மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 10 - மாடு, மனிதன், கிளி

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

இந்தியர்களில் கணிசமானவர்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். நிலத்தை உழுது பயிரிடுகிறார்கள். அவர்களிடம் பலவிதமான கால்நடைகள் இருக்கின்றன

அலெக்சாண்டரின் இந்தியப் பயணத்தை இன்று நாம் விவாதித்துக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், நியார்கஸ். அலெக்சாண்டர் குறித்து நமக்குக் கிடைத்துள்ள ஒரே சமகாலப் பதிவு இருவருடையதுதான். கைப்பற்றிய ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ராணுவ அதிகாரியை நியமிப்பது அலெக்சாண்டரின் வழக்கம். அந்த அதிகாரிக்கு ‘சத்ரப்’ என்று பெயர். அலெக்சாண்டரின் பிரதிநிதியாக அவர் அந்தப் பகுதியை ஆள்வார். நியார்கஸ் அலெக்சாண்டரின் பிரதிநிதியாக இயங்கியவர். இந்தியப் பயணத்தின்போது, கடற்படையைத் திறன்பட நிர்வகித்திருக்கிறார். இந்தியாவிலிருந்து அரேபிய தீபகற்கம் செல்வதற்கான கடல் வழியைக் கண்டறிந்தவர். அலெக்சாண்டரின் இறுதிக்காலத்தில் அவரோடு இருந்தவர்.

அவருக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவர் ஒனேசிக்ரிடஸ். இவர் தன்னை கமாண்டர் என்று நம்மிடம் அறிமுகம் செய்துகொள்கிறார். ஆனால் அது உண்மையல்ல, அவர் ஒரு படகோட்டி மட்டுமே என்று அடிக்கடி குத்திக் காட்டுகிறார் நியார்கஸ். இந்த அரசியல் நமக்குத் தேவையில்லை. அவர் என்னவாக இருந்தார் என்பதைவிட என்ன எழுதியிருக்கிறார் என்பதே முக்கியம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிய பிறகு, அலெக்சாண்டரின் போர்களையும் வேறு சில சுவையான நிகழ்வுகளையும் விவரித்திருக்கிறார் ஒனேசிக்ரிடஸ். இவர்களுடைய பதிவுகளிலிருந்து வெளிப்படும் இந்தியா எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்தியர்களில் கணிசமானவர்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். நிலத்தை உழுது பயிரிடுகிறார்கள். அவர்களிடம் பலவிதமான கால்நடைகள் இருக்கின்றன. அவை மிக நன்றாகப் பணியாற்றுகின்றன. விவசாயிகளுக்குச் சமமாக விதவிதமான மாடுகள் சேற்றிலும் மேட்டிலும் பணியாற்றுவதைக் கண்டு அலெக்சாண்டரின் குழுவினர் மட்டுமல்ல அலெக்சாண்டருமே கூடத் திகைத்துவிட்டாராம்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 10 - மாடு, மனிதன், கிளி

குறிப்பாக, முதுகில் திமிலுடன் காணப்படும் மாடு (அநேகமாக, நாட்டு மாடு) அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. இந்த வகை மாடுகள் அதிகம் எங்கே கிடைக்கும் என்று விசாரித்து, ஸ்வாட் பள்ளத்தாக்குக்குச் சென்று 2,30,000 மாடுகளைக் கைப்பற்றினாராம். கையோடு அனைத்தையும் பத்திரமாக மாசிடோனியாவுக்கு அனுப்பிவைத்தாராம். இந்தியர்கள்போல் கிரேக்கர்களும் இந்த மாடுகளைப் பழக்கி, எருதுகளுக்குப் பதில் இவற்றை வயலில் உழச் செய்து அதிக அறுவடை ஈட்டவேண்டும் என்பது அவர் விருப்பம். லட்சக்கணக்கில் இல்லாவிட்டாலும், நிச்சயம் கணிசமான மாடுகளை அவர் நிச்சயம் தன்னோடு கொண்டுசென்றிருக்க வேண்டும்.

