பிப்ரவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``ஊரடங்கு பற்றிப் பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதில், பள்ளி, கல்லூரிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பில் பலருக்கும் பலவித சந்தேகங்கள் இருக்கின்றன. ஏனெனில், இதற்கு முன்பாக டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கி ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் இது பாதிக்கப்படுமா என்ற கேள்வி சிலருக்கு எழுந்திருக்கிறது.

பொறியியல் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் மாதம்தான் முதல் பருவம் முடிகிறது. அதன் பின்னர்தான் அவர்களுக்கு பருவத்தேர்வு நடைபெறும். அப்போதைய சூழலின்படி தேர்வு முறை செயல்படுத்தப்படும்.
சில நாள்களுக்கு முன்பாக நாங்கள் அறிவித்ததன் அடிப்படையில், அரசு கலைக் கல்லூரி மற்றும் மற்ற கல்லூரிகளில் முதலாமாண்டு பருவத்தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும் எனக் கூறி, முதல்வரின் ஆலோசனைப்படி மாணவர்கள் படிப்பதற்குக் கூடுதலாக விடுமுறை அளித்து ஒத்திவைத்திருந்தோம். இந்த நிலையில், முதல்வரே இந்தத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். அதனால், அந்தத் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகளான 1, 3, 5 ஆகிய பருவத்தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும். கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், ஆன்லைன் தேர்வு நிறுத்தப்படாது. ஆன்லைன் தேர்வு இல்லாத நாள்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். 2, 4, 6 பருவத்தேர்வுகள் ஜூன் மாதமே நடைபெறும் என்பதால், அவை நேரடித் தேர்வுகளாக நடத்தப்பட வாய்ப்புகள் அதிகம். இப்போது கல்லூரிகள் திறப்பதற்கான நோக்கம் என்னவென்றால், செய்முறைத் தேர்வுக்கு மாணவர்கள் வர வேண்டும் என்பதுதான்.

மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் இல்லாத நாள்களில் செய்முறைத் தேர்வுகளை நடத்துவதோடு, நேரடி வகுப்புகளுக்கும் வரவேண்டியது அவசியமாக இருக்கிறது. அந்த அடிப்படையில்தான், நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவித்தார். எனவே, பிப்ரவரி 1-ம் தேதி முதல், குறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு எல்லா இடங்களிலும் நடைபெறும். மற்ற இடங்களிலும் சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்துக் கல்லூரிகளும் செயல்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வுகள் என்பவை ஆன்லைன் முறையில்தான் நடைபெறும். யாரும் அதில் சந்தேகிக்கத் தேவையில்லை. எல்லா பல்கலைக்கழகங்களும் அதற்கான தேர்வு அட்டவணைகளை வெளியிட்டிருக்கின்றன. அதன்படி ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியவர், ``மும்மொழிக் கொள்கை பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றைய தினம் பதிலளித்துள்ளார். தமிழக முதலமைச்சரும் பலமுறை, பல இடங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். 3-வது மொழி எதுவாக இருந்தாலும் அதைப் படிப்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனத் தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். விரும்பும் மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கும் காரணத்தால், இது எந்த மாநிலத்துக்கும் தவறிழைப்பதாக இருக்காது.
அவ்வளவு பேசுகிற ஆளுநருக்கு, வடமாநிலத்தில் ஏதேனும் ஓர் இடத்திலாவது நமது தென்னிந்திய மொழிகளை விருப்பப் பாடமாக வைத்துள்ளார்களா? அதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. ஏதோ அவருடைய நினைவின் பெயரால் பேசியுள்ளார். தமிழகத்தில், இருமொழிக் கொள்கை என்பது மாற்ற முடியாத ஒன்று. அதுதான் நடைமுறையில் இருக்கும். பள்ளிக் கட்டடங்களின் நிலை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார். அதேபோல, கல்லூரிக் கட்டடங்களிலும் இது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரியவருமானால், அவை முறையாகச் சரிசெய்யப்படும்" என்றார்.