
அச்சமென்றால் என்னவென்றே தெரியாத அந்த மாவீரர் முதன்முறையாக, குதிரைகளையும் மனிதர்களையும் தூக்கிப் போட்டுப் பிடித்து பந்தாடும் யானையைக் கண்டுதான் அஞ்சினார் என்பதை அறிவீர்களா?
மெகஸ்தனிஸ் பற்றி நமக்கு உறுதியாகத் தெரிந்தவற்றைச் சுண்டுவிரலில் எழுதிவிட முடியும். இந்தியாவைக் கண்டுவரச் சொல்லி செலூக்கஸ் நிகாடரால் அனுப்பிவைக்கப்பட்டவர்; கிரேக்கர்; `இண்டிகா’ எனும் நூலை எழுதியவர். அவ்வளவுதான்!
செலூக்கஸ் எப்போது அவரை அனுப்பினார், குறிப்பாக என்ன கண்டுவரச் சொன்னார், ஏன் குறிப்பாக அவரை, இந்தியாவுக்கு எப்படி வந்தார், எப்போது, செலூக்கஸ் நிகாடர் வருவதற்கு முன்பே வந்துவிட்டாரா அல்லது அவர் வந்துபோன பிறகா, மெகஸ்தனிஸ் எழுதியிருக்கும் சில குறிப்புகளைப் பார்க்கும்போது, அலெக்சாண்டருடன் சேர்ந்து வந்தவர்போல் ஒரு தோற்றம் ஏற்படுவது வெறும் மயக்கம்தானா, இந்தியாவில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார், போகட்டும், கிரேக்கத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், அவர் குடும்பம் பற்றி நமக்கு என்ன தெரியும், எப்படி செலூக்கஸ் நிகாடருக்கு நெருக்கமானவராக மாறினார்?
வரலாற்றாசிரியர்களிடம் கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். அல்லது ஒன்றுபோல் தெரியாது என்று சொல்லிவிடுகிறார்கள். மெகஸ்தனிஸ் (பொஆமு 350-290) எழுதிய ‘இண்டிகா’ நமக்குக் கிடைக்கவில்லை. அந்த நூலிலிருந்து மற்றவர்கள் காட்டும் மேற்கோள்களை மட்டுமே தொகுக்க முடிந்திருக்கிறது. (இதுவரை நாம் பார்த்த அத்தனை கிரேக்கர்களுக்கும் இதே கதைதான்). இருந்தாலும் வேறெந்த கிரேக்கரைவிடவும் இந்தியாவை அதிகம் புரிந்துகொண்டவர் மெகஸ்தனிஸ்தான் என்பதை அவருடைய மேற்கோள்களே தெளிவாக உணர்த்திவிடுகின்றன.

மெகஸ்தனிஸின் பதிவுகளைப் பார்க்கும்போது ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. இந்தியா குறித்து அதற்கு முன்பு எழுதப்பட்ட முக்கியப் பதிவுகள் அனைத்தையும் வாசித்து முடித்து, முழுமையாகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட பிறகே அவர் புதிதாக எழுதத் தொடங்கியிருக்கிறார். ஹெரோடோட்டஸ் தொடங்கி அலெக்சாண்டரின் குழுவினர் வரை இந்தியாவை எழுதிய அனைவருக்கும், வடமேற்குப் பகுதியும் பஞ்சாபும்தான் முழு இந்தியா. சிந்துதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மிகப் பெரும் இந்திய நதி. இந்தியாவின் நிலப்பரப்பை விவரிக்கும்போது, அவர்கள் இந்த வரையறைக்குள் முடித்துக் கொண்டுவிடுவார்கள். இந்த எல்லைகளையும் வரையறைகளையும் முதன்முறையாக உடைத்துக்கொண்டு இந்தியாவின் இதயத்துக்குள் புகுந்தவர் மெகஸ்தனிஸ்.
