மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 18 - பாடலிபுத்திரம் உங்களை வரவேற்கிறது

பாடலிபுத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாடலிபுத்திரம்

பாடலிபுத்திரம் எப்படிப்பட்ட நகரம்? முழுக்க முழுக்க மரத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நகரம் என்கிறார் மெகஸ்தனிஸ்.

இந்தியாவில் எத்தனை நகரங்கள் இருக்கின்றன என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை. அநேகமாக அவற்றைக் கணக்கிடுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது என நேர்மையாக அறிவிக்கிறார் மெகஸ்தனிஸ். அவர் கண்ணாரக் கண்டதும், உளமாற உணர்ந்ததும் ஒரு நகரைத்தான், பாடலிபுத்திரம்!

மௌரிய இந்தியா என்னும் பெருங்கடலைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு துளி நீராக இந்நகரம் அவருக்குத் தோன்றியிருக்கிறது. தனது இண்டிகாவில் இந்த ஒரு நகரைத்தான் இயன்றவரை விவரித்திருக்கிறார்; விவாதித்திருக்கிறார் மெகஸ்தனிஸ். இந்த ஒரு நகரின் நீள அகலங்களை மட்டும்தான் தனது உள்ளங்கை ரேகைபோல் நன்கு அறிந்திருந்தார் அவர்.

பாடலிபுத்திரம் எப்படிப்பட்ட நகரம்? முழுக்க முழுக்க மரத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நகரம் என்கிறார் மெகஸ்தனிஸ். நதிக்கும் நதிக்கரைக்கும் அருகிலுள்ள இந்திய நகரங்களில் மரமே பிரதான கட்டுமானப் பொருளாக இருக்கிறது. செங்கல் கட்டடங்கள் இங்கே எழுப்பப்படுவதில்லை. ஏன்? இந்திய நதிகள் எப்போது கோபத்தில் பெருக்கெடுத்து ஓடும், எப்போது கரையை உடைத்துக்கொண்டு சமவெளிக்குப் பாயும் என்றே கணிக்க முடியாது. தவிரவும், மழை அதிகம் பெய்வதால், காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கிறது. செங்கல்லில் எதை உருவாக்கினாலும் நீரும் ஈரமும் ஊடுருவிச் சென்று தின்ன ஆரம்பித்துவிடும். எனவே மரத்தைக்கொண்டு கோட்டை கொத்தளங்களை உருவாக்குகிறார்கள். நதியைவிட்டு தொலைவிலோ அல்லது உயரமான பகுதிகளிலோ உருவாகியிருக்கும் நகரங்களில் மட்டுமே செங்கல் கட்டடங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று விளக்குகிறார் மெகஸ்தனிஸ்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 18 - பாடலிபுத்திரம் உங்களை வரவேற்கிறது

பாடலிபுத்திரம் கங்கையின் குழந்தை. இந்நகரின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதால்தான் மௌரிய மன்னர்கள் தங்கள் பெயரோடு பாடலிபுத்திரத்தின் பெயரையும் சேர்த்து சூட்டிக்கொள்கிறார்கள் என்கிறார் மெகஸ்தனிஸ். இந்தத் தகவலை அவர் எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. காரணம் எந்த மௌரிய மன்னரின் பெயரோடும் இந்நகரின் பெயர் சேர்ந்து வருவதுபோல் தெரியவில்லை. மற்றபடி பாடலிபுத்திரம் மௌரியரின் இதயமாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பாடலிபுத்திரம் எவ்வளவு பெரிய நகரமாக இருந்தது? சின்னது என்றோ பெரியது என்றோ சொல்லாமல், துல்லியமான அளவுகளை அளித்து ஆச்சர்யப்படுத்துகிறார் மெகஸ்தனிஸ். கிரேக்க அளவுமுறைகளில் அவர் போட்டுவைத்திருக்கும் கணக்கை நமக்குப் புரிவதுபோல் மாற்றிக்கொண்டால், பாடலிபுத்திரம் கிட்டத்தட்ட 14.5 கி.மீ நீளமும் 2.5 கி.மீ அகலமும்கொண்டது. வெளிப்புறத்தில் பாதுகாப்புக்கு அகழி வெட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் மெகஸ்தனிஸ், அதன் ஆழ அகலத்தையும்கூட விட்டுவிடாமல் கேட்டறிந்து பதிவுசெய்திருக்கிறார். பாதுகாப்புக் காரணம் போக, கழிவுநீரைச் சேகரிப்பதற்காகவும் அகழி பயன்படுத்தப்பட்டதாம்.

