது செலவை அதிகரிப்பதற்குப் பதிலாக, சேமிப்பையும் முதலீட்டையும் அதிகரிப்பது எப்போதும் நல்லது.

2. அவசரகால நிதி

ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் திடீர் செலவுகள் வரலாம். உங்களுக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு, விபத்து ஏற்பட்டால், அவசரச் செலவுக்காகக் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும்.

மேலும், வேலை இழப்பு, கொரோனா போன்ற பேரிடர் கால பாதிப்புகளைச் சமாளிக்க ஒருவரின் மாதச் செலவு மற்றும் கடன் தவணைத் தொகையைப்போல குறைந்தது 3 முதல் 6 மடங்கு தொகையை அவசரகாலத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.

இந்தத் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்திருக்க வேண்டும். இந்த அவசரகால நிதியை ஆன்லைன் மூலம் எளிதில் பணமாக்கும் வசதியோடு இருப்பது நல்லது.

3. ஆயுள் காப்பீடு

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் கட்டாயம் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருப்பது அவசியம். இந்த ஆயுள் காப்பீடு பாலிசியின் கவரேஜ், ஆண்டு வருமானம் / சம்பளத்தைப்போல் குறைந்தது 15 மடங்கு இருக்க வேண்டும்.

வீட்டுக் கடன், கார் கடன், நகைக் கடன், தனிநபர் கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடன் தொகையையும் கவர் செய்யும்படி ஆயுள் காப்பீட்டின் கவரேஜ் இருக்க வேண்டும்.

இந்த அளவுக்கு அதிக கவரேஜுடன் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்றால், டேர்ம் பிளான் என்ற முழுக்க முழுக்க காப்பீடு சார்ந்த பாலிசியை எடுப்பது அவசியம். எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளில் பிரீமியம் அதிகமாக இருக்கும் என்பதால், குறைவான கவரேஜ் தொகையையே நம்மால் பெற முடியும். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

4. மருத்துவக் காப்பீடு

இன்றைய நிலையில், கொரோனா பரவலானது மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எடுக்க வேண்டும். குறைந்தது ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சத்துக்கு கவரேஜ் இருப்பது கட்டாயம்.

கடன்... காப்பீடு... முதலீடு... ஃபைனான்ஷியல் ஃபிட்னஸைச் சொல்லும் 10 அம்சங்கள்! - செல்ஃப் டெஸ்ட்

அலுவலகத்தில் தரும் ஹெல்த் இன்ஷூரன்ன்ஸ் பாலிசியின் கவரேஜ் ரூ.1 லட்சம் - ரூ.2 லட்சம்தான் இருக்கும். அதனால் கூடுதலாக, குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் - ரூ.5 லட்சத்துக்கு டாப்அப் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இந்த டாப்அப் பாலிசியின் பிரீமியம், அடிப்படை பாலிசியின் பிரீமியத்தைவிட குறைவாகவே இருக்கும். அடிப்படை பாலிசியின் கவரேஜை க்ளெய்ம் தொகையைத் தாண்டும்போதுதான் டாப்அப் பாலிசியில் க்ளெய்ம் செய்ய முடியும்.

பெண்களுக்குப் புற்றுநோய் மற்றும் இதய நோய் தொடர்பான பாலிசியைக் கூடுதலாக எடுத்துக்கொள்வது நல்லது.

5. முதலீடு செய்யும் முறை

எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்வதைத் தொடர்ந்து சீராக மேற்கொண்டு வர வேண்டும். ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை என்று எப்போதாவது முதலீடு செய்து வந்தால், அந்தப் பழக்கத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.

தொடர் சேமிப்புத் திட்டம் (ஆர்.டி), சீரான முதலீட்டுத் திட்டம் (எஸ்.ஐ.பி) போன்ற முதலீட்டு முறைகளில் பணத்தைத் தொடர்ந்து முதலீடு செய்துவாருங்கள்.

கடன்... காப்பீடு... முதலீடு... ஃபைனான்ஷியல் ஃபிட்னஸைச் சொல்லும் 10 அம்சங்கள்! - செல்ஃப் டெஸ்ட்

இந்தப் பழக்கம் உங்கள் செலவு களைக் குறைப்பதுடன், நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க உதவும்.