எல்லோரையும்போல் மெகஸ்தனிஸும் இந்தியாவின் புவியியலை விவரிப்பதில்தான் தொடங்குகிறார். எல்லோரையும்போல் அவரும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியைத்தான் முதலில் எடுத்துக்கொள்கிறார். ஆனால் அப்படிச் செய்யும்போது மற்றவர்கள் எழுதியதையே மீண்டும் எழுதிக்கொண்டிருக்காமல், அவர்கள் தவறவிட்ட அல்லது பிழையாகப் புரிந்துகொண்ட இடங்களை மட்டும் ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டுகிறார். ஏதோ ஒன்று போதுமான அளவுக்கு விவரிக்கப்படவில்லை என்று தோன்றினால் அங்கே மட்டும் கூடுதலாகக் குறிப்புகள் கொடுக்கிறார். எதையெல்லாம் மற்றவர்கள் தொடவே இல்லையோ அதையெல்லாம் புதிதாக எழுதுகிறார். நீங்கள் ஏற்கெனவே படித்ததை மீண்டும் சொல்லி உங்களைப் படுத்த மாட்டேன் என்று வாசகர்களுக்கு மெகஸ்தனிஸ் உறுதிமொழி கொடுப்பதுபோல் இருக்கிறது.
‘நான்கு பக்கங்களும் நதிகளும், மலைகளும், ஆறுகளும் சூழ்ந்த அழகிய இடம் இந்தியா என்கிறார் மெகஸ்தனிஸ். சிந்து நதி உங்களுக்கெல்லாம் தெரியும். அது எகிப்தின் நைல் நதியைக்காட்டிலும் நீளமானது என்பதை அறிவீர்களா? இந்திய நிலத்தில் விளையாத தாவரம் எதுவுமில்லை. எங்கும் பசுமை, எதிலும் பசுமை. நீண்டு வளர்ந்திருக்கும் மலைகள்கூடப் பூத்துக் குலுங்குகின்றன. எல்லா வகையான கனிகளும் மலைகளில் விளைகின்றன. ஓர் அழகிய மலையின் அடிவாரத்தில் சலசலவென்று நதி பாய்ந்தோடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்! உன்னைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று நதியும் மலையும் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன’ என்று சிலிர்க்கிறார் மெகஸ்தனிஸ்.
நைல் நதிக்குப் பிறகு உலகிலேயே பெரிய நதி, சிந்து. சிந்து நதிக்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்கு நீளமானது கங்கை. சிந்துவை ஒட்டி ஒரு நிலப்பரப்பு இருப்பதுபோல், கங்கையை ஒட்டி கங்கைச் சமவெளிப் பகுதி நீண்டிருக்கிறது. நதிக்கு அருகில் மக்கள் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொள்கிறார்கள். நீர், விளைச்சல் எதற்கும் குறைவில்லாத வாழ்வு. பெரும்பாலான நிலப்பகுதிகள் உயிர்ப்போடும் விளைச்சலுக்கு ஏற்றாற்போலவும் இருக்கின்றன. ஆண்டுக்கு இரு முறை நல்ல சாகுபடி கிடைக்கிறது. கோதுமை கிடைக்காத சமயங்களில் அரிசி கிடைக்கிறது. முதன்முறை மழை பொய்த்தால், இரண்டாவது முறை அடித்துப் பின்னுகிறது.
பருப்புகளும், பல வகை தானியங்களும் எல்லா இடங்களிலும் வளர்ந்து குலுங்குகின்றன. எல்லாவிதமான பூச்சிகளும், பறவைகளும், விலங்குகளும் எல்லா வண்ணங்களிலும், எல்லா வடிவங்களிலும் செழிப்பாக வாழ்கின்றன. புழு முதல் மனிதன் வரை எல்லா உயிர்களுக்கும் இந்திய பூமி உணவுகளை வாரி வழங்குகிறது. என்னென்ன உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன என்று பட்டியலிட ஆரம்பித்தால் இடம் இருக்காது. பசி என்றோ பஞ்சம் என்றோ இந்தியாவில் யாரும் சொல்வதில்லை. `எனக்கு அது கிடைக்கவில்லை, இது கிடைக்கவில்லை’ என்று யாரும் யாரிடமும் குறைபட்டுக்கொண்டு நான் பார்த்ததில்லை என்கிறார் மெகஸ்தனிஸ்.