நியார்கஸைப் பொறுத்தவரை சிந்துசமவெளிப் பகுதியில் விளைச்சல் செழித்திருப்பதற்குக் காரணம் வெள்ள நீர். வயலில் பாத்தி அமைத்து திறமையாக நெல் பயிரிடுகிறார்கள். அரிசி மட்டுமல்ல, ‘போஸ்மோரான்’ எனும் சிறிய தானியத்தையும் இந்தியர்கள் பயிரிடுகிறார்கள் என்கிறார் ஒனேசிக்ரிடஸ். அது என்னவென்று என்னால் சொல்லமுடியவில்லை. கோதுமையைவிட அளவில் சிறியதாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே இதை நான் கண்டிருக்கிறேன் என்கிறார் அவர். இது கம்புப் பயிராக இருக்கலாம்.

விவசாயம் போலவே வணிகமும் சிறப்பாக நடைபெறுகிறது. கொடுக்கல் வாங்கலில் இந்தியர்கள் மிக இயல்பாக ஈடுபடுகிறார்கள். நகரங்களில் தடுப்பரண்கள் அமைத்து சில பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக, தட்சசீலம் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்கிறது ஒரு குறிப்பு.

ஆற்றங்கரையோரம் நாணல் புல் வளர்ந்திருப் பதைக் கண்டேன். எடுத்து உடைத்தால் உள்ளிருந்து தேன் கொட்டுகிறது. முதல்முறையாக இந்தியாவில் இதைக் காண்கிறேன் என்று வியக்கிறார் நியார்கஸ். அநேகமாக இது கரும்பாக இருக்கவேண்டும்.

இந்தியாவில் ஒரு வகை மரம் இருக்கிறது. மிக, மிகப் பெரியது. நீளமான கிளைகளையும் அடர்த்தியான இலைகளையும் கொண்டிருப்பதால் நிழலுக்கு இந்த மரத்தைத்தான் இந்தியர்கள் நாடுகிறார்கள். ஊரே வந்து கூடினாலும் இந்த மரம் இடம் ஒதுக்கிக் கொடுக்கிறது. ஒரே சமயத்தில் பத்தாயிரம் பேர் வரை அமர்ந்து ஓய்வெடுக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இந்த மரம் இருக்கும்வரை வெயிலைக் கண்டு இந்தியர்கள் அஞ்சவேண்டியதேயில்லை என்கிறது ஒரு குறிப்பு. இது ஆலமரமாக இருக்கலாம்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 10 - மாடு, மனிதன், கிளி

இன்னொரு மரத்தைக் கண்டேன். அதன் பழங்களை மட்டுமல்ல, பட்டையையும் உரித்து உரித்துச் சுவைத்துச் சாப்பிடலாம். நானும் சுவைத்தேன். அவ்வளவு இனிப்பு! பேரிச்சம் பழத்தில் கிடைக்கும் அதே சுவை! என்று சப்பு கொட்டுகிறார் நியார்கஸ். இது என்னவென்று தெரியவில்லை.

அடடா, இந்தியா கிரேக்கத்தைக் காட்டிலும் சிறப்பான நிலம் என்று திடீரென்று ஓரிடத்தில் அறிவிக்கிறார் நியார்கஸ். அவருடைய உற்சாகத்துக்குக் காரணம் இந்திய சிகிச்சை முறை. ‘நம்மால் குணப்படுத்த முடியாத பல நோய்களை இந்தியர்கள் ஏதேதோ மூலிகைகள் கொண்டு குணப்படுத்திவிடுகிறார்கள். துவண்டுகிடக்கும் உடலை நம் கண்முன்னால் அவர்கள் புதுப்பித்துக் காட்டும்போது நம்பாமல் எப்படி இருக்கமுடியும்?’ என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தன் வாதத்துக்கு வலுச் சேர்க்க சாட்சியமும் அளிக்கிறார்.