6. பொருள்களை வாங்கும் முறை

உங்களுக்குத் தேவையான பொருள்களை எப்படி வாங்கு கிறீர்கள். ஆசைப்பட்டவுடன் வாங்கி விடுகிறீர்கள் எனில், அந்தப் பழக்கத்தை இனி மாற்றிக்கொள்ளுங்கள். விரும்பியவுடன் வாங்கும் பொருள்களைப் பலரும் சில தினங்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தேவை இருந்தால் மட்டுமே எந்தவொரு பொருளையும் வாங்குங்கள். அதுவும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து வாங்குங்கள். மேலும், அந்தப் பொருள் இல்லாமல் உங்களால் நிலைமையை இப்போது சமாளிக்க முடியும் எனில், அதை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள்.

பெரும்பாலோர் செய்யும் தவறு, ஒரு பொருளை விரும்பிவிட்டால், கையில் பணம் இல்லையென்றாலும் கிரெடிட் கார்டு அல்லது தவணை முறையில் வாங்குவதுதான். இதைத் தவிர்த்து, உடனடியாகக் கிடைக்கும் சந்தோஷத் தைத் தள்ளிவையுங்கள். எந்தப் பொருளை வாங்கினாலும், அதன் தேவையைப் பார்க்க வேண்டும்; உங்கள் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.

7. கடன் அளவு

வீட்டுக் கடன், வாகனக் கடன், தங்க நகைக் கடன், தனிநபர் கடன் என அனைத்துக் கடன்களையும் சேர்ந்த மொத்த மாதத் தவணை, பிடித்தம் போக வீட்டுக்கு எடுத்துவரும் சம்பளத் தொகையில் சுமார் 30 சதவிகிதமாக இருப்பது சிறப்பு.

வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் வீட்டுக்கு எடுத்து வரும் தொகையில் 50% வரை கடன் கொடுத்தாலும் அதை வாங்காமல், கையிலிருந்து அதிக தொகையைப் போட்டு, கடன் தொகையைக் குறைப்பது நல்லது.

இல்லையெனினில், கொரோனா பரவல் போன்ற காலகட்டத்தில் 30%, 50% சம்பளக் குறைப்பில் சிக்கிக்கொள்ளும்போது, கடன் தவணையைக் கட்டுவதில் சிக்கலைச் சந்திக்க நேரும்.

வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் வீட்டுக்கு எடுத்துவரும் தொகையில் 50% வரை கடன் கொடுத்தாலும் அதை வாங்காமல், கடன் தொகையைக் குறைப்பது நல்லது!

8. இலக்குகளுக்காக முதலீடு

நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு குறிக்கோள், இலக்கு என்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா? உதாரணமாக, பிள்ளைகளின் கல்விக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது திட்டங்களில் முதலீட்டை மேற்கொண்டு கொண்டுவருகிறீர்கள் எனில், இலக்கு நிறைவேறுவதற்கு முன் ஏதாவது தேவை ஏற்படும்போது அதிலிருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்ய மாட்டீர்கள்.

கடன்... காப்பீடு... முதலீடு... ஃபைனான்ஷியல் ஃபிட்னஸைச் சொல்லும் 10 அம்சங்கள்! - செல்ஃப் டெஸ்ட்

அப்படி இல்லையெனில், எந்தத் தேவைக்கும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விடுவீர்கள். இதனால், பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

உங்கள் முதலீட்டைப் பிள்ளைகளின் கல்வி, திருமணம், சொந்த வீடு, ஓய்வுக்கால தொகுப்பு நிதி என ஏதாவது ஓர் இலக்குடன் இணைத்துக் கொள்வது நல்லது. சொந்த வீடு வாங்குவதற்காக முன்பணம் சேர்ப்பது, வெளிநாட்டுச் சுற்றுலா செலவுக்கான தொகை என ஏதாவது ஓர் இலக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்.

