தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

‘அம்மா’ன்னு அவ கூப்பிட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்!

பிரபாஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபாஸ்ரீ

நன்றி வாசகர்களே...

``நாங்க பேசுறது இப்போ அவளுக்கு நல்லா கேட்குது. இப்போதான் காது கேட்குதுங்கிறதால, பேசக் கத்துக்கிட்டு வர்றா. என்னை ‘அம்மா’ன்னு கூப்பிடுறா. இதுக்காக நான் வேண்டாத தெய்வம் இல்ல. விகடனுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல” எனச் சொல்லும் போதே ஆனந்தக் கண்ணீர் வழிகிறது செந்தமிழ்செல்விக்கு.

‘அம்மா’ன்னு அவ கூப்பிட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்!

தஞ்சாவூர், சூரக்கோட்டை அருகே உள்ள சைதாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி. இவரின் கணவர் துரை காதுகேளாத, பேசமுடியாத மாற்றுத்திறனாளி. கூலி வேலை பார்த்துவருகிறார்.

‘அம்மா’ன்னு அவ கூப்பிட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்!

செந்தமிழ்செல்வி - துரை தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிரபாஸ்ரீக்கு ஐந்து வயது, இளைய மகள் கிருத்திகாஸ்ரீக்கு மூன்று வயது. தன் கணவரைப்போலவே மூத்த மகள் பிரபாஸ்ரீயும் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி எனத் தெரியவந்தபோது, செந்தமிழ்செல்வி இடிந்துபோனார். உதவி கேட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தன் இரண்டு மகள்களுடன் அவர் நடை யாக நடந்துகொண்டிருந்ததை, ‘நான் பேசுறது அவளுக்கு எப்போ கேட்குமோ..? - பரிதவிக்கும் ஒரு தாய்’ என்ற தலைப் பிலும், ‘ஒரு லட்சம் ரூபாய் இருந்தா என் பொண்ணுக்கு காது கேட்டுரும்! - உருகும் தஞ்சாவூர் செந்தமிழ்செல்வி’ என்ற தலைப்பிலும், vikatan.com தளத்தில் செய்திகள் வெளியிட்டிருந்தோம். இதைத் தொடர்ந்து, வாசன் அறக்கட்டளை மற்றும் விகடன் வாசகர்கள் இணைந்து எடுத்த முயற்சியின் பலன்தான் இந்த மகிழ்ச்சி!

நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல காது கேளாதவர்களுக்கான சிறப்பு மருத்துவமனைக்கு பிரபாஸ்ரீ அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டரை மணி நேர பரிசோதனைகளுக்குப் பின்னர், பிரபாஸ்ரீக்கு வலது காதில் முழுமையாகவும், இடது காதில் ஓரளவுக்கும் செவித்திறன் இருப்பது கண்டறிப்பட்டது. காது கேட்கும் கருவியைத் தயார் செய்வதற்காக, பிரபாஸ்ரீ பிரபல மருத்துவமனையின் மதுரைக் கிளைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பரிசோதனை செய்த பிறகு, அதற்கான கருவியைத் தயார் செய்தனர். கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி, சென்னையில் பிரபாஸ்ரீக்கு காது கேட்கும் கருவியைப் பொருத்தினார் மூத்த மருத்துவர். சிகிச்சைகள் அனைத்தையும் இலவசமாகவும், காது கேட்கும் கருவிக்கான தொகையான மூன்று லட்சம் ரூபாயில், ஒரு லட்சம் ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டு, மருத்துவமனை தரப்பு இந்த உதவியைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

‘அம்மா’ன்னு அவ கூப்பிட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்!

‘`முதல் தடவை ‘பிரபா’னு நான் கூப்பிட் டப்போ அவ திரும்பிப் பார்த்ததையும், முதல் தடவை அவ, ‘அம்மா’ன்னு என்னைக் கூப்பிட்டதையும் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் ‘பிரபாகிட்ட நீங்க எந்த அளவுக்கு தொடர்ந்து பேசிட்டே இருக்கீங்களோ, அந்த அளவுக்கு அவ சீக்கிரம் பேச்சை, மொழியைக் கத்துக்கிட்டு நல்லா பேச ஆரம்பிப்பா’ன்னு டாக்டர் சொன்னாங்க. அதைவிட எனக்கு வேற வேல என்ன இருக்கப்போகுது? இப்போ அவ குருவி, மாடு கத்துறது தொடங்கி எல்லா சத்தங்களையும் ஒவ்வொண்ணா கேட்டுக் கேட்டு ஆச்சர்யப்பட்டுக்கிட்டிருக்கா. அப்போவெல்லாம் அவ கண்ணு மின்னும் என்கிறவர், ‘`பிரபா செல்லம்... அம்மா சொன்னதைச் சொல்லு...’’ என்கிறார்.

‘அம்மா’ன்னு அவ கூப்பிட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்!

‘`விகடனுக்கும், எனக்கு உதவியவங்களுக்கும் நன்றி” - பிரபாவின் குரலில் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, நம்முள் பிரவாகமெடுத்த உணர்வை வார்த்தைகளாக்க மொழி இல்லை!

பிரபாஸ்ரீக்கு உதவிய உள்ளங்களின் பட்டியலை http://bit.ly/vikahelp என்ற தளத்தில் காணலாம்.