
சாதுக்கள் மற்றவர்களைப் போன்றவர்களல்லர்; அபாரமான புத்திக்கூர்மை கொண்டவர்கள் என்பது அலெக்சாண்டருக்குத் தெரியும்.
ஒருநாள் அலெக்சாண்டர் தன் குழுவினரை அழைத்தார், “இந்தியாவில் கற்றறிந்த அறிவாளிகள் யார்? அவர்களில் சிலரையேனும் நான் சந்தித்து உரையாட வேண்டும். ஏற்பாடு செய்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றார்.
தேடலைத் தொடங்கியபோது ‘ஜிம்னோ சோஃபிஸ்ட்ஸ்’ எனப்படும் சாதுக்களைப் பற்றி கிரேக்கர்கள் முதன்முதலில் கேட்டு அறிந்து கொண்டனர். “இருப்பதிலேயே சிறந்த அறிவாளிகள்; தத்துவம் பயின்றவர்கள்; விவாதங்களில் புலமை பெற்றவர்கள்; எந்த அளவுக்குப் பற்றற்றவர்கள் என்றால், பொன்னும் பொருளும் மட்டுமல்ல... உடுத்தும் ஆடைகூட எனக்குச் சுமைதான் என்று சொல்லி அனைத்தையும் துறந்தவர்கள். எத்தனை பெரிய இடரையும் தாங்கிக்கொள்ளும் திறன் அவர்களுக்கு உண்டு. மக்கள் அவர்களை உயர்வான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வனங்களில் வசிக்கிறார்கள்” என்றனர்.
“அப்படியானால் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று அலெக்சாண்டர் சொன்னபோது, கிரேக்கர்கள் தயக்கத்தோடு சொன்னார்கள். “மன்னிக்கவும், அவர்கள் அனைத்தையும் கடந்தவர்கள் என்பதால், மன்னர் அழைத்தாலும் அவர்கள் வருவதில்லை. யாராக இருந்தாலும் நாம்தான் போய் பார்க்க வேண்டும்.” இதற்குமேல் அவர்களை வற்புறுத்துவதில் பலனில்லை என்பதை உணர்ந்த அலெக்சாண்டர், ஒனேசிக்ரிடஸிடம் பணியை ஒப்படைத்தார். அலெக்சாண்டர் சார்பாக அவர் சென்று சாதுக் களைக் கண்டு அவர்களோடு உரையாடினார். அவர்களுடைய அறிவுக்கூர்மையையும் கண்டு கொண்டார். இது ஒரு பதிவு.
இன்னொரு பதிவில், பத்து சாதுக்களை அலெக்சாண்டர் சிறைபிடித்து அழைத்துவருகிறார். சாதுக்கள் மற்றவர்களைப் போன்றவர்களல்லர்; அபாரமான புத்திக்கூர்மை கொண்டவர்கள் என்பது அலெக்சாண்டருக்குத் தெரியும். அவர்களால் விடையளிக்க முடியாத கேள்விகளே இல்லை என்பதையும் அவர் அறிவார். சரி அதையும்தான் பார்த்துவிடுவோம் என்று எண்ணி, ஒவ்வொருவரிடமும் ஒரு கடினமான கேள்வியை எழுப்ப முடிவுசெய்தார். தவறாக விடையளிப் பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்று எச்சரித்த பிறகு கேட்கத் தொடங்குகிறார்.

கேள்வி: “இறந்தவர்களா... உயிரோடிருப்பவர்களா? எண்ணிக்கையில் யார் அதிகம்?”
பதில்: “இறந்தவர்கள் நம்மோடு இல்லை என்பதால், உயிரோடிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.”
கேள்வி: “கடலா... பூமியா? பெரிய விலங்குகள் எங்கே இருக்கின்றன?”
பதில்: “பூமி. கடலும் பூமியின் ஒரு பகுதிதான்”
கேள்வி: “தந்திரமான விலங்கு எது?”
பதில்: “இதுவரை மனிதன் கண்டுபிடிக்காத ஒரு விலங்கு.”
