
ஷீலா தீட்சித் மறைந்துவிட்டார். அவர் ஆசைப்பட்டபடி டெல்லி மண்ணிலேயே அவரின் உயிர் பிரிந்திருக்கிறது.
டெல்லி ஃபோர்ட்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அவரின் மரணச் செய்தியை அறிவித்தபோது, அசோக் சேத்தே சற்று கலங்கினார். அவர்தான், அந்த மருத்துவமனையின் இயக்குநர். அதைவிட, டெல்லியின் குடிமகன்களில் ஒருவர். அதனால், ஷீலாவின் இழப்பை இன்னும் நெருக்கமாக அவரால் உணர்ந்திருக்க முடியும்.
ஷீலா எப்போதுமே டெல்லியின் மகள். ‘ஷீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?’ என்று ஒரு பதிப்பகத்தினர் ஷீலாவிடம் கேட்டபோது, அவர் சொன்ன வார்த்தை, ‘Citizen Delhi’!

ஷீலாவுடையது, வாழ்த்தப்பட்ட வாழ்வு. பஞ்சாப்பில் பிறந்தார். வாழ்க்கைத் துணையை உத்தரப்பிரதேசத்தில் அடைந்தார். அரசியல் வாழ்வை டெல்லியில் அமைத்துக்கொண்டார். அவர் பெற்றோருக்கு மூன்று மகள்கள். இவர் மூத்தவர். அதிகம் பேசாதவர்தான். ஆனால், படிப்பில் சுட்டி; பணிகளில் கெட்டி.
டெல்லியின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்திருக்கிறார், ஷீலா. 1998 - 2013 வரையிலான அவருடைய ஆட்சிக்காலம் டெல்லிக்கு முக்கியமான காலம்.
டெல்லியை டெல்லியாக ஆக்கியவர் (The one who made delhi a ‘delhi’) என்கிற பெயரை அவர் போகிறபோக்கில் பெற்றுவிடவில்லை. அதற்குப் பின்னால், ஷீலாவின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் அபார உழைப்பும் இருக்கிறது. அதனால்தான், ‘டெல்லியின் ஒவ்வோர் அங்குலத்திலும் ஷீலா வாழ்வார்’ என்று, அவருக் கான அஞ்சலிக் கட்டுரைகள் இன்று தலைப்பிடப்படுகின் றன. கல்வி நிறுவனங்கள், கட்டுமானங்கள், பாலங்கள் என்று டெல்லியை மூன்றாம் குழந்தையாகவே முத்தமிட்டு வளர்த்தார் ஷீலா.
உரையாடும் எல்லோரிட மும், நல்விசையை உள்செலுத்தி அனுப்பும் ஆற்றல் ஷீலாவுக்கு உண்டு. அவரைப் பார்த்துவிட்டு வரும் எவரும் தங்களுக்குள் ‘பாசிட்டி விட்டி’ பரவுவதை அரை நிமிடத்தில் உணர் வார்கள். ``அமைதியாக... ஆனாலும் தீர்க்கமாக இருக்கும் அவருடைய முடிவுகள். எவரையும் அவ்வளவு எளிதில் கடிந்துகொள்ள மாட்டார். எத்தனை கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் ஒரு புன்னகையைக் கொடுத்த னுப்பவும் தவறமாட்டார்” என்பார்கள், ஷீலாவின் ஆட்சியில் பணிபுரிந்த அதிகாரிகள்.
அடிப்படையில், ஷீலா அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. “அரசியல் என்றால், காத தூரத்துக்கு ஓடும் குடும்பம் என்னுடையது” என்று விளையாட்டாகச் சொல்வார். அப்புறம் எப்படி ஷீலா அரசியலுக்கு வந்தார்? அது, சுவாரஸ்யமான கதை. ஷீலாவுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியது, அவரின் மாமனார் உமாஷங்கர் தீட்ஷித். அவர், பழுத்த காங்கிரஸ்காரர். சுதந்திரப் போராட்டக் காலங்களில் சிறைகளைப் பார்த்தவர். அவருக்கு, ஷீலாவை ஆரம்ப காலங்களில் பிடிக்கவில்லை. அவரிடம் நற்பெயர் எடுப்பதற்காகவே அரசியல் கற்க ஆரம்பித்தார் ஷீலா. அப்புறம், அவருக்கு அரசியலே எல்லாமுமாக ஆனது. ஐந்தாண்டுகள் ஐ.நா தூதர், இருமுறை மத்திய அமைச்சர், மூன்று முறை முதலமைச்சர் என அரசியலில் எல்லா உயரங்களையும் எட்டிவிட்டு மறைந்திருக்கிறார்.

ஷீலாவின் கணவர் பெயர் வினோத் தீட்ஷித். கனிவும் கண்டிப்புமான ஆட்சிப்பணி அதிகாரி. இவரை, ஷீலா கண்டடைந்தது அழகான ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். அப்போது, டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்துக் கொண்டிருந்தார் ஷீலா. அங்கே அடாவடி மாணவனாக வலம்வந்து கொண்டிருந்தார் வினோத். ஒருகட்டத்தில், நண்பர்கள் இருவரின் காதலைச் சேர்த்து வைப்பதற்காக இவர்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டி வந்தது. அந்தப் பயணம், இவர்களையும் இணைத்து விட்டது. கிட்டத்தட்ட `குஷி’ திரைப்பட கதைதான். மூத்த பத்திரிகையாளர்கள் ஷீலாவிடம் இதை நினைவு கூரும்போதெல்லாம் ஷீலாவுக்குள் இருக்கும் சிறுமி துள்ளிக்குதித்து வெளியே வருவாள்.
ஷீலாவுக்கு, 2012 - 2013-ம் ஆண்டுகள் மிகக் கடுமை யான காலகட்டம். ஷீலாவின் ஆட்சிக் காலத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் என்று போராட்டங்கள் பெரிதாக வெடித்தன. சமூகச் சேவகர் அன்னா ஹஜாரே, டெல்லியில் நடத்திய போராட்டம், அரவிந்த் கெஜ்ரிவாலின் (தற்போது டெல்லி முதல்வர்) எழுச்சி என ஷீலா மிக அதிக சவால்களை அப்போது எதிர்கொண்டார். அப்போது அவருக்கு 75 வயது. இருந்தும், அந்த ஆண்டு நடை பெற்ற தேர்தலுக்காக டெல்லியின் தெருக்களில் தினமும் பத்து மணி நேரம் பிரசாரம் செய்தார். ஆனால், வெற்றி பெறமுடியவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 81 வயதைத் தொட்டிருந்தாலும், அவரது பிரசாரத்தில் தொய்வில்லை. அவருக்கான முதல் அஞ்சலி அறிக்கை, அவருடைய அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்தே வந்திருப்பதுதான், ஆச்சர்யம்!