
எனக்குக் கல்யாணமான புதுசுல எனக்கு பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்து என்னை முதன்முதலா வெளிநாடு அழைச்சிட்டுப் போனதையும் மறக்க முடியாது
‘‘என்னோட பத்து வயசில இருந்து ஸ்ரீகாந்த் சாரைத் தெரியும். அவர் எங்க குடும்ப நண்பர்னாலும், ஒரு விதத்துல அவர் எனக்கு குரு. என்னை பாலசந்தர்கிட்ட கூட்டிட்டுப் போய், `நவக்கிரகம்'ல நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அவருக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். எனக்குக் கல்யாணமான புதுசுல எனக்கு பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்து என்னை முதன்முதலா வெளிநாடு அழைச்சிட்டுப் போனதையும் மறக்க முடியாது'' - சமீபத்தில் மறைந்த ஸ்ரீகாந்தின் நினைவலைகளை நெகிழ்வுடன் பகிர ஆரம்பிக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
‘‘எங்க அப்பா ஒய்.ஜி.பி-க்கு அவர் 60 நாடகங்கள் நடிச்சுக் கொடுத்தார். எங்க அம்மா மெட்ராஸ் நாட்டிய சங்கம் என்ற அமைப்பு வச்சிருந்தாங்க. அதன்மூலமா நடத்தப்பட்ட ஆங்கில நாடகங்கள்ல ஸ்ரீகாந்த் நடிச்சிருக்கார். இப்படி ஸ்ரீகாந்த் எங்க குடும்ப நண்பரானதால, அவரை பர்சனலாகவே எனக்கு நல்லாத் தெரியும்.
எனக்குக் கல்யாணமான ரெண்டாவது மாசம் அவர் சிங்கப்பூர்ல நடந்த ஒரு ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு என்னையும் அழைச்சிட்டுப் போயிருந்தார். அந்தச் சமயத்துல ‘தங்கப்பதக்கம்' படம் வெளியானதால, ஸ்ரீகாந்த் ரொம்ப பாப்புலரா இருந்தார். கதாநாயகன், குணசித்திரம், வில்லன், காமெடின்னு எந்த ரோலாக இருந்தாலும் பண்ணுவார்.

சிவாஜிக்கு ரொம்ப நெருக்கமா இருந்தார் ஸ்ரீகாந்த். அந்தக்காலப் படங்கள்ல சிவாஜிக்குப் புள்ளன்னா, ஸ்ரீகாந்த்தான். அதுக்கப்புறம், ஜெய்கணேஷ். சிவாஜியோட 150வது படம் ‘சவாலே சமாளி'யோட விழா திருச்சியில் நடந்தது. ஒரு லட்சம் ரசிகர்கள் திரண்ட பிரமாண்ட விழா. அப்ப நான் ரொம்ப சின்னப் பையன்னாலும், நான் எங்க மியூசிக் ட்ரூப்போடு போயிருந்தேன். நாங்க திரும்பி வரும்போது டிரெயின்ல சரியான கூட்டம். இடம் கிடைக்கல. சிவாஜிசார் ‘நீங்க என் கம்பார்ட்மென்ட்டுக்கே வந்திடுங்க'ன்னு கூப்பிட்டார். சிவாஜி சார், ஸ்ரீகாந்த், ஜெயகாந்தன், நான்... இப்படி எல்லாரும் ஒரே கம்பார்ட்மென்ட்ல சிரிச்சுப் பேசி, சந்தோஷமா பயணிச்சது மறக்க முடியாத அனுபவம்.
ஸ்ரீகாந்த் சினிமால பிஸியான போதும்கூட, வி.எஸ்.ராகவனோட சேர்ந்து நாடகங்கள்ல நடிச்சிருக்கார். படப்பிடிப்புத் தளத்துல அவரும் ஜெய்சங்கரும் இருந்தா, அந்த இடமே கலகலன்னு இருக்கும். நல்லா சம்பாதிச்சார். வாழ்க்கையை நிறைவா வாழ்ந்தார். அவர் வீடு, என் மகள் வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கு. போன வாரம் என் பொண்ணு வீட்டுக்குப் போயிருந்த போது, ஸ்ரீகாந்த் ஞாபகமும் வந்துச்சு. நடிகை லட்சுமியும் எங்க நாடக ட்ரூப்பில் இருந்தவங்க. அவங்களும் ஸ்ரீகாந்தோடு பேசிட்டுத்தான் இருக்காங்க என்பதால் அடுத்த வாரம் நானும், லட்சுமியும் சேர்ந்து அவரைப் போய்ப் பார்த்துட்டு வருவோம்னு நினைச்சிருந்தோம். ஆனா, எங்களுக்குக் கொடுத்து வைக்கல...'' குரல் உடைந்து நெகிழ்ந்தார் ஒய்.ஜி.மகேந்திரன்.