மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 2

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

கிரேக்கர்களின் இந்தியா!

பயணத்துக்கும் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள ஹெரோடோட்டஸ் என்னும் கிரேக்கரிடமிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும். `வரலாற்றின் தந்தை’ என்று கொண்டாடப்படும் ஹெரோடோட்டஸ் சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் கடைப்பிடித்த வரலாற்று முறையியல் இன்றளவும் உலகம் முழுவதிலுமுள்ள பள்ளிப் பாடப்புத்தங்களில் வியப்போடு அறிமுகப்படுத்தப்படுகிறது. அறிஞர்களால் தொடர்ச்சியாக இன்றும் மேற்கோள் காட்டப்படுகிறது. வரலாறு என்றால் ஹெரோடோட்டஸ். ஹெரோடோட்டஸ் என்றால் ‘ஹிஸ்டரீஸ்.’ இதுதான் அவர் புத்தகத்தின் பெயர். கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்கு நீண்டு செல்லும், அவர் பெயரைச் இன்றும் சொல்லிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பு. அவர் விட்டுச்சென்றுள்ள ஒரே நூல் இதுதான்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 2

ஏன் ஹெரோடோட்டஸ் முக்கியமானவர்? எதுவொன்றையும் எழுதுவதற்கு முன்பு சாத்தியமாகக்கூடிய அத்தனை தரவுகளையும் முறைப்படி சேகரிப்பது அவர் வழக்கம். சேகரித்த தரவுகள் ஒவ்வொன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு இது உண்மையா, அது ஏற்கத்தக்கதா, இது எங்கிருந்து கிடைத்தது, கிடைத்த இடம் நம்பகத்தக்கதுதானா என்றெல்லாம் விலாவாரியாகப் பரிசோதிப்பார். பிறகுதான் எழுதவே அமர்வார். ‘இந்தாருங்கள், இதுதான் நான் சொல்ல வந்த வரலாறு’ என்று பெற்றுக்கொண்டதையெல்லாம் திரட்டிக் கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றுவிடுவது அவர் பாணி அல்ல. மணி மணியாக எல்லாவற்றையும் கோர்ப்பார். இடையிடையே வண்ணம் கலப்பார். தங்கமோ வைரமோ தொங்கவிடுவார். கண்கவரும் கதம்பம் கிடைக்கும்வரை ஓய மாட்டார்.

நிலம், கடல், மன்னர், மக்கள், போர் என்று எதை வர்ணிப்பதாக இருந்தாலும் நேர்த்தியாகவும் நயமாகவும் செய்வார். வரலாறுதான். ஆனால், குதிரைப் பாய்ச்சல் நடையில் மட்டுமே எழுதத் தெரியும் அவருக்கு. கதைபோல் வரலாறு எழுதும் கலையைச் செழிப்பாக வளர்த்தெடுத்தவர் அவரே என்று துணிந்து சொல்லலாம்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 2

கதை வேறு, வரலாறு வேறு. ஒன்று கற்பனை, இன்னொன்று நிஜம். இந்த இரண்டும் ஒருபோதும் கலக்கக் கூடாது என்று இன்று நமக்குத் தெரியும். மீறிக் கலப்பவர்கள் நம் நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறார்கள். அவர்களை நாம் வரலாற்றாசிரியர்களாகக் கருதுவதும் இல்லை. ஆனால், ஹெரோடோட்டஸ் காலத்தில் கதையும் நிஜமும் எதிரெதிர் அணிகள் அல்ல. இங்கே குறைந்தால் அங்கிருந்து ஒரு கை அள்ளிக்கொள்வார்கள். அங்கே குறைந்தால் இங்கிருந்து ஒரு கை அள்ளித்தரும். கேட்க நன்றாக இருக்கிறதா... கேட்கப் புதுமையாக இருக்கிறதா... ரசிக்கக்கூடிய வகையில் இருக்கிறதா? அது போதும். அதுதான் வரலாறு!

