மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 16 - கடவுள்களும் அடிமைகளும்

சிவன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன்

‘மேற்கிலிருந்து வந்து இந்தியாவைக் கைப்பற்றிய கடவுள்’ என்பது டயோனிசஸ் அல்ல, நகுசன்தான். தேவலோகத்தில் மட்டும்தான் அப்சரஸ்கள் நடனமாடுவது வழக்கம்

டயோனிசஸ் யாராக இருக்கும்? டயோனிசஸுக்கு இசையும் நடனமும் பிடிக்கும் என்கிறார் மெகஸ்தனிஸ். இசையைத் தோற்றுவித்தவர் சிவன். உடுக்கை ஏந்தி, கேசம் காற்றில் பறக்க நடனமாடுவதில் வல்லவர். இசைக்கருவிகளை வழங்கியவர் அவரே. ஊர்வலமாகச் சென்று, மேளம் கொட்டி சிவனைத்தான் நாம் வழிபடுகிறோம். தீ போல் நம்மை ஆக்கிரமித்துப் பற்றிக்கொள்பவர் சிவன்.

மெகஸ்தனிஸ் தனது பயணங்களின்போது இங்குள்ளவர்களிடம் விசாரித்து, சில தகவல்கள் திரட்டியிருக்க வேண்டும். சிவபெருமானைப் பற்றி அவர்கள் கூறியது அனைத்தும் அவருக்குத் தெரிந்த கடவுளான டயோனிசஸுக்குப் பொருந்திவந்ததால் அவரையே முதன்மைக் கடவுளாக அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சிவன் ஆதி கடவுள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மெகஸ்தனிஸ் அவருக்கும் முந்தைய ஒரு கடவுளையே `டயோனிசஸ்’ என அழைக்கிறார். எனவே சிவனல்ல, அவருக்கும் முந்தைய ஒரு கடவுளைத்தான் நாம் இங்கே தேட வேண்டும். அவ்வாறு செய்யும்போது நமக்கு அகப்படுபவர் சிவனின் மாமனாரான தட்சப் பிரஜாபதி. டயோனிசஸ் எனும் பெயரை கிரேக்கத்தில் `பாக்கஸ்’ என்றும் அழைக்கலாம். ‘தட்ச’ என்பதை பாக்கஸ் என்று கிரேக்கர்கள் உச்சரிப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. எனவே டயோனிசஸ் தட்ச பிரஜாபதி.

டயோனிசஸ் என்பவர் வைவஸ்வத மனு என்பது நமக்குக் கிடைக்கும் மூன்றாவது விடை. பிரளயத்துக்குப் பிறகான மனித வாழ்க்கை இவரிடமிருந்தே தொடங்குகிறது. இவர்தான் முதல் மன்னராக இங்கே பொறுப்பேற்றுக்கொண்டவர். இந்தியாவின் தொடக்கப்புள்ளி இவராகத்தான் இருக்க வேண்டும். டயோனிசஸ் வேறு யாருமல்ல, சந்திரக் கடவுளான சோமன்தான் என்பது நான்காவது பார்வை. மதுவை வழங்கியவர் எனும் ஒரு குறிப்பே இதை நமக்கு உணர்த்திவிடும். அமரத்துவத்தை அளிக்கும் சோம பானத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய சோமன்தான் இந்தியாவை நிர்மாணித்தவர்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 16 - கடவுள்களும் அடிமைகளும்

நான்காவது பெயர் நகுசன். வாயு புராணத்தின்படி இவர் வைவஸ்வத மனுவின் மகன். அவருக்கு மொத்தம் 10 மகன்கள். மனு, உலகைத் தன் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தபோது நகுசனை மட்டும் ஏனோ விட்டுவிட்டார். அதனால் சினம்கொண்ட நகுசன், இந்தியாவைவிட்டு வெளியேறி மேற்கில் தன்னை வெற்றிகரமான ஒரு மன்னனாக நிலைநிறுத்திக்கொண்டான். இந்நிலையில் ஒருநாள் இந்திரலோகத்தில் அரியணை காலியானது. நகுசனின் வீரத்தையும் ஆட்சித்திறனையும் கண்ட தேவர்கள் நகுசனை வரவேற்று அவனை மன்னனாக்கினார்கள். (இந்திரன்தான் டயோனிசஸ் என்பாரும் உண்டு).

