
ஹெலனா தீய பெண் அல்ல. அவள் ஒரு நல்ல, அழகிய விஷக்கன்னி...
இப்போது இந்தியாவுக்கு இன்னொரு பெயர் கிடைத்திருந்தது. ‘அலெக்சாண்டர் சென்றுவந்த நிலம்’ அல்லது அலெக்சாண்டரையே திகைக்கவைத்த, அவராலும்கூட முழுக்க வெல்ல முடியாத நிலம். இந்தியா மீதான கிரேக்கர்களின் மயக்கத்தை இது மேலும் அதிகரித்தது.
எதிர்பாராத வகையில் தனது 32-வது வயதில் அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து, மாசிடோனியப் பேரரசு தடுமாற ஆரம்பித்தது. அலெக்சாண்டருக்கு வாரிசு இல்லாததால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் நான், நான் என்று பதவிப் போட்டியில் குதித்தனர். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், எதிரிகள், நண்பர்கள், துரோகிகள், சந்தர்ப்பவாதிகள் என்று வேறு பலரும்கூடப் போட்டியில் இருந்தனர். சத்தம் போடாமல் உள்ளே நுழைந்து, போட்டியிட்ட அனைவரையும் ஒவ்வொருவராக அகற்றிவிட்டு, அலெக்சாண்டரின் இடத்தில் தன்னை வெற்றிகரமாகப் பொருத்திக்கொண்டார் செல்யூகஸ் நிகாடர்.
அலெக்சாண்டரால் நியமிக்கப்பட்ட ராணுவ ஜெனரல்களில் ஒருவர் செல்யூகஸ். அலெக்சாண்டர் இருந்தவரை இவரை யாரும் பெரிதாகக் கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை. சிறந்த வீரர் என்பது போக எந்த வகையிலும் தனித்துவமானவர் அல்லர். அவரைப் பற்றிய ஒரு கதை இது. ஒரு நாள் அலெக்சாண்டருக்கு அளிப்பதற்காகக் காளை மாடு ஒன்றைச் சிலர் இழுத்து வந்தார்களாம். திடீரென்று கட்டை அவிழ்த்துக்கொண்டு காளை சீறிப்பாய, அனைவரும் அஞ்சிப் பின்வாங்கியிருக்கிறார்கள். செல்யூகஸ் அச்சமின்றி காளைமாட்டை நெருங்கியதோடு, வெறுங்கையால் அதை அடக்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
`நிகாடர்’ என்னும் கிரேக்கச் சொல்லுக்கு `வெற்றி’ என்று பொருள். செல்யூகஸுக்கு அளிக்கப்பட்ட பொருத்தமான அடைமொழிதான் இது என்பதை உணர்த்தும் வகையில், அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒரு பேரரசு அசாத்திய பலத்தோடு 150 ஆண்டுகளுக்கு நிலைத்து நின்றது. அலெக்சாண்டரின் அரியணையில் அமர்ந்த செல்யூகஸ் புதிய நிலங்களைப் போரிட்டு ஆக்கிரமிப்பதைவிட, ஏற்கெனவே அலெக்சாண்டர் விட்டுச் சென்றிருக்கும் பகுதிகளைச் சிதறவிடாமல் காப்பதே தன்னுடைய முதன்மையான பணி என்பதை உணர்ந்திருந்தார்.

எந்தெந்தப் பகுதிகளெல்லாம் ஒழுங்காக மாசிடோனியாவுக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றன, எவை நழுவிக்கொண்டிருக்கின்றன என்று செல்யூகஸ் கவனித்தபோது, கிழக்கில் இந்தியா ஒரு குட்டிக்காளைபோல் திமிறிக்கொண்டிருந்ததை அவர் கவனித்தார். அலெக்சாண்டர் ஆக்கிரமித்து வைத்திருந்த பகுதிகள் எல்லாவற்றையும் புதிதாக அமைந்திருக்கும் ‘சந்திரகோட்டஸ்’ பேரரசு மீட்டுவிட்டதாம். அவர்கள் யாராக இருந்தால் என்ன? நிகாடர் எனும் பெயர்கொண்ட என்னால் வெல்ல முடியாத அரசு இந்த உலகில் இருக்கிறதா என்ன? அலெக்சாண்டர் இந்தியா வந்தபோது செல்யூகஸும் அவர் படையில் இருந்தார். இருபதாண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இன்னொரு போருக்காக அவர் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார்.
சிந்து நதியைக் கடந்து இந்தியா வந்தடைந்தார். அதன் பிறகு நடந்தது குறித்து மிகவும் மங்கலான ஒரு சித்திரம்தான் கிடைக்கிறது. இரண்டாண்டுகள் செல்யூகஸ் இந்தியாவில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அவர் படைகளும் சந்திரகோட்டஸ் படைகளும் எங்கே சந்தித்துக்கொண்டன... எப்படிப் போரிட்டன... தெரியாது. ஒரு கட்டத்தில் கிரேக்கமும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதன் மூலம் நமக்குத் தெரிவது ஒன்றுதான். செல்யூகஸுக்கு இந்தியாவில் வெற்றி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இறங்கி வந்து இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் ஏன் நேர வேண்டும்?