இன்று ஒரு வரலாற்று நூலை எடுத்து வாசிக்கும்போது ஏதேனும் சந்தேகம் தோன்றினால், ‘இதென்ன புது கரடியாக இருக்கிறதே...’ என்று நிறுத்திவிட்டு இன்னொரு புத்தகத்தை எடுத்து வந்து சரிபார்க்க முடியும். ஹெரோடோட்டஸ் காலத்தில் இது சாத்தியமில்லை. எழுதப்பட்ட பிரதிகள் மிகவும் அரிதாகவே கிடைத்தன. எனவே, ‘முன்பொரு காலத்தில் என்ன நடந்தது தெரியுமா?’ என்று எழுதுபவர்களைக்காட்டிலும், ‘நான் உனக்கொரு கதை சொல்லட்டுமா?’ என்று பேசுபவர்கள் அதிகமாக இருந்தனர். கதைபோல் வரலாறும் வாய்வழியாகச் சொல்லப்பட்டது. வாய்வழியாகவே பரப்பப்பட்டது.

கதை சொல்பவர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். அவரைச் சுற்றி கதை கேட்பவர்கள் திரண்டிருப்பார்கள். ‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் என்ன நடந்தது தெரியுமா?’ என்று சொல்லி அவர் தொடங்குவார். அப்போது இந்த மன்னர் இருந்தார், அவர் ஆட்சி அப்படியாக இருந்தது, இப்படியாக இருந்தது, அவர் காலத்தில் வீதியில் தேன் ஓடியது அல்லது ரத்தம் பாய்ந்தது, மக்கள் இப்படி இருந்தார்கள், அப்படி இருந்தார்கள் என்று அவர் விவரித்துக்கொண்டே போவார். இப்படிச் சொல்லிச் செல்லும்போது ஆண்டு, தேதி, இடம், சம்பவம் எல்லாவற்றையும் நூற்றுக்கு நூறு துல்லியமாக நினைவில் தேக்கி வைத்து விவரிப்பது சாத்தியமில்லை என்பதால், கதை கொஞ்சம் அப்படி, இப்படி அலைபாயும்.

ஹோமர் தனது காவியங்களை இப்படிப்பட்ட வாய்வழிக் கதைகளிலிருந்து திரட்டித்தான் கட்டமைத்தார். ஹெரோடோட்டஸ் கையாண்டதும் அதே வழியைத்தான். நாடோடிக் கதைகளாகவும் மன்னர்களை ஆகா ஓகோவென்று புகழும் வீர தீரப் பாடல்களாகவும் மக்களிடையே புழங்கிவந்தவற்றை கவனமாகச் சேகரித்து, அவற்றைக்கொண்டு கடந்தகாலம் குறித்த சித்திரங்களை அவர் கட்டமைத்தார். சமூக அறிவியலாக இன்று வளர்ந்திருக்கும் வரலாற்றுத்துறையின் குழந்தைப் பருவம் இப்படித்தான் அமைந்திருந்தது. அந்தக் குழந்தைப் பருவ காலத்து அறிஞர்தான் ஹெரோடோட்டஸ். ஏற்கெனவே சொல்லப் பட்டவற்றையும் கேட்கப்பட்டவற்றையும்தான் திரும்பச் சொன்னார்கள் என்றாலும், ஹோமரின் விரல்கள் பட்டதும் கதைகள் காவியமாகின என்றால், ஹெரேடோட்டஸ் கதைகளை வேறொரு தளத்துக்கு உயர்த்தி வரலாறாக மாற்றினார்.

ஹெரோடோட்டஸின் தனித்துவமான ஆற்றலும், பன்முகத்தன்மையும்தான் இதைச் சாத்தியமாக்கின. அடிப்படையில் அவர் முதலில் ஒரு பயணி. தன் எழுத்துப் பணியோடு தொடர்புடைய இடங்களை நேரில் சென்று பார்வையிடுவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில், உலகின் முதல் பயண எழுத்தாளர் அவரே. முறைப்படி சென்று, பார்த்து, பேசி, விசாரித்து, செய்தி சேகரித்து எழுதும் பாணியை அறிமுகப்படுத்தியவர் என்பதால், இதழியல் துறையின் முன்னோடியாகவும் அவர் கருதப்படுகிறார். புவியியல், மானுடவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களும்கூட இவரையே தங்கள் முன்னுதாரணமாக வரித்துக்கொள்கிறார்கள்.

