
நல்லவர்களும், தீயவர்களும், கொடூரமானவர்களும், அன்பே உருவானவர்களும், சாமானியர்களும், அப்பாவிகளும், ஏழைகளும், செல்வந்தவர்களும் கலந்திருப்பதுதான் சமூக யதார்த்தம்.
சந்திரகுப்தரைப் பற்றி மெகஸ்தனிஸ் எதுவுமே எழுதாமல் விட்டுவிட்டார் என்று பார்த்தோம். சந்திரகுப்தர் காலத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருந்த இன்னொருவர் குறித்தும்கூட வாயே திறக்கவில்லை மெகஸ்தனிஸ். அவர், கௌடில்யர்.
மௌரியப் பேரரசை உருவாக்கிய சந்திரகுப்தரை உருவாக்கியவர் என்று சமணப் பதிவுகள் சாணக்கியரைக் குறிப்பிடுகின்றன. சாணக்கியர் இயற்றிய நூல், அர்த்தசாஸ்திரம். அர்த்தசாஸ்திரத்தை எடுத்துப் பிரித்தால், அதை இயற்றியவராக கௌடில்யரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. அது எழுதியவரின் பெயர் அல்ல; கோத்திரம் அல்லது குலத்தின் பெயர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படியானால் எழுதியவரின் பெயர்? உள்ளுக்குள் ஒரே ஓரிடத்தில் மட்டும் வருகிறது. அதுவும் விஷ்ணுகுப்தர் என்று. அப்படியானால் சாணக்கியரும் கௌடில்யரும் விஷ்ணுகுப்தரும் ஒருவரா? வழக்கம்போல், `ஆம்’ என்று சிலரும், `இல்லை’ என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். இருவருமே ஆதாரங்கள் காட்டுகிறார்கள். இந்த விவாதங்களுக்குள் செல்லாமல், `சாணக்கியர்’ என்றே இங்கே அழைப்போம்.
சாணக்கியர் குறித்து நமக்கு நான்குவிதமான பதிவுகள் கிடைக்கின்றன. பாலி மொழியில் இயற்றப்பட்ட பௌத்த மகாவம்சம், ஹேமச்சந்திராவின் சமணப் பதிவு, சோமதேவரின் காஷ்மீரிப் பதிவு, விஷாகதத்தாவின் சம்ஸ்கிருதப் பதிவு. இந்த நான்கிலுமே நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, `உன்னை எப்படியாவது வீழ்த்துவேன்’ என்று சபதமிட்டு, அதன்படி வென்றும் காட்டுகிறார் சாணக்கியர்.
இந்திய வரலாறு துலக்கம் பெறுவது மௌரியர் காலத்தில்தான். அதற்குக் காரணம், நமக்குக் கிடைத்திருக்கும் மூன்று காத்திரமான தரவுகள். ஒன்று, `அர்த்தசாஸ்திரம்.’ இரண்டாவது, மெகஸ்தனிஸின் `இண்டிகா.’ மூன்றாவது, அசோகரின் கல்வெட்டுகள். (அசோகர் பின்னால் வரப்போகிறவர் என்பதால் இங்கே விட்டுவிடுவோம்). அர்த்தசாஸ்திரம் எப்போது இயற்றப்பட்டது? இதற்கு நேர் விடை கிடையாது. வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு காலகட்டத்தில் (பொஆமு 2-ம் நூற்றாண்டு முதல் பொஆமு 3-ம் நூற்றாண்டுவரை) வெவ்வேறு வகைகளில் இந்நூலில் பணியாற்றியிருக்கலாம் என்கிறார்கள். அதாவது, ஒருவர் எழுதி, இன்னொருவர் சேர்த்து, மற்றொருவர் திருத்தி, மீண்டும் ஒருவர் வந்து சேர்த்து... இவ்வாறாக வளர்ந்தும் விரிந்தும் வந்ததுதான் இப்போது நம்மிடமுள்ள அர்த்தசாஸ்திரம் என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.