9. முதலீட்டுக் கலவை

பல்வேறு எதிர்காலத் தேவைகளுக்கு முதலீடு செய்து வருகிறீர்கள். உங்களின் முதலீட்டை எதில் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். பெரும்பாலானவர்கள் தங்கம் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது ரியல் எஸ்டேட் அல்லது பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் ஏதாவது ஒன்றில் முழு முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். இது மகா தவறு. காரணம், எல்லா முதலீடுகளும் எல்லா காலத்திலும் வருமானம் கொடுப்ப தில்லை. சில காலம் ரியல் எஸ்டேட் நல்ல வருமானம் கொடுக்கும். சில காலம் பங்குச் சந்தை நல்ல வருமானம் கொடுக்கும். சில காலம் தங்கம் நல்ல வருமானம் கொடுக்கும்.

கடன்... காப்பீடு... முதலீடு... ஃபைனான்ஷியல் ஃபிட்னஸைச் சொல்லும் 10 அம்சங்கள்! - செல்ஃப் டெஸ்ட்

எனவே, உங்கள் முதலீட்டைத் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் சார்ந்த ஆவணங்கள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் பிரித்து முதலீடு செய்திருந்தால், உங்களின் முதலீட்டுக் கலவையின்மூலம் (போர்ட்ஃபோலியோ) சுமார் 10 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த முதலீட்டை உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், வருமானம் ஆகியவற்றுக்கேற்ப செய்வது நல்லது.

10. வருமான வரி சேமிப்பு

நீங்கள் செய்யும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி என்பது குறைவாக இருந்தால் அல்லது வரி இல்லாமல் இருந்தால் கையில் கிடைக்கும் தொகை அதிகமாக இருக்கும்.

வருமான வரியைச் சேமிக்க பி.எஃப், பி.பி.எஃப், வங்கி ஐந்தாண்டு எஃப்.டி, இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதர முதலீடுகளை வருமான வரி குறைவாக இருக்கும் முதலீட்டுத் திட்டங்களில் மேற்கொள்வது லாபகரமாக இருக்கும்.

இந்த 10 அம்சங்களைப் படித்தவர்களுக்கு எதிர்பக்கத்தில் செல்ஃப் டெஸ்ட் காத்திருக்கிறது. அதைச் செய்து, உங்கள் நிதிநிலையைத் தெரிந்துகொள்ளவும்!

ஃபைனான்ஷியல் ஃபிட்னஸ்: செஃல்ப் டெஸ்ட்

கீழே உள்ள 10 கேள்விகளுக்குச் சரியாகப் பதில் கொடுத்தால், உங்களின் ஃபைனான்ஷியல் ஃபிட்னஸ் இப்போது எப்படி இருக்கிறது என்பது தெரியவரும். ஒரு பென்சிலை எடுத்து, பின்வரும் கேள்விகளுக்கான உங்கள் பதிலை ‘டிக்’ செய்யுங்கள்.

கடன்... காப்பீடு... முதலீடு... ஃபைனான்ஷியல் ஃபிட்னஸைச் சொல்லும் 10 அம்சங்கள்! - செல்ஃப் டெஸ்ட்

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் எனில் 1 மதிப்பெண், இல்லையெனில் 0 மதிப்பெண் தந்து, அதைக் கூட்டுங்கள். நீங்கள் வாங்கிய மொத்த மதிப்பெண்கள் 0-2 என்ற அளவில் இருந்தால், உங்கள் ஃபைனான்ஷியல் ஃபிட்னஸ் மோசமான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்துக்கு, அவசரகால நிதி எதுவும் இல்லை என்றால், உடனே அதைச் சேர்ப்பதற்கான வேலையைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உங்கள் மதிப்பெண்கள் 3-5 எனில், நீங்கள் எச்சரிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உடனே நிதித் திட்டமிடலை மேற்கொண்டு நிதி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவது அவசியம். இல்லாவிட்டால், கடன் வாங்குவது, செலவுகளைச் சமாளிக்க சொத்துகளை விற்பது உட்பட பல கஷ்டங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் வாங்கிய மொத்த மதிப்பெண்கள் 6-8 என்ற அளவில் இருந்தால், உங்கள் நிதிநிலை ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் நிதிநிலையை மேலும் பலப்படுத்திக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளில் இறங்குவது அவசியம்.

நீங்கள் வாங்கிய மொத்த மதிப்பெண்கள் 9-10 என்ற அளவில் இருந்தால், உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் இதே நிலையைத் தொடர்ந்தாலே போதும்.