ஹெரோடோட்டஸின் ‘ஹிஸ்டரிஸ்’ எதைப் பற்றியது? பொஆமு (பொது ஆண்டுக்கு முன்) 5-ம் நூற்றாண்டில் கிரேக்க நகரமான ஏதென்ஸ் மீது பாரசீகம் படையெடுத்து வந்தது. அந்தப் போரில் கிரேக்கர்கள் பாரசீகர்களைத் தோற்கடித்தனர். இந்த வெற்றி வரலாற்றை அணு அணுவாக விவரிப்பதே ஹோமரின் முதன்மை நோக்கம். ஹெரோடோட்டஸ் காலத்துக்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாக பாரசீகத்துக்கும் கிரேக்கத்துக்கும் கீறி-பாம்பு உறவு இருந்துவந்தது. பலமிக்கப் பேரரசாக இருந்த பாரசீகம், கிரேக்கர்கள் வாழ்ந்துவந்த ஐயோனியாவைக் கைப்பற்றியதுதான் இந்தப் பகையின் தோற்றுவாய் என்று சொல்லப்படுகிறது.

பாரசீக ஆட்சியின்கீழ் அடங்கிக்கிடக்க மறுத்த கிரேக்கர்கள், அவ்வப்போது கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவந்தனர். போர்களும் நடைபெற்றன என்றாலும், பாரசீகத்தை வீழ்த்த முடியவில்லை. சைரஸ், டேரியஸ், செர்க்கஸ் என்று வரிசையாக பாரசீக மன்னர்கள் மாறிக்கொண்டேயிருக்க கிரேக்கர்கள் அவமானத்திலும், வருத்தத்திலும், இயலாமையிலும் துடித்துக்கொண்டிருந்தனர். இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்த கிரேக்கர்கள், செர்க்கஸை வீழ்த்தி ஐயோனியாவை மீட்டெடுத்தனர். இந்த இறுதிக்கட்டப் போர் பாரசீகத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. கிரேக்கம் தன் பெருமிதங்களை மீட்டெடுத்தது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 2

கவனம், இது முழுக்க முழுக்க கிரேக்கத் தரப்பிலிருந்து மட்டுமே நமக்குக் கிடைக்கும் சித்திரம். இதைத்தான் ஹெரோடோட்டஸும் ஒரு மாபெரும் வீர வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். போரிட்ட இரு நாடுகளின் பின்னணி, போரிட்ட வீரர்களின் திறன்கள், இரு தரப்பினரும் கையாண்ட வெவ்வேறான வியூகங்கள், அந்த வியூகங்கள் வீழ்த்தப்பட்ட விதம், போர்க்கருவிகள், அணிவகுப்பு, போர் நடைபெற்ற இடங்கள், அங்கு வாழ்ந்த மக்கள் என்று பருந்துப் பார்வையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் நேர்த்தியாக விவரித்திருப்பார் ஹெரோடோட்டஸ். அவர் விவரிக்கும் போர்க்களக் காட்சிகளை இன்று வாசித்தாலும், வாள்களும் ஈட்டிகளும் மனித உடல்களும் ஒன்றோடோன்று மோதிக்கொள்ளும் ஒலியைத் துல்லியமாக நம்மால் கேட்க முடியும். கடல்போல் பீறிட்டெழும் ரத்தத்தின் சில துளிகளாவது நம் முகத்திலும் பாயும்.

