மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 12 - அம்பியும் போரஸும்

அம்பியும் போரஸும்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பியும் போரஸும்

கிரேக்கர்கள் அம்பியை ‘ஓம்ஃபிஸ்’ என்று அழைத்தனர். தட்சசீலம் அவர்களுக்கு டக்ஸிலா. பேரும் புகழும் பெற்ற முக்கியமான நகரம் அது.

அலெக்சாண்டரின் பதிவுகளில் இடம்பெறுபவர்களில் இரண்டு இந்திய மன்னர்கள் முக்கியமானவர்கள். முதலாமவர், தட்சசீலத்தின் மன்னர் அம்பி. சிந்து நதியிலிருந்து ஜீலம் ஆறு வரை அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு படர்ந்திருந்தது. அலெக்சாண்டர் வருவதற்கு முன்பே அவரைப் பற்றி அத்தனை செய்திகளும் அம்பியை வந்தடைந்துவிட்டன. மாசிடோனியாவிலிருந்து மலைக்க வைக்கக்கூடிய படைகளோடு அவர் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும், எதிர்த்து நின்ற அத்தனை மன்னர்களும் இப்போது மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள்.

உலகை வெல்ல வாளைச் சுழற்றிக்கொண்டு வருபவரிடம் மோதி என்ன ஆகப்போகிறது? சற்றும் தாமதிக்காமல் தன் மணிமுடியைக் கழற்றி கீழேவைத்தார் அம்பி. 56 யானைகளும் கணக்கற்ற செம்மறிகளும் (அளவில் பெரியவை, ஆரோக்கியமானவை) 3,000 எருதுகளும் (உயர் ரக கலப்பினத்தைச் சேர்ந்தவை) திரட்டிக்கொண்டு, நேராக எல்லைக்குச் சென்று காத்திருக்க ஆரம்பித்தார். அலெக்சாண்டர் படையோடு வந்ததும், ஏதோ ரொம்ப நாள் பிரிந்திருந்த நண்பரை வரவேற்பதுபோல் மாலை மரியாதையோடு வரவேற்றார். முன்பின் அறிமுகமில்லாத நிலத்தில் இவ்வளவு பரிசுப்பொருள்களோடும் அதைவிட மிகுதியான பாசத்தோடும் கைகளை விரித்து நின்ற அம்பியை முதல் பார்வையிலேயே அலெக்சாண்டருக்குப் பிடித்திருக்க வேண்டும்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 12 - அம்பியும் போரஸும்

இந்தாருங்கள், இது இனி உங்களுடையது என்று மணிமகுடத்தை அலெக்சாண்டரின் கரங்களில் புன்னகையோடு அளித்தார் அம்பி. அவ்வளவுதான், நெகிழ்ந்துவிட்டார் அலெக்சாண்டர். அம்பி அளித்த மணிமகுடத்தை மீண்டும் அவருக்கே சூட்டினார். ‘உங்கள் அன்பு என் உள்ளத்தை உருக்கிவிட்டது. உங்கள் பட்டமும் பரிசுகளும் உங்களிடமே இருக்கட்டும்’ என்று சொன்னதோடு நில்லாமல், தங்கமும் வெள்ளியும் பாரசீக ஆடைகளும் அளித்து அம்பிக்குப் பதில் மரியாதை செலுத்தினார் அலெக்சாண்டர்.

போரிட வேண்டிய இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். ‘இனி நீங்கள் என் விருந்தினர்’ என்று அம்பி சொல்லிவிட, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், தட்சசீலத்தில் இருந்தவரைக்கும் அவர் மாளிகையைத் தனது தலைமையகமாகவே நிர்மாணித்துக்கொண்டார் அலெக்சாண்டர். இது நடந்தது பொஆமு 329 இல்.