இயற்கையின் கதகதப்பில்தான் இந்தியர்கள் வாழ்கிறார்கள், வளர்கிறார்கள். இயற்கைதான் அவர்களுக்கு உணவூட்டுகிறது. இயற்கைதான் அரணாக இருக்கிறது. மலைகளும் நதிகளும் ஆறு களும் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவைக் காவல் காப்பதைக் காண்கிறேன். ஆக்கிரமிப்பதை விடுங்கள், பிற நாடுகள் நெருங்கி வருவதற்குக்கூடப் பெரிதும் அஞ்சுவதற்குக் காரணம் இந்தியாவின் தனித்துவமான இயற்கை அரண்.
அப்படியானால் பாரசீகர்கள் எப்படி வந்தார்கள், அலெக்சாண்டர் எப்படி வந்தார் என்று நீங்கள் கேட்கலாம். ஆம், வந்தார்கள். அவர்கள் இந்தியாவைக் கைப்பற்றவில்லையா என்றால் ஆம், கைப்பற்றினார்கள். ஆனால் கையளவு நீரை ஒரு சீசாவில் பிடித்து வைத்துக்கொண்டு இதுதான் இந்தியா. இனி இது என்னுடையது என்றல்லவா அவர்கள் முழங்கினார்கள்? அதையும்கூடச் சுலபமாகவா அவர்களால் செய்ய முடிந்தது என்றா நினைக் கிறீர்கள்? அந்த ஒரு சீசாவாவது அவர்களிடம் தங்கியிருந்ததா என்றால் அதுவும் இல்லை. ஜீலம் ஆற்றைக் கடப்பதற்கு அலெக்சாண்டர் பட்ட துயரங்கள் கொஞ்சமா நஞ்சமா?
பாதுகாப்பு பற்றிப் பேசும்போது யானையைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? லிபியாவிலும் யானை இருப்பதாகச் சொல்கிறார்கள். நல்ல, பெரிய யானை என்கிறார்கள். இந்திய யானையை ஒரு முறை பார்த்த எவரும் உலகில் இதைவிட வலிமையான, இதைவிட பிரமாண்டமான இன்னோர் உயிரினம் வேறெங்கும் இருக்க முடியும் என்று தவறியும் சொல்ல மாட்டார்கள். இதுவரை மனிதன் போரில் ஈடுபடுத்திய விலங்குகளிலேயே சிறந்தது இதுதான். அந்த வகையில் இந்திய மன்னர்கள் கொடுத்து வைத்தவர்கள். யானைப் படை இருந்துவிட்டால் போதும்; அந்நியராவது எதிரியாவது? ஒருவரும் எல்லை தாண்டி உள்ளே நுழைய முடியாது.
யார், யாரையெல்லாமோ அநாயாசமாக முறியடித்த அலெக்சாண்டரால் ஏன் இந்தியாவை முழுமையாகக் கையகப்படுத்த முடியவில்லை... பல இந்திய மன்னர்களை வெல்ல முயன்ற அவரால் ஏன் தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிச் செல்ல முடியவில்லை... நதிகளையும், மலைகளையும், ஆறுகளையும் வென்ற அவரை இறுதியாக எது தடுத்து நிறுத்தியது என்று நினைக்கிறீர்கள்? யானைதான். போரஸை வென்ற கையோடு அவர் குதிரையைத் திருப்பிக் கொண்டதற்குக் காரணம், மகதப் பேரரசரிடம் நான்காயிரம் யானைகள் இருந்த செய்தி அவரை வந்தடைந்ததுதான்.
