மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 17 - சாதி என்றால் என்ன?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

விவசாயியின் மகன் விவசாயி. போர் வீரனின் மகன் போர் வீரன். தத்துவவாதியின் மகன் தத்துவவாதி. தொழிலுக்கும் வர்ணத்துக்குமுள்ள தொடர்பை இது உறுதிசெய்கிறது.

இந்தியாவில் மொத்தம் ஏழு சாதிகள் உள்ளன என்கிறார் மெகஸ்தனிஸ். தத்துவவாதிகள் முதல் பிரிவில் வருவார்கள். இவர்களின் எண்ணிக்கை என்னவோ குறைவுதான் என்றாலும், சமூகத்தில் இவர்களுக்குத்தான் இருப்பதிலேயே உயர்ந்த இடம் அளிக்கப்படுகிறது. இவர்கள் யாருக்கும் எஜமானர்களும் இல்லை, யாருக்கும் அடிமைகளும் இல்லை. அரசாங்கமும் இவர்கள் மதிப்பை உணர்ந்திருப்பதால் மற்றவர்களைப்போல் இவர்களிடமிருந்து எந்த வரியும் பெற்றுக்கொள்வதில்லை.

தத்துவவாதிகள் கடவுளுக்கு விருப்பமான வர்கள் என்பதால், பலி கொடுப்பது, மரணச் சடங்கு போன்றவற்றுக்கு இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பதிலுக்கு விலையுயர்ந்த பரிசுகளும், மதிப்புமிக்க சலுகைகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மக்கள் இவர்களுடைய சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஒவ்வோர் ஆண்டு தொடக்கத்திலும் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் தோன்றி, எப்போது பஞ்சம் வரும், எப்போது மழை பெய்யும், எப்போது வெள்ளம் பெருகும், எப்போது வெப்பம் சுட்டெரிக்கும் போன்றவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து, எடுத்துச் சொல்லி எச்சரித்துவிடுவார்கள் தத்துவவாதிகள். வானிலை மட்டுமல்ல, எதிர்வரும் நோய்களையும்கூட மோப்பம் பிடித்துச் சொல்லிவிடுவார்கள். மக்கள் மட்டுமல்ல, அரசர்களும்கூட ‘சரி இதுதான் வரப்போகிறது’ என்று முன்கூட்டியே தயாராகிவிடுவார்களாம்.

ஆரூடம் பொய்த்துப்போனால் என்ன செய்வது? தண்டனை தர வேண்டும். அதேசமயம் கடுமையும் காட்ட முடியாது. எனவே, அரசரின் அதிருப்திக்கு உள்ளாவதும், மக்களின் கண்டனத்தை எதிர்கொள்வதும்தான் ஒரு தத்துவவாதிக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக இருக்கும். அதன் பிறகு அவர் மௌனவிரதம் பூண்டு ஒதுங்கிச் சென்றுவிட வேண்டும்.

இரண்டாவது இடம் விவசாயிகளுக்கு. தத்துவவாதிகள் போலன்றி இவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். போரிடுவது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது போன்றவற்றிலிருந்தெல்லாம் இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த இடைஞ்சலும் இன்றி விவசாயத்தை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும். விவசாயிகளுக்குச் சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. அவர்கள் இல்லாவிட்டால் நம் கதி அவ்வளவுதான் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கின்றனர். பணியாற்றும்போது எதிரிகளால் எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாதவாறு அவர்களைப் பாதுகாக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. விவசாயிகளைக் காத்தால் நிலம் நம்மைக் காக்கும் என்பதை இந்தியர்கள் அறிவார்கள். எல்லா வளமும் பெற்று இந்தியர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்குக் காரணம் விவசாயிகள்.

குடும்பம், குட்டிகளோடு கிராமத்திலேயே விவசாயிகள் தங்கிவிடுகிறார்கள். நகருக்கு வர வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை. இந்தியாவிலுள்ள நிலங்கள் யாவும் மன்னருக்குச் சொந்தம். தனி நபர்கள் யாராக இருந்தாலும் நிலத்துக்கு உரிமை கோர முடியாது. விவசாயிகள் தாங்கள் பணியாற்றும் நிலத்துக்கான வரியை நேரடியாக மன்னரிடம் செலுத்திவிட வேண்டும். வரி போக, விளைச்சலில் நான்கில் ஒரு பகுதியை அரசுக் கிடங்குக்கு அளித்துவிட வேண்டும்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 17 - சாதி என்றால் என்ன?

