
பலியிடும் சடங்கு நடைபெறும்போது மது அருந்துகிறார்கள். அதுவும் மிகவும் குறைவாகவே. இந்த மதுவும்கூட பார்லியிலிருந்து அல்ல, அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசி அவர்களுடைய முக்கிய உணவு.
`கால்நடைகள் மழையைச் சார்ந்திருப்பதுபோல், ஒரு மன்னர் ஆலோசகரைச் சார்ந்திருக்கிறார்’ என்கிறது மகாபாரதம். `ஒரு சக்கரத்தால் தனியாக உருண்டுபோக முடியாது. இன்னொன்று வேண்டும். அந்த இன்னொரு சக்கரம்தான் ஆலோசகர்’ என்கிறார் சாணக்கியர். `ஆலோசகர்களுக்கு அரசவையில் எப்போதும் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது’ என்கிறார் மெகஸ்தனிஸ். என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம், எங்கே இழுக்கலாம், எங்கே பிடிக்கலாம் என்று குழப்பம் தோன்றும்போதெல்லாம் ஆலோசகர்களே மன்னரின் துணைக்கு வருகிறார்கள்.
ஆலோசகருக்கான இரண்டாவது சக்கரம் களத்தில் பணியாற்றும் அதிகாரி. ஒரு நகரம் செயல்படுவதற்கு மூன்று அதிகாரிகள் உதவுகிறார்கள் என்கிறார் மெகஸ்தனிஸ். முதலாமவர் சந்தை அதிகாரி என்று அழைக்கப்பட்டாலும் அவருடைய பிரதான பணி, நீர்நிலைகளைக் கண்காணிப்பது. தேவையான இடங்களில், தேவையான அளவுகளில் அனைவருக்கும் கால்வாய் நீர் கிடைப்பதை இவர் உறுதிசெய்கிறார். அவனுக்கு அதிகம் கிடைத்தது, எனக்குக் கிடைக்கவேயில்லை போன்ற புகார்களை இவரே விசாரிக்கிறார். நீர்த் தேவைகள் புறக்கணிக்கப்பட்டால், சண்டையும் சச்சரவும் மூளும் என்பதை உணர்ந்து ஓர் அதிகாரியை அப்போதே சந்திரகுப்தர் நியமித்திருப்பது ஆச்சர்யம் தருகிறது. குளம் வெட்டுவது, ஏரிகளைப் பராமரிப்பது போன்றவற்றில் அடுத்தடுத்து வந்த மௌரிய மன்னர்களும் முனைப்போடு இருந்ததைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
நீர் மட்டுமல்ல, நிலமும் மேற்படி அதிகாரியின் பொறுப்புதான். அதிகாரபூர்வமாக நிலத்தை இவரே அளந்து கொடுக்கிறார். சாலை அமைக்கும் பணியை மேற்பார்வை செய்கிறார். எங்கே வளைவுகள் இருக்கின்றன, இலக்கை அடைய இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் போன்றவற்றைச் சாலைக்கருகில் ஆங்காங்கே குறித்துவைப்பதும் இவர் பொறுப்புதான். இவரே கண்காணிப்பும் செய்தாக வேண்டும். வேட்டைக்காரர்கள்மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தவறிழைத்தால் தண்டிக்க வேண்டும், நற்செயல்களை ஊக்குவிக்க வேண்டும். தச்சர்கள், தொழிலாளர்கள், பட்டறையில் பணிபுரிவோர் ஆகியோரைக் கண்காணிக்க வேண்டும். ஓர் அதிகாரிக்கு இவ்வளவு பளுவா என்று மலைத்து முடிப்பதற்குள், வரி வசூலிப்பதும் இவர் கடமை என்று வலியுறுத்துகிறார் மெகஸ்தனிஸ். ஒரே அதிகாரி என்றல்லாமல், ஒரு துறையின்கீழ் பணியாற்றும் பலரின் பொறுப்புகள் என்று இவற்றைப் புரிந்துகொள்வதுதான் சரியாக இருக்கும்.
இரண்டாவது, நகரக் கண்காணிப்புப் பணி. ஐந்து அதிகாரிகளைக்கொண்ட ஆறு குழுக்கள் இந்தத் துறையின்கீழ் வருகின்றன. முதல் குழு, கைவினைக் கலைஞர்களின் தேவைகளை கவனித்துக்கொள்ளும். இரண்டாவது குழு பிறப்பு, இறப்பு இரண்டையும் கண்டறிந்து பதிவுசெய்யும். மக்கள்தொகை எண்ணிக்கை துல்லியமாக இல்லாவிட்டால் வரிகளைச் சரியாக நிர்வகிக்க முடியாது. சில்லறை விற்பனை, பண்டப் பரிமாற்றம் இரண்டையும் மூன்றாவது குழு பார்த்துக்கொள்ளும். சந்தைக்கு விளைச்சலைக் கொண்டு வருபவன் சரியான விலைக்கு விற்பனை செய்கிறானா என்று பார்க்க வேண்டும். பண்டப் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருமுறையும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஒருமுறை வரி செலுத்திவிட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட பரிமாற்றங்களில் யாராவது ஈடுபட்டால், அவர்களை நெறிப்படுத்துவது இந்தக் குழுவின் கடமை. நான்காவது குழுவினர், கைவினைக் கலைஞர்கள் தங்கள் பொருள்களைச் சரியான விலைக்கு விற்கிறார்களா என்பதைக் கண்காணிப்பர். ஐந்தாவது குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் விற்பனை வரி (10%) வசூலிக்க வேண்டும். வரி வசூலிப்பவர் திருட்டில் ஈடுபட்டால் ஒரே தண்டனைதான். மரணம்.