‘மேற்கிலிருந்து வந்து இந்தியாவைக் கைப்பற்றிய கடவுள்’ என்பது டயோனிசஸ் அல்ல, நகுசன்தான். தேவலோகத்தில் மட்டும்தான் அப்சரஸ்கள் நடனமாடுவது வழக்கம். பூமி என்ன பாவம் செய்தது, அவர்களும்தான் நடனத்தைக் கண்டு களிக்கட்டுமே என்று பெருந்தன்மையோடு அறிவித்ததோடு, நடனக்கலையையும் நமக்கு அறிமுகப்படுத்தினார் நகுசன். இந்தியர்கள் நாட்டிய சாஸ்திரம் கற்றதற்குக் காரணம் அவரே. ஆக மொத்தம் ‘தேவ நகுசா’ என்பதுதான் டயோனிசஸாக மாறியிருக்கிறது.

மெகஸ்தனிஸ் குறிப்பிட்ட டயோனிசஸை ஒரு கடவுளாக நாம் பார்க்க வேண்டியதில்லை. அதுவொரு குறியீடு என்று சொல்லும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். சோமபானத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள். அவர்களுக்குத்தான் சோமபானத்தைத் தயாரிக்கும் கலை தெரியும். ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள். ஆக, ‘சோமபானத்தை அறிமுகப்படுத்திய ஆரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியா’ என்பதைத்தான் ‘மதுவின் கடவுளான டயோனிசஸால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியா’ என்று மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார் என்பது இவர்கள் பார்வை.

மெகஸ்தனிஸ் ஆரிய இனம் குறித்து அறிந்திருந்தார் என்று சொல்ல முடியும். பிராமண மரபு, வேதப் பண்பாடு போன்றவை குறித்தும் அவருக்குத் தெரிந்திருந்தது. இந்தியாவின் கடந்த காலம் குறித்து அறிந்துகொள்ள அவர் ஆர்வமாக இருந்தார். பிராமணர்களிடமிருந்து புராணக் கதைகளையும், இந்தியாவை இதுவரை ஆண்ட மன்னர்களின் பெயர்களையும் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். ஆரியர்கள் படையெடுத்து வந்து இந்தியாவிலுள்ள தாசர்களை ஆக்கிரமித்தனர் எனும் செய்தியைத் தனது ஆய்வின்போது அவர் திரட்டியிருக்கவும் வேண்டும். இந்த விவரங்களையெல்லாம் கிரேக்கப் புராணங்களோடு இணைத்தே தனது வரலாற்றை அவர் எழுதினார்.

மெகஸ்தனிஸ் குறிப்பிடும் மற்றொரு கிரேக்கக் கடவுளான ஹெராக்ளஸை யூகிப்பதில் இத்தனை குழப்பம் இருக்கவில்லை. ‘மெதோரா’ எனும் பகுதியைக் குறிப்பிடும்போதுதான் முதன்முதலில் ஹெராக்ளஸை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மெகஸ்தனிஸ். மெதோரா என்பது மதுரா என்பதைக் கண்டுபிடித்த பிறகு, ஹெராக்ளஸ் கிருஷ்ணர்தான் என்று சுலபமாகவே நிறுவிவிட்டார்கள். மெகஸ்தனிஸ் குறிப்புகளின்படி ஹெராக்ளஸ் இந்தியாவில் ஏராளமான பெண்களை மணம் செய்து கொண்டார். எண்ணற்ற கோபிகையர்களோடு இணைந்திருந்த கிருஷ்ணருக்கு இது பொருந்துகிறது. கிருஷ்ணர் கிடையாது, பலராமர்தான் ஹெராக்ளஸ் என்றொரு வாதமும் உண்டு.