மூன்றாவதில் இடையர்கள் இடம்பெறுகிறார்கள். நகரத்திலும் இல்லாமல், கிராமத்திலும் இல்லாமல் நடுவாந்தரமாக வசிப்பவர்கள். நிலையான வீடு இவர்களுக்கு இருப்பதில்லை. எங்கெல்லாம் கால்நடைகளை ஓட்டிச் செல்கிறார்களோ அங்கே முகாம் போட்டுத் தங்கிவிடுகிறார்கள். மேய்ச்சல் பணி போக, வேட்டையாடும் பணியும் செய்கிறார்கள். பதுங்குகுழி அமைத்து ஆபத்தான விலங்குகளைக் கைப்பற்றி அனைவரையும் காக்கிறார்கள். பயிர்களை நாசமாக்கும் பறவைகளையும், மக்களைத் தாக்கும் விதவிதமான வன விலங்குகளையும் இவர்கள் அழித்துவிடுவதால்தான், தொந்தரவு இல்லாத நிலமாக இந்தியாவால் இருக்க முடிகிறது.

நான்காவது சாதியினர் கைவினைக் கலைஞர்கள். ஆயுதம் தயாரிப்பவர்கள் ஒருவகை என்றால், வேடர்களுக்கும் இடையர்களுக்கும் தேவையான கருவிகள் செய்து கொடுப்பவர்கள் இன்னொரு வகை. இவர்களும் வரி செலுத்தத் தேவையில்லை. தவிரவும் இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அரசே மானியம் அளிப்பதும் வழக்கம்.

ஐந்தாவதாக ராணுவத்தினர் வருகிறார்கள். எப்போது போர் மூண்டாலும் விரைந்து செல்வதற்கு வாகாகத் தயார்நிலையில் இருப்பவர்கள். தங்களுக்குள் ஓர் அமைப்பாகத் திரண்டிருப்பவர்கள். கட்டுப்பாட்டோடு இயங்கும் பிரிவினர். எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டால், விவசாயிகளுக்கு அடுத்தபடியாக இவர்களே அதிகம் பேர் இருப்பார்கள். அமைதியான காலகட்டத்தில் வேறு என்ன செய்வதென்று தெரியாது என்பதால் இவர்களும் அமைதியாகவே பொழுதைக் கழிப்பர். கேளிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இவர்களுடைய தேவைகளை அரசு கவனித்துக்கொள்ளும். போர்க் குதிரைகளையும், போர் யானைகளையும்கூட அரசே வளர்க்கும்.

மேற்பார்வை செய்பவர்கள் ஆறாவது சாதியினர். இந்தியாவில் எல்லாம் சரியாக இருக்கிறதா, எல்லோரும் அவரவருக்கான கடமைகளை நிறைவேற்றுகிறார்களா, அதற்கான சூழல் நிலவுகிறதா என்பதையெல்லாம் விசாரிப்பதும் மேற்பார்வை செய்வதும் இவர்கள் பொறுப்பு. கண்டதையும் கேட்டதையும் தொகுத்து வேளா வேளைக்கு அரசருக்கு இவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அரசர் இல்லாத இடத்தில் நீதி பரிபாலனம் செய்பவர்களுக்கு இவர்கள் அறிக்கை சென்று சேரும்.