ஒருமுறை அலெக்சாண்டரைப் பாம்பு கடித்துவிடுகிறது. கிரேக்க மருத்துவர்கள் தலைகீழாக நின்று பார்த்தும் எதுவும் செய்யமுடியவில்லை. இந்திய மருத்துவர்களை அழைத்து வாருங்கள் என்று அலெக்சாண்டர் உத்தரவிட, உடடினயாக ஆள்களை அனுப்பி கையோடு இழுத்துவருகிறார்கள். ஆச்சர்யம்! நம் மன்னர் விரைவில் மீண்டுவிட்டார்! பாம்புக்கடிக்கு மட்டுமல்ல, தீர்க்க முடியாத நீண்டகால வலிகளையும் இந்தியர்கள் போக்கிவிடுகிறார்கள் என்கிறார் நியார்கஸ். ஆயுர்வேதம் குறித்து முதல் முதலில் நமக்குக் கிடைக்கும் அயல் நாட்டுக் குறிப்பு இதுவே. மருத்துவம் தவிர்த்து வேறெந்த அறிவியல் துறை குறித்தும் குறிப்புகள் இல்லை.

இந்தியர்கள் அணியும் ஆடை மெலிதாகவும் உடலுக்குப் பாந்தமாகவும் இருக்கிறது. இங்குள்ள மரத்தில் பருத்தி என்னும் வெள்ளைப் பஞ்சு விளைகிறது. சேகரித்து எடுத்து வந்து அதிலிருந்து துணி நெய்கிறார்கள். அவர்களிடமிருந்து பெற்று நாங்களும் அணிந்து பார்த்தோம். நன்றாகவே இருக்கிறது. உண்மையில், கிரேக்கக் கம்பளி ஆடையைக் காட்டிலும் இது மேலானதாகவும் வசதியாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் நம் வீரர்களும்கூட பருத்தி ஆடையையே விரும்பி அணிகிறார்கள் என்று விளம்பரம் செய்கிறது ஒரு பதிவு.

வெள்ளையில் பார்த்திருப்போம் அல்லது கறுப்பில். இந்தியர்களின் தாடி மட்டும் எப்படி விதவிதமான வண்ணங்களில் நீண்டிருக்கிறது? குறுகுறுப்போடு ஆராய்ந்து அதன் ரகசியத்தைக் கண்டறிகிறார் நியார்கஸ். ஏதோ ஒரு மை. அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீலம், பச்சை, ஊதா, சிவப்பு என்று பல வண்ணங்களில் தாடியில் மை பூசிக்கொள்கிறார்கள். காற்றில் ஆடும் வண்ண தாடி, நம் கண்களைப் பறிக்கிறது!

கிராமம், நகரம் இரண்டோடும் சேராமல் சமூகத்தின் விளிம்பில் சில பழங்குடிக் குழுக்கள் வாழ்கின்றன. வனங்களிலும் பாலைவனங்களிலும் கரையோரங்களிலும்கூட இவர்களைக் காணலாம். இவர்கள் பிற இந்தியர்களைவிடப் பின்தங்கியிருக்கிறார்கள். விவசாயம், வணிகம், முடியாட்சி எதையும் இவர்களிடம் காணமுடியவில்லை. வேட்டையாடுகிறார்கள், வனப் பகுதிகளில் உணவுப் பொருள்கள் சேகரிக்கிறார்கள். இதுதான் இவர்கள் வாழ்க்கைமுறை. இந்த நிலையைக் கடந்து நாம் எப்போதோ முன்னேறி வந்துவிட்டாலும், இவர்கள் விடாப்பிடியாக அதே இடத்தில் இருக்கிறார்கள். புராதன மனிதர்கள் என்றே இவர்களை வரையறை செய்யத் தோன்றுகிறது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 10 - மாடு, மனிதன், கிளி