ஆறாவது குழு, மெகஸ்தனிஸ்போல் அயல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கானது. அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்வது, அவர்களைக் கண்பார்வையில் வைத்திருப்பது, உதவியாளர்கள் தேவை என்றால் வழங்குவது, நோயுற்றால் கவனித்துக்கொள்வது, யாரேனும் இறக்க நேர்ந்தால் அவர் உடைமைகளை அவர்தம் நாட்டுக்கு அனுப்பிவைப்பது என்று பலவிதமான பணிகள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஓர் அயல்நாட்டவர் தனக்குப் பரிச்சயமில்லாத ஒரு புதிய நிலத்தில் வசிக்க நேரும்போது என்னவெல்லாம் எதிர்பார்ப்பார், எங்கெல்லாம் தடுமாறுவார், என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் அவருக்கு நடக்கலாம் என்பதையெல்லாம் சந்திரகுப்தர் துல்லியமாக அறிந்திருந்தார் என்பதையே இது காட்டுகிறது. தவிரவும், மௌரியர் இந்தியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அயல் தேசத்தவர் வாழ்ந்து வந்ததால்தான் அவர்களுக்கென்று ஒரு தனிக்குழுவை அமைக்கவேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
மெகஸ்தனிஸ் குறிப்பிடும் மூன்றாவது துறை, ராணுவம். இங்கும் ஐந்து அதிகாரிகளைக்கொண்ட ஆறு குழுக்கள் இயங்குகின்றன. முதல் குழு கப்பற்படைத் தலைவரோடு இணைந்திருக்கும். இரண்டாவது போக்குவரத்துக் குழு. வீரர்களுக்குத் தேவைப்படும் உணவு, விலங்குகளுக்கான தீவனம், இவை போக வேறு என்ன தேவையென்றாலும், எருது பூட்டப்பட்ட வண்டிகளில் பாய்ந்து சென்று கொண்டுவந்து சேர்ப்பார்கள். பணியாள்கள், முரசு அறைபவர்கள், பொறியியலாளர்கள் என்று யாரை அழைத்துவரச் சொன்னாலும் அழைத்து வருவார்கள். வேகத்துக்குப் பெயர் பெற்றவர்கள். மூன்றாவது குழுவில் காலாட்படை வீரர்கள் இருப்பார்கள். நான்காவது, குதிரைப்படை. ஐந்தாவதில் ரதங்களைச் செலுத்துபவர்கள் இருப்பார்கள். ஆறாவது, யானைப் படை.
சந்திரகுப்தரின் ஆட்சி நிர்வாகம் எப்படி இருந்தது என்பதை விவரித்து முடித்த கையோடு, மக்கள் பற்றியும் கொஞ்சம் பேசுகிறார் மெகஸ்தனிஸ். இறந்தவர்களிடமிருந்து தொடங்குகிறார். இந்த நிலத்தில் எங்குமே நினைவிடங்களை நான் பார்க்கவில்லை. அப்படியொன்றை அவர்கள் கட்டுவதேயில்லை. அப்படியானால் ஒருவர் இறந்தவுடன் அவரை இந்தியர்கள் மறந்துவிடுகிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இறந்தவருக்கு நாம் மண்டபம் அமைக்கிறோம். அவர்களோ ஒரு மனிதனின் நல்லொழுக்கம்தான் அவனுக்கான நினைவிடம் என்று கருதுகிறார்கள். ஒருவர் உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார், என்னவெல்லாம் செய்தார் என்பதைப் பலவாறாகப் புகழ்ந்து பாடல்கள் இயற்றுகிறார்கள். அந்தப் பாடல்களைப் பாடும் ஒவ்வொரு முறையும் இறந்தவர் நினைவுகூரப்படுகிறார்.
எல்லாவற்றிலும் இந்தியர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உணவாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி... எழுதப்பட்ட சட்டம் என்பதே இந்தியாவில் கிடையாது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு என்பதால், விரிவாகச் சட்ட திட்டங்களெல்லாம் எழுதிவைப்பதில் எந்தப் பலனும் இல்லை என்று நினைத்திருக்கலாம். உண்மையில் அதற்கான அவசியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்தியர்கள் நல்லவர்கள். அஞ்சத்தக்க குற்றங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. மிக மிக அரிதாகவே திருட்டுக்கூட நடக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிச் சொல்லிவிட்டு புள்ளிவிவரமும் அளிக்கிறார் மெகஸ்தனிஸ். நான்கு லட்சம் பேர் வசிக்கும் ஓரிடத்தில், ஒரு நாள் எவ்வளவு பணம் திருடப்படுகிறது என்று பார்த்தால் ரொம்ப ரொம்ப குறைவு. இதெல்லாம் ஒரு திருட்டே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைவு. கல்லாதவர்கள் என்றாலும் எவ்வளவு கண்ணியமானவர்களாக இருக்கிறார்கள்!