கிரேக்கர்கள் அம்பியை ‘ஓம்ஃபிஸ்’ என்று அழைத்தனர். தட்சசீலம் அவர்களுக்கு டக்ஸிலா. பேரும் புகழும் பெற்ற முக்கியமான நகரம் அது. தட்சசீலத்தில்தான் முதன்முதலில் மகாபாரதம் ஓதப்பட்டதாம். கிழக்கே காந்தாரம் (இன்றைய காபூல்), மேற்கே மகதப் பேரரசுக்கு உட்பட்ட ஆட்சிப் பகுதி. கிழக்கே கங்கைச் சமவெளி. காந்தாரத்தை அலெக்சாண்டர் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டார். இப்போது அவருக்குத் தேவை பஞ்சாப். அதுவும் கிழக்கு பஞ்சாப் மட்டும். காரணம் மேற்கு பஞ்சாப் அம்பியின் தட்சசீலத்தோடு இணைந்திருந்தது. கிழக்கு பஞ்சாபையும் கைப்பற்றிவிட்டால் அந்தப் பகுதி முழுக்க என்னுடையது என்று சொல்லிக்கொள்ளமுடியும். அதற்கு அம்பியின் உதவி அலெக்சாண்டருக்குத் தேவைப்பட்டது. ‘ஓ... தாராளமாக!’ என்று அம்பியும் சொல்லிவிட்டதால், அவரோடு இணைந்து கிழக்கு பஞ்சாப் மீது போர் தொடுக்க முடிவெடுத்தார் அலெக்சாண்டர்.

ஓர் அந்நியருடன் இணைந்து மற்றொரு இந்திய மன்னருக்கு எதிராகப் போர் தொடுக்க அம்பி ஒப்புக்கொண்டது ஏன்? அலெக்சாண்டருக்கு அஞ்சி இவ்வாறு செய்தாரா? இல்லை. கிழக்கு பஞ்சாப் அம்பியின் பகை நாடு என்பதால், அலெக்சாண்டரின் உதவியோடு தன் பகைவரை வெல்ல அம்பி முடிவுசெய்தார். அம்பியும் அலெக்சாண்டரும் இணைந்து வீழ்த்த விரும்பிய அந்தப் பகைவர் போரஸ். கிரேக்கக் குறிப்புகளில் காணப்படும் இரண்டாவது முக்கிய மன்னர் இவர்.

யார் இந்தப் போரஸ்? புருஷோத்தமன் என்னும் பெயரின் கிரேக்க வடிவம்தான் போரஸ். பர்வதேஸ்வரர் எனும் பெயரும் இவருக்கு உண்டு. இவருடைய பின்னணியைத் தேடத் தொடங்கினால் அது புராணங்களுக்கே இட்டுச் செல்கிறது. பாகவதத்திலும் மகாபாரதத்திலும் புரு மன்னர் இடம்பெறுகிறார். வடக்கில் அஸ்தினாபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்த குரு நாட்டின் மன்னன் புருவின் மகன்தான் புருஷோத்தமன். புரு வம்சத்தின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். பாண்டவர்களும் கௌரவர்களும் பௌரவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். புருஷோத்தனின் தந்தை புருவாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் புராண புரு வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்களில்லை.

ஜீலம் நதியிலிருந்து (இதை ஹைடாஸ்பஸ் என்று கிரேக்கர்கள் அழைத்தனர்) செனாப் நதி வரையிலான பகுதிகளைப் போரஸ் ஆண்டுவந்தார். அம்பிக்கு நேர் எதிரானவராக இருந்தார். ‘யார் அலெக்சாண்டர்? அவர் வந்தால் நான் ஏன் அஞ்சவேண்டும்? எப்படி என் நாட்டை ஆக்கிரமிக்கிறார் என்று நானும் பார்த்துவிடுகிறேன்’ என்று வாளை உயர்த்திப் பிடித்தார் போரஸ். அவர் பலம் எப்படிப்பட்டது? கிரேக்கக் குறிப்புகளில் வழக்கம்போல் ஒரு சிட்டிகை மிகை கலந்தே இருக்கிறது. 30,000 காலாட் படையினர், 4,000 குதிரை வீரர்கள், 300 போர் ரதங்கள், 200 யானைகள் கொண்ட பெரும் படையைப் போரஸ் திரட்டிவந்தாராம்.