எப்படியும் அடிப்படைப் பிரதி சந்திரகுப்தர் காலத்தில்தான் உருவாகியிருக்க வேண்டும் என்பதைப் பலர் ஒப்புக்கொள்கின்றனர். இதை உறுதி செய்யக்கூடிய இடத்தில் இருப்பவர் மெகஸ்தனிஸ் மட்டுமே. அர்த்தசாஸ்திரமும் இண்டிகாவும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த பிரதிகள் என்பதை இந்த இரண்டிலும் உள்ள பொதுத்தன்மைகளைச் சுட்டிக்காட்டி பலர் நிறுவியிருக்கின்றனர். மெகஸ்தனிஸ் அர்த்தசாஸ்திரத்தை அறிந்திருந்தார் என்பதற்கான மறைமுக ஆதாரங்களையும் இவர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
ஓர் அரசு எப்படிச் செயல்பட வேண்டும், மன்னரின் கடமைகள் என்னென்ன, எப்படிப்பட்ட சட்டங்கள் ஒரு நாட்டுக்குத் தேவை, அறம் என்றால் என்ன, வணிகம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், செல்வத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், போருக்குத் தயாராவது எப்படி, வரி எப்படி விதிக்கலாம் என்று வானத்துக்குக் கீழுள்ள அனைத்தையும் விவாதிக்கிறது அர்த்தசாஸ்திரம். நாட்டில் பஞ்சம் வந்தால் செய்ய வேண்டியவை என்னென்ன, நோய்த் தொற்றுக் காலத்தை எவ்வாறு சமாளிக்க வேண்டும், சமூக நலத்திட்டங்களை முன்னெடுப்பது எப்படி... இப்படி எல்லாவற்றுக்கும் விதிகள் வகுத்துவைத்திருக்கிறது அர்த்தசாஸ்திரம். சந்திரகுப்தர் தொடங்கி பல மன்னர்களுக்கு இது ஓர் அத்தியாவசியக் கையேடாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
சந்திரகுப்தரின் அவையில் சாணக்கியருக்குத் தனிச்சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்தது உண்மையானால், அங்கே பலமுறை சென்ற மெகஸ்தனிஸ் ஒருமுறையேனும் அவரைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர் பதிவுகளில் எந்தக் குறிப்பும் இல்லை. குறைந்தபட்சம், சாணக்கியர் என்றொருவர் இருந்ததாவது மெகஸ்தனிஸுக்குத் தெரியுமா? தெரியவில்லை. பண்டைய இந்தியாவை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இந்த இரு எழுத்தாளர்களும் சந்தித்துக்கொண்டிருந்தால் உண்மையிலேயே அற்புதமாக இருந்திருக்கும்!
நிஜத்தில் சாத்தியமாகாத சந்திப்பை வரலாற்றாசிரியர்கள்தான் மீண்டும் மீண்டும் சாத்தியமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மெகஸ்தனிஸையும் சாணக்கியரையும் பெரும்பாலும் அவர்கள் இணைத்தே ஆராய்கிறார்கள், இணைத்தே விவாதிக்கிறார்கள். அவர் எழுதியதை இவரைக் கொண்டும், இவருடையதை அவருக்கு அருகில் வைத்தும்தான் இன்றுவரை ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நான் கண்ட பாடலிபுத்திரம் இப்படியெல்லாம் இருந்தது, அப்படியெல்லாம் இருந்தது என்று விவரிப்பது மெகஸ்தனிஸ் பாணி. எடுத்துக்காட்டுக்கு, பாடலிபுத்திரம் மரக் கட்டுமானங்களால் உருவான ஒரு நகரம் என்பதை அவர் மூலம் நாம் அறிகிறோம். மரத்தால் கட்டப்பட்ட மதிலே நகரைக் காக்கிறது என்று பதிவு செய்வதோடு இண்டிகா நிறுத்திக்கொள்கிறது. அர்த்தசாஸ்திரம் மிகச் சரியாக இந்த இடத்தில்தான் பேசவே தொடங்குகிறது. பாடலிபுத்திரம் எப்படி இருக்கிறது என்பதை விவரிப்பது அதன் வேலையல்ல. மாறாக, ஒரு நகரம் எப்படி இருக்க வேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் சிந்திக்கிறது. எதைக் கண்டாரோ அதை அப்படியே விவரிப்பவர் மெகஸ்தனிஸ். இது ஏன் இப்படி இருக்கிறது, இதை எப்படி மாற்றினால் நன்றாக வரும் என்று சிந்திப்பவர் சாணக்கியர். அதனால்தான் `பாடலிபுத்திரத்தைக் காக்கும் அரணை மரத்தால் உருவாக்கக் கூடாது’ என்று தொடங்குகிறார் சாணக்கியர். `கற்களைக் கொண்டே மதில்கள் கட்டப்பட வேண்டும். அதுதான் பாதுகாப்பானது’ என்கிறார் அவர்.
