
இந்தியாவுக்கு வருகை தந்த மற்றொரு கடவுள் என்று மெகஸ்தனிஸ் ஹெராக்ளஸைக் குறிப்பிடுகிறார். ரோமானியர்களுக்கு இவர் ஹெர்குலிஸ்.
இந்தியா பரந்து விரிந்த நாடு என்பதும், அதில் பல்வேறு இனக்குழுக்கள் வசிக்கிறார்கள் என்பதும் உண்மை. அப்படியானால் இங்கே பல்வேறு அந்நிய நிலங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டிருப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. இந்தியாவில் மொத்தம் 118 விதமான குழுக்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவில் நான் பார்த்தவரை ஒரேயோர் அந்நியர்கூட இல்லை. இங்கே வசிப்பவர்கள் எல்லோரும் இங்கேயே பிறந்து, வளர்ந்தவர்கள். இந்தியாவில் அந்நியக் குடியேற்றங்கள் இல்லை. அதேபோல், அந்நிய நிலங்களில் குடியேறிய இந்தியர்களையும் நீங்கள் காண முடியாது. இந்தியா அடிப்படையில் இந்தியர்களின் நிலம் மட்டுமே என்கிறார் மெகஸ்தனிஸ்.
இந்தியாவுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது என்கிறார் மெகஸ்தனிஸ். சுருக்கமாக அதை அவர் விவரிக்கிறார். முன்பொரு காலத்தில் இந்தியர்கள் பழங்குடிகளாக இருந்தனர். விலங்குகளை வேட்டை யாடி அப்படியே பச்சையாகக் கடித்துத் தின்றனர். இயற்கையாக விளைந்த கனிகளையும் காய்களையும் உண்டனர். நாடோடிகள்போல் திரிந்தனர். விலங்குத் தோலை ஆடையாக எடுத்து அணிந்துகொண்டனர். இந்நிலையில் ஒரு மாயம் நடந்தது. இந்தியா மாறத் தொடங்கியது. மக்கள் நிலையாக ஓரிடத்தில் தங்கி ஒரு சமூகமாக திரள ஆரம்பித்தனர். கலைகளும் இன்ன பிற துறைகளும் வளர்ச்சியடைந்தன. கடவுள்களை வழிபடத் தொடங்கினர். மெல்ல மெல்ல இன்றுள்ள நிலைக்கு வந்து சேர்ந்தனர்.
சரி, இந்தியாவைத் தலைகீழாக மாற்றும் வகையில் அப்படியென்ன மாயம் நடந்தது? இந்த இடத்தில்தான் ஒருவரும் எதிர்பாராத வகையில் கிரேக்கத்தைக் கொண்டுவந்து நுழைக்கிறார் மெகஸ்தனிஸ். கிரேக்கப் பழங்கதைகளில் இடம்பெறும் ஒரு கடவுள் டயோனிசஸ். திராட்சைப் பழங்களைப் பிழிந்து மதுச்சாறு தயாரிப்பதில் வல்லவர். மதுவால் மட்டுமல்ல, தனது இசையாலும் நடனத்தாலும் அனைவரையும் மயக்குபவர். உல்லாசமான, சுதந்தரமான, செழிப்பான வாழ்க்கை வேண்டுவோர் இவரைத் தொழலாம். கவலை, அச்சம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து மனிதனை மீட்கும் ஆற்றல் நிரம்பியவர். கிரேக்கத்தோடு நின்றுவிடாமல் உலகம் முழுக்கத் தன் பார்வையைப் படரவிட்டு அனைவருக்கும் அருள்பாலிக்கும் வல்லமை பெற்றவர். ஆதலால் ஆசியாமீதும் இவர் கவனம் திரும்பியது.