கேள்வி: “எனக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடுமாறு மக்களை ஏன் தூண்டினீர்?”
பதில்: “மனிதன் ஒன்று உயர்வோடு வாழ வேண்டும் அல்லது உயர்வோடு சாக வேண்டும். அதனால்தான்.”
கேள்வி: “எது மூத்தது, இரவா... பகலா?”
பதில்: “பகல். அதுதான் இரவைக் காட்டிலும் ஒருநாள் மூத்தது.”
(இதைக் கேட்டு அலெக்சாண்டர் ஆச்சர்ய மடைந்தபோது, துறவி சொன்னாராம். கடினமான கேள்விக்குக் கடினமான பதிலே கிடைக்கும்).
கேள்வி: “எத்தகைய மனிதன் அதிகம் நேசிக்கப்படுவான்?”
பதில்: “பலசாலியாகவும் அச்சமூட்டாத வனாகவும் ஒரேசமயத்தில் ஒருவனால் இருக்க முடியுமானால், அவனே அதிகம் நேசிக்கப்படுவான்.”
(அதாவது, உன்னைப்போல் இல்லாத ஒருவன். சாதுவின் இந்தப் பதிலைக் கேட்டு அலெக்சாண்டரும் சாதுவாகவே நடந்து கொண்டாரா என்பது தெரியவில்லை).
கேள்வி: “ஒரு மனிதன் எப்போது கடவுளாகிறான்?”
பதில்: “ஒரு மனிதன் செய்ய முடியாததை அவன் செய்யும்போது.”
கேள்வி: “வாழ்வா... மரணமா? எது கடினமானது?”
பதில்: “வாழ்வு. அதுதான் எல்லாத் துயரங் களையும் தாங்கிக்கொள்கிறது.”
கேள்வி: “ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்வது நல்லது?”
பதில்: “இறப்பதே மேல் எனும் நினைப்பு வரும்வரை வாழ்வது சிறந்தது.”
சாதுக்களின் பதில்களில் நிறைவடைந்த அலெக்சாண்டர், பரிசுகள் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார். அவர் எத்தகைய அறிவுத் தேடலில் ஈடுபட்டிருந்தார், எத்தகைய தத்துவ விசாரணைகள் அவரை ஆக்கிரமித்திருந்தன என்பதைப் புரிந்துகொள்ள அவர் எழுப்பிய கேள்விகள் உதவக்கூடும். முற்றும் துறந்த சாதுக்களின் அறிவுக்கூர்மையை அவர்களுடைய நிதானமான, ஆழமான பதில்கள் உணர்த்துகின்றன.
இன்னொரு வடிவமும் பதிவாகியிருக்கிறது. சாதுக்களைப் பற்றிக் கேள்விப்பட்ட அலெக்சாண்டர், அவர்களைச் சென்று சந்தித்தார். ஒரு மூத்த சாதுவைக் கண்டதும் அலெக்சாண்டர் பணிவோடு கேட்டார். ‘‘அடியேன் உங்களுக்கு ஏதேனும் அளிக்க விரும்புகிறேன். தங்களுக்கு எதைக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்?’’ ஆடையற்ற சாது சிரித்திருக்கிறார். ‘‘எனக்கு எதுவும் தேவைப்படாது. என்னிடம் எல்லாமே இருக்கிறது. நான் முழுநிறைவோடு இருக்கிறேன்’’ இத்தோடு நிறுத்திக்கொண்டாரா என்றால் இல்லை. ‘‘ஆனால், நீயும் உன் கூட்டாளிகளும் கடல் முழுக்க, நிலம் முழுக்க செல்வம் தேடி அலைகிறீர்கள். உங்கள் அலைச்சலுக்கு முடிவே கிடையாது.’’
