
பாண்டியர் நிலம் குறித்தும், தீவு குறித்தும் அவர் செய்திருக்கும் பதிவுகள் ஏன் மாயக்கதைகளாக இருக்கின்றன?
இந்தியாவை முதலில் பதிவுசெய்தவர் ஹெரோடோட்டஸ் என்றால், தென்னிந்தியாவை உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் மெகஸ்தனிஸ். சிந்து நதியை எட்டிப்பார்த்துவிட்டு இந்தியாவைக் கண்டுவிட்டேன் என்று சொல்லித் திரிந்தவர்களிடம் ‘இல்லை, நீங்கள் கண்டது கையளவு நீர். கடலைக் காண வேண்டுமானால் இங்கே வாருங்கள்!’ என்று தென்னிந்தியாவுக்கு உற்சாக அழைப்புவிடுக்கிறார் மெகஸ்தனிஸ்.
அவருடைய முதல் குறிப்பே தெற்கின் இயல்பைச் சுட்டிக்காட்டிவிடுகிறது. ஆரம்பம் முதலே வடக்கு எந்த வழியில் செல்கிறது என்று ஊன்றி கவனித்து நேர் எதிரான வழியில் செல்வதுதான் தெற்குக்கு வழக்கம் போலிருக்கிறது. இல்லாவிட்டால், முழு இந்தியாவையும் ஆண் கடவுள்கள் உருவாக்கியிருக்க, தென்னிந்தியா மட்டும் ஒரு பெண்ணின் விரல்களால் படைக்கப்பட்டிருக்குமா? டயோனிசஸ், ஹெராக்ளஸ் இருவரும் இந்தியாவை உருவாக்கினார்கள் என்றால், ஹெராக்ளஸின் மகளான பாண்டியா (பண்டோரா என்றும் அழைக்கப்படுவாள்) தென்னிந்தியாவைப் படைத்திருக்கிறாள். இவள் பெயரால்தான் பாண்டிய வம்சம் நிலைகொண்டது என்கிறார் மெகஸ்தனிஸ்.
வடக்குபோல் பாண்டிய நிலம் அரசர்களால் ஆளப்படுவதில்லை; அரசிகளே ஆள்கிறார்கள். பெயர் எதுவும் குறிப்பிடாமல், பாண்டிய அரசியிடம் 13,000 காலாட்படை வீரர்களும், 4,000 குதிரைப்படை வீரர்களும், 500 போர் யானைகளும் இருப்பதாகப் பதிவுசெய்கிறார் மெகஸ்தனிஸ். இதற்கெல்லாம் ஆதாரம் இல்லையென்றாலும், தென்னிந்தியா தாய்வழிச் சமூகமாகத் திரண்டிருப்பதையும், பெண்கள் அதிகாரமிக்கவர்களாக இருப்பதையும்தான் மெகஸ்தனிஸ் உணர்த்துகிறார் என்று சிலர் வாதிடுகிறார்கள்.

பாண்டிய நிலம் குறித்து மெகஸ்தனிஸிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முதல் பதிவு முத்து பற்றியது. அலெக்சாண்டர் வருவதற்கு முன்பு, முத்து கறுப்பா சிவப்பா என்றுகூட கிரேக்கர்களுக்குத் தெரியாது. தெரியவந்ததும் வியந்துபோனார்கள். உண்மையாகவா சொல்கிறீர்கள்... மீனிடமிருந்தா இது வளர்ந்துவருகிறது... எந்த மீனிடம், எந்த முத்து இருக்கும் என்பதை எப்படிக் கண்டறிவார்கள்... எப்படிக் கடலிலிருந்து வெளியில் எடுக்கிறார்கள்... இந்தியாவில் எங்கே முத்து அதிகம் கிடைக்கிறது?
சந்தேகமேயில்லை தெற்கில்தான் என்கிறார் மெகஸ்தனிஸ். தேனீக்களில், தலைவர் தேனீ என்றொன்று இருப்பதுபோல் முத்துச் சிப்பிகளுக்கும் ஒரு தலைவர் சிப்பி இருக்குமாம். தலைவர் எங்கே போனாலும் குட்டி குளுவான்கள் அவர் பின்னால் ஓடுவார்களாம். மற்றவர்களைவிட தலைவர், அளவில் பெரியவராக இருப்பார். கூடுதல் அழகோடும் இருப்பார். தோற்றத்தில் மட்டுமல்ல, இயல்பிலும் தந்திரம்மிக்கவர். அவ்வளவு சுலபத்தில் எதிரிகளால் தலைவரை நெருங்க முடியாது. முத்துச்சிப்பியில் ராஜா, ராணி என்று இரட்டைத் தலைமை இருப்பதால் வலை வீசுபவர்களும் சரி, கடலில் குதிப்பவர்களும் சரி... ராஜா சிப்பியைத்தான் பிரதானமாகக் குறிவைக்கிறார்கள். ராஜா வலைக்குள் வந்துவிட்டால், ராணியும் பரிவாரமும் அவர்களாகவே சமர்த்தாக வந்து சிக்கிக்கொள்வார்கள்.