நகர எல்லையில் படர்ந்திருக்கும் அரண்களின் அளவுகள்கூட அவருக்குத் தெரிந்திருக்கின்றன. ஒன்பது மைல் நீளமும், ஒன்றரை மைல் அகலமும் கொண்ட பெரும் மரச்சுவர் பாடலிபுத்திரத்தைச் சுற்றிப் படர்ந்திருப்பதாகச் சொல்கிறார் மெகஸ்தனிஸ். மொத்தம் 64 கதவுகளை இந்த மதில் கொண்டிருக்கிறது. மதிலில் ஆங்காங்கே பொந்துகள் அமைக்கப்பட்டிருக்கும். புற்றிலிருந்து பாம்பு எட்டிப் பார்ப்பதுபோல் ஒவ்வொரு பொந்திலிருந்தும் அம்பு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். பகைவர் புக முயன்றால் அம்பு மழையைத்தான் முதலில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்நிய நடமாட்டத்தைத் தொலைவிலேயே தெரிந்துகொள்ள உயரமான கண்காணிக்கும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் எண்ணிக்கை 570.

இன்றைய பாட்னாவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோது 2,200 ஆண்டுகளுக்கு முன்னால் மெகஸ்தனிஸ் கண்ட பாடலிபுத்திரம் மண்ணுக்கடியில் புதையுண்டிருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். வீடு, வீதி, சந்தை, அரண்மனை, தூண், விகாரம், சிலை என்று அனைத்தும் பெரும் செல்வம் போல் நமக்குக் கிடைத்துள்ளன. மெகஸ்தனிஸ் நிச்சயம் ஒரு பெருநகரத்தில்தான் தன் கால்களைப் பதித்து நடந்திருக்கிறார்.

கணிதத்தில் இணைகரம் என்றொரு வடிவம் சொல்வார்கள் அல்லவா? மெகஸ்தனிஸின் அளவுகள்படி பார்த்தால், அப்படியொரு வடிவத்தில் நீளமாகவும் குறுகலாகவும் பாடலிபுத்திரம் காட்சியளித்திருக்க வேண்டும். பரப்பளவு குறைந்தபட்ச கணிப்பின்படி, 1,220 முதல் 1,300 ஹெக்டேர் அல்லது அதிகபட்சமாக 4,500 ஹெக்டேர். இருப்பதிலேயே குறைவான மதிப்பீட்டை எடுத்துக்கொண்டாலும்கூட அன்று தெற்காசியாவில் பாடலிபுத்திரமே அளவில் பெரிய நகரமாக இருந்திருக்க முடியும். தோராயமாக நான்கு லட்சம் பேர் அங்கே வாழ்ந்திருக்கலாம் என்று சிலர் கணிக்கிறார்கள்.

பாடலிபுத்திரம் ஒரு மரநகரம் எனும் மெகஸ்தனிஸின் பார்வையும் சரியானதே என்பதை இப்போது கிடைத்துள்ள சிதிலங்களிலிருந்து அறிய முடிகிறது. வீடு, கோட்டை, மதில் என்று அனைத்தையும் சால மரம் (குங்கிலியம் என்றும் சொல்வார்கள்) கொண்டு பாடலிபுத்திரர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். உறுதியான, மருத்துவ குணங்கள் கொண்ட மரமாக இது கருதப்படுகிறது. இதில் விந்தை என்னவென்றால், பாடலிபுத்திரத்துக்கு அருகிலோ, கங்கைக் கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலோ சால மரம் விளைவதில்லை. அப்படியானால் இவ்வளவு மிகுதியான மரங்களை எங்கிருந்து வெட்டியெடுத்து வந்திருப்பார்கள்? நிச்சயம் காடுகளில்தான் அபரிமிதமான மரங்கள் இருக்கும். அந்தக் காடுகள் எவை... வண்டிகளில் வைத்து இவற்றைக் கொண்டுவந்தார்களா... எதுவும் தெரியவில்லை. வேறு சில பகுதிகளிலும் மரக் கட்டுமானங்கள் இருந்திருக்கின்றன என்றாலும், பாடலிபுத்திரம் அளவுக்கு சால மரம் வேறு எங்கும் பயன்படுத்தப்பட்டதுபோல் தெரியவில்லை. அன்றைய நகர வடிவமைப்பாளர்களுக்கு இந்த மரம் ஏனோ முக்கியமானதாக இருந்திருக்கிறது.