`சந்திரகுப்தரோ அல்லது வேறு மன்னரோ அர்த்தசாஸ்திர விதிகளை அப்படியே எடுத்துக்கொண்டு பின்பற்றினர் என்று சொல்ல முடியாது’ என்கிறார் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர். உண்மை. அர்த்தசாஸ்திரம் ஒரு செயல்திட்ட ஆவணம். நிகழ்காலம் அல்ல, எதிர்காலமே அதன் இலக்கு. `எனக்கு மரம்தான் கிடைத்தது. பெரிய கற்களைக் கொண்டுவருவதைவிட மரக்கட்டைகளைக் கொண்டுவந்து கட்டுவது எளிதாக இருந்தது. எனவே கட்டினேன்’ என்று ஒரு வடிவமைப்பாளர் சொன்னால் `ஓ, அப்படியா சரி...’ என்று பதிவு செய்துவிடுவார் மெகஸ்தனிஸ். சாணக்கியரிடம் இது பலிக்காது. `கட்டியதை மாற்ற முடியாது என்று எனக்குத் தெரியும். அதைப் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. குறைந்தது, இனிவரும் மன்னர்களாவது மரத்தை விட்டுவிட்டு கற்களைத் தேடிச் செல்லட்டும்’ என்பார் அவர்.
மெளரியர் காலத்தில் தாதுக்களிலிருந்து உலோகத்தை வடித்தெடுக்கும் அறிவியல் அதன் ஆரம்பகட்டத்தில் இருந்ததை மெகஸ்தனிஸை வாசிக்கும்போது நம்மால் தெரிந்துகொள்ள முடியும். ஆரம்பகட்டத்தில் இருக்கும் இந்தத் துறையை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்வது எப்படி என்பதை அர்த்தசாஸ்திரம் விவாதிக்கிறது. சுரங்கங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடங்கி ஒரு மன்னர் சுரங்கங்களைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டியதன் அவசியம் வரை விரிவான ஒரு பார்வை அர்த்தசாஸ்திரத்தில் இருக்கிறது.
மெகஸ்தனிஸ் ஓரிரு வரிகளில் கடந்து சென்றுவிடும் பல இடங்களை அர்த்தசாஸ்திரம் நுணுக்கமாக ஆராய்கிறது. உளவாளிகளைக் கொண்ட ஒரு விரிவான வலைப்பின்னலை ஒரு மன்னர் உருவாக்க வேண்டும் என்கிறது அர்த்தசாஸ்திரம். உளவுத் தகவல்களை ரகசியமாக அறிந்து சொல்லும் அந்த வலைப்பின்னலில் பாலியல் பணியில் ஈடுபடுவோரும் அடங்குவர். இப்படியொரு வலைப்பின்னல் சந்திரகுப்தர் காலத்தில் இருந்ததா என்பதை அறிய மெகஸ்தனிஸிடம் சென்றால், ‘பாலியல் பணியில் ஈடுபடும் பெண்களோடு உரையாடியிருக்கிறேன்’ எனும் செய்தி மட்டுமே கிடைக்கிறது. உளவாளிகள் குறித்துச் சொல்ல எதுவும் இல்லை அவரிடம்.