ஒருநாள் டயோனிசஸ் இந்தியாமீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்தார். இங்கே நகரங்களைக் கட்டியெழுப்பினார். சட்டதிட்டங்கள் வகுத்துக் கொடுத்தார். எருது கட்டி, ஏர் பூட்டி நிலத்தை உழும் முறையை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. சிலம்பையும் மேளத்தையும் வழங்கினார். இசை தோன்றியது. கிரேக்க நடனத்தைக் கற்றுக்கொடுத்தார். கடவுளற்ற மனிதர்களுக்குப் பல கடவுள்களை அறிமுகப்படுத்தி, எப்படி வழிபட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தார். அவரே கடவுள்தான் என்பதால் தனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதையும் எப்படி அவரை மேளம் கொட்டித் தொழுது, வரம் பெற்றுக்கொள்வது என்பதையும் அவரே விளக்கினார். ஒப்பனை செய்துகொள்ளும் கலையையும் அவரேதான் சொல்லிக்கொடுக்க வேண்டியிருந்தது. தலைப்பாகை அணியவும், நீளமாக முடி தரிக்கவும் காரணமாக இருந்தார். ஆயுதமென்றால் என்னவென்று கேட்ட இந்தியர்களுக்கு ஆயுதம் அளித்தார். மொத்தத்தில், பழங்குடிகளாகவும் நாடோடிகளாகவும் இருந்த இந்தியர்கள் நவீனர்களாக மாறியதற்குக் காரணம் டயோனிசஸ்.

இந்தியாவை உருமாற்றிய பிறகு, தன்னுடைய வாரிசாக ஸ்பெடம்பாஸ் எனும் நண்பரை அரியணையில் அமர்த்திவிட்டு டயோனிசஸ் விடைபெற்றுக்கொண்டார். அந்த வாரிசு 52 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார். அவருக்குப் பிறகு அவர் வாரிசு. இப்படி சங்கிலிபோல் கிரேக்கக் கடவுளின் ஆட்சி தொடர்ந்துவந்தது. ஆண் வாரிசு இல்லாதபோது இந்தியாவிலிருந்து வல்லமைவாய்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். டயோனிசஸ் செய்துவைத்துப்போன இந்த ஏற்பாடு இன்றுவரை இந்தியாவில் தொடர்கிறது என்கிறார் மெகஸ்தனிஸ். இந்தச் சங்கிலி வரிசையில் இப்போது இருப்பவர்தான் சந்திரகுப்த மௌரியர்.
டயோனிசஸ் தொடங்கி சந்திரகுப்தர்வரை இந்தியாவை ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை 153. இவர்களில் சிலருடைய பெயர்களை மட்டும் மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார். அவர்கள் கிரேக்கர்கள். இந்த 153 மன்னர்களும் 6,042 ஆண்டுகள் இடைவிடாமல் இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள். மெகஸ்தனிஸைப் பொறுத்தவரை இந்தியாவின் வரலாறு என்பது இதுதான். சுருக்கமான சித்திரம்தான் என்றாலும் இந்தியாவின் வரலாறு குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் முதல் பதிவு இதுதான். கிரேக்கம்போல், எகிப்துபோல், பாரசீகம்போல் இந்தியாவுக்கும் தனித்த வரலாறொன்று இருக்கிறது என்பதைச் சொன்னதோடு, அதைத் தன்னால் இயன்றவரை விவரித்தவர் என்பதால் மெகஸ்தனிஸை `இந்திய வரலாற்றின் தந்தை’ என்றும் சிலர் அழைக்கின்றனர்.