இவர்கள் மட்டுமா? கற்கால மனிதர்களும்கூட இந்தியாவில் இருக்கிறார்கள். இரும்பு என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியப் பழங்குடிகளைக் கடந்து அராபிஸ் என்னும் சமவெளிப் பகுதிக்குச் சென்றால், அங்கே இவர்களைக் காணலாம் என்கிறார் நியார்கஸ். இது இன்றைய பலுசிஸ்தானிலுள்ள பொராளி ஆற்றங்கரைப் பகுதியைக் குறிக்கிறது. ஆற்றிலிருந்து மீன் பிடித்து உண்கிறார்கள். வேட்டையாடுகிறார்கள். ஆயுதம் இல்லாத குறையைத் தங்கள் கூர்மையான நகங்களைக்கொண்டு போக்கிக்கொள்கிறார்கள். இரையை நகத்தால் கீறிப் பிளக்கிறார்கள். கூர்மையான கற்களும் உதவுகின்றன. பிற இந்தியர்களிடமிருந்து இவர்கள் தனித்திருக்கிறார்கள். அவ்வாறு இருப்பதையே விரும்புகிறார்கள். மற்றபடி, எல்லாப் பழங்குடிகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. முன்னேறிய பிரிவினரும் இருக்கிறார்கள். மன்னர்போல் இந்த இனக்குழுத் தலைவர்கள் நிலத்தை ஆள்கிறார்கள். செல்வாக்கோடும் அதிகாரத்தோடும் இருக்கிறார்கள்.

நான் பார்த்தவரை, ஏழு சாதிகள் இந்தியாவில் இருக்கின்றன என்கிறார் நியார்கஸ். முதல் பிரிவில் தத்துவவாதிகள் இடம்பெறுகிறார்கள். அடுத்தது, நிலத்தை உழுது பயிர் நடும் விவசாயிகளின் சாதி. மூன்றாவது கால்நடை மந்தைகள் பேணுபவர்கள். நான்காவது, சிறு வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள். போர் வீரர்கள் ஐந்தாவது சாதியைச் சேர்ந்தவர்கள். மேற்பார்வையாளர்களும் உயர் அதிகாரிகளும் ஆறாவது சாதியின்கீழ் வருவார்கள். இறுதியாக, அரசு நிர்வாகிகள்.

கிரேக்கர்கள் குறிப்பிடும் சாதி என்பது நாம் இன்று காணும் சாதியல்ல. இந்தியச் சமூகங்களில் உள்ள தொழில் சார்ந்த பிரிவுகளையே அவர்கள் குறிப்பிடுகின்றனர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். சமூகப் படிநிலை கொண்ட சாதியமைப்பு குறித்து அவர்களுக்கு எந்த அறிமுகமும் இல்லை. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் சத்திரியர்கள் என்று அழைக்கப் படுவதை அவர்கள் அறிந்திருந்தனரா என்று தெரியவில்லை. ஆனால், பிராமணர் என்றொரு பிரிவு இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடைய பதிவுகளில் பிராமணர் (பிரச்மனேஸ்) என்னும் பெயரைக் காணவும் முடிகிறது. தத்துவம் போதிக்கும் இந்திய ஆசிரியர்களையே அவர்கள் இப்பெயர் கொண்டு அழைத்தனர். இவர்களில் சிலர், மன்னர்களுக்கு ஆலோசனை கூறும் இடத்தில் அமர்ந்திருந்ததையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அலெக்சாண்டர் சில பிராமணர்களைச் சிறைப்பிடித்து சிந்துக் கரையோரம் தூக்கிலிட்டுத் தண்டித்திருக்கிறார். அவர்கள் செய்த குற்றம் என்ன? அலெக்சாண் டருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு மன்னர்கள் சிலரைத் தூண்டிவிட்டார்களாம்.

அதிசய விலங்கு எதுவும் இல்லை என்னும் குறையைக் கிளி போக்கிவிட்டது. கிளி கற்பனையல்ல, நிஜம்தான் என்பதை உணர்ந்த கிரேக்கர்களால் மகிழ்ச்சியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதன் வண்ணத்தைப் பாரேன், மூக்கைப் பாரேன், எப்படி நம் குரலில் பேசுகிறது கேட்டாயா, எப்படிப் பறந்து செல்கிறது பார் என்று ஒவ்வொரு கிளியையும், அதன் ஒவ்வொரு அசைவையும் மாய்ந்து மாய்ந்து ரசித்தனர். காக்கா, குருவிபோல் கிளி சாதாரணப் பறவை கிடையாது. நம் பார்வைக்குப் புலப்படாத ஏதோவொரு மாயம் அதற்குள் அடங்கியிருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்கிறார் நியார்கஸ்.

(விரியும்)