டயோனிசஸ் தொடங்கி சந்திரகுப்தர் வரை மொத்தம் 153 மன்னர்கள் இந்தியாவை ஆண்டதாக மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார். இந்தியப் புராணங்களோடு இந்தக் கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள் சிலர். புராணங்களின்படி முதல் கடவுள் விஷ்ணு என்று வைத்துக்கொண்டால், சந்திரகுப்தர் காலம் வரை மொத்தம் 113 மன்னர்கள் இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள். எண்ணிக்கை கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருந்தாலும் கிரேக்கர்களும் இந்தியர்களும் ஒன்றுபடும் சில முக்கியமான புள்ளிகளை இது நமக்குப் பளிச்சென்று காட்டுகிறது.

கிரேக்கம்போல் இந்தியாவிலும் பல கடவுள்கள் வாழ்ந்துவந்தனர். இரு நாடுகளும் புராணங்களை மதித்துப் போற்றின. இது கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட நிலம் என்று இருவருமே நம்பினர். கடவுள்கள் ஏதோ ஒரு மேலுலகில் தனித்து வாழ்பவர்கள் அல்லர். அவ்வப்போது பூமிக்கு இறங்கிவருபவர்கள், மக்களோடு ஒன்று கலப்பவர்கள், மக்களுக்காகப் பல உதவிகள் புரிபவர்கள். மன்னரைக் கடவுளாகவும், கடவுளை மன்னராகவும் கருதும் போக்கு இரு நாடுகளிலும் இருந்திருக்கிறது. டயோனிசஸ், ஹெராக்ளஸ், விஷ்ணு, இந்திரன் போன்றவர்களால் ஒரே நேரத்தில் கடவுளாகவும் மன்னராகவும் திகழ முடிந்தது. கிரேக்கர்களுக்கும் சரி, இந்தியர்களுக்கும் சரி புராணம்தான் வரலாறு. வரலாறுதான் புராணம். கடவுளோடு இணைத்தே அவர்கள் உலகைப் புரிந்துகொள்ள முயன்றனர். கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்குமான அடிப்படை ஒற்றுமையை மெகஸ்தனிஸ் அறிந்திருந்தார்.

கிரேக்கமும் இந்தியாவும் ஒன்றுபடும் இடங்கள், வேறுபடும் இடங்கள் இரண்டிலும் மெகஸ்தனிஸ் ஆர்வம்கொண்டிருந்தார். அந்த வரிசையில், இந்தியாவில் அடிமை முறை நிலவுகிறதா என்றொரு தேடலில் இறங்கினார். கிரேக்கத்தில் அப்படியொன்று இருப்பதை அவர் அறிவார். வீரத்துக்கும் தீரத்துக்கும் மட்டுமல்ல, அடிமை முறைக்கும் புகழ்பெற்றிருந்தது ஸ்பார்ட்டா. அடிமைக்கு ‘ஹெலோட்’ என்று பெயர். முன்பொருமுறை நடைபெற்ற போரின்போது கைதுசெய்யப்பட்டவர்களே வழிவழியாக அடிமைகளாகத் தொடர்வதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டும்தானா அல்லது மற்றவர்களும் அடிமைகளாக இருந்தனரா என்பது தெரியவில்லை. ஆனால் ஏழு கிரேக்கர்களுக்கு ஓர் அடிமை எனும் விகிதத்தில் அடிமை முறை பரவியிருந்ததை அறிய முடிகிறது. உழவு, வீட்டு வேலைகள், சமையல், மது தயாரிப்பு, கட்டுமானப் பணிகள், கைவினைத் தொழில்கள், ஆயுதத் தயாரிப்பு, போர்ப் பணிகள் என்று கிரேக்கர்களின் தேவைகளை இந்த அடிமைகளே முதன்மையாகத் தீர்த்துவைத்தனர்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 16 - கடவுள்களும் அடிமைகளும்

அடிமைகளின் எண்ணிக்கை எப்போதும் மிகுந்திருக்க வேண்டும் என்று ஸ்பார்ட்டா விரும்பியது. அடிமைகள் தங்களுக்குள் மணம் செய்துகொள்ளவும், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கப்பட்டனர். வலுவான குழந்தைகள் நல்ல அடிமைகளாக வளர்வார்கள். வலுவற்றவர்கள் நோயுற்று மரணிப்பார்கள், துரத்தப்படுவார்கள், கொல்லப்படுவார்கள். கிரேக்க இளைஞர்கள் தங்கள் பயிற்சிகளின் ஒரு பகுதியாக வாட்டசாட்டமான அடிமை இளைஞர்கள்மீது ‘போர்’ தொடுத்து அவர்களைக் கொல்வது வழக்கம். இதுவொரு வீர விளையாட்டாகவோ போருக்கான முன்தயாரிப்பாகவோ கருதப்பட்டது. அடிமைகள் அவ்வப்போது தங்களுக்குள் திரண்டு தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராகப் போரிட்டதும் உண்டு. அந்தப் போர்கள் மேலதிக வன்முறையோடு நசுக்கப்பட்டன.