எல்லாம் சரிதான். ஆனால் எங்கோ நெருடுகிறது அல்லவா? இந்தியா எந்த நிலத்தையும் ஆக்கிரமித்ததும் இல்லை, யாராலும் ஆக்கிரமிக்கப்பட்டதும் இல்லை என்று முழங்கியவர் அல்லவா மெகஸ்தனிஸ்? இந்தியா தூய்மையான பூமி. இங்கே ஒரேயோர் அந்நியரும் இல்லை என்று சொன்னவரல்லவா மெகஸ்தனிஸ்... இயற்கை அரண் சூழ்ந்த, பாதுகாப்பான பூமி என்றல்லவா இந்தியாவை அவர் புகழ்ந்திருக்கிறார்... டயோனிசஸ் மட்டும் எப்படி வந்தாராம்... அவருடைய வழித்தோன்றல்கள்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள் என்றால், இந்தியாவில் அந்நிய ஆட்சி நடைபெற்றிருக்கிறது என்பதுதானே பொருள்?
ஆனால், மெகஸ்தனிஸுக்கு இதில் எந்த முரணும் இல்லை. இந்தியாவை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றால், கிரேக்கத்தைத் தவிர என்று நாமே புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் அந்நியர் இல்லை என்றால், கிரேக்கர் நீங்கலாக. இந்தியாவை இந்தியர்களே ஆண்டிருக்கிறார்கள் என்றால், கிரேக்கர் போக. இந்தியர்களை எடுத்துவிட்டால் எப்படி இந்தியா இருக்காதோ, அப்படியே கிரேக்கர்களை எடுத்துவிட்டாலும் இந்தியா என்றொன்று இருக்காது. அவரே ஒரு கிரேக்கர் என்பதால், கிரேக்கத்தை அவர் ஓர் அந்நிய நாடாகவே கருதவில்லை. இந்தியா என்பது அவரைப் பொறுத்தவரை இடைவெளிகூட இல்லாத இந்தோகிரேக்கம்.
கிரேக்கக் கண்களோடும், கிரேக்க இதயத்தோடும் இந்தியாவை அணுகியவர் என்பதால், இந்தியா கிரேக்கத்தின் உருவாக்கமாகவே இருக்க வேண்டும் என்று மெகஸ்தனிஸ் முடிவுகட்டிவிட்டார். சிறு வயது முதல் கேட்டு வளர்ந்த கிரேக்க புராணத்தைத் தான் கண்ட இந்தியாமீதும் அவர் படரவிட்டிருக்கிறார். உலகில் சிறந்தது கிரேக்கம். கிரேக்கத்தைக் கடந்து ஏதேனும் சிறந்தது இருக்குமானால், அதையும் கிரேக்கமே உருவாக்கியிருக்கும் என்று பெருமிதத்தோடு அவர் நினைத்திருக்கலாம். திடீரென்று ஏன் அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வர வேண்டும்? இந்தியாவோடு கிரேக்கத்துக்கு ஏதோ ஒருவகையில் விட்டகுறை தொட்டகுறை இருக்கவேண்டுமல்லவா? மெகஸ்தனிஸின் தேடுதல் அவரை டயோனிசஸிடம் அழைத்துச் சென்று நிறுத்தியது. டயோனிசஸின் நீட்சிதான் அலெக்சாண்டர் என்றும், இந்த இருவருடைய தொடர்ச்சிதான் சந்திரகுப்தர் என்றும் வசதியாக நிறுவிவிட்டார். அலெக்சாண்டரை எதிர்க்க மேளம் கொட்டி வாத்தியங்கள் முழங்கியபடிதான் இந்தியர்கள் போர்க்களத்தில் திரண்டனராம். டயோனிசஸ் இல்லாமல் இசை ஏது, வாத்தியம் ஏது?