இந்த மிகைக்கான காரணத்தை யூகிப்பது கடினமல்ல. போரஸின் வலிமையைப் பெருக்கிக் காட்டினால்தானே, இத்தனை பெரிய படையை எங்கள் அலெக்சாண்டர் முறியடித்திருக்கிறார் பார்த்தாயா என்று பெருமிதம் கொள்ளமுடியும்? படை பலத்தில் வேண்டுமானால் மிகை இருக்கலாம், போரஸின் வீரத்தை நிச்சயம் சந்தேகிக்க முடியாது. வழியெங்கும் வெற்றியைத் தவிர வேறெதையும் சந்தித்திராத ஓர் அந்நிய மன்னரை எதிர்த்து நிற்பது என்பது நிச்சயம் எளிதல்ல. போரஸ் வரலாற்றில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் இதுவே.

ஜீலம் தெற்கு நதிக்கரையில், போரஸ் அலெக்சாண்டருக்குக் காத்திருந்தார். அலெக்சாண்டர் நினைத்ததைவிடவும் போரஸின் நிலத்தை அடைவது கடினமானதாக இருந்தது. முதல் சவால் வனப்பிரதேசத்தைக் கடப்பது. கொட்டும் மழையில் இரவோடு இரவாகப் பெரும் படைகளை வழிநடத்தி வனத்தைக் கடந்தார் அலெக்சாண்டர். அடுத்து ஆழமும் அகலமும் கொண்ட ஜீலத்தைக் கடக்க வேண்டும். இது போதாதென்று வெள்ளப் பெருக்கும் தொடங்கியிருந்தது. பேய்போல் ஆறு கொந்தளித்துக்கொண்டிருந்தது. தன்னுடன் இருந்த திறமைவாய்ந்த பொறியாளர்களைக் கொண்டு விறுவிறுவென்று படகுகள் உருவாக்கினார் அலெக்சாண்டர். ஆற்றங்கரையில் கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை போல் பணியாளர்கள் இயங்க ஆரம்பித்தனர். விரைவில் 15,000 வீரர்களும் 5,000 குதிரைகளும் கடந்து செல்லும் வகையில் படகுகள் பிறந்து வந்தன.

ஜீலம் ஆற்றின் ஒரு பக்கம் அலெக்சாண்டர், மறுபக்கம் போரஸ். இருவரிடமும் உளவாளிகள் இருந்தனர். போரஸ் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார் என்பதை அலெக்சாண்டரும், கிரேக்கப் படைகள் எப்படி நெருப்புபோல் படகுகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைப் போரஸும் நன்கு அறிந்திருந்தனர். அலெக்சாண்டர் சில தந்திரங்களையும் கையாண்டார். ஆற்றைக் கடக்கிறோம், கடக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே வேறொரு வழியாகச் சுற்றிக்கொண்டு வந்து போரஸைப் பின்பக்கத்திலிருந்து தாக்கினால் என்ன? சில ஆள்களைக்கொண்டு பாலம் கட்டுவதுபோல் நடிக்கவைத்து நாடகமாடினால் என்ன? கிரேக்கர்கள் பாலம் கட்டி முடிக்க நேரம் பிடிக்கும் என்று போரஸின் வீரர்கள் இளைப்பாறும் சமயத்தில், படகுகளில் சென்று இறங்கி சரமாரியாகத் தாக்கி அழித்துவிடமுடியும் அல்லவா? தன்னைப்போலவே ஒருவருக்கு வேடம் அணிவித்து அவரைக் கூடாரத்துக்குள் இருக்கச் சொல்லிவிட்டு வேறொரு படையோடு போரஸைச் சென்று இரவோடு இரவாகத் தாக்கினால் என்ன?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 12 - அம்பியும் போரஸும்