செல்யூகஸால் பழைய பகுதிகளை மீட்க முடியவில்லை என்பது போக, புதிதாகப் பலவற்றையும் அவர் இந்தியாவிடம் இழந்திருந்தார். காந்தாரம் தொடங்கி இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளை சந்திரகோட்டஸ் பேரரசு கிரேக்கர்களிடமிருந்து வென்றெடுத்திருக்கிறது. பதிலுக்கு, 500 போர் யானைகளை மட்டும் செல்யூகஸ் பெற்றிருக்கிறார். எது ஓங்கிய கை, எது தாழ்ந்த கை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது அல்லவா? யானைகளை ஓட்டிக்கொண்டு செல்யூகஸ் ஊர் திரும்பினார் என்பதோடு நிறுத்திக்கொள்கிறது வரலாறு.
எங்கே வரலாறு தேங்குகிறதோ அங்கே கற்பனை எனும் பறவை நீளச் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பிக்கிறது. ஹெலனாவை இந்தப் பறவைதான் நமக்கு அறிமுகம் செய்கிறது. இந்தியா நாம் நினைத்ததுபோல் இல்லை என்பதை உணர்ந்த செல்யூகஸ் நிகாடர், எப்படியாவது அவர்களோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளத் துடித்தாராம். ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்தான். ஆனால், அது எத்தனை காலம் தாங்கும் என்று சொல்ல முடியாது அல்லவா? எனவே, தன் மகள் ஹெலனாவை இந்திய மன்னருக்கு மணம் முடிக்க முடிவுசெய்தார். செல்யூகஸுக்கும் அவருடைய பாரசீக மனைவிக்கும் பிறந்த அழகிய பெண்தான் ஹெலனா. அப்பா சொன்னதும் மறுபேச்சு பேசாமல் ஹெலனா சந்திரகோட்டஸ் மன்னரை மணந்துகொண்டார். கிரேக்கமும் இந்தியாவும் ரத்த உறவு மூலம் கைகுலுக்கிக்கொண்டன.
இனி வருவது இன்னொரு பறவையின் கதை. இதன்படி, ஒரு நாள் இந்திய மன்னரான சந்திரகோட்டஸ் ஜீலம் ஆற்றங்கரையைக் கடந்து செல்லும்போது ஓர் அழகிய இளம்பெண்ணைக் கண்டார். காதல் பூரித்து வந்திருக்கிறது. விசாரித்தபோது அவள் பெயர் ஹெலனா என்றும் அவள் ஓர் கிரேக்க இளவரசி என்றும் தெரிந்துகொண்டார். கிரேக்கமோ பாரசீகமோ எனக்குத் தெரியாது. ஹெலனாவை மணந்துகொண்டே தீர வேண்டும். அதற்கு என்ன வழி என்று கேட்டபோது அமைச்சர் சொல்லியிருக்கிறார். “மன்னா, ஹெலனாவின் தந்தையான செல்யூகஸ் வடக்கில் பல பகுதிகளை ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்திருக்கிறான். ஹெலனாவை வெல்ல வேண்டுமானால், அவள் தந்தையை முதலில் நீங்கள் வென்றாக வேண்டும்!”
ஹெலனாவுக்காக எதையும் செய்வேன் என்று முழங்கிய சந்திரகோட்டஸ், உடனடியாகத் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு செல்யூகஸ் மீது போர் தொடுத்தார். வடக்கில் கிரேக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் ஒவ்வொன்றையும் இந்தியா வென்றெடுத்தது. இறுதியாக செல்யூகஸைத் தன் அரண்மனைக்கு அழைத்துவந்த சந்திரகோட்டஸ், `உன் மகளை எனக்கு மணம் முடித்துவைக்க இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா?’ என்று கேட்க, வேறு வழியின்றி தந்தை ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில் சந்திரகோட்டஸ், ஹெலனாவுக்குத் தூது விட்டுக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய காதல் கடிதங்களைச் சுமந்துகொண்டு இந்திய புறாக்கள் ஜீலம் நதியைக் கடந்துகொண்டிருந்தன. ஹெலனாவும் ஒரு கட்டத்தில் இந்திய மன்னர்மீது காதல் வயப்படுகிறார். காதலை மீறி அச்சங்கள் அவரை இம்சித்தன. நானோ கிரேக்கப் பெண். இந்திய மன்னரை மணந்துகொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடியுமா... என் காதலன் ஓர் இந்து என்கிறார்கள். கிரேக்கக் கடவுள்களை வழிபடும் என்னால் ஓர் இந்துவோடு இணைந்து வாழ முடியுமா... என் கடவுள்களை அவர் சகித்துக்கொள்வாரா?