இப்படியெல்லாம் சொல்லியும் அலெக்சாண் டருக்கு சாதுவின்மீது கோபம் வராததற்குக் காரணம், தத்துவவாதிகள் மீது அவருக்கு இருந்த மதிப்பாம். அதற்கொரு கிளைக்கதை. இந்தியா வருவதற்குப் பல ஆண்டுகள் முன்பு டயோஜினிஸ் எனும் புகழ்பெற்ற தத்துவவாதியைச் சந்திக்கச் சென்றாராம் அலெக்சாண்டர். அப்போது டயோஜினிஸ் கண்களை மூடி சுகமாகச் சூரியக் குளியல் எடுத்துக்கொண்டிருந்தார். ‘‘நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன், உங்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமே’’ என்று பணிவோடு கேட்டபோது, டயோஜினிஸ் சொன்னாராம். ‘‘வெயிலை மறைக்காமல் கொஞ்சம் தள்ளி நில். அது போதும்!’’ தவறுணர்ந்து ஒதுங்கி நின்றாராராம் பேரரசர்.
புளூடாக் எனும் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் சாதுக்கள் பற்றி எழுதும்போது, பிராமணர்கள் என்று அவர்களை அழைக்கிறார். எனில், பிராமணர்களைத்தான் ஜிம்னோ சோஃபிஸ்ட்ஸ் என்று கிரேக்கர்கள் அழைத்தனரா? இல்லை என்கிறார் மற்றொரு தத்துவவாதியான ஸ்ட்ராபோ. அலெக்சாண்டருடன் சென்ற கிரேக்கர்களுக்குப் பிராமணர்களை நன்கு தெரியும். அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, பிராமணர்கள் என்று தெளிவாகவே அவர்கள் எழுதுகிறார்கள். சாதுக்கள் பிராமணர்களாக இருந்திருந்தால், ஏன் புதிதாக இன்னொரு பெயரை அவர்கள் உருவாக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன நேர்ந்தது?
ஆம், கிரேக்கர்கள் கண்ட சாதுக்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருப்பது உண்மை. அதேசமயம் வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. எல்லாச் சாதுக்களும் பிராமணர்கள் அல்லர். பிராமணர் அல்லாத சாதுக்களும் இருக்கிறார்கள் என்று ஓரிடத்தில் நியார்கஸ் குறிப்பிடுவதை நினைவில் கொண்டால் அலெக்சாண்டர் சந்தித்த சாதுக்கள் வேறொரு பிரிவினர் என்றே கருத வேண்டியிருக்கிறது.

எனில் யார்? சில யூகங்கள். ஆடையணியாமல் வாழும் சாதுக்கள் ஆசிவகத்தில்தான் இருக்கிறார்கள். இயற்கை தத்துவத்திலும் அறம் சார்ந்த துறையிலும் புலமை மிக்கவர்கள் என்றொரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. இதுவும் ஆசிவர்களுக்கே பொருத்தமாக இருக்கிறது. இல்லை, வேதகாலப் பிராமணர்களில் ஆடை அணியும் வழக்கமில்லாதவர்கள் இருந்தனர். அலெக்சாண்டர் சந்தித்த சாதுக்கள் பாலும் பழமும் உட்கொண்டதை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் வேதகாலப் பிராமணர்கள் எனும் முடிவுக்கே வர முடியும்.