ஒரு யானையால் எவ்வளவு பெரிய சேதாரத்தை ஏற்படுத்த முடியும் என்பதைத் தனது சொந்தக் கண்களால் கண்டவர் அலெக்சாண்டர். அதுவரை அச்சமென்றால் என்னவென்றே தெரியாத அந்த மாவீரர் முதன்முறையாக, குதிரைகளையும் மனிதர்களையும் தூக்கிப் போட்டுப் பிடித்து பந்தாடும் யானையைக் கண்டுதான் அஞ்சினார் என்பதை அறிவீர்களா? நான்காயிரம் யானைகள் ஒரே நேரத்தில் உங்களை நோக்கி அசைந்து, அசைந்து வரும் பயங்கரத்தை ஒரு விநாடி கற்பனை செய்து பாருங்கள். அதன் பிறகு இந்தியாவை ஆக்கிரமிக்கும் கனவு உங்களுக்கு ஒரு முறைகூடத் தோன்றாது.
நிலத்துக்கு மேலே மட்டுமல்ல, அடியிலும் வளம் கொட்டிக்கிடக்கிறது. தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு இன்னும் என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். அலங்கார நகை வேண்டுமானாலும் சரி, ஆளைக் கொல்லும் ஆயுதம் வேண்டுமானாலும் சரி. எடுத்து, உருக்கி, வளைத்து மாயம்போல் கச்சிதமாகச் செய்து முடித்து இந்தா என்று நீட்டுகிறார்கள்.

மெகஸ்தனிஸைப் பொறுத்தவரை இந்தியாவின் புறமும் அகமும் ஒன்றுதான். புறம் எழிலோடு இருப்பதால் அதன் அகமும் எழிலோடு இருக்கிறது. எது இந்தியாவை அழகாக்குகிறதோ அதுவே அதைப் பாதுகாக்கவும் செய்கிறது. அதாவது, இயற்கையின் அணைப்பில் இருப்பதால், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. பாதுகாப்பான நிலமாக இருப்பதால், அது தன் எழிலைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. சுத்தமான காற்றும், சுவையான நீரும் மிகுந்திருக்கும் ஓரிடத்தில் வாழும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்...அவர்களுக்குக் கைவராத கலைகள் ஏதேனும் இருக்க முடியுமா? நிலம் எப்படியோ அப்படித்தானே மனிதர்களும் இருப்பார்கள்? ஆக, இந்தியர்கள் எல்லாவற்றிலும் ஒருபடி மேலே இருப்பதற்குக் காரணம், அவர்களுடைய சூழல்தான் என்று வாதிடுகிறார் மெகஸ்தனிஸ். அவர்களிடம் ஒருவிதப் பெருமிதம் நிறைந்தி ருப்பதைக் காண முடிகிறது. தன்னிறைவோடு அவர்கள் வலம்வருகிறார்கள். இந்தத் தன்னிறைவே அவர்களுக்குத் துணிவை வழங்குகிறது.
அந்தத் துணிவை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது என்கிறார் மெகஸ்தனிஸ். உலகெங்கும் போர்கள் நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்தியர்கள் போரின் பெயரால் நிலத்தை அழிப்பதில்லை. இன்னொரு நிலத்தின் வளத்தைச் சுரண்டுவதிலோ அழித்தொழிப்பதிலோ அவர்களுக்கு ஆர்வம் இல்லை. பக்கத்தில் மன்னர்களுக்கு இடையில் போர் நடைபெறும் தருணங்களில்கூட மக்களால் அச்சமின்றி நிலத்தில் பணியாற்ற முடிகிறது. அச்சமின்றி கால்நடைகளைப் பராமரிக்க முடிகிறது. அச்சமின்றி தங்கள் அன்றாடப் பணிகள் அனைத்தையும் செய்துகொள்ள முடிகிறது. போர் அவர்கள் வாழ்வில் குறுக்கிடுவதில்லை. அவ்வாறு குறுக்கிடுவதை அவர்கள் அனுமதிப்பதும் இல்லை. அதனால்தான் இந்தியா இந்தியாவாக இருக்கிறது.
(விரியும்)