ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராக போட்டியின்றி மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் அந்தக் கட்சிக்குள் அதிகாரமிக்கராகவும் பார்க்கப்படுகிறார் இவர். சட்டப்பேரவைத் தேர்தலில், தொடர்ந்து ஆறு முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றிக் கண்டவர். ஆனாலும், இந்தத் தேர்தலில்தான் அவரின் அமைச்சர் கனவு நிறைவேறியது. அதேபோல, தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் என மறுவியிருக்கும் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். காந்தி, மாவட்டச் செயலாளராக தொடர்வதில் எந்த சலசலப்பும் கிடையாது. ஆனால், தற்போது புது முகங்களுக்கு முக்கியப் பதவி வாங்கிக் கொடுத்திருப்பதுடன், மூத்த நிர்வாகிகள் பலரையும் ஓரங்கட்டி வைத்திருப்பதுதான் ராணிப்பேட்டை தி.மு.க-வை ரணகளமாக்கியிருக்கிறது.

சிலரை உதாரணமாக சுட்டிக்காட்டி கொந்தளிக்கிறார்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர்.
‘‘ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வின் வர்த்தக அணிச் செயலாளராக இருந்தவர் ஆற்காட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஏ.வி.சாரதி. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், தன் ஆற்காடு தொகுதியை கூட்டணியிலிருந்த பா.ம.க-வுக்குத் தாரை வார்த்ததால், அ.தி.மு.க தலைமைமீது அவர் அதிருப்தியடைந்தார். சில மாதங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடாமலிருந்தவர் திடீரென தி.மு.க மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான காந்தியுடன் நெருக்கம் காட்டினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்டாலினை நேரில் சந்தித்து தி.மு.க-வில் பயணிக்கத் தொடங்கினார்.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் பலருக்கும் கடன் கொடுத்து உதவினார். ஏ.வி.சாரதி சார்ந்த சமூக வாக்குகளும், அவரின் தனிப்பட்ட செல்வாக்கும் தி.மு.க-வுக்குத் தேவை என்பதால், அமைச்சர் காந்தியும் மிக நெருக்கமாக நட்புப் பாராட்டி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் எம்.பி வேட்பாளராக சாரதி களமிறக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இந்த நிலையில்தான் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துவற்காக சாரதிக்கு மாவட்டப் பொருளாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக, பொருளாளர் பதவியிலிருந்த மிக மூத்த நிர்வாகியான மு.கண்ணையனை, அந்தப் பதவியிலிருந்து எடுத்து தலைமைச் செயற்குழு உறுப்பினராக ஓரங்கட்டியிருக்கிறார் காந்தி.

அதேபோல, வாலாஜாபேட்டை நகரச் செயலாளராக இருந்த புகழேந்தியிடமிருந்தும் அந்தப் பதவியைப் பறித்து ஓரங்கட்டி வைத்திருக்கிறார். வாலாஜாபேட்டை புகழேந்தியின் தந்தை த.க.பாலசுந்தரம் தி.மு.க இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பயணித்தவர். 1962-ல் நடைபெற்ற விலைவாசிப் போராட்டத்தில் பங்கேற்ற பேரறிஞர் அண்ணாவைக் கைதுசெய்து 70 நாள்கள் வேலூர் சிறையில் அடைத்திருந்தனர். அண்ணாவுடன் இருந்தவர்களில் பாலசுந்தரமும் ஒருவர். அவரின் தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக இன்று வரை திராவிட இயக்க தீரர்கள் நினைவுநாளில், ‘முரசொலி’யில் பாலசுந்தரத்தின் படத்தை தி.மு.க தலைமை வெளியிட்டு மரியாதை செய்கிறது. அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த புகழேந்தியின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருப் பக்கம் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நியமனத்திலும் அதிருப்தி நிலவுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து மொத்தம் 4 பேர் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் இருவர் அமைச்சரின் சமூகத்தவர். மற்ற இருவர் இன்னொரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வன்னியர் சமூக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்கிறார்கள்.