‘இலக்கியத்துக்கு இலியட் என்றால், வரலாற்றுக்கு இதுதான்’ என்று மிகுந்த பெருமிதத்தோடும் பரவசத்தோடும் ஹெரோடோட்டஸின் வரலாற்றைக் கட்டியணைத்துக்கொண்டது அன்றைய ஐரோப்பா. இன்றும் ஐரோப்பாவைக் கவர்ந்த காவிய வரலாற்று நூல் இதுவே. இந்தப் பெருமிதத்துக்கு ஒரு வலுவான அரசியல் காரணம் இருக்கிறது. பாரசீகத்துக்கும் கிரேக்கத்துக்குமான போரை கிழக்குக்கும் மேற்குக்குமான போராக, தீமைக்கும் நன்மைக்குமான போராக, பிற்போக்குத்தனத்துக்கும் நாகரிகத்துக்குமான போராக, ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான போராக ஐரோப்பியர்கள் கண்டனர். ஹெரோடோட்டஸின் நிலைப்பாடும் இதுவே. அதனால்தான் நூல் நெடுகிலும் பாரசீகத்தைக் கீழிறக்கியும் தன்னுடைய நாடான கிரேக்கத்தை வானளாவ உயர்த்தியும் அவர் விவரித்திருப்பார். ‘உண்மையா, தேசபக்தியா எது உங்களுக்கு முக்கியம்?’ என்று கேட்டால், ஹெரோடோட்டஸ் பளிச்சென்று சொல்லிவிடுவார். ‘இதென்ன கேள்வி? எனக்கு இரண்டும் ஒன்றுதான்!’

வரலாற்றுத்துறையினர் இந்நூலைக் கொண்டாடுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. ‘ஹிஸ்டோரியா’ எனும் கிரேக்கச் சொல்லில் இருந்தே ‘ஹிஸ்டரி’ என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது. ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரணை செய்தல் என்பதுதான் இதன் பொருள். ஆனால், ஹெரோடோட்டஸ் தன் நூலுக்கு இப்பெயரை இட்ட பிறகு, அதன் முந்தைய பொருள் மாறிப்போனது. ‘வரலாறு என்றால் எதையோ விசாரிப்பதல்ல... கடந்தகாலத்தைப் பேசுவதுதான் வரலாறு’ என்னும் புதிய வரையறை உருவானது. ஹெரோடோட்டஸ் கொண்டுவந்த மாற்றம் இது. அவர் காலத்தில் அதிகம் அறியப்பட்ட ஒரே புத்தகம் அநேகமாக இதுவே. கிழக்கைவிட, ஆசியாவைவிட, இஸ்லாத்தைவிட மேற்கும், ஐரோப்பாவும், கிறிஸ்தவமும் உயர்ந்தது என்னும் பெருமிதம் இன்னமும் வாழ்வதால், இந்நூலின் புகழ் இன்றளவும் மங்கவில்லை. வரலாறு பற்றி பேசினாலே ஓடோடி ஹெரோடோட்டஸை இழுத்து வந்துவிடுகிறது ஐரோப்பா. அறிஞர்களின் அறிஞர்போலும் என்று நினைத்துவிட வேண்டாம். பொது மக்களிடமும்கூட அவர் பிரபலம்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் ‘300’ ஹெரோடோட்டஸின் படைப்பைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.

மேற்குலகம் அவரை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடிக்கொண்டு போகட்டும். நமக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்னும் கேள்விக்கான பதில் இதோ... ஹெரோடோட்டஸ் ஒரு பயணி என்று பார்த்தோம். அவர் எப்படிப் பயணம் செய்தார் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், எழுதும்போது ஒரே நேர்க்கோட்டில் செல்லும் வழக்கம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மையக்கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று ஒரு கிளைக்கதைக்குத் தாவி, இதை ஏன் அவர் இங்கே சொல்கிறார் என்று நாம் திகைக்கும்போதே, இன்னொரு துணைக் கிளைக்குத் தாவிவிட்டு மீண்டும் மையம் வந்து சேர்வார். என்ன எழுதினாலும் நயமாக எழுதக்கூடியவர் என்பதால், அவர் எழுத்தை ரசிக்கும் யாரும் அவருடைய தாவுதல்களை ஒரு பெருங்குறையாகச் சொன்னதில்லை.

நம்மாலும் நிச்சயம் சொல்ல முடியாது. காரணம், இந்தியாவும் அப்படியொரு கிளைக்கதையாகத்தான் அவர் நூலில் விரிகிறது.

(விரியும்)