40 வயது சந்திரகோட்டஸை (அவருக்கு ஏற்கெனவே மணமாகியிருந்தது) ஹெலனா மணந்துகொண்டபோது, அவர் வயது 15 முதல் 17 வரை இருக்கலாம். ஹெலனா இவ்வளவெல்லாம் அஞ்ச வேண்டியதே இல்லை என்னும் அளவுக்கு அவருடைய இந்தியக் கணவர் அன்பானவராக இருந்தார். ஹெலனா கிட்டத்தட்ட ஓர் இந்தியப் பெண்ணாகவே அதன் பின் மாறிப்போனார். சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். செவ்வியல் இசையிலும் நடனத்திலும் மிளிர்ந்தார். பின்னாளில் வாரிசு சிக்கல் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சந்திரகோட்டஸ் ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். அதன்படி ஹெலனாவோடு, அவருக்குப் பிறக்கும் குழந்தையால் அரியணை ஏற முடியாது. இந்திய மனைவியின் குழந்தைக்கே அந்த வாய்ப்பு அருளப்படும். `எனக்கு உங்கள் காதல் தவிர வேறெதுவும் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார் ஹெலனா. அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.
நடந்தது காதல் திருமணம் என்று சிலரும், இல்லை அது ஓர் அரசியல் ஏற்பாடு என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். இந்திய மன்னரை மணந்துகொள்ளும்படி ஹெலனா அவர் தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டதாகச் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்ததாம். அது ஆண் குழந்தை என்று ஓரிடத்திலும், குழந்தையின் பெயர் ஜஸ்டின் என்று வேறோரிடத்திலும் குறிப்பிடப்படுகிறது. முரண்டு பிடித்த செல்யூகஸிடம் சென்று “அப்பா... மணந்தால் இந்த இந்தியரைத்தான் மணப்பேன்” என்று ஹெலனா ஒற்றைக்காலில் நின்று வாதிட்டு, சாதித்துக்கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. ஹெலனா சூதுகள் நிறைந்த தீய பெண்ணாகச் சில இடங்களில் காட்சியளிக்கிறார். இந்திய மன்னரை ஏமாற்றி, மயக்கி அவர் பேரரசைக் கையில் போட்டுக்கொள்கிறார். இல்லை, ஹெலனா தீய பெண் அல்ல. அவள் ஒரு நல்ல, அழகிய விஷக்கன்னி என்று அவளைக் கடவுளுக்கு நெருக்கமானவளாகக் கொண்டு போகின்றன வேறு சில பதிவுகள்.
ஹெலனா இந்திய மன்னரை நேரில் காண்பதற்கு முன்பே அவர்மீது காதல் வயப்பட்டுவிட்டாராம். அவர் அனுப்பிய கடிதங்களைப் படித்துப் படித்துத் தன்னை முற்றாக இழந்துவிட்டாராம். என் காதலன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் எப்படி வேண்டுமானாலும் காட்சியளிக்கட்டும் என்று காத்திருந்தாராம். தந்தையை வென்ற கையோடு, என்னை மணந்துகொள்வாயா என்று சந்திரகோட்டஸ் வந்து நின்று ஒருநாள் கேட்ட போது, ‘ஆம் நிச்சயம்’ என்று பூரிப்போடு தன் கரங்களை நீட்டியிருக்கிறார் ஹெலனா. இப்படி ஏராளமான ஹெலனா கதைகள் விரிகின்றன.
அலெக்சாண்டர் அல்ல, அவருடன் வந்த குழுவினர்தான் இந்தியாமீது வெளிச்சத்தைப் பாய்ச்சினர் என்று பார்த்தோம். அதேபோல் செல்யூகஸ் நிகாடர் அல்ல, அவரால் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஓர் அரசுத் தூதர்தான் நமக்கு முக்கியமானவராக இருக்கிறார். அவர், மெகஸ்தனிஸ். சந்திரகோட்டஸ் என்னும் பெயரை இவருடைய பதிவுகளில்தான் நாம் முதன்முதலில் காண்கிறோம். இந்த இந்திய மன்னர் யாராக இருக்கும் என்று பலரும் பலவிதமாக யோசித்தார்கள். கிரேக்கர்கள் பொதுவாக ஓர் இந்தியப் பெயரை எப்படியெல்லாம் இழுப்பார்கள், எந்த அளவுக்குச் சிதைப்பார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டுக் கட்டுடைத்தபோது, இறுதியில் கிடைத்த விடை, சந்திரகுப்த மௌரியர்!
ஆவென்று வாய்பிளந்தது இந்தியா. மெகஸ்தனிஸின் பதிவுகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகுதான்.
(விரியும்)