இந்தியாவுக்கு வருகை தந்த மற்றொரு கடவுள் என்று மெகஸ்தனிஸ் ஹெராக்ளஸைக் குறிப்பிடுகிறார். ரோமானியர்களுக்கு இவர் ஹெர்குலிஸ். வலிமையின் கடவுளான இவரை வழிபடும் ஒரு குழுவினர் இந்தியாவில் இருக்கிறார்களாம். அலெக்சாண்டரை எதிர்த்து போரஸ் போரிட்டபோது, அவர் படையில் இருந்த இந்தியர்களில் சிலர் ஹெராக்ளஸின் கொடியை ஏந்தியிருக்கிறார்கள். ஹெராக்ளஸ் ஏராளமான பெண்களை மணம் செய்துகொண்டார். ஏராளமான மகன்களும், ஒரேயொரு மகளும் பிறந்தனர். மகளின் பெயர், பண்டாரோ. தன்னுடைய மரணம் நெருங்கிவந்ததை உணர்ந்ததும் (கிரேக்கக் கடவுள்களுக்கு மரணமுண்டு) தன்னுடைய ஏழு வயது மகளை அவரே மணந்துகொண்டார். டயோனிசஸ் இந்தியாவை நவீனமாக்கினார் என்றால், ஹெராக்ளஸ் இந்தியாவைப் பகுதி பகுதியாகப் பிரித்து, வளர்ந்து ஆளாகி நின்ற தன் மகன்களை அழைத்து ஒவ்வொரு துண்டாக அவர்களுக்குப் பிரித்தளித்து, திறம்பட ஆளச் செய்தார். தன் மகளையும் அரசியாக்கி அவளுக்கும் ஒரு பகுதி இந்தியாவை அளித்தார்.
பல நகரங்களை இந்தியாவில் மலரச் செய்தார் ஹெராக்ளஸ். அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் பல நகரங்கள் சிறப்போடும் தனித்துவத்தோடும் மிளிர்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘பலிபோத்ரா’ என்கிறார் மெகஸ்தனிஸ். தனிப்பட்ட முறையில் அவருக்குப் பிடித்தமான நகரம் இது. இங்கேதான் அவர் அதிக காலம் செலவிட்டார். இங்கேதான் பணி நிமித்தம் செலூக்கஸ் நிகாடரால் அவர் அனுப்பிவைக்கப்பட்டார். அவருடைய இண்டிகாவில் நன்றாகத் துலக்கம்பெற்று எழுந்து நிற்கும் நகரமும் இதுவேதான்.
பாடலிபுத்திரம் என்பதன் கிரேக்கத் திரிபுதான் பலிபோத்ரா. இந்தியாவின் புகழ்மிக்க நகரங்களில் ஒன்றான பாடலிபுத்திரத்தை ஹெராக்ளஸ் தவிர வேறு யாரால் படைத்திருக்க முடியும்? பாடலிபுத்திரத்தைப் படைத்ததோடு நின்றுவிடாமல் அழகிய மாட மாளிகைகளையும், வீதிகளையும் உருவாக்கி, மக்களை அங்கு வந்து வசிக்குமாறு செய்தார். பாதுகாப்பான மதில்கள் அமைத்தார். அருகிலிருந்த ஆற்றில் உடைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் நீர் கிடைப்பதை உறுதி செய்தார். பாடலிபுத்திரம் செழிப்படைந்ததைக் கண்ட பிறகே அவர் வெளியேறினார். அவர் வெளியேறினாலும் அவருடைய வழித்தோன்றல்கள் பாடலிபுத்திரத்தைப் பல தலைமுறைகளுக்கு ஆண்டனர். மேலும் சிறப்பாக்கினர். ஹெராக்ளஸின் பங்களிப்புகளை உணர்ந்த இந்தியர்கள் அவரைத் தங்களுக்குப் பிடித்த கடவுளாக மாற்றிக்கொண்டனர்.
மெகஸ்தனிஸின் இந்தக் கதைகளைக் கேட்ட இந்தியர்கள் சும்மா இருப்பார்களா... எங்களிடம் இல்லாத புராணமா, நாங்கள் அறியாத இதிகாசமா? மெகஸ்தனிஸ் குறிப்பிடும் டயோனிசஸும் ஹெராக்ளஸும் யாராக இருக்கும் என்று அவர்கள் ஒரு சுவையான தேடலைத் தொடங்கினார்கள்.
(விரியும்)