ஏழாவது சாதியில் அலுவலர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள். எண்ணிக்கையில் சொற்பமானவர்கள் என்றாலும் அறிவும் ஆற்றலும் நிரம்பிய அவர்களை மக்கள் மதிக்கிறார்கள், அரசர்களும்தான். முக்கிய அரசுப் பொறுப்புகளில் இந்தச் சாதியினரே நியமிக்கப்படுகிறார்கள். அரசருக்கு ஆலோசனை வழங்கும் இடத்திலும் இவர்களே அமர்ந்திருக்கிறார்கள். கஜானாவை நிர்வகிப்பது, ராணுவத்துக்குத் தலைமை தாங்குவது, நீதி பரிபாலனம் செய்வது என்று மதிப்புமிக்க பல பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இதுதான் இந்தியாவின் சாதி அமைப்பு என்கிறார் மெகஸ்தனிஸ். இந்த அமைப்பை ஒவ்வொருவரும் புரிந்துவைத்திருக்கின்றனர். அதன்படி நடக்கின்றனர். ஒரு சாதியில் பிறந்தவர்கள், இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை. கைவினைத் தொழில் செய்யும் ஒருவர் தத்துவவாதியாக மாற முடியாது. ஒரு போர்வீரர் திடீரென்று வாளைத் தூக்கிப்போட்டுவிட்டு, கலப்பையைப் பிடிக்க இயலாது. இரண்டு சாதிகளின் தொழிலை ஒருவரே சேர்த்துச் செய்வதும் தவறுதான். அவரவருக்கான நியதிகளை மட்டும் அவரவர் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் ஓர் ஒழுங்கு இருக்கும்.

இதுதான் மெகஸ்தனிஸ் தீட்டியிருக்கும் சித்திரம். இதைப் பலரும் பலவிதமாக ஆராய்ந்திருக்கிறார்கள். மெகஸ்தனிஸ் குறிப்பிடுவது சாதிப் பிரிவினையா அல்லது தொழில் பிரிவினையா... பண்டைய இந்தியர்கள் இப்படித்தான் ஏழு அணிகளாகப் பிரிந்திருந்தனரா... முதல் பிரிவைச் சேர்ந்த தத்துவவாதிகளுக்கும் சமூகத்தில் முதல்நிலை வகிக்கும் பிராமணர்களுக்கும் தொடர்பு இருப்பதுபோல் தோன்றினாலும் நாம் இன்று காணும் சாதி அமைப்புக்கும், மெகஸ்தனிஸ் விவரிக்கும் அமைப்புக்கும் எந்தவித ஒற்றுமையையும் காண முடியவில்லை அல்லவா?

வர்ணங்கள் நான்கு என்பது நமக்குத் தெரியும். மெகஸ்தனிஸ் எங்கிருந்து ஏழு பிரிவுகளைக் கொண்டுவந்தார்? ஹெரோடோட்டஸ் மக்களை ஏழாகப் பிரித்து வகைப்படுத்துகிறார். அரிஸ்டாட்டிலும் ஏழு பிரிவுகளுக்குள் பொதுமக்களைக் கொண்டுவருகிறார். இவர்களுடைய கண்கள் வழியாகத்தான் இந்திய சமூகத்தையும் மெகஸ்தனிஸ் கண்டிருக்கிறார். எனவே ஏழு பிரிவுகள் அவருக்குப் புலப்பட்டிருக்கின்றன. பிராமணர் (தத்துவவாதி), சத்திரியர் (போர் வீரர்), வைசியர் (வணிகர், உழவர்), சூத்திரர் (சேவகம் செய்பவர்) ஆகிய நான்கு வர்ணத்தினரையும் சேர்த்திருக்கிறார். ஏழு எனும் எண்ணிக்கையை வந்தடைவதற்கு ஏற்ற வகையில் வர்ணத்தோடு சாதியையும் ஒன்று சேர்த்திருக்கிறார்.

வர்ண வேறுபாடு குறித்து அவர் இந்தியர்களிடம் கேட்டு அறிந்துகொண்டிருக்க வேண்டும். சாதி என்றொன்று இருப்பது குறித்து அவர் மேலோட்டமாகக் கேள்விப்பட்டிருக்கலாம். வயலிலும், மேட்டிலும், அரசவையிலும் வேலை செய்தவர்களைப் பார்த்து, அவர்களுக்குள் நிலவும் வேறுபாடுகளைக் கணக்கில்கொண்டு அவர்கள் வாழ்க்கை முறையைச் சாதி என்று அவர் கருதியிருக்கலாம். இது சில ஆய்வாளர்களின் பார்வை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 17 - சாதி என்றால் என்ன?