மௌரியரின் தலைநகரமான பாடலிபுத்திரம் குறித்து மெகஸ்தனிஸிடமிருந்து இந்த அளவுக்கு மட்டுமே செய்திகள் கிடைக்கின்றன. மெகஸ்தனிஸ் இந்தியா வந்தபோது, இங்கே சந்திரகுப்தரின் ஆட்சி நடைபெற்றுவந்தது. கிரேக்கத் தூதுவராக மெகஸ்தனிஸ் சந்திரகுப்தரின் அரசவைக்கு அவ்வப்போது சென்று வந்ததாக அறிகிறோம். அவர் பாடலிபுத்திரத்திலேயே தங்கியிருந்தாரா அல்லது பக்கத்தில் எங்கேனும் வசித்தபடி இங்கே வருகை புரிந்தாரா என்பது தெரியவில்லை. எவ்வளவு காலம் இந்தியாவில் அவர் கழித்தார் என்பதும் தெரியவில்லை.

அலெக்சாண்டர் இந்தியாவைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, குறிப்பாக அவர் மரணத்துக்குப் பிறகு, கிரேக்கத்தின் பிடியிலிருந்து சிந்து நதிக்கரைப் பகுதிகள் நழுவிவரத் தொடங்கின. அந்தப் பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ள வடக்கிலிருந்த இந்திய மன்னர்கள் பலர் விரும்பினர். அவர்களுள் ஒருவர் சந்திரகுப்தர். உண்மையில் சிந்து அல்ல அவருடைய இலக்கு. செல்வாக்கோடும் செழிப்போடும் திகழ்ந்த மகதப் பேரரசைக் கலைத்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அவர் கனவு. இதை அவர் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஒருமுறை சந்திரகுப்தர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஊருக்கு வெளியில் கிராமப்புறமொன்றில் ஒரு பெண் தன் குழந்தையை அதட்டிக்கொண்டிருப்பதை அவர் கண்டார். இப்படியா உணவை நேரடியாக நடுவிலிருந்து பாய்ந்து எடுத்துச் சாப்பிடுவது? முதலில் சுற்றுப்புறத்தில் இருப்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு முடி. அப்போதுதான் நடுவில் இருப்பது விரைவில் காணாமல் போகும் என்றார் அந்தப் பெண். குழந்தை என்ன புரிந்துகொண்டது என்று தெரியவில்லை ஆனால் சந்திரகுப்தருக்குச் சட்டென்று விளங்கியிருக்கிறது. மகதத்தை ஆக்கிரமிக்க வேண்டுமானால், எடுத்த எடுப்பில் மகதத்தைத் தாக்கக் கூடாது. சுற்றியுள்ள பகுதிகளை ஒவ்வொன்றாகத் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டே வந்தால் மையம் அதுவே கைக்குள் வந்துவிடும். இப்படியாக வடக்கு, மத்திய இந்தியா, தெற்கு என்று ஒவ்வொன்றாகத் தொடங்கி இறுதியாக மகதத்தைக் கைப்பற்றி மௌரியப் பேரரசுக்கான அடித்தளத்தை அமைத்தார் சந்திரகுப்தர்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 18 - பாடலிபுத்திரம் உங்களை வரவேற்கிறது