இரண்டுமல்ல, திகம்பரர்கள் தான் ஆடையைத் துறந்தவர்கள். அகிம்சையைப் போதித்த சாதுக்கள் அவர்களே. அவர்களைத்தான் கிரேக்கர்கள் குறிப்பிடுகிறார்களா? கிடையாது, கிரேக்கர்களைச் சந்தித்தவர்கள் நாக சாதுக்கள். சிவனை வழிபடுபவர்கள். சூலாயுதம் தவிர, வேறெதுவும் தரிக்காதவர்கள் அவர்கள். தங்கள் இறை நம்பிக்கையைக் காக்கும் பொருட்டு, போரிடவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். ஜிம்னோசோஃபிஸ்ட்ஸ் என்று இவர்களைத்தான் கிரேக்கர்கள் அழைத்துள்ளனர். வெவ்வேறான இந்தக் கோரிக்கைகளை ஆராய்ந்த வரலாற்றாசிரியர்கள், அநேகமாக இந்தச் சாதுக்கள் சமணர்களாகவோ பௌத்தர்களாகவோ (சிரமணர்கள்) இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
பத்து சாதுக்களில், கலனோஸ் என்பவரின் பெயர் மட்டும் தெரிய வருகிறது. (இது கல்யாணா என்பதன் திரிபு என்று சொல்பவர்கள் உள்ளனர்!) இவரை வனத்தில் சென்று சந்திக்கும் அலெக்சாண்டர், அவரிடமிருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறார். “என்னதான் தேடித் தேடிச் சேகரித்தாலும், மலையளவு குவித்து வைத்தாலும் செல்வம் ஒருவனுக்கு மகிழ்ச்சியையோ மனநிறைவையோ அளிப்பதில்லை. மெய்யான நிறைவு வேண்டுமானால் அறிவை மட்டும் தேடு. அறிவை மட்டும் சேகரி. அறிவுக்கு மட்டும் மதிப்பளி. அறிவைக் காட்டிலும் தூய்மையான இன்னொன்று இந்த உலகில் இல்லை” என்றாராம் கலனோஸ். “உங்களிடமிருந்து நான் பயில விரும்புகிறேன். என்னுடைய ஆசிரியராக என்னோடு வந்து விடுங்களேன்” என்று அவரிடம் அலெக்சாண்டர் விண்ணப் பித்துக்கொள்ள, கலனோஸ் ஒப்புக்கொண்டு அவரோடு பாரசீகம் சென்றாராம்.
சென்ற பிறகு ஒருநாள், அலெக்சாண்டர் கண்முன்னால் கலனோஸ் ஒரு விசித்திரத்தைச் செய்திருக்கிறார். வயதாகிவிட்டது என்று நினைத்தாரோ, முற்றும் துறந்த ஒருவனுக்கு உயிர் மட்டும் எதற்கு என்று சிந்தித்தாரோ தெரியவில்லை. திடீரென்று தனக்குத் தானே தீயூட்டிக்கொண்டு நின்று நிதானமாக எரிய ஆரம்பித்தாராம். சாதாரண தீயல்ல, வேள்வித் தீ என்றும் சொல்லப்படுகிறது. இவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்றும், உடலெல்லாம் நெருப்பு சுடும்போதும் எப்படி இவரால் அமைதியாக இருக்க முடிகிறது என்றும் அலெக்சாண்டர் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் உறைந்து நின்றுவிட்டாராம்.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் சிலர், சாதுக்கள் சமணர்கள் அல்லர்; சிறு எறும்பையும் கொல்லத் தயங்கும் ஒரு சமணர் ஒருபோதும் இப்படியொன்றைச் செய்யத் துணிய மாட்டார் என்று வாதிடுகிறார்கள். அப்படியே உயிர் துறக்க வேண்டுமென்றாலும், மெல்ல மெல்ல உண்பதை நிறுத்திக்கொள்வது மட்டுமே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே வழி என்கிறார்கள் இவர்கள்.
தீயில் இறங்குவதற்கு முன்பு, தன்னிடம் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பொருள்களையும் படை வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார் கலனோஸ். முற்றும் துறப்பது என்றால் என்னவென்பதைப் போதனைகள் மூலம் மட்டுமன்றி கண்முன் உதாரணமாகவும் இருந்து (இறந்து!) காண்பித்திருக்கிறார் கலனோஸ். நெருப்பு பற்றியெரிந்துகொண்டிருக்கும்போது, கலனோஸ் இறுதியாக ஒருமுறை விழிகளை விரித்து அலெக்சாண்டரை உற்றுப் பார்த்திருக்கிறார். ‘‘விரைவில் உன்னை பாபிலோனியாவில் சந்திக்கிறேன்!’’ இதுதான் அவர் இறுதிச் சொற்கள். இதன் பொருள் என்ன என்பதை உணர்வதற்குள் அலெக்சாண்டர் பாபிலோனியாவில் எதிர்பாராத விதமாக இறந்துபோனார்.
(விரியும்)