பல இடங்களில் எதிரும் புதிருமாக இருவரும் எழுதிவைத்திருக்கிறார்கள். அர்த்தசாஸ்திரத்தில் குற்றமும் தண்டனையும் குறித்துப் பல தகவல்கள் கிடைக்கின்றன. எப்படிப்பட்ட குற்றங்களுக்கு, எப்படிப்பட்ட தண்டனை அளிக்கப்படவேண்டும் என்பதை சாணக்கியர் விரிவாக இதில் அலசியிருக்கிறார். மெகஸ்தனிஸோ, `இந்தியாவில் சட்டத்துக்கான தேவையே கிட்டத்தட்ட இல்லை’ என்கிறார். இந்தியர்கள் குற்றமிழைப்பதே இல்லை எனும் முடிவுக்குத்தான் அவரைப் படிப்பவர்கள் வந்து சேர முடியும். இருவரில் யார் சொல்வது சரி? மெகஸ்தனிஸை ஏற்பதாக இருந்தால், உன்னதமான நல்லுள்ளங்கள் மட்டும் வாழும் ஒரு நிலமாக பண்டைய இந்தியா இருந்தது என்று நாம் முடிவுகட்டலாம். ஒரு பொற்காலமாகப் பண்டைய இந்தியாவைக் கற்பனை செய்துகொள்ள இது நமக்கு உதவலாம்.
உண்மையில், அப்படியொரு பொற்காலம் உலகில் எங்கும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது. மனிதர்கள் எல்லாக் காலங்களிலும் தவறுகள் செய்திருக்கிறார்கள். சதி வேலைகளிலும், நம்பிக்கை துரோகங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கொலைகளும் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. அரசுகள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன. குடியிருப்புகள் தாக்கப்பட்டிருக்கின்றன. நல்லவர்களும், தீயவர்களும், கொடூரமானவர்களும், அன்பே உருவானவர்களும், சாமானியர்களும், அப்பாவிகளும், ஏழைகளும், செல்வந்தர்களும் கலந்திருப்பதுதான் சமூக யதார்த்தம். அந்த யதார்த்தத்தையே அர்த்தசாஸ்திரம் நமக்கு உணர்த்துகிறது. சமூகத்தில் நிலவும் குற்றங்களைத்தான் சாணக்கியர் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
சில இடங்களில், இருவரும் ஒரே குரலில் ஒரே பொருளைப் பேசுகிறார்கள். ஒரு மன்னர் தன் எதிரிகளிடமிருந்து எப்படியெல்லாம் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை விரிவாகப் பேசும் அர்த்தசாஸ்திரம், அரண்மனைப் பெண்களால் மன்னருக்கு நேரும் அபாயத்தைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது. மெகஸ்தனிஸும் இதே எச்சரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.
மன்னர் மது அருந்திவிட்டு உறங்கும் நேரம் முக்கியமானது. இது மிகவும் ஆபத்தான ஒரு தருணமாக எந்நேரமும் மாறலாம். அரசரின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள பெண்கள், இதை ஒரு வாய்ப்பாகக்கொண்டு மன்னரை ரகசியமாகக் கொல்லலாம். அவ்வாறு மன்னரைக் கொல்லும் பெண், ஆட்சிக்கு வரும் அடுத்த மன்னரோடு இணைந்துகொள்ளலாம். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை அடுத்ததாகப் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, தன் குழந்தை அரசாள வேண்டும் எனும் ஆசையில் பெண்கள் அரசரைக் கொல்ல நேரம் பார்த்துக் காத்திருக்கலாம். இந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டுமானால், மன்னர் தன்னைச் சூழ்ந்துள்ள பெண்களிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மது அருந்துவதையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக, ஒரே இடத்தில், ஒரே கட்டிலில் இரவெல்லாம் படுத்து உறங்குவதைத் தவிர்த்துவிட்டு, அவ்வப்போது ரகசியமாக இடம் மாறி, கட்டில் மாறிப் படுத்துக்கொள்ள வேண்டும். மெகஸ்தனிஸ், சாணக்கியர் இருவரும் ஒன்றுபோல் அளிக்கும் தீர்வு இது.
(விரியும்)