தனது தேடலின் முடிவில், கிரேக்கத்தில் நிலவியதுபோல் இந்தியாவில் அடிமை முறை இல்லை எனும் முடிவுக்கு வந்து சேர்கிறார் மெகஸ்தனிஸ். அதை அவர் வெளிப்படுத்தும் முறையைப் பார்க்கும்போது, அவர் அடிமை முறையை ஏற்காதவர் என்றே தோன்றுகிறது. இந்தியாவில் ஒரேயொரு அடிமையைக்கூட நான் காணவில்லை. மன்னர் (அல்லது கடவுள்) எனும் அதிகார பீடத்துக்குக் கட்டுப்பட்ட குடிமக்களாக இருக்கிறார்களே தவிர, தனிப்பட்ட முறையில் யாருக்கும் அவர்கள் வளைந்தும் குழைந்தும் குற்றேவல் புரிவதாகத் தெரியவில்லை. நிச்சயம் ஸ்பார்ட்டாவில் இருப்பதைப்போல் வழிவழியாக அடிமைகள் வளர்வதுபோலவும் தெரியவில்லை. இது நிச்சயம் குறிப்பிடத்தக்கது என்கிறார் மெகஸ்தனிஸ்.

இதன் பொருள், இந்தியாவில் அனைவரும் சமம் என்பதோ, ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்பதோ அல்ல. மேல்நிலைப் பணிகள், கீழ்நிலைப் பணிகள் ஆகியவை இருக்கவே செய்கின்றன. ஒடுக்குமுறையும் உண்டு. மன்னர்களுக்குப் பணிவிடைகள் செய்யப் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களிடமிருந்து விலை கொடுத்து அவர்கள் வாங்கப்பட்டிருக்கிறார்கள். கைவினைத் தொழிலாளர்கள் அரசுக்காகக் குறிப்பிட்ட தினங்கள் பணியாற்ற வேண்டும் என்றொரு விதிமுறை இருக்கிறது. இப்படி கட்டாயப் பணிகளில் சிலர் ஈடுபடுத்தப்படுவது உண்மை. ஆனால், தங்கள் பணி நேரம் போக அவர்கள் சுதந்தரமாகவே இருக்கிறார்கள். சுதந்தரமாகவே உணர்கிறார்கள். எனவே அவர்களை அடிமைகளாகக் கொள்ள முடியாது என்கிறார் மெகஸ்தனிஸ்.

ஆனால், மெகஸ்தனிஸின் பார்வை முழு உண்மையல்ல என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பண்டைய இந்தியாவில் அடிமை முறை நிலவியது. வீட்டுப் பணிகளுக்கு அடிமைகளை நியமிக்கும் வழக்கமும் இருந்தது. ஆனால் கிரேக்கத்தில் நிலவியதுபோல் அடிமை முறை மூலம் பெரிய அளவில் பொருள் உற்பத்தி செய்யும் வழக்கம் இங்கே இல்லை என்கிறார் வரலாற்றாசிரியர் ஆர்.எஸ்.ஷர்மா. அடிமைகள் இருந்ததை அர்த்தசாஸ்திரமும் உறுதிசெய்கிறது. நான்கு விதமான அடிமைகள் இருக்கிறார்கள் என்கிறது அர்த்தசாஸ்திரம். வீட்டில் பிறந்தவர்கள், பரம்பரைச் சொத்தாக வந்து சேர்ந்தவர்கள், விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள், வேறு வழிகளில் கிடைத்தவர்கள். மெகஸ்தனிஸ் இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆனால், சாதிமுறை அவர் கவனத்துக்கு வந்தது.

(விரியும்)