வர்ணம் போக எஞ்சியுள்ள மூன்றும் சாதிகளோ, தொழில்களோ இல்லை. அவை வரி விதிப்பு ஆவணங்களில் காணப்படும் பிரிவினைகள் மட்டுமே என்று சொல்வோரும் உண்டு. யார் வரி செலுத்த வேண்டும், யாருக்கு விலக்கு போன்ற பிரிவுகளை மெகஸ்தனிஸ் கண்டிருக்க வேண்டும். அதை அவர் சாதியாகக் கருதியிருக்கலாம் என்கிறார்கள் இவர்கள். அந்த வகையில் மெகஸ்தனிஸ் முன்வைக்கும் சாதி அமைப்புதான் அவர் காலத்தில் இந்தியாவில் நிலவியது என்று கொள்ள முடியாது. அப்படி அவர் உறுதியாகத் தான் கண்டதை மட்டும் குறிப்பிட்டிருந்தால், ஏன் தீண்டப்படாதவர்களைப் பற்றி ஒரு குறிப்பும் அவர் பதிவில் இல்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

வர்ணத்தின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ அல்ல; உற்பத்திப் பிரிவுகளின் அடிப்படையில் மெகஸ்தனிஸ் மக்களைப் பிரித்திருப்பதாகத் தெரிகிறது என்கிறார் ரொமிலா தாப்பர். முற்கால இந்தியா குறித்து காத்திரமான ஆய்வுகளை முன்னெடுத்த வரலாற்றாசிரியர் இவர். ஏழாக அவர் மக்களைப் பிரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். ‘சப்த பிரகிருதி’ என்றொரு பதம் அர்த்தசாஸ்திரத்தில் இடம்பெறுகிறது. ஏழு உறுப்புகளைக்கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு என்பது இதன் பொருள். அரசியல் அமைப்பு ஏழு கூறுகளைக்கொண்டிருக்கிறது என்பதை அவர் இந்தியச் சமூக அமைப்பு ஏழாகப் பிரிந்திருக்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கலாம். சந்திரகுப்தரின் அரசவைக்குச் சென்றவர், அரசியல் பணிகளை கவனித்தவர், ஆவணங்களைப் பார்வையிட்டவர் என்ற முறையில் சப்த பிரகுருதி எனும் சொல் அவர் மனதில் பதிந்துபோயிருக்க வேண்டும். இந்த ஏழையும் ஹெரோடோட்டஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரின் ஏழையும் அவர் இணைத்துப் பார்த்திருக்க வேண்டும் என்கிறார் தாப்பர்.

மெகஸ்தனிஸ் காலத்தில் நால் வர்ண தர்மங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால் வர்ணத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பதை இரண்டு முக்கியமான அம்சங்களின் மூலம் மெகஸ்தனிஸ் வெளிப்படுத்துவதாகச் சொல்கிறார் ரொமிலா தாப்பர். ஒன்று, பரம்பரை பரம்பரையாக ஒரே தொழிலில் மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். விவசாயியின் மகன் விவசாயி. போர் வீரனின் மகன் போர் வீரன். தத்துவவாதியின் மகன் தத்துவவாதி. தொழிலுக்கும் வர்ணத்துக்குமுள்ள தொடர்பை இது உறுதிசெய்கிறது. இரண்டாவது, பிறப்புதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. ஒரு விவசாயியின் மகன் ஒரு விவசாயியின் மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஓர் இடையர் இன்னொரு இடையரின் வீட்டிலிருந்துதான் பெண்ணெடுக்க முடியும். பிற குழுக்களுடனான ரத்தக் கலப்பு அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார் மெகஸ்தனிஸ்.

ஏழு சாதிகள் என்பது பிழை. வர்ணத்தையும், சாதியையும், தொழிலையும் குழப்பியடித்தது பிழை. ஆனால் ஒன்றை மட்டும் முன்கூட்டியே தெளிவாக உணர்ந்துவிட்டார் மெகஸ்தனிஸ். எதிர்காலத்தில் இந்தியா ஒரு சாதியச் சமூகமாகத்தான் வளர்ந்து திரளப்போகிறது!

(விரியும்)