இல்லை, மெகஸ்தனிஸ் சொல்வதை இப்படி மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மன்னர் எவ்வழி, குடிகள் அவ்வழி. ஒரு நல்ல அரசர் ராஜா சிப்பிபோல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான உதாரணம் மட்டுமே இது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். போகிறபோக்கில் ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிட்டிருந்தால் இதை ஏற்கலாம். ஆனால் அவரோ தொடர்ந்து முத்து குறித்துப் பேசுகிறார். முத்து வணிகம் நடைபெற்றிருப்பதை உறுதிசெய்யும் வகையில், தங்கத்தைக் காட்டிலும் முத்து மதிப்புமிக்கது. ஒரு குந்துமணி முத்து வேண்டுமானால், மூன்று குந்துமணி தங்கம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் மெகஸ்தனிஸ். பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை இருந்ததை அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது. பின்னாள்களில் முத்து வணிகத்துக்குப் பெயர்போன இடமாக மதுரை மாறியது. பட்டு, தந்தம், மிளகு ஆகியவற்றோடு அதிக அளவில் முத்துகளையும் மதுரை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால், மெகஸ்தனிஸ் பதிவுகளில் மதுரை இல்லை.
பாண்டிய நிலம் பற்றி இதற்குமேல் சொல்ல எதுவுமில்லை அவரிடம். எனவே, பாண்டிய நிலத்தைக் கடந்து கடலுக்கு அப்பால் அமைந்திருக்கும் ஒரு தீவுக்குத் தாவுகிறார் மெகஸ்தனிஸ். தீவின் பெயர், தப்ரபேன் என்று அறிவிக்கிறார் மெகஸ்தனிஸ். சுற்றிலும் கடல். உள்ளே மலைகள். பாடலிபுத்திரம் போன்ற நகரங்கள் அங்கே இல்லை. ஆனால் 750 கிராமங்கள் வரை இருப்பதாகச் சொல்கிறார்கள். பாடலிபுத்திரம்போலவே அந்தத் தீவிலும் மரத்தில்தான் வீடுகட்டி வாழ்கிறார்கள். நாணல்களைப் பிணைத்தும் இருப்பிடங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
தப்ரபேன் ஓர் அதிசயத் தீவு. நமக்கெல்லாம் ஆமை தெரியும். அது எவ்வளவு பெரிதாக வளரும் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தத் தீவில் ஒரு வகை ஆமை வாழ்கிறது. அதை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது. தீவில் வசிக்கும் மக்கள் இந்த ஆமையை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யவைத்து, வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்த பிறகு, ஆமையின் முதுகில் ஒட்டியிருக்கும் ஓட்டை கவனமாகப் பிரித்தெடுக்கிறார்கள். பாண்டியர்கள் சிப்பியிலிருந்து முத்து எடுப்பதுபோல். இந்த ஓடு தடிமனாகவும் அகலமாகவும் இருக்கும். எந்த அளவுக்கு அகலம் என்றால், தலைக்கு மேல் குடைபோல் தூக்கிப் பிடித்தால் அதன்கீழ் பல மனிதர்கள் திரண்டு வந்து ஒதுங்கலாம். மழையோ, வெயிலோ எதுவும் உங்கள்மீது படாது.
இப்போது இந்த ஓடு எதற்கு என்று உங்களுக்கே புரிந்திருக்குமே! ஆம், வீடு கட்டுவதற்கு ஆமை ஓட்டைத்தான் தீவிலுள்ள மக்கள் தேர்வுசெய்கிறார்கள். இதைவிட அற்புதமான, விலை குறைவான ஒரு மேல் கட்டுமானத்தை நீங்கள் உருவாக்கிவிட முடியாது. கற்களைக் கொண்டு கட்டப்படும் வீடுகள்கூட அவ்வப்போது உடைவதும், சரிந்து விழுவதும் உண்டு. ஆனால், ஆமை ஓடு எவ்வளவு மழை பெய்தாலும் (தீவில் பேய் மழை இருக்கும்!) தாங்கும். சுற்றிலும் கடல் என்பதால் எப்போது வேண்டுமானாலும் சூறாவளி வீசலாம். அதையும் ஆமை ஓடுதான் தடுத்தாட்கொள்கிறது. கல்லையும் மரத்தையும்விட வலுவான இயற்கை அரணாக ஆமை ஓடு இருப்பதால் தீவுவாசிகள் ஆமையை விரும்பி வளர்க்கிறார்கள்.
இங்குள்ள பனந்தோப்பு நம் கண்களைக் கவரக்கூடியது என்கிறார் மெகஸ்தனிஸ். அளவு எடுத்து நட்டுவைத்ததுபோல் நேர் வரிசையில் பனை மரங்கள் வளர்ந்து நிற்கும். மரங்களின் அளவுகூடக் கிட்டத்தட்ட ஒன்றுதான். மரத்தை ஒட்டி நடந்துகொண்டே போனால் கோடு கிழித்ததுபோல் நேராக மட்டுமே நீங்கள் நடப்பீர்கள். நாம் பார்த்துப் பார்த்து அமைக்கும் தோட்டங்களில் கூட இப்படியோர் அபாரமான ஒழுங்கு வெளிப்படாது. தீவிலோ, சர்வ சாதாரணமாக இந்த ஒழுங்கு காணப்படுகிறது.