மௌரியர் எனும் சொல்லுக்குப் பல விளக்கங்கள் அளிக்கப் படுகின்றன. அந்தப்புரத்துப் பெண்களில் ஒருவரான மூரா என்பவரின் மகன் என்பதிலிருந்து மௌரியா தோன்றியது என்பது ஒரு விளக்கம். பாலி மகாவம்சத்தின்படி சாக்கிய வம்சத்தில் தோன்றியவர் மௌரியர். இது உண்மையென்றால், சந்திரகுப்தர் புத்தரின் வழித்தோன்றல். மௌரியா என்பதற்கு பாலியில் `மயில்’ என்றொரு பொருளும் உண்டு. மயில் வளர்த்த வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்றும் மௌரியரை எடுத்துக்கொள்ளலாம். மௌரியரின் சின்னத்தில் மயில் இடம் பெற்றிருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். அதே பாலி மொழியில் `மோரி’ என்றால் மர வீட்டில் வசிக்கும் மக்கள். மெகஸ்தனிஸின் விவரணையின்படி பார்த்தால் இதுவும் பொருத்தமான பெயர்தான்.

சந்திரகுப்தர் குறித்து மெகஸ்தனிஸ் என்ன சொல்லியிருக்கிறார்? ஆசையோடு அவர் பதிவுகளைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சந்திரகுப்தரையோ அவருடைய அரண்மனையையோ மெகஸ்தனிஸ் கண்டுகொண்டதுபோலவே தெரியவில்லை. ஆம், அப்படியொருவர் இருக்கிறார் என்று அறிந்தேன் என்பதுபோல் போகிற போக்கில் ஒரு குறிப்பு மட்டுமே இருக்கிறது. அகழியின் சுற்றளவு என்ன, நகரின் நீள அகலம் என்ன என்றெல்லாம் நுணுக்கமாக விவரித்து எழுத முடிந்தவரால், சந்திரகுப்தரைக் குறித்து மிகவும் அடிப்படையான ஓர் அறிமுகத்தைக்கூட ஏனோ கொடுக்க முடியாமல் போய்விட்டது. சந்திரகுப்தர் எப்படி இருப்பார், என்ன மாதிரியான ஆடை அணிவார், எப்படிப் பேசுவார், அவர் அரசவையில் யாரெல்லாம் இருந்தார்கள், எப்படிப்பட்ட விவாதங்களையெல்லாம் அவர்கள் நடத்தினார்கள் என்று எதையுமே தெரிந்துகொள்ள முடியவில்லை.

எழுதவேயில்லையா அல்லது எழுதி நமக்குக் கிடைக்காமல் போய்விட்டதா என்றும் தெரியவில்லை. ஒருவேளை சந்திரகுப்தரை மெகஸ்தனிஸ் சந்திக்காமலே இருந்துவிட்டாரா, சந்திக்க முடியாததால்தான் அவர் எழுதவில்லையா? இருக்கலாம் என்றாலும் இதை ஏற்பதற்குக் கடினமாக இருக்கிறது. கிரேக்கத்திலிருந்து வந்திருக்கும் ஓர் அரசியல் தூதரை ஒரு முறைகூடச் சந்திக்காமலேயே சந்திரகுப்தர் திருப்பி அனுப்பியிருப்பாரா என்ன... பாடலிபுத்திரத்தின் சந்து பொந்துகளையெல்லாம் நிதானமாகச் சுற்றித் திரிந்த மெகஸ்தனிஸ், எவ்வாறு சந்திரகுப்தரைக் கோட்டைவிடுவார்... தவிரவும், சந்திரகுப்தரின் அரசவைக்கு அடிக்கடி சென்றுவந்தவர் என்கிறார்கள். அரசரைச் சந்திக்காமல் வேறு எதற்காக அவர் அரசவைக்கு, அதுவும் அடிக்கடி செல்ல வேண்டும்? விளங்கவில்லை.

சந்திரகுப்தரை விட்டுவிட்டாலும் அதை ஈடுசெய்யும்விதமாக அரசாட்சி, நிர்வாகம், ராணுவம், மக்கள் வாழ்நிலை என்று வேறு பலவற்றைப் பதிவுசெய்து நம்மைச் சமாதானப்படுத்துகிறார் மெகஸ்தனிஸ்.

(விரியும்)