அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

‘இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா?’ - கரூரைக் கலங்கடித்த செப்டிக் டேங்க் மரணங்கள்!

கரூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கரூர்

தமிழ்நாட்டில் செப்டிக் டேங்க்குகளில் பாதுகாப்புக் கவசங்கள் இன்றி இறங்கி, விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையாகவே இருக்கிறது

விஷவாயு தாக்கி கட்டடத் தொழிலாளிகள் நான்கு பேர் பலியான சம்பவம், கரூரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கரூர் செல்லாண்டிபாளையம் அருகிலுள்ள சுக்காலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், கடந்த மாதம் தன் வீட்டின் பக்கவாட்டில் புதிதாக செப்டிக் டேங்க் கட்டியிருந்தார். அந்த செப்டிக் டேங்க்கில் பொருந்தப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகைகளை அகற்றும் பணியில் சிவக்குமார், மோகன்ராஜ் ஆகியோர் கடந்த 15-ம் தேதி ஈடுபட்டனர். முக்கால் தொட்டி தண்ணீருடன், ஒரு மாதமாக மூடிய நிலையில் செப்டிக் டேங்க் இருந்ததால், உள்ளே விஷவாயு உருவாகி இருந்திருக்கிறது. அது தெரியாமல் உள்ளே இறங்கிய இருவரும் அடுத்தடுத்து மூர்ச்சையாகி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களைக் காப்பாற்றச் சென்ற ராஜேஷ் என்பவரும் உயிரிழந்தார்.

‘இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா?’ - கரூரைக் கலங்கடித்த செப்டிக் டேங்க் மரணங்கள்!

இந்த மூவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், சிவக்குமாருடன் வேலைக்குச் சென்ற கோபால் என்பவரைக் காணவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். சந்தேகத்தின் பேரில் கடந்த 17-ம் தேதி அதே செப்டிக் டேங்கினுள் பாதுகாப்புக் கருவிகள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தேடினர். அப்போது, செப்டிக் டேங்க் உள்ளே அழுகிய நிலையில் கோபாலின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கணவரை இழந்த துக்கத்திலிருந்த ராஜேஷின் மனைவி துளசிமணியிடம் பேசினோம். “யார் உதவினு கேட்டாலும், உதவுற குணம்கொண்டவர் என் புருஷன். அதனாலதான், யாருன்னே தெரியாதவங்க செப்டிக் டேங்குக்குள்ள மூர்ச்சையாகிக் கிடக்காங்கனு சொன்னதும், உடனே ஓடிப்போய் உள்ளே இறங்கி, அவரும் இறந்துபோயிட்டார். இரண்டு பசங்களைவெச்சுக்கிட்டு, வாழ்க்கையை எப்படி நகர்த்தப் போறேன்னு தெரியலை” என்று கதறினார்.

சிவக்குமார், மோகன்ராஜ், ராஜேஷ், கோபால்
சிவக்குமார், மோகன்ராஜ், ராஜேஷ், கோபால்

விஷவாயு தாக்கி பலியானவர் களுக்கு ஆதரவாகப் பேசிய ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர் பசுவை.பெரு.பாரதி, “தமிழ்நாட்டில் செப்டிக் டேங்க்குகளில் பாதுகாப்புக் கவசங்கள் இன்றி இறங்கி, விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையாகவே இருக்கிறது. இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவேயில்லையா... இறந்த நான்கு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும். சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து கரூர் டி.எஸ்.பி தேவராஜிடம் பேசியபோது, “கட்டட மேஸ்திரி கார்த்திக், வீட்டு உரிமையாளர் குணசேகரன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, மேஸ்திரியைக் கைது செய்திருக்கிறோம். `வீட்டின் உரிமை யாளர் நான் அல்ல, என் மாமியார்தான்’ என்று குணசேகரன் சொல்வதால் அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.