படிக்காதவர்கள் எவ்வாறு பணம் கொடுத்தும் பெற்றும் வணிகம் செய்கிறார்கள் என்று பார்த்தால், நம் மலைப்பு இன்னும் அதிகரிக்கிறது. இந்தியர்கள் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லாக் கணக்குகளையும் மூளைக்குள் போட்டு, நினைவில் பூட்டி வைத்திருக்கிறார்கள். எதையும், எங்கும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. ஒருவர் நினைவிலிருந்து சொல்வதை இன்னொருவர் மறுக்காமல், வாதிடாமல் ஒப்புக்கொள்கிறார். யாருமே திருடர்களில்லை என்பதால், எல்லோரும் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வெளியில் செல்லும்போதும் யாரும் வீட்டைப் பூட்டுவதில்லை. எல்லாவற்றையும் போட்டது போட்டபடி வெளியில் செல்கிறார்கள், வருகிறார்கள். எல்லோரும் இப்படித்தான் என்பதால் அதை எல்லோருமே மதிக்கிறார்கள்.

அவன் இவனை ஏமாற்றிவிட்டான், இவன் அவனுடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டான் என்றெல்லாம் வழக்கைத் தூக்கிக்கொண்டு யாரும் எங்கும் செல்வதில்லை. அவர்கள் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. கையெழுத்து போட வேண்டும், அதற்கு யாரேனும் சாட்சியாக இருக்க வேண்டும், அரசாங்க முத்திரை இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்பதே இல்லை. பேச்சுவார்த்தையின் மூலம் எல்லாவற்றையும் அவர்களுக்குள் முடித்துக்கொண்டுவிடுகிறார்கள்.
பலியிடும் சடங்கு நடைபெறும்போது மது அருந்துகிறார்கள். அதுவும் மிகவும் குறைவாகவே. இந்த மதுவும்கூட பார்லியிலிருந்து அல்ல, அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசி அவர்களுடைய முக்கிய உணவு. அரிசி சாதமும் கறியும் கலந்த உணவுதான் அவர்களுக்குப் பிரதானமாக இருக்கிறது. உணவு வழக்கத்தைப் பொறுத்தவரை ஒன்றுதான் ஏற்க முடியாததாக இருக்கிறது என்கிறார் மெகஸ்தனிஸ். யாருமே குடும்பத்தோடு அமர்ந்து உண்பதில்லை. எனக்குப் பசித்தால் நான் போய் எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன். இன்னொருவர் அவ்வாறே தனியாக உண்பார். வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனியே உண்கிறார்கள். உணவு நேரம் என்று தனியாக எதையும் அவர்கள் வைத்துக்கொள்வதில்லை என்பதால் அவரவருக்குப் பசிக்கும்போது சாப்பிடுகிறார்கள்.
இந்தியர்கள் உடற்பயிற்சி செய்யும் முறையும் புதிராகவே இருக்கிறது. உடலை அழுத்திப் பிடித்து, தோலின் மீது என்னவோ போட்டு தேய்த்து, கையையும் காலையும் நீட்டி, மடக்கி... ஏதோ செய்கிறார்கள். ஆனால் அது என்னவென்றுதான் பிடிபடுவதில்லை. எளிய வாழ்க்கை முறை என்று சொன்னேன். ஆனால் ஒரேயொரு விதிவிலக்கு. அழகிய ஆடைகள் உடுத்திக்கொள்வதிலும், விதவிதமான அணிகலன்கள் அணிந்துகொள்வதிலும் இந்தியர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தங்கத்தையும் விலை மதிப்புவாய்ந்த கற்களையும் ஆடையில் தைத்துக்கொள்கிறார்கள். நுண்மையான மஸ்லின் துணியால் அவர்கள் உடுப்பு தயாரிக்கப்படுகிறது. சில சமயம் பூ வேலைப்பாடு கொண்ட ஆடைகளும் அணிகிறார்கள்.
அழகியவர்களுக்குச் சமூகத்தில் மதிப்பு அதிகம். எனவே, தங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள என்னென்ன வழிகள் உள்ளனவோ அனைத்தையும் கையாள்கிறார்கள். ஒருவர் நடந்துகொண்டே இருப்பார். கையில் குடையோடு ஓர் உதவியாளர் நிழல்போல் அவரைப் பின்தொடர்ந்து செல்வார். மேனி எழிலைக் காக்கவே இந்த ஏற்பாடு என்று ஏதோ அதிசயத்தைக் கண்டுகொண்டதுபோல் புன்னகைக்கிறார் மெகஸ்தனிஸ்!
(விரியும்)