நீர் சூழ்ந்த நிலம் என்பதால் திரும்பும் திசையெல்லாம் கடலைத்தான் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் தவறு. வாழ்நாளில் ஒரேயொருமுறைகூடக் கடலைப் பார்க்காமலேயே இருக்கும் மனிதர்கள் தப்ரபேனில் கணிசமானவர்கள். காரணம், அவர்கள் உட்புறமாக வசித்துவருகிறார்கள். அவர்கள் நிலத்தின் பரப்பு மிகவும் பெரியது. அவர்களுக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் நிலத்திலிருந்தே பெற்றுவிட முடியும் என்பதால், வேலை மெனக்கெட்டுக் கடலைக் காண வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு நேர்வதில்லை. இதிலென்ன சிறப்பு என்றால் நாம் வசிப்பது ஒரு தீவில் என்றே தப்ரபேன் மக்களில் பலருக்குத் தெரியாதாம். எல்லோரையும்போல் நாமும் ஒரு பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றே அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று பாவப்படுகிறார் மெகஸ்தனிஸ்.

மீன்பிடிப்பது பிரதான பணி. மீன் என்றால் நாம் அனைவரும் அறிந்த மீன் வகைகள் மட்டுமல்ல. அவர்களுடைய மர்மக் கடலில் நம் கற்பனைக்கும் எட்டாத மர்ம மீன்கள் வசிக்கின்றன. சிங்கத் தலையோடு மிதக்கும் ராட்சச மீன் வகை ஒன்று உள்ளது. சிறுத்தைத் தலையோடும் ஒன்று நீந்துகிறது. இவையெல்லாம் மிகவும் ஆபத்தானவை. கவனமாகவே பிடிக்க வேண்டும். கொஞ்சம் அமைதியான, அதேசமயம் வித்தியாசமான மீனைப் பார்க்க வேண்டுமானால் ஆட்டுக்கடா முகத்தோடு இருக்கும் மீன் வகையும் கிடைக்கிறது. இவையெல்லாமே அளவில் பெரியவை.
இருப்பதிலேயே மெகஸ்தனிஸை அதிகம் கவர்ந்தது எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் ‘சேட்டர்’ போல் தோற்றமளிக்கும் மீன். கிரேக்க இயற்கைக் கடவுள்களில் ஒருவர் சேட்டர். குதிரையின் காதுகளும் வாலும்கொண்ட மனித உருவாக இவர் சில இடங்களில் இருக்கிறார். குதிரையின் கால்களோடு முதலில் தோன்றியவர், பின்னர் மனிதக் கால்களைப் பெற்றுவிட்டார். இவருக்கு இசையும், நடனமும், பெண்களும் பிடிக்கும். காடுகளிலும் மலைகளிலும் சேட்டர் வாழ்கிறாராம். மெகஸ்தனிஸ் மீனையும் பார்க்கவில்லை, சேட்டரையும் நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு வகை மீனின் வடிவம் அவருக்கு கிரேக்க கடவுளை எப்படியோ நினைவுபடுத்தியிருக்கிறது.
இங்கே ஓர் ஐயம் தோன்றலாம். நாம் இதுவரை பார்த்த மெகஸ்தனிஸின் பதிவுகள் அனைத்தும் நுணுக்கமாகவும் ஆழமாகவும் இருந்தன. கண்ணால் கண்டதையும், நம்பகமானவர்களிடம் விசாரித்து அறிந்துகொண்டதையும் மட்டுமே அவர் எழுதியிருந்தார். ஆனால் பாண்டியர் நிலம் குறித்தும், தீவு குறித்தும் அவர் செய்திருக்கும் பதிவுகள் ஏன் மாயக்கதைகளாக இருக்கின்றன? இதற்கான விடை, இந்தப் பகுதிகளுக்கெல்லாம் அவர் செல்லவேயில்லை என்பதுதான். தெற்கு பற்றி அறிந்திருந்தாரே தவிர, பாடலிபுத்திரம் போல் அங்கே சென்று அவர் பார்க்கவில்லை. சேகரித்த கதைகளையெல்லாம் பரிசோதிக்காமல் அப்படியே நமக்குக் கொடுத்துவிட்டார். மெகஸ்தனிஸுக்கு விடைகொடுப்பதற்கு முன்பு அவருடைய சில அற்புதப் பதிவுகளை மட்டும் பார்த்துவிடலாம்.
அது சரி, தெற்கில் அமைந்திருக்கும் தப்ரபேன் தீவு என்பது என்ன? வேறொன்றுமில்லை, இலங்கைதான். இலங்கை கண்டுபிடிக்கப்பட்ட கதை என்னும் தலைப்பில் யாரேனும் ஒருவர் எழுதினால், முதல் அத்தியாயத்தை அவர் மெகஸ்தனிஸிடமிருந்தே தொடங்க வேண்டியிருக்கும்.
(விரியும்)