போரஸ் எந்தத் தந்திரங்களுக்கும் பலியாகவில்லை. ‘நீ எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் காத்திருக்கிறேன், வா’ என்று பொறுமைகாத்தார். அலெக்சாண்டரும் போரஸும் ஜீலம் நதிக்கரையில் சந்தித்துக்கொண்டனர். முதல் பார்வையிலேயே அலெக்சாண்டருக்குத் திகைப்பு, அதிர்ச்சி. ‘ஆ... மலைபோல் அசைந்து அசைந்து வரும் இந்த விலங்குதான் அரிஸ்டாட்டில் சொன்ன யானையா? காலா அது, தூண்போல் எவ்வளவு உறுதி! முன்னால் தொங்கிக்கொண்டிருப்பது என்ன தும்பிக்கையா? இதன்மீது எப்படி இந்தியர்கள் பயப்படாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்? கீழே தள்ளாதா?’ அலெக்சாண்டரைவிடவும் கிரேக்கக் குதிரைகள் யானையைக் கண்டு அஞ்சித் திமிறின. பலர் தூக்கிவீசப்பட்டனர். யானை தனது எதிரிகளை எப்படித் தும்பிக்கையால் பிடித்துக் கறும்புபோல் பிழிந்து தூர வீசுகிறது என்பதை கிரேக்கர்கள் திகிலோடு எழுதினர். யானையின் கால்களில் சிக்காதவர்கள் தந்தத்தால் குத்திக் கிழிக்கப்பட்டனராம்.

அலெக்சாண்டரும்கூட மூக்கு நிலத்தில் படும்படி கீழே விழுந்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. அதற்குக் காரணம், போரஸின் மகன் அலெக்சாண்டரின் குதிரையைக் கொன்று வீழ்த்தியதுதான். மகன் இப்படி என்றால், தந்தையின் வீரம் அலெக்சாண்டரை மிரளவைத்தது. இதுவரை களத்தில் சந்தித்த எந்த மன்னரைப்போலவும் இல்லை போரஸ். இறுதி நொடி வரை சளைக்காமல் போராடினார். போரஸின் வீரர்கள் வில் வித்தையில் பெற்றிருந்த தேர்ச்சியை கிரேக்கர்கள் பத்தி பத்தியாக எழுதி வியந்தனர். அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் எதிர்கொண்ட வீரஞ்செறிந்த இறுதிப் போர் இதுவே.

உடலெல்லாம் காயங்களோடு தள்ளாடி நடந்துவந்த போரஸ் சிறைபிடிக்கப்பட்டார். ‘உங்களை எப்படி நடத்துவது?’ என்று அலெக்சாண்டர் கேட்டபோது, ‘ஒரு மன்னரைப்போல்’ என்று நடுங்காத குரலில் பதிலளித்திருக்கிறார் போரஸ். அலெக்சாண்டரை இந்தப் பதில் உலுக்கியது. ஆக்கிரமித்த பகுதிகளைப் போரஸிடம் ஒப்படைத்துவிட்டு, அவரையே தன்னுடைய சத்ரப்பாக நியமித்தார் அலெக்சாண்டர்.

இந்தியாவை விட்டு வெளியேறும்போது, இந்திய மன்னர்கள் குறித்து ஒரு சித்திரம் கிரேக்கர்கள் மனதில் உருவாகியிருந்தது. இந்திய மன்னர்கள் அமைதியானவர்கள். அவர்களுக்குப் பேராசைகள் கிடையாது. இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும் என்றுகூட அவர்கள் நினைப்பதில்லை. அநாவசியமாக எந்த வம்பு தும்புக்கும் அவர்கள் போவதில்லை. முற்றும் துறந்தவர்களின் நிலத்தில் வாழ்வதாலோ என்னவோ அவர்களும்கூட ஒரு வகை சாதுக்களாகவே இருக்கிறார்கள். முழு உலகமும் போதாது என்று நாம் துடித்துக்கொண்டிருக்க, அவர்களோ தங்களிடமுள்ள ஒரு துண்டு நிலத்தை உலகமே இதுதான் என்பதுபோல் அடக்கத்தோடு ஆண்டுகொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட இதுதான் எங்களுக்குப் பேரதிசயமாக இருக்